சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூலை, 2012

வால்பாறை சுற்றுலா

வால்பாறைக்குப் போகவேண்டும் என்று பலநாட்களாக கனவு கண்டு கொண்டிருந்தது இப்போது நிறைவேறியது.

வால்பாறை ஒரு சிற்றூர். மேற்கு மலைத்தொடரில் 4000 அடி உயரத்தில் உள்ளது. மிதமான குளிரும் நல்ல காற்றும் உள்ள ஊர். தென்மேற்குப் பருவ மழை காலத்தில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டிய ஊர். எங்கள் வருகையை முன்னிட்டு மழைக்கு லீவு விட்டிருந்தார்கள்.

கோவையிலிருந்து 105 கி.மீ. தூரம். பொள்ளாச்சி சென்று அங்கிருந்து ஆழியார் அணை வழியாக மலை அடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து சரியாக 40 கி.மீ. தூரம்.


இந்த 40 கி.மீ. தூரத்தில் 40 ஹேர்பின் பெண்டுகள், அதாவது கொண்டை ஊசி வளைவுகள். ரோடு அருமையாக இருக்கிறது. ஆனால் இத்தனை வளைவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயமும் மனதிற்குள் இருந்தது.

கார் ஒட்டுபவர்கள் கவனத்திற்கு. நான் கூறும் நான்கு விதிகளையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. பயம் வேண்டும். எவ்வளவு அனுபவம் வாய்ந்த ஓட்டுனராக இருந்தாலும் எந்த சமயத்திலும் விபத்து நேரலாம் என்ற பயம் மனதிற்குள் இருக்கவேண்டும். எப்போது நான் விபத்துக்கு அப்பாற்பட்டவன் என்று ஒரு ஓட்டுனர் நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் விபத்தைச் சந்திப்பார்.

2. பொறுமை வேண்டும். வாகனம் ஓட்டும்போது பொறுமை அதிகம் வேண்டும். ரோட்டில் போகும் மற்ற வாகனங்கள், மனிதர்கள், விலங்குகள், குண்டு குழிகள், இவை எல்லாம் பொறுமையைச் சோதிக்கும்.

3. கவனம் சிதறாமை. உங்கள் கவனம் முழுவதும் கார் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டுமே தவிர, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதிலோ, அரட்டை அடிப்பதிலோ இருக்கக் கூடாது.

4. வாகனத்தின் தன்மை. நீங்கள் ஓட்டும் வாகனத்தின் தன்மையை நன்கு அறிந்து, அதற்கு ஏற்ற மாதிரி ஓட்டவேண்டும். 5 பேர் போகக்கூடிய வாகனத்தில் 10 பேர் ஏறிக்கொண்டு சென்றால் விபத்து நிச்சயம். 80 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வாகனத்தை 120 கி.மீ. வேகத்தில் ஓட்டினால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்.

இந்த விதிகளை மறக்காமல் கடைப்பிடித்ததினால் எங்கள் பயணம் விபத்தில்லாமல் இனிதே இருந்தது. ரோடு அருமையாக இருந்தது. வழியெங்கிலும் பசுமையான காட்சிகள்.

இந்த 40 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்தோம்.

மதியம் சாப்பாட்டு நேரத்திற்கு வால்பாறை போய்ச்சேர்ந்தோம். நணபர் கையோடு தயிர் சாதம் கொண்டு வந்திருந்தார். ஆகவே உணவு விடுதியைத் தேடாமல் எங்கள் மதிய உணவை முடித்தோம்.

எங்கள் பொது நண்பர் ஒருவர் வால்பாறையில் பொறியாளராக இருக்கிறார். அவர் எங்களுக்குத் தங்க நல்ல அரசு விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். நல்ல வசதிகளும் விசாலமான அறைகளும் இருந்தன.


