திங்கள், 31 ஜனவரி, 2011

குட்டையர்கள்

மனுசங்க, நீங்க மட்டும்தான் குட்டையா இருப்பீங்களா? நாங்களும் குட்டையாவோம்ல.

எல்லா மரங்களும் ஒரு அடிக்கு குறைவானவைதான். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்திய மலர் கண்காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள்.
















வெள்ளி, 28 ஜனவரி, 2011

சமுதாய மாற்றம் – ஏன், எப்படி?



பதிவர்கள் சிலர் நாம் பதிவு எழுதி என்ன சாதித்தோம்? வெட்டியாக பொழுது போக்குக்காக எழுதுவதுதான் நமது நோக்கமா? சமுதாயப் பொறுப்பு வேண்டாமா? என்று பல சமயங்களில் கேட்கிறார்கள். எனக்கும் அவ்வப்போது இந்த எண்ணங்கள் வருகின்றன. நிஜ உலகில் தனி நபர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் பதிவுலகிலும் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் சாத்தியமானது. இதற்கு மேல் ஏதாவது செய்ய முடியுமா என்று என் சிறிய மூளையை உபயோகித்து சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன்.

முதலில் சமுதாய மாற்றம் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். நிச்சயமாக அரசும் அரசாங்கக் கொள்கைகளும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன. அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்படுத்துகின்றன. அவைகளை பயன்படுத்தி தனி நபர்கள் பல்வேறு தொழில்களோ வியாபாரமோ செய்து முன்னேறுகிறார்கள். ஆனால் எல்லோராலும் இவ்வாறு முன்னேற முடிவதில்லை. இதற்குண்டான காரண காரியங்களைப் பின்பு ஆராய்வோம்

இவ்வாறு முன்னேறியவர்கள் தங்கள் முன்னேற்றத்தை நிரந்தரமாகத்  தக்கவைத்துக் கொள்ள தங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். இது மனித இயற்கை. அப்போது அவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்காத அரசாங்கம் இருந்தால் அவர்களுக்கு நல்லதுதானே. ஆகவே அவர்கள் (பணக்காரர்கள் என்று ஒரு அடையாளச்சொல் வைத்துக் கொள்வோமே) அந்த மாதிரி அரசாங்கம் தொடர்ந்து இருக்க தங்களால் முடிந்த உதவி செய்வார்கள். என்ன உதவிபண உதவிதான். இன்றைய கால கட்டத்தில் பணம்தான் கண்கண்ட தெய்வம். அதனால் செய்ய முடியாதது உலகில் எதுவுமில்லை என்றாகிவிட்டது.

இவ்வாறு பணக்காரர்களின் (பண) உதவியால் அமைக்கப்பட்ட அரசு என்ன செய்யும்? பணக்காரர்களுக்கு வேண்டிய சலுகைகளை ஏற்படுத்தும். அப்படி உதவி பெற்ற பணக்காரர்கள் அரசுக்கு மீண்டும் உதவி செய்வார்கள். இப்படி தொடர்ந்து ஒரு வட்டம் அதாவது = உதவி-சலுகை-உதவி = இந்த வட்டம் இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது

சில சொற்களை உணர்ந்தே தவிர்த்து இருக்கிறேன். இப்பொழுதே கொஞ்சம் ரத்தவாடை அடிக்கிறது. இந்த வாடைக்கு சிங்கம், புலிகள் வரக்கூடும். ஆகவே இந்த சமுதாய விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உட்கொள்ள வேண்டும். மீதி நேயர் விருப்பம்போல்.

புதன், 26 ஜனவரி, 2011

நான் பார்த்த அரசு தலைமை ஆபீஸ்.



(இந்தப் பதிவு நான் அன்று பார்த்த ஆபீஸ் பற்றியது. இன்று நிலைமை எப்படி என்று தெரியாது)

பல வருடங்களுக்கு முன் சென்னையில் (அன்றைய மெட்ராஸ்) ஒரு தலைமை ஆபீஸுக்குப் போகவேண்டிய வேலை ஒன்று வந்தது. நானும் என்னுடைய அரசு ஊழியன் என்ற பதவி தந்த தைரியத்தில் சென்னைக்கு கிளம்பிப் போனேன். ரூம் எடுத்து காலைக்கடன்களை முடித்து டிபன் சாப்பிட்டு விட்டு சுமார் 9.30 மணிக்கு அந்த ஆபீஸுக்குப் போனேன்.

சென்னையில் கடற்கரை சாலையில் இரண்டு முக்கியமான அரசு வளாகங்கள் உண்டு. ஒன்று கோட்டை. இதுதான் அரசின் கேந்திரஸ்தானம். உள்ளே நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு. அடுத்தது சேப்பாக்கம். இங்குதான் அரசின் செயல்பாடுகளைச் செய்யும் துறைவாரியான தலைமை அலுவலகங்கள் இருக்கின்றன. இதில் ஒன்றில்தான் எனக்கு ஒரு வேலை இருந்தது.
அன்றைய அரசு அலுவலகங்களின் வேலை நேரம் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை. மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை ஒரு அரை மணி நேரம் லஞ்ச் சாப்பிட எடுத்துக்கொள்ளலாம். இதுதான் ரூல்ஸ். நானும் அரசு ஊழியன் என்பதால் இந்த விபரங்கள் நன்றாகத் தெரியும். ஆகவே அந்த ஆபீசுக்கு 9.30 மணிக்கு கரெக்ட்டாகப் போனேன். ஆபீஸ் திறந்திருந்தது. ஆனால் ஒருவரையும் காணவில்லை. எனக்கு சந்தேகமாகப் போய் விட்டது. இன்றைக்கு ஏதாவது விடுமுறை அறிவித்து விட்டார்களோ என்று. அங்கு அப்போது வந்த ஒருவரைக் கேட்டபோது அப்படியெல்லாம் இன்று விடுமுறை ஒன்றும் இல்லை, எல்லோரும் வருவார்கள், நீங்கள் இப்படி ஒரமாக உட்காருங்கள் என்று சொன்னார்.

