ஞாயிறு, 23 மே, 2010

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை - பாகம் 1

விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.

இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று. தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்ற நான்கு நடன மங்கையர் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் சினிமா நடிகைகள் என்று குழம்பவேண்டாம், இவர்கள் வேறு. இதில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் தொழில் போட்டி வந்துவிட்டது. தங்களில் யாருடைய நடனம் சிறந்தது என்பதில் வாக்குவாதம் தொடங்கி பெரிய சண்டையாகி தேவேந்திரனிடம் பஞ்சாயத்திற்குப் போயிற்று. அவனும் ஒரு நாள் தேவசபையில் இவர்கள் இருவரையும் நடனமாடச்சொல்லி கவனமாகப் பார்த்தான். அவனால் இவர்களின் ஆட்டத்தில் உயர்வு தாழ்வு கண்டுபிடிக்க முடியவில்லை. தேவசபையில் இருந்த எல்லோரையும் கேட்டான். ஒருவராலும் இவர்கள் ஆட்டத்தில் வேறுபாடு காண முடியவில்லை. சரி, அப்புறமாக தீர்ப்பு கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அப்போது சர்வலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் நாரதரைப் பார்த்து வாரும் நாரதரே, இங்கு நடந்ததைப்பார்த்தீர்கள் அல்லவா? இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வியைச்சொல்ல என்னால் முடியவில்லை. நீர்தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே, இந்தப்பிரச்னைக்கு தீர்வு சொல்லக்கூடியவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று கேட்க, நாரதர் சொன்னார், பூலோகத்திலே உஜ்ஜனிமாகாளிப்பட்டினம் என்ற ஊரிலே விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா இருக்கிறான். அவன் சகல கலைக்ஞானமும், வீரதீரப் பராக்கிரமும், அதிவிவேகமும் உடையவனாய், பூலோக முழுவதும் பிரக்யாதி பெற்று விளங்குகிறான். அவனை நீர் நமது தேவலோகத் தேரை அனுப்பி வரவழைத்தீராகில் அவன் இந்தப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து சொல்லுவான் என்றார்.

உடனே தேவேந்திரனும் தேவலோக சாரதி மாதலியைக் கூப்பிட்டு உடனே பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு போய் அங்கு அரசாண்டு கொண்டிருக்கும் விக்கிரமாதித்த ராஜாவை நாம் அழைத்து வரச் சொன்னதாய்க் கூறி அவனை நம் ரதத்தில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் வருவாயாக என்று உத்திரவிட்டான். அவ்வாறே மாதலியும் தேவலோக ரதத்தில் குதிரைகளைப் பூட்டி பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு வந்தான். அந்தக்குதிரைகள் எப்படிப்பட்டவை என்றால் தேரில் பூட்டிவிட்டால் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்லக்கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை.

மாதலி விக்கிரமாதித்தன் அரச சபையில் பிரவேசித்து ராஜாவிற்கு வந்தனம் சொல்லி தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விக்கிரமாதித்தனும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று யாது பிள்ளாய், இவ்வளவு தூரம் வந்த காரணம் என்ன என்று கேட்க, மாதலி, மகாராஜா, தேவேந்திரன் யாது காரணமாகவோ தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான். விக்கிரமாதித்தன் பட்டியை நோக்க, பட்டியும் ராஜாவின் குறிப்புணர்ந்து மகாராஜா, எல்லாம் நல்ல காரியமாய் முடியும், சென்று வாருங்கள் என்று கூற, விக்கிரமாதித்தனும் சர்வாபரண, ஆயுதலரங்- கிருதனாய் புறப்பட்டு மாதலியைப்பார்த்து, போகலாமா என்று கேட்டான். மாதலியும் தேரை அரண்மனை வாசலில் கொண்டு வந்து தயாராக நிறுத்தினான். விக்கிரமாதித்தனும் சபையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வாசலுக்கு வந்து தேரில் ஏறுவதற்காக ஒரு கையினால் தேர்க்காலைப்பிடித்துக்கொண்டு ஒரு காலைத்தூக்கி தேர்த்தட்டில் வைக்கும்போது மாதலி குதிரைகளின் லகானைச்சுண்ட, அந்தக் குதிரைகள் வாயுவேகம் மனோவேகமாக நூறு யோஜனை தூரம் சென்றன. அது ஏனென்றால், மாதலிக்கு மனதிற்குள் ஒரு மானுடனை நம் தேரில் ஏற்றிச்செல்வதா என்ற ஆணவம்.