விடுதிக்கு அருகாமையில் (ஐந்து கி.மீ. தூரத்தில்- காட்டுப்பாதை-போகவர 2 மணி நேரம் மட்டுமே ஆகும்) ஒரு தம்பதியினர் நடத்தும் 5 ஸ்டார் ரெஸ்டாரென்ட் ஒன்று இருக்கிறது.


இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பார், குருமா, கோழி குருமா, கோழி வருவல் எல்லாம் வீட்டு முறைப்படி தயாரித்துக் கொடுத்தார். அன்னதாதா அவர். நீடு வாழ்க.

போகும் வழியில் கீழ் நீரார், மேல் நீரார் என்று இரண்டு அணைகளைப் பார்த்தோம்.


கீழ் நீரார் அணை



மேல் நீரார் அணை

இந்த அணைகளிலிருந்து சுரங்கங்கள் மூலமாக நீர் சோலையார் டேமுக்கு வந்து அங்கிருந்து மீண்டும் சுரங்கங்கள் மூலமாக ஆழியார், மற்றும் திருமூர்த்தி அணைக்கட்டுகளுக்கு வந்து சேருகின்றன.

இரவு உணவு முடித்து படுத்ததுதான் தெரியும். விழிப்பு வந்தபோது நன்கு விடிந்திருந்தது. பயணக் களைப்பு அப்படி ஒரு தூக்கத்தைப் பரிசாக்கியிருந்தது.  
காலையில் பெட் காப்பி இல்லையென்றால் என்ன வாழ்க்கை? காப்பி கிட் (சொந்த தயாரிப்பு) கொண்டு போயிருந்ததினால் நல்ல காப்பி போட்டு சாப்பிட்டோம்.

குளித்து முடித்து 8 மணிக்கு கிளம்பி நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் டிபன் சாப்பிட்டு விட்டு பாலாஜி கோவில் பார்க்கப்போனோம். வால்பாறையிலிருந்து 6 கி.மீ. தூரம். இது ஒரு தனியார் கோவில். நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கெடுபிடிகள் அதிகம். தனியார் வாகனங்கள் ஒரு கி.மீ. தூரத்திலேயே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து நடந்துதான் போகவேண்டும். டாக்சிகள் அனுமதிக்கப்படுகின்றன.
காலை 7 மணியிலிருந்து பகல் 12 வரையிலும் மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 

பிறகு சோலையார் டேம் பார்க்கக் கிளம்பினோம். வால்பாறையிலிருந்து 20 கி.மீ. தூரம். நல்ல ரோடு. வழியெங்கிலும் தேயிலைத் தோட்டங்கள்தான். மரகதக் கம்பளம் விரித்த மாதிரி எங்கு பார்த்தாலும் பசுமைதான். ஆயுசுக்கும் அங்கேயே இருந்துவிடலாம் என்று மயக்கும் இயற்கைக் காட்சிகள்.



இந்த டேமிலிருந்துதான் நீர் ஆழியாருக்கும் திருமூர்த்தி டேமுக்கும் வருகிறது.

மதிய உணவு இங்கே சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பவும் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினோம். திரும்பும் வழியிலேயே நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் நமக்காக ஸ்பெஷலாகத் தயாரித்த நாட்டுக்கோழி வருவலும், குருமாவும், சப்பாத்தியையும் வாங்கிக்கொண்டோம். ரெஸ்ட் ஹவுசில் அவைகளை ஒரு கை பார்த்தோம். அந்த மிதமான குளிருக்கு ரெஸ்ட் ஹவுஸ் அடக்கமாக இருந்தது. தூக்கம் நன்றாக வந்தது.

அடுத்த நாள் எழுந்து குளித்து விட்டு, நமது ரெஸ்டாரென்டில் காலை டிபன் முடித்து விட்டு, எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு, திரும்பவும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஆழியார் டேம் பக்கத்திலுள்ள குரங்கு அருவிக்கு வந்து சேர்ந்தோம்.

அருவியில் குளிக்க இன்னும் இரண்டு கி.மீ. தொலைவு சென்று டிக்கட் வாங்கு வரவேண்டும் என்றார்கள். ஆகவே குளிக்கும் திட்டத்தை கைவிட்டோம். கீழே இறங்கிப் பார்க்கலாம் என்று கார் கதவைத் திறந்தேன். கையில் ஒரு சாக்கலேட் பாதி சாப்பிட்டு விட்டு வைத்திருந்தேன். இரண்டு குரங்குகள் வந்து மிரட்டி அந்த சாக்கலேட்டைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டன. ஒன்றும் செய்ய முடியவில்லை.

அங்கிருந்து வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவிலுக்குச் சென்றோம். உள்ளே சென்று பார்க்க ஏறக்குறைய அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி உள்ளே போனோம். ஒரே ஒரு கட்டிடத்தை மட்டும் பார்க்க அனுமதித்தார்கள். நமக்கு இருக்கும் அறிவே போதும் என்று திரும்பி விட்டோம்.

இப்படியாக மூன்று நாள் வால்பாறையைப் பார்த்தோம்.


திங்கள், 30 ஏப்ரல், 2012

உதகமண்டலம் - மலைகளின் ராணி

மலை வாசஸ்தலங்களின் ராணி எனப் புகழ் பெற்றது மக்களால் சுருக்கமாக ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம். ஒத்தைக்கல் மந்து என்பது மருவி உதகமண்டலம் ஆகி அது சுருங்கி ஊட்டி என்றாயிற்று.

கோடை காலத்தில் தங்க நல்ல இடம். பேங்கில் ஓரளவு கணிசமான அளவு தொகை (சுமார் 10 லட்சம்) இருந்தால் குடும்பத்துடன் ஒரு வாரம் போய் இருந்து விட்டு வரலாம். ஹனிமூன் தம்பதிகள் பெண்ணின் தகப்பனார் செலவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் போய்வர தகுந்த தலம்.

ரூம் வாடகை 4000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை அவரவர் சக்திக்குத் தகுந்த மாதிரி கிடைக்கிறது. நீங்கள் அரசாங்க உயர் அதிகாரியாய் இருக்கும் பட்சத்தில் கவர்ன்மென்ட் விடுதிகளில் உங்கள் டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஊட்டியில் பணி புரியும் அலுவலர்கள் ஏற்பாடு செய்து விடுவார்கள். மற்றவர்கள் தங்கள் கைக்காசைத்தான் செலவு செய்யவேண்டும்.

என்னை மாதிரி இளைஞர்களுக்கு அங்கு போனவுடன் நாலு பெக் விஸ்கி போட்ட மாதிரி தலை கழுத்தில் நிற்காமல் தள்ளாடும். அப்படிப்பட்டவர்கள் அங்கும் இங்கும் அலையாமல் ரூமில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு தூங்கவும்.

நானும் என் நண்பரும் இரண்டு நாட்கள் ஊட்டி சென்று வந்தோம். இவ்வாறு சென்று வர வாய்ப்பு இல்லாத நண்பர்கள் இங்கு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து இன்புறவும்.


1.சேரிங் கிராஸ்:

ஊட்டியில் முதலில் உங்களை வரவேற்கும் அடையாளச்சின்னம்.



2. ஊட்டி லேக்:

தண்ணீரைத் தொட்டு விட்டால் ஒரு பாட்டில் பினாயில் வேண்டும் கை கழுவ. அத்தனையும் சுத்தமான சாக்கடை நீர்.


3. பொட்டானிகல் கார்டன்.


பல சினிமாக்களில் காட்டப்பட்டு விட்டதால் நேரில் பார்க்கும்போது அவ்வளவு த்ரில் இருக்காது.





4. சில இயற்கை / செயற்கைக் காட்சிகள்.





5. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்:

Lakshmi Cottages
272,Church Hill Lane,
Behind Safire Grand Cottage,
Udhagamandalam - 630001.


Phone: LL 0423-2452141
Mobile: 98435 67425


24 hours hot water, Parking Space Available. Located in a serene atmosphere within walking distance of Charring Cross. 





ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஊர்.


திங்கள், 17 அக்டோபர், 2011

ஜென்டிங்க் ஹைலேண்ட், மலேசியா

ஒரு குறிப்பு - போன பதிவில் விட்டுப்போனது - இந்த நாடுகளில் நம் நாடு போலவே மின்சாரம் 220 வோல்ட். ஆனால் பிளக்குகள் வேறு மாதிரியானவை. அவைகளின் கம்பிகள் சதுரமாக இருக்கும். நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் சாதனங்களை இந்தப் பிளக்குகளில் பொருத்த முடியாது. அதற்கு யூனிவர்சல் அடாப்டர் என்று ஒரு சாதனம் இருக்கிறது. நம் ஊரிலேயே கிடைக்கிறது. விலை 50 ரூபாய். செல்போன், காமிரா பயன்படுத்துபவர்கள் இந்த அடாப்டரைத் தவறாது வாங்கிக் கொண்டு போகவேண்டும்.
அடுத்து செல்போனுக்கு அந்த ஊரில் கிடைக்கும் புதிய சிம் கார்டு போட்டால்தான் வேலை செய்யும். கோலாலம்பூர் ஏர்போர்ட்டிலேயே கிடைக்கிறது. டிராவெல் ஏஜென்ட் வழிகாட்டுவார். இந்த சிம் கார்டில் பணம் மீதி இருந்தால் சிங்கப்பூரிலும் உபயோகப்படுத்தலாம். ஆனால் ரோமிங்க் சார்ஜ் வருவதால் அதிக கட்டணம் ஆகும். ஓரிரு முறை பேசுவதற்குப் போதும். அதிகமாகப் பேசுவதென்றால் சிங்கப்பூரிலும் தனி சிம் வாங்கிக் கொள்ளவேண்டும்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் புதிதாக உருவானவை. அவைகளுக்குப் பெரிய சரித்திரம் கிடையாது. ஆகவே அங்கு புராதன கலாச்சார சின்னங்கள் என்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக அவர்கள் பலவகையான உத்திகளைக் கடைப் பிடிக்கிறார்கள்.

ஜென்டிங்க் ஹைலேண்ட் என்று சொல்லப்படும் இடம் ஒரு மலைமேல் உண்டாக்கப்பட்ட ஒரு பொழுது போக்குத் தலம். அமெரிக்காவில் இருக்கும் டிஸ்னிலேண்ட் போல ஒரு இடம். முழுவதும் தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இடம். உள்ளே போனால் நாம் இந்த உலகத்தில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும். இந்த மாதிரி விளையாட்டுத் தளங்களுக்கே உரித்தான அத்தனை விளையாட்டுகளும் இங்கே இருக்கின்றன. 

நாங்கள் சும்மா வேடிக்கை மட்டும் பார்த்தோம். இந்த விளையாட்டுகளில் பங்கு பெற உடல் ஒத்துழைக்கவில்லை.

கீழிருந்து மலை மேல் போய்வர கேபிள் கார் வேலை செய்துகொண்டே இருக்கிறது. சுமார் 20 நிமிடம் பயணம் செய்து மலை உச்சியை அடையவேண்டும். பயணம் செய்யும்போது இந்தக் கேபிள் அறுந்தால் என்ன ஆகும் என்ற நினைப்பை விட முடியவில்லை.

படங்களைக் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்

இங்குள்ள First World Hotel மொத்தம் 6500 அறைகள் கொண்டது என்று சொன்னார்கள். நான் நூறு வரை எண்ணினேன். அதற்கு மேல் எண்ண(?) வரவில்லை. தூக்கக் கலக்கம். பேசாமல் போய்த் தூங்கி விட்டேன். இத்தனை அறையிலுள்ளவர்களுக்கும் காலை இலவச உணவு கொடுப்பதென்றால் எத்தனை ஏற்பாடுகள் வேண்டும் எனப் பாருங்கள். ஆயிரம் பேர் ஒன்றாகச் சாப்பிடக்கூடிய டைனிங்க் ஹால் இருக்கிறது. சமையல்காரர்கள் தேனி போல் சுறுசுறுப்பாக வேலை செய்து அத்தனை பேருக்கும் காலை உணவு கொடுக்கிறார்கள்.


மறுநாள் கீழே இறங்கினோம். அங்கிருந்து கோலாலம்பூருக்கு பஸ்சில் சென்றோம். கோலாலம்பூரில் நாங்கள் பார்த்த முக்கியமான இடங்கள்.

1.   பத்துமலை முருகன் கோவில்: 
   
  
   தமிழர்கள் ஒரு காலத்தில் அதிகமாக மலேசியாவில் இருந்ததன் ஞாபகார்த்தமாக இந்த முருகன் கோவில் விளங்குகிறது. மலைமேல் உள்ள ஒரு குகையில் முருகன் சந்நிதியும், வள்ளி-தேவயானை சமேத முருகன் சந்நிதியும் இருக்கிறது. பிற்காலத்தில் சுமார் 150 அடி உயர முருகன் சிலையை கோவிலுக்கு முன்பு, ஏறும் படிகளுக்கு அருகில் நிறுவி இருக்கிறார்கள். மலேசியாவிற்கு செல்பவர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய இடம்.

2.   பெட்ரொனாஸ் இரட்டைக் கோபுரம்:


இந்த கோபுரம்தான் மலேசியாவின் அடையாளமாக எல்லா டூர் கம்பெனிகளாலும் காட்டப்படும் சின்னம். இது மலேசியாவின் பெட்ரோல் கம்பெனியாரால் கட்டப்பட்டது. மலேசியாவின் இயற்கை வளங்களில் மிகவும் முக்கியமானது பெட்ரோல். இங்கு கிடைக்கும் பெட்ரோல் நல்ல தரமுடையது. ஆதலால் இதை வெளி நாட்டுக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டு தங்கள் தேவைக்கு தரம் குறைவாக உள்ள பெட்ரோலை வெளிநாட்டிடமிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். பிழைக்கத்தெரிந்தவர்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபடியால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

3.   கோலாலம்பூர் டெலிவிஷன் டவர்: 

    
   இது கோலாலம்பூர் டவர் என்று அழைக்கப்படுகின்றது. இதன் உச்சியில் ரேடியோ. டெலிவிஷன் ஒலி, ஒளிபரப்பும் கருவிகள் உள்ளன. இதில் பாதியில் ஒரு பார்வையாளர்கள் அரங்கு இருக்கிறது. அதற்குச் செல்ல லிப்ட் வசதி இருக்கின்றது. அங்கிருந்து பார்த்தால் பல கி.மீ. தூரத்திற்கு காட்சிகள் தெரிகின்றன.


4.   கோலாலம்பூர் வார் மெமோரியல்: 
  
   முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் மற்றும் 1950 களில் நடந்த உள்நாட்டுப்போர் ஆகியவைகளில் இறந்தவர்களுக்காக ஒரு தேசிய நினைவுச்சின்னம் வைத்திருக்கிறார்கள். மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றது.

5.   சுதந்திர தின விழா மைதானம்: 


   நம் ஊர் மைதானங்களைப் பார்க்கும்போது இது மிகவும் சிறியதாக இருக்கிறது. அந்த ஊர் ஜனத்தொகைக்கு அது போதும்போல் இருக்கிறது.