நானும் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். 9.30 மணிக்கு கரெக்ட்டாக வந்தவர்கள் ஒருவருமில்லை. 10.00 மணிக்குள் ஒரு 20 பர்சென்ட் ஊழியர்கள், ஏறக்குறைய ரிடைர்டு ஆகப்போகிறவர்கள் வந்தார்கள். 10 மணியிலிருந்து 10.30 மணி வரை இன்னும் ஒரு 20 பர்சென்ட் வந்தார்கள். 10.30 க்கு மேல் 11.30 வரைக்கும் இன்னும் ஒரு 30 பர்சென்ட் வந்தார்கள். இந்த சமயத்தில் 10.30 மணிக்கு முன்னால் வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் எழுந்து டீ குடிக்க கேன்டீன் போனார்கள். அவர்கள் திரும்பின பிறகு மற்றவர்கள் டீ குடிக்கப் போனார்கள். முதலில் டீ குடித்துவிட்டு வந்தவர்கள் 1 மணிக்கு லஞ்ச் சாப்பிடப்போனார்கள். அவர்கள் போய் அரை மணி நேரம் கழித்து மற்றவர்களும் லஞ்ச்சுக்கு கிளம்பிப்போனார்கள். இப்படியே ஒரு சமயத்திலாவது எல்லோரையும் அவரவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை.

இந்த சமயத்தில் நான் பார்க்க வேண்டிய ஆசாமியும் வந்து சேர்ந்தார். அவர் வந்த நேரம் 12 மணி. என்னய்யா இது, 9.30 மணிக்கு வரவேண்டிய ஆபீசுக்கு 12 மணிக்கு வர்ரயே, ஒருத்தரும் கேட்கமாட்டார்களா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் 9.30 மணிக்கே நேரே கோட்டைக்குப் போய் அங்கு ஒரு பைஃலைப் பார்த்து விட்டு இங்கு வருகிறேன் என்றார். சரி, மற்றவர்கள் எல்லாம் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்களே, எப்போது சீட்டில் உட்கார்ந்து வேலை பார்ப்பார்கள் என்றேன். உனக்கு சென்னை ஆபீஸ்களின் நடைமுறை தெரியாது. இங்கு யாரும் எப்போ வேண்டுமென்றாலும் வரலாம் போகலாம்யாரும் ஒன்றும் கேட்க முடியாது என்றார்.

அது ஏன் அப்படி என்று கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கங்கள் எனக்கு மயக்கம் வராத குறைதான். அவர் சொன்னதாவது:

1.   ஆபீஸ் 9.30 க்கு என்றாலும் ஒரு அரை மணி நேரம் லேட்டாய் வரலாம். யாராவது கேட்டால் அந்த ரோட்டில் பந்த், அதனால் பஸ் வேறு சுற்று வழியில் வந்ததால் லேட்டாகி விட்டது என்று சொல்லிவிடலாம். இது சென்னையில் தினசரி மாமூல் ஆதலால் யாரும் ஒன்றும் சொல்லமுடியாது.

2.   ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் லேட்டாய் வருபவர்கள் சொல்வது, “நான் இன்றைக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன்.” அதாவது அரசு ஊழியர்களுக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால் மேலதிகாரியின் அனுமதி பெற்று, ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம். இந்த சலுகையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

3.   டீ குடிக்க, லஞ்ச் சாப்பிட போவது இந்த இரண்டும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இந்திய அரசியல் சட்டம் கொடுத்துள்ள பிறப்புரிமை. இதை தட்டிக்கேட்க எந்த மேலதிகாரிக்கும் அதிகாரம் இல்லை. எங்கு சென்றாலும் கேன்டீனுக்குப் போயிருந்தேன் என்று சொல்லி விட்டால் அதற்கு அப்பீலே கிடையாது.

4.   அரைநாள் கழித்து ஆபீஸ் வந்தால் கோட்டையில் ஒரு பைஃலைப் பார்க்கப் போனேன் என்று சொன்னால் அதை யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள்.

5.   மாலையில் இப்படி ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு ஒன்றரை மணி முன்பாகவே புறப்பட்டு விடலாம்.

6.   இது எல்லாவற்றிற்கும் மசியவில்லை என்றால் ஒரு காகிதத்தை எடுத்து  அரை நாள் லீவு என்று எழுதிக் கொடுத்து விட்டால் இந்திய ஜனாதிபதியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இப்படி நிறையச் சொன்னார். இடம் இல்லாததால் எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. அப்புறம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம், எல்லோரும் இப்படியே வரவும் போகவுமாக இருந்தால் வேலை எப்படி நடக்கும் என்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து நீ அரசு ஊழியனாக இருக்க லாயக்கற்றவன். மாலை 5 மணிக்கு மேல் வந்து பார். வேலை எப்படி நடக்கிறது என்று தெரியும் என்றார். எனக்கு ஊர் திரும்ப வேண்டியிருந்ததால் அவர் சொன்ன மாதிரி 5 மணிக்கு மேல் இருந்து அங்கு வேலைகள் எப்படி நடக்கிறது என்று பார்க்க இயலவில்லை.

அப்புறம் ஊர் திரும்பிய பிறகு, விஷயம் தெரிந்த ஒருவரை அணுகி இதைப்பற்றிக் கேட்டேன். அவர் அது அரசாங்க ரகசியம். யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார். உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் எனக்கு மட்டும் மெயில் அனுப்பவும்.