விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 4



விவசாயியின் பேராசைக்கு தூபம் போட்டதில் அரசுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டின், (ஏன், மொத்த இந்தியாவின் என்று கூட சொல்லலாம்) பெரிய சாபக்கேடு என்னவென்றால்இலவசக் கலாச்சாரம்”. எல்லாம் இலவசம். டி.வி. இலவசம். கேஸ் அடுப்பு இலவசம். பெண்டாட்டி இலவசம் (இலவசக் கல்யாணம்), பொங்கல் சாமான்கள் இலவசம், தீபாவளிக்கு வேஷ்டி, சேலை இலவசம். இப்படியாக எல்லோரையும் பிச்சைக்காரர்களாக மாற்றியாயிற்று. இது போக அரசு வேலை வாய்ப்புத்திட்டம். காலையில் போய் பெயர் கொடுத்துவிட்டு மரத்தடியில் படுத்து தூங்கி எழுந்தால் நூறு ரூபாய் கூலி. கஷ்டப்பட்டு வேலை செய்பவன் முட்டாளாகிக்கொண்டு வருகிறான்.

இந்த வரிசையில் முதலில் வந்தது விவசாயிகளின் கிணறுகளுக்கு இலவச மின்சாரம். இதை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு விஞ்ஞான நிபுணர்களும் ஒரு காரணம். அதாவது ஆற்றுப்பாசன விவசாயிகளும், குளத்துப்பாசன விவசாயிகளும் தங்கள் நீர்த்தேவைக்காக செய்யும் நீர்த்தீர்வை செலவு சுமார் நூறு ரூபாய்கள் மட்டுமே. ஆனால் கிணற்றுப்பாசன விவசாயிகள் கிணறு வெட்ட, மோட்டார் பம்ப் செட் வாங்க, மின்சார இணைப்பு வாங்க என்றெல்லாம் அதிக முதலீடு செய்த பின்பும், தொடர் செலவாக மின்சார கட்டணம் ஆயிரக்கணக்கில் கட்டவேண்டியதாக இருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் கிணற்றுப்பாசன விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கிறதா என்றால் அது இல்லை. ஆகவே அவர்களுக்கு அரசு ஏதாவது வகையில் சலுகை காட்டவேண்டுமென்று போராட்டங்களும், கருத்துப் பரிவர்த்தனைகளும் நடந்ததன் விளைவாக, கிணற்றுப்பாசன விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

இங்குதான் ஆரம்பித்தது வினை. மின்சாரத்திற்கு காசு இல்லை என்று ஆனவுடன் நிலத்தடி நீர் உபயோகம் பன்மடங்காகப் பெருகியது. எவ்விதக்கட்டுப்பாடும் இல்லாமல் விவசாயிகள் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தனர். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குப் போனது. நிலத்தடி நீர், மக்களின் பொதுச்சொத்து என்கிற கருத்து யாருக்கும் இல்லாமற்போனது. யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்கிற மனப்பான்மையே எங்கும் நிலவியது. பல கிணறுகள் வறண்டு போயின. வளர்ந்து வரும் நகரத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு வேலைக்கு ஆட்களும் கிடைப்பது அரிதாகியது. அந்த விவசாயிகள் பலரும்முட்டுக்கல்விவசாயத்தைப் பண்ண ஆரம்பித்தார்கள். அதென்ன முட்டுக்கல் விவசாயம் என்கிறீர்களா, அதுதாங்க ரியல் ஸ்டேட் பிசினஸ். எல்லோரும் தங்கள் நிலங்களை புரோக்கர்களிடம் அக்ரீமென்ட் போட்டுவிட்டு, வந்த காசை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையை வளர விட்டால் உணவுப்பஞ்சம் வந்துவிடுமென்ற பயம் அரசுக்கு வந்தது. உள்நாட்டு வெளிநாட்டு நிபணர்களை வரவழைத்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து,  ஊரிலுள்ள கிணறுகளை எல்லாம் சொகுசு காரில் சுற்றிக் காண்பித்தார்கள். அவன் ஊர்ல, அவன் கிணத்தைப் பார்த்ததே இல்லை. இந்தியாவுக்கு வந்துதான் கிணற்றைப் பார்க்கிறான்.