6.   புத்திரஜெயா: 
   
   
   
   கோலாலம்பூரில் இடநெருக்கடி காரணமாக அரசு அலுவலகங்களை 25 கி.மீ. தள்ளி ஒரு புதிய ஊர் ஸ்தாபித்து அங்கு மாற்றியிருக்கிறார்கள். கட்டிடங்கள் எல்லாம் விலாசமாக இடம் விட்டு கட்டியிருக்கிறார்கள். ஒரு சர்வதேச கருத்தரங்கு மையம், எல்லா வசதிகளுடனும் கட்டப்பட்டு இருக்கிறது.



7.   மகாராஜா அரண்மனை: 


    
   இந்த ஊரில் மகாராஜா இருக்கிறார். முழநீளப்பெயர். வாயில் நுழையவில்லை.  ஆனால் அதிகாரம் எல்லாம் பிரதம மந்திரிக்குத்தானாம். நாங்கள் அரண்மனை கேட்டையும் காவலாளியையும் மட்டும் பார்த்தோம்.
   
   

கோலாலம்பூர் அவ்வளவுதான். அடுத்தது சிங்கப்பூர்.
  

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

மலேசியா + சிங்கப்பூர்

கடந்த ஒரு வாரம் நானும் என் துணைவியாரும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருந்தோம். இன்று காலைதான் திரும்பினோம்.

நான் கொஞ்சம் போட்டோக்கள் எடுத்திருக்கிறேன். நல்லவைகளைத் தேர்ந்தெடுத்து போடுகிறேன்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

பரளிக்காடு - ஒரு நாள் சுற்றுலா


பரளிக்காடு சுற்றுலாவைப் பற்றி நிறைய பதிவர்கள் தங்கள் பதிவுகளில் எழுதி விட்டார்கள். ஒரிஜினல் கோவைவாசியான நான் அதைப் பற்றி எழுதாவிட்டால் என் தன்மானம் என்ன ஆவது? ஆகவே கடந்த 7-8-2011 ஞாயிற்றுக்கிழமை, நானும் இன்னும் மூன்று நண்பர்களுமாக போய்வந்தோம்.


போவதற்கு முன் அங்குள்ள வன அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிடவேண்டும்.
தொடர்புக்கு; திரு.ஆண்டவர், போன்- 90470 51011.

சனி, ஞாயிறுகளில் சுமார் 100 பேர் வரைக்கும் வருகிறார்கள். மற்ற நாட்களில் போக வேண்டுமென்றால் குறைந்தது 30 பேராவது போனால்தான் அவர்கள் தேவையான உணவு மற்றும் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யமுடியும்.

அங்குள்ள ஆதிவாசிகளைத் திரட்டி ஒரு சுய உதவிக்குழு அமைத்து அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வன இலாக்கா அலுவலர்கள் இந்த முயற்சிக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

கோவையிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் பரளிக்காடு இருக்கிறது. பில்லூர் அணைக்கட்டின் நீர்ப்பரப்புப் பகுதியின் ஆரம்பப் பகுதி. இங்கிருந்து பில்லூர் அணை நன்றாகத் தெரிகிறது. காலை 7 மணிக்கு கோவை காந்திபுரம் பஸ் ஸ்டேண்டிலிருந்து பரளிக்காட்டிற்கு அரசு பஸ் இருக்கிறது. சரியாக 10 மணிக்கு பரளிக்காட்டுக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.


நாங்கள் எங்கள் காரில் சென்றோம். வழி: காரமடை-வெள்ளியங்காடு-அத்திக்கடவு-முள்ளி-பரளிக்காடு.  வெள்ளியங்காட்டிற்கு அப்புறம் ரோடு கொஞ்சம் சுமார்தான். மலைப்பாதை. சிங்கிள் ரோடு. மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டி நன்கு அனுபவம் உள்ளவர்களினால்தான் இந்த ரோட்டில் வாகனம் ஓட்ட முடியும். கொண்டை ஊசி வளைவுகள் திடீரென்று முன் அறிவிப்பு இல்லாமல் தோன்றும். போர்டுகள் கிடையாது.

வழியில் இரண்டு செக் போஸ்ட்டுகள் இருக்கின்றன. அங்கு விவரங்கள் சொன்னால் விட்டுவிடுகிறார்கள்.


இப்படிப்பட்ட ரோட்டில் எங்கள் காரை யார் ஓட்டினார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பீர்கள். இதோ அந்த டிரைவர்.


தன்னடக்கம் காரணமாக அது யார் என்று சொல்லாமல் விடுகிறேன்.

காலை 10 மணிக்குள் அங்கு இருக்கவேண்டும். பத்தரை மணிக்கு சூடாக சுக்குக் காப்பி கோடுக்கிறார்கள். அதன் பிறகு பரிசல் சவாரி.

இந்த நீர்ப் பரப்பில் சுற்றுலாப் பயணிகளை பிளாஸ்டிக் பரிசலில் கூட்டிக்கொண்டு ஒன்றரை மணி நேரம் சுற்றிக் காண்பிக்கிறார்கள். ஒரு பரிசலுக்கு நான்கு பேர். பரிசலில் போகும்போது லைஃப் ஜாக்கெட் கண்டிப்பாக அணிந்து கொள்ளவேண்டும்.



பரிசலில் போகும்போது இயற்கையை ஆசை தீர அனுபவிக்கலாம்.


பரிசல் சவாரி முடிந்ததும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுகிறோம். இங்கு உட்காருவதற்கு நாற்காலிகளும் படுத்துக்கொள்வதற்கு கயிற்றுக் கட்டில்களும் ஊஞ்சல்களும் இருக்கின்றன. நான்கு சுவர்களுக்குள்ளேயே வாழ்க்கையைக் கழிக்கும் நகரவாசிகளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.


ஒன்றரை மணிக்கு சாப்பாடு வந்து விடுகிறது. சப்பாத்தி-குருமா, வெஜிடபிள் பிரியாணி-தயிர்ச்சட்னி, ஒரு அசைவ குழம்பு, தயிர் சாதம்-ஊறுகாய், சிப்ஸ், ராகிக் களி-கீரை மசியல், இவ்வளவுதான் மதிய உணவு. கடைசியாக மலையிலேயே விளைந்த கதலி வாழைப் பழம். பரிசலில் போவதற்கும் உணவிற்கும் சேர்த்து 350 ரூபாய் கட்டணம்.

ஒரு வெட்டு வெட்டி விட்டுப் படுத்தால் மாலை எப்படியும் யானை வந்து எழுப்பிவிடுமாம். நாங்கள் யானைகளை ஏற்கனவே பார்த்திருப்பதால், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து புறப்பட்டு விட்டோம். 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.




புதன், 1 டிசம்பர், 2010

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டையில் எங்கள் கைடு


கோட்டை வாசல்


எல்லாம் பளிங்குங்க!


பச்சைக்கம்பளம். வாங்கலாம்னு பார்த்தேன். வெலைக்குத் தரமாட்டேனுட்டாங்க.



நாங்கதேன் ?


இந்த மாடத்துலதான் ஷாஜஹான் தன் கடைசி காலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தாராம் ! நான் பாக்கலீங்க. சொல்லக்கேள்வி.
பின்னால தாஜ்மஹால் தெரியுது பாருங்க.


அம்புட்டுத்தான், அடுத்த டூரை எதிர்பாருங்கள்.

கொசுறு :
தாஜ்மஹால் நல்லா இருக்குங்க இல்ல?



இந்தப்படம் புடிக்கலீங்களா? அப்ப இது புடிக்குதா பாருங்க!

மேலும் படங்களைப் பார்க்க இந்த லிங்க்குக்குப் போகவும்.

http://www.youtube.com/watch?v=vJGK11EyLT4