விக்கிரமாதித்தன் தேர்க்காலை ஒரு கையில் பிடித்து ஒரு கால் பெருவிரல் தேர்த்தட்டில் இருக்க, பிடித்த பிடியும், வைத்த காலும் அப்படியே இருக்க தேரில் ஒட்டிக்கொண்ட அட்டை போல் அசராமல் வந்து கொண்டிருந்தான்.
இதைப்பார்த்த மாதலி, ஆஹா, நாம் என்னவோ இவன் சாதாரண மானுடன் என்று எண்ணினோம், ஆனால் இவன் மிகுந்த வீரதீரப்பராக்கிரமசாலியாய் இருக்கிறானே, இவனை நாம் சரியானபடி தேவலோகம் கொண்டுபோய் சேர்க்காவிடில் நமக்கு வேலை போய்விடும் என்று யோசித்து தேரை நிறுத்தி, கீழே இறங்கி விக்கிரமாதித்தனை வணங்கி, மகாராஜா, நான் தங்களை சாதாரணமாக நினைத்து விட்டேன், என்னை மன்னிக்கவேண்டும் என்று கூறி, கைலாகு கொடுத்து விக்கிரமாதித்தனை தேரில் ஏற்றி ஆசனத்தில் உட்காரவைத்து, தேரை தேவேந்திரன் சபை வாசலில் கொண்டு போய் நிறுத்தினான். விக்கிரமாதித்தன் வருவதைப்பார்த்த தேவேந்திரன் முதலான தேவர்கள் சபையின் வாசலுக்கே வந்து ராஜனை வரவேற்று சபைக்குள் அழைத்துப்போய் தனக்கருகில் ஓர் ஆசனம் போடச்செய்து, தேவேந்திரனும், விக்கிரமாதித்தனும் உட்கார்ந்துகொண்டு பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அப்போது விக்கிரமாதித்தனும் தேவேந்தரனை நோக்கி, தேவேந்திரா, என்னை இங்கு அவசரமாய் அழைத்து வரச்சொன்ன காரணம் என்னவெனக்கேட்க, தேவேந்திரன் சொன்னான், அகோ வாரும் விக்கிரமாதித்தா, நமது இந்திர சபையில் வழமையாக நடனமாடும் நால்வரில் ரம்பை, ஊர்வசி ஆகியோருக்கிடையில் தங்கள் தங்கள் திறமையில் கர்வமுண்டாகி நான்தான் சிறந்தவள் என்று இருவரும் கூறிக்கொண்டு, தங்களில் யார் சிறந்தவள் என்று தீர்மானித்துக் கூறும்படியாய் என்னிடத்தில் வந்தார்கள். நானும் அவர்களது நடனத்தைப்பார்த்து யாருடைய நடனம் சிறந்தது என்று கூற முடியவில்லை. அப்போது நாரதர் உன்னுடைய வீரப்பிரதாபங்களையும், சகல கலைக்ஞானத்தைப்பற்றியும், நீதி தவறாத ஆட்சியைப்பற்றியும் கூறி, இந்த நடனமாதர்களின் சிறப்பை உன்னால்தான் கணித்துச்சொல்ல முடியும் என்று கூறியதால் அந்தக்காரியத்திற்காக உன்னை இங்கு வரவழைத்தோம் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் சரி, நாளைக்காலையில் அவர்கள் இருவரையும் இங்கு சபையில் நடனமாடச்சொல்லுங்கள், நான் எனக்குத்தெரிந்த வரையில் அவர்களின் ஆட்ட நுட்பத்தை அறிந்து சொல்கிறேன் என்று கூறினான்.

பிறகு இந்திரன் சில சேடிப்பெண்களைக் கூப்பிட்டு விக்கிரமாதித்த மகாராஜாவை அழைத்துப்போய் நமது அரண்மனையில் தங்க வைத்து வேண்டிய உபசாரங்களைச் செய்யுமாறு பணித்தான். அவ்வாறே பணிப்பெண்களும் விக்கிரமாதித்தனை அழைத்துப்போய் போஜனம் செய்வித்து அம்சதூளிமா மஞ்சத்தை தயார் செய்து அவனை சயனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டு ஒரு புறமாய்ப் போய் இருந்தார்கள். விக்கிரமாதித்தனும் சிறிது நேரம் யோசனையாய் இருந்துவிட்டு நித்திரை போனான்.

நாமும் நித்திரை செய்து பிறகு மீதியைப் பார்ப்போமா?

செவ்வாய், 18 மே, 2010

பூனைத்தோல் கம்பெனி




பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரையை படித்தேன். இன்று ஒரு வலைத்தளத்தைப் பார்த்தவுடன் அந்தக்கட்டுரை நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி (???!!!) அடைகிறேன்.

ஒரு நாள் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் வெளிவந்தது.

பூனைத்தோல் கம்பெனி.

ஒரு பங்கு ஒரு டாலர் மட்டுமே. உங்கள் பங்க்குகளுக்கு முந்துங்கள்.

நாங்கள் ஒரு புது கம்பெனி ஆரம்பித்திருக்கிறோம். அமெரிக்காவிலும் ஐரோப்பா கண்டத்திலும் தற்போது பூனைத்தோல் அங்கிகளும் அலங்காரப்பொருள்களும் மிக பிராபல்யமாக விற்பனையாகின்றன. ஆனால் அவைகளை போதுமான அளவில் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான பூனைத்தோல் கிடைப்பதில்லை. இந்தக்குறையை நீக்கும்பொருட்டு நாங்கள் ஒரு பூனைத்தோல் கம்பெனி ஆரம்பித்துள்ளோம்.

வருடத்திற்கு ஒரு கோடி (10 பில்லியன்) பூனைத்தோல் தேவைப்படுகின்றது. அதற்காக நாங்கள் ஒரு பூனைப்பண்ணை ஆரம்பிக்கப்போகிறோம். இந்தப்பண்ணையில் பதினொரு லட்சம் பூனைகள் வளர்க்கப்போகிறோம். இதில் ஒரு லட்சம் பூனைகள் ஆண் பூனைகள். மீதி பெண் பூனைகள். ஒரு பெண் பூனை 6 மாதத்தில் இரண்டு குட்டிகள் போடும். இதில் சராசரியாக ஒன்று ஆணும் ஒன்று பெண்ணாகவும் இருக்கும். தாய்பூனையும் குட்டிப்பூனையும் அடுத்த 6 மாதத்தில் 4 குட்டிகள் போடும். ஆகக்கூடி ஒரு பெண் பூனை ஒரு வருடத்தில் 7 பூனைகளாகப் பெருகி விடும். பத்து லட்சம் பூனைகள் அந்த வருட முடிவில் 70 லட்சம் பூனைகளாக பெருகிவிடும். 10 லட்சம் பெண் பூனைகளை வைத்துக்கொண்டு மீதி 60 லட்சம் பூனைகளைத்தோலுரித்து ஒரு தோல் 5 டாலர் என்று விற்றால் 300 லட்சம் டாலர் கிடைக்கும்.



பூனைகளுக்கு சாப்பாடு வேண்டுமல்லவா? அதற்காக பக்கத்திலேயே ஒரு எலிப்பண்ணை ஆரம்பிக்கப்படும். 5 கோடி எலிகள் வளர்க்கப்படும். எலிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 10 குட்டிகள் போடும். இவைகள் பூனைகளுக்கு தீனியாக போடப்படும்.

எலிகளுக்கு தீனி வேண்டுமல்லவா? அதற்காக பூனைகளின் தோலை உறித்தபிறகு இருக்கும் கழிவுகளை பதப்படுத்தி எலிகளுக்கு உணவாக கொடுக்கப்படும்.

இப்படியாக மிகக்குறைந்த செலவில் மிக அதிக லாபம் ஈட்டப்போகிறோம். அந்த லாபத்தில் 10 பர்சென்ட் மட்டும் கம்பெனி சிலவுகளுக்காக வைத்துக்கொண்டு மீதி லாபம் முழுவதும் பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். ஒரு பங்கின் விலை ஓரு டாலர் மட்டுமே. உங்கள் தேவைகளுக்கு முந்துங்கள். பதிவர்களுக்கு சலுகை வழங்கப்படும்.

இப்படியாக ஒரு விளம்பரம் வந்ததாக ஒரு கற்பனைக்கதை.

இதை மிஞ்சும் வகையில் இன்று ஒரு பதிவில் ஒரு விளம்பரம் பார்த்தேன். இதுவும் அமெரிக்க விளம்பரம்தான். அவருடைய பதிவில் இருக்கும் பிக்சல்களை விற்கிறாராம். ஒரு பிக்சல் ஒரு டாலர் மட்டுமே. ரொம்ப சலீசு. தேவைப்படுபவர்கள் சீக்கிரமே வாங்கிக்கொள்ள வேண்டுமாம். பிக்சல்கள் தீர்ந்துவிட்டால் பிறகு வருத்தப்படக்கூடாது. இந்ந விளம்பரத்தைப்பார்க்காதவர்கள் உடனே பார்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 12 மே, 2010

இன்றைய செய்தி-சென்னை பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைக்கு தினமலரில் வந்த செய்தி.

ஏழைகள் சொந்தமாக சொத்து வாங்குவதை ஊக்குவிக்க, 3,000 ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளை வாங்கும் போது, அந்த ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என, 1998ல் அரசு உத்தரவிட்டது. தற்போது நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால், 5,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.

ஆகவே சென்னையில் 5,000 ரூபாய்க்கு சொத்து வாங்க முடியும் என்று தெரிகிறது. பதிவுலக நண்பர்கள் அப்படி ஏதாவது சொத்து கிடைப்பதாயிருந்தால் உடனடியாக எனக்கு தகவல் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


சனி, 8 மே, 2010

கிளி ராஜாவான கதை.






விக்கிரமாதித்தனாகிய கிளி பட்டியுடன் ஊர் திரும்பியதை போன பதிவில் பார்த்தோம். பட்டி எப்படி கிளியை ராஜாவாக மாற்றினான் என்று பார்ப்போம்.

பட்டி ஊர் திரும்பியவுடன் அந்தப்புரத்திற்கு ஒரு செய்தி சொல்லியனுப்பினான். அதாவது அவர்கள் இருந்த விரதம் முடிந்து விட்டது என்றும் மகாராஜா இனி அந்தப்புரத்திற்குள் வருவதற்கு தடை இல்லையென்றும் ராஜாவிடத்தில் சொல்லிவிடுங்கள் என்பதுதான் அந்த செய்தி. அவர்களும் ஒஹோ, நமது ராஜனைப்பற்றி ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும், அதனால்தான் பட்டி இவ்வாறு சொல்லியிருக்கவேண்டும் என்று சந்தோஷப்பட்டு, அதே மாதிரி (கம்மாள) ராஜாவுக்கும் தோழிகள் மூலமாக சொல்லியனுப்பினார்கள்.

கம்மாளனும் ஆஹா, நம் நீண்டநாள் அபிலாட்சை நிறைவேறப்போகிறது என்று சந்தோஷத்துடன் ஆடைஆபரண அலங்கிருதனாய் அந்தப்புறம் நோக்கி வந்தான். அந்தப்புறம் வருவதற்கு சற்று முன்பாக சில தோழிகள் ராஜாவிடம் வந்துஇந்த மாதிரி விரதம் முடிந்து ராஜா அந்தப்புரம் வருமுன் ஒரு ஆட்டுக்கிடா சண்டை வைப்பது வழக்கம், அதில் ஒன்று ராஜாவின் கிடா என்றும், மற்றொன்று ராணிகளின் கிடா என்றும் வைத்துக்கொண்டு கிடாக்களை சண்டைக்கு விடுவோம், அதில் ராஜா கிடா ஜெயித்தால்தான் ராஜா அந்தப்புரம் வரலாம்என்று சொன்னார்கள். ராஜாவும் அப்படியே நடக்கட்டும் என்று சொல்லி பட்டியிடம் கிடாச்சண்டைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னான். பட்டி ஏற்கெனவே தயாராக இருந்த இரண்டு கிடாக்களை கொண்டுவந்து சண்டைக்கு விடச்சொன்னான். பட்டி அதில் தாட்டியான கிடாவை ராணிகளின் கிடா என்றும் கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் கிடாவை ராஜா கிடா என்றும் அறிவித்தான்.


இரண்டு கிடாக்களும் வீரமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதி சண்டை போட்டன. அவைகளில் ராஜா கிடா நோஞ்சானாக இருந்தபடியால் அதை ராணிகளின் கிடா முட்டி மோதி கொன்றுவிட்டது. இதைப்பார்த்த ராஜா, ஆஹா, நம் கிடா செத்துவிட்டதா என்று ஆக்ரோஷமாய் தன்னுயிரை கிடாவின் உடம்பில் புகுத்தி, கிடாவை எழுப்பி திரும்பவும் ராணிகளின் கிடாவுடன் சண்டை போடப்போனான். இதைப்பார்த்துக்கொண்டிருந்த பட்டி ஆஹா, நாம் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று உடனே விக்கிரமாதித்தனாகிய கிளியைக்கொண்டு வந்து ராஜாவின் உடம்பின் அருகில் விட்டான். விக்கிரமாதித்தனும் உடனே கிளியின் உடம்பை விட்டு தன் உடலில் பிரவேசித்தான். பட்டி உடனே மல்லர்களை விட்டு கம்மாளன் பிரவேசித்த கிடாவைப்பிடித்து கொன்றுவிடச்சொன்னான். மல்லர்களும் அவ்வாறே செய்ய கம்மாளனின் உயிர் ஒன்றுக்குமுதவாமல் போய்விட்டது.


உடனே பட்டி எல்லோருக்கும் நமது விக்கிரமாதித்த ராஜா வந்துவிட்டார் என்று பிரகடனம் செய்து அது நாள் வரைக்கும் நடந்த விருத்தாந்தங்களை எல்லோருக்கும் சொன்னான். சகல ஜனங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, இந்த வைபவத்தை நாடெங்கிலும் கொண்டாடினார்கள்.

பட்டி விக்கிரமாதித்தன் தலையை இரவல் கேட்ட கதையை அடுத்த பதிவில் பார்க்கலாமா?

திங்கள், 3 மே, 2010

காய்ச்சலும் அப்பாவின் வரவும்





டாக்டரைப்பார்த்துவிட்டு வந்து ரூமில் படுத்துக்கொண்டேன். படுக்கும்போது சுமார் 10 மணி இருக்கும். தூங்கி விட்டேன். 12 மணி சமயத்தில் ஆபீஸ் பியூன் வந்து, சார், சார் என்று என்னை எழுப்பினான். விழித்துப்பார்த்தால் எதிரில் என்னுடைய அப்பா. கூடவே என்னுடைய அத்தை மாமாவும். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பா சொன்னார், அவருக்கு என்னமோ ராத்திரி திடீரென்று மகனைப்பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அவருக்கு லீவு. காலையில் எழுந்து பொள்ளாச்சி வந்து என் அத்தை மாமாவையும் கூட்டிக்கொண்டு ஆனைமலை வந்து நான் தங்கியிருக்கும் இடத்தை விசாரித்து வந்து விட்டார்கள். நானோ இப்படி படுத்திருப்பதைப் பார்த்தவுடன் அவர்களுக்கும் அதிர்ச்சி. பரஸ்பரம் விசாரிப்புகளுக்குப் பின் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தோம்.

என்னுடைய ஆபீசரும் லீவில் இருப்பதால் நான் உடனே கிளம்ப முடியாது. கோயமுத்தூரில்தான் அவருக்கும் பெரிய ஆபீசர் இருக்கிறார். அவருக்கு ஆள் அனுப்பி லீவு சேங்க்ஷன் ஆன பிறகுதான் நான் ஊரைவிட்டு கிளம்ப முடியும். அதற்கு எப்படியும் இரண்டு நாள் ஆகிவிடும். இந்த விவரங்களை நான் சொன்னவுடன் அப்பா ஒரு முடிவு செய்தார். அதாவது அவர் ஆருக்குத்திரும்பிப்போய் என்னுடைய பாட்டியை எனக்குத்துணைக்காக அனுப்புவதாகவும், நான் லீவு கிடைத்தவுடன் பாட்டியுடன் கோயமுத்தூர் வருவதாகவும் முடிவு செய்தோம்.

அப்படியே என் அப்பா திரும்பிப்போய் மறுநாள் என் பாட்டியை என் சித்தப்பா கூட்டுக்கொண்டு வந்தார். பாட்டி கெட்டிக்காரி. எப்படியோ அங்கும் இங்கும் அலைந்து எனக்கு கஞ்சி வைக்கவேண்டிய சாதனங்களை தேடி எனக்கு கஞ்சி வைத்துக்கொடுத்தார்கள். தனக்கும் சாப்பாடு செய்து கொண்டார்கள். நான் ஆபீஸ் பியூனை கோயமுத்தூருக்கு அனுப்பி, லீவு கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவர் ஒரு நாளில் லீவு சேங்க்ஷன் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். மறுநாள் ஆபீஸ் பொறுப்புகளையெல்லாம் அந்த ஊர் விவசாய டெமான்ஸ்ரேட்டரிடம் கொடுத்துவிட்டு ஊருக்குப்புறப்பட்டேன்.

இந்த இரண்டு மூன்று நாளில் என்னுடைய உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது. என்னுடைய சித்தப்பா பொள்ளாச்சி சென்று ஒரு டாக்சி பிடித்துவந்தார். டாக்சியில் புறப்பட்டு கோயமுத்தூர் வந்து சேர்ந்தேன்.

எங்களுக்கு என்று ஒரு குடும்ப டாக்டர் அப்போது உண்டு. அவரிடம்தான் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் வைத்தியம் செய்து கொள்வோம். அவர் வீட்டில் கன்சல்டிங்க் ரூமில் ஆளுயர அலமாரிகள் இரண்டு இருக்கும். அவைகளில் நூற்றுக்கணக்கான பாட்டில்களில் விதவிதமான கலர்களில் பல மருந்துகள் இருக்கும். நாங்கள் வைத்தியத்திற்கு போனால், கையைப்பிடித்து பார்த்துவிட்டு அலமாரியில் இருக்கும் நாலைந்து பாட்டில்களில் இருந்து கொஞ்சகொஞ்சம் மருந்துகளை ஒரு அளவுகுப்பியில் ஊற்றி கலக்கி, நாங்கள் கொண்டு போயிருக்கும் பாட்டிலில் ஊற்றுவார். பிறகு விரல் அகல காகிதம் ஒன்றை எடுத்து நீளவாக்கில் மடித்து கத்தரிக்கோலால் அளவுகள் வெட்டுவார். அதை பாட்டிலின் மேல் ஒட்டி இந்த மருந்தை இந்த ஆளவு பிரகாரம் இரண்டு நாள் சப்பிட்டுவிட்டு வருமாறு கூறுவார். அந்த மருந்து ஆறு வேளைக்கு வரும். எந்த நோயாக இருந்தாலும் அந்த ஆறு வேளை மருந்திலேயே சரியாகிவிடும்.

இவருக்கு பீஸ் உடனடியாகக் கொடுப்பதில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து பில் அனுப்புவார். பில் எவ்வளவு இருக்கும் தெரியுமா, ஐந்து ரூபாய் அல்லது ஆறு ரூபாய் என்றிருக்கும். இதை உடனடியாக கொடுக்க வீட்டில் முடியாமலிருக்கும். எங்கள் வீட்டில் நாலைந்து தென்னை மரங்கள் உண்டு. அவை நன்றாக காய்த்துக்கொண்டிருந்தன. ஒரு மாதம் கழித்து டாக்டர் வீட்டிலிருந்து வேலையாள் வருவான். அம்மா தேங்காய் இருந்தால் வாங்கிக்கொண்டு வரச்சொன்னார்கள் என்பான். எங்க அம்மாவும் பத்து தேங்காய்களை சாக்கில் போட்டுக்கட்டி அவனிடம் கொடுத்தனுப்புவார்கள். அதுதான் நாங்கள் டாக்டருக்கு பில் செட்டில் செய்யும் முறை.

இந்த டாக்டர் எங்கள் வீட்டில் யாருக்காவது ரொம்பவும் முடியாமலிருந்தால் வீட்டுக்கே வருவார். வந்து பார்த்துவிட்டு போகும்போது நாராவது கூடவே டாக்டர் வீட்டுக்குப்போய் மருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். அப்போதெல்லாம் கோயமுத்தூரில் மருந்துக்கடைகளே அபூர்வம். மொத்தமாகவே மூன்று நான்கு மருந்துக்கடைகள்தான் உண்டு. டாக்டர்களும் மொத்தமாகவே ஒரு பத்து பேர்களுக்குள்தான் இருந்தார்கள். ஏதாவது பெரிய நோய் என்றால் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் (கவர்மெண்ட் ஆஸ்பத்திரி) கொண்டு போகவேண்டும். ஒருவரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொன்னால் ஏறக்குறைய அவர் கதை முடிந்துவிட்டது என்று எல்லாரும் பேசிக்கொள்வார்கள். அங்கு போய் நோய் தீர்ந்து வீடு திரும்பினால் பெரிய அதிர்ஷ்டசாலி என்று பொருள்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்கள் குடும்ப டாக்டர் என்னை வந்து பார்த்துவிட்டு இது டைபாய்டு ஜுரம், கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லி வைத்தியம் செய்தார். எப்படியோ என்னுடைய ஆயுள் கெட்டியாக இருந்தது. நான் பிழைத்து எழுவதற்கு இரண்டு மாதம் ஆகியது. அதற்குப்பிறகுதான் நான் வேலைக்கு சென்றேன்.

இந்த இரண்டு மாத இடைவெளியில் விக்கிரமாதித்தனை கிளியிலிருந்து ராஜாவாக மாற்றுவோமா?

திங்கள், 26 ஏப்ரல், 2010

ஆனைமலைக்காரர்