புதன், 10 பிப்ரவரி, 2010

திருச்செந்தூர் பயணம்-2


தமிழ்நாடு சுற்றுலாத்துறை தங்கும் விடுதிகள்.
மதுரையில் நாங்கள் தமிழக சுற்றுலாத்துறை தங்கும் விடுதியில் தங்கினோம். இது ஒரு அரசுத்துறை நிறுவனம். அந்தத் துறைக்கே உரிய மெத்தனமும் அலட்சியமும் வெளிப்படையாகத் தெரிகிறது. வாடகையும் தனியார் விடுதிகளைக்காட்டிலும் அதிகமே. வேறு வழியில்லாமல் தங்க வேண்டியிருந்தது. இங்கே வாடகை வசூலில் முதியோர்களுக்கு ஒரு சலுகை கொடுக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாடகையில் 20 விழுக்காடு சலுகை தருகிறார்கள். வாடகைக்கான வரிக்கு இந்த சலுகை கிடையாது.
நாள் இரண்டு: காலையில் 7 ½ மணிக்கே புறப்பட்டு மீனாட்சி  கோவிலுக்கு சென்றோம்.
பொற்றாமரைக்குளம் தண்ணீர் இல்லாமல் வற்றி இருந்தது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகத்தான் போனது. இல்லாவிட்டால் அந்த தண்ணீரில் கைகால் கழுவ வேண்டியதாக இருக்கும்.
காலை 7 மணிக்கே கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. வடநாட்டு யாத்திரீகர்கள் கூட்டம் கூட்டமாக க்யூவில் நின்று கொண்டிருந்தார்கள். உடனே ஸ்பெஷல் தரிசன டிக்கட் வாங்கி சென்றால் அதிலும் கூட்டம். எப்படியோ ஒரு முக்கால் மணி நேரத்தில் மீனாட்சியைத் தரிசித்து விட்டு கால் மணி நேரத்தில் ஈஸவரனைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம்.
ஈஸ்வரன் சந்நிதிக்கு எதிரே ஒரு தூணில் அனுமார் புடைப்பு சிற்பமாக இருக்கிறார். நானும் அதை ஏறக்குறைய 35 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அந்த சிற்பம் வளர்ந்து கொண்டு வருவதாகத் தோன்றுகிறது.
வெளியில் (மேற்கு சித்திரை வீதியில்) தெரு ஓரத்தில் 10 ரூபாய்க்கு 4 இட்லி என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். ஆளுக்கு 4 இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க புறப்பட்டோம்.
தொடரும்....