ஆனால் அவன் கெட்டிக்காரன். இந்த உண்மையை வெளியில் சொல்வானா? அவர்களும் தஸ்புஸ் என்று இங்கிலீசில் பேசிக்கொண்டு, நம்ம ஆளுகள் கிட்ட இருந்தே எல்லா விசயமும் தெரிஞ்சுகிட்டு, இங்கிலீசில் ஒரு பெரிய ரிப்போர்ட் கொடுத்தார்கள். அதில்நீங்கள் பயப்படுகிறது முற்றிலும் சரி. இப்படியே விட்டால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாகப் போய்விடும். உள்ளூர் நிபுணர்களை வைத்து இன்னும் பல தகவல்களைத் திரட்டிக்கொண்டு எங்கள் ஊருக்கு வரச்சொல்லுங்கள். இந்த ஊர் வெய்யிலில் எங்களால் சரியான தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே நாங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்து சொல்லியனுப்புகிறோம்என்று சொல்லிவிட்டு அவர்களின் கன்சல்டேஷன் பணத்தை வாங்கிக்கொண்டு பறந்து போனார்கள்.

இப்படி பலநாட்டு நிபணர்களுக்கும் சொம்பு தூக்கி, நம் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தது என்னவென்றால்:

1.   தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அருகி வருகிறது.
2.   அதற்கு உடனடியாக ஏதாவது செய்தேயாக வேண்டும்.
3.   என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து சொல்ல உடனடியாக ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படவேண்டும்.
4.   அவர்கள் உடனே பல வெளிநாட்டுகளுக்குச் சென்று ஆராய்ந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வரவேண்டும்.
5.   இந்தக் குழுவிற்கு மாண்புமிகு வேளாண்அமைச்சர் தலைமை தாங்குவார்.

இப்படியாக பல அரசியல் கூத்துகள் நடந்து முடிந்த பிறகு, நம் உள்ளூர் நிபணர்கள் சில உத்திகளைக் கண்டுபிடித்தார்கள். முதலில் இந்த இலவச மின்சாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உண்மை புலப்பட்டது. அரசியல் ரீதியாக ஒன்றை இலவசம் என்று ஆக்கிய பிறகு அதற்கு காசு வாங்க ஆரம்பிப்பது அரசியல் தற்கொலைக்கு சமம். இதற்காக நம் நிபுணர்கள் ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார்கள். செருப்பு காலுக்குப் பத்தவில்லையா? காலை வெட்டு! இந்த ரீதியில் மின்சாரம் சப்ளை செய்வதைக் கட்டுப்படுத்தினார்கள். 24 மணி சப்ளை போய் 20 மணி, 16 மணி, 12 மணி, 8 மணி என்று படிப்படியாகக் குறைத்து தற்போது இரண்டு தவணைகளாக மொத்தம் 6 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படுகிறது. எதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் நம் மக்கள் அதற்கு பழகிக்கொள்ளுவார்கள் என்கிற உண்மை அரசியல்வாதிகளுக்குப் புரிந்து விட்டது.

பிறகு இஸ்ரேல் சென்று வந்த நம் நிபுணர் ஒருவர்சொட்டு நீர்ப்பாசன முறையை”  அறிமுகப்படுத்தினார். அப்போது நீர்ப்பாசன வல்லுநர்கள் எல்லோரும்ஆஹா, நிலத்தடி நீர்ப் பிரச்சினை தீர்ந்துவிட்டதுஎன்று ஆர்ப்பரித்தார்கள். சில ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த முறையில் உள்ள சீர்கேடுகள் வெளிவர ஆரம்பித்தன. அதிக முதலீடு, தரமற்ற குழாய்கள், நம்நாட்டுக்கு உகந்த சரியான தொழில் நுட்பம் இல்லாமை, ஆகிய காரணங்களினால் இந்த சொட்டு நீர்ப்பாசன முறை எதிர்பார்த்த அளவு பலனைத் தரவில்லை. இப்போதும் பல விவசாயிகள் இந்த முறையை குறிப்பிட்ட சில பயிர்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு திராக்ஷை பயிர். இதற்கு இந்த முறை மிகவும் லாபகரமாக இருக்கிறது. தென்னைக்கு ஓரளவு பரவாயில்லை. ஆனால் மற்ற பயிர்களுக்குப் பொருந்தவில்லை. அரசு 50 சதம் மான்யம் கொடுத்தும் இந்த முறை பிரபலமாகவில்லை




வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 3


என்ன ஆயிற்று என்றால், அந்த இரண்டு வருடங்களில் மின்சார பம்ப்புகள் அறிமுகமாயிருந்தன. அதனால் பல சௌகரியங்கள். கவலை இறைக்க இரண்டு ஜோடி மாடுகள், இரண்டு ஆட்கள் தேவையில்லை. தண்ணீர், கவலையில் வருவதை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக வாய்க்காலில் வந்தது. அதிக பரப்பு நிலத்தில் நீர் பாய்ச்சி விவசாயம் செய்ய முடிந்தது. அதிக பணம் சேர்ந்தது. அதிகமான கிணறுகளும் வெட்டப்பட்டன. கிணறுகளின் ஆழமும் கூடிப்போய் விட்டது.
இந்த மாற்றம் இந்திய விவசாயத்தின் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனை ஆகும். விவசாயியின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி. விவசாயியின் வருமானம் பன்மடங்கு பெருகியது. ஆள் தேவை, கால்நடைகளின் தேவை குறைந்தது. கடின உழைப்பு குறைந்தது. நேரம் மிச்சமாகியது. இரவிலும் பாசனம் செய்ய முடிந்தது. அவனுடைய வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்தது. விவசாயி சுகவாசி ஆனான். எவ்வளவு சௌகரியங்கள்? பின்னால் ஏற்படப்போகும் ஆபத்துகளை உணராமல் விவசாயி இந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தான்.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் விவசாயப் புள்ளி விவரங்களை கொஞ்சமாக தருகிறேன். பயப்படாதீர்கள். ஏறக்குறைய மொத்த இந்தியாவின் பல மாநிலங்களின் நிலையும் இதுதான். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மிச்சம் பாதி பாசன விவசாயம். பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறதுஆற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம் ஆகியவையே அந்த மூன்று வகைகள். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப்பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகின்றது. தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம்.
அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரி கணக்கு. சில கிணறுகள் அதிக நிலத்தைப் பாசனம் செய்யலாம். அதே மாதிரி சில கிணறுகள் குறைவான நிலத்தைப் பாசனம் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவைகளினால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை.
இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
மின்சார மோட்டார் பம்பு செட்டுகளை உபயோகப்படுத்த ஆரம்பித்த புதிதில் விவசாயியின் வாழ்க்கை எப்படி ஒளிமயமாக மாறியது என்று பார்த்தோம். ஆனால் மனித மனம் விசித்திரமானது. முதலில் ஆசை தோன்றும். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடைசியில் பேராசையாக மாறும். பல ஆயிரம் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கூட, இன்னும் சில ஆயிரம் கோடிகள் கிடைக்காதாவென்று அலைகிறார்கள். விவசாயியும் இதற்கு விலக்கில்லை. தண்ணீர் சௌகரியமாகக் கிடைக்க ஆரம்பித்ததும் தன் விவசாயத்தைப் பெருக்கினான். அதற்கு இன்னும் தண்ணீர் தேவைப்பட்டது. அதற்காக கிணற்றை ஆழப்படுத்தினான். ஒருவனைப்பார்த்து பலரும் இதையே செய்தார்கள். வசதி உள்ளவன் இன்னும் ஆழமாக வெட்டினான். இந்தச் சமயத்தில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாதாரண திறந்த வெளிக்கிணறுகளை மேலும் ஆழப்படுத்த முடியாததால் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மாறினார்கள். முதலில் 500 அடி, பிறகு 600 அடி, இப்படியாக 1000, 1200 அடி ஆழமான ஆழ்குழாய் கிணறுகள் சர்வ சாதாரணமாய் விட்டன. இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கிணறுகளை ஆழப்படுத்தி, ஆழப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு போனார்கள். கிணற்று நீரின் தன்மையும் பல இடங்களில் மாறிப்போனது.
இந்த நீர்த் தேடலில் மக்கள் ஒரு தத்துவத்தை மறந்துவிட்டார்கள். நிலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல. அது ஒரு பேங்க் சேமிப்பு கணக்கு மாதிரி. அந்தக்கணக்கில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்கமுடியும். அதில் இருந்த முந்தைய சேமிப்பு முழுவதையும் எடுத்த பிறகு, புதிதாக எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவைத்தானே எடுக்க முடியும். தமிழ் நாட்டின் நிலத்தடி நீரின் நிலை இப்போது இந்த அளவிற்கு வந்துவிட்டது. விவசாயியின் நீர்ப்பேராசை நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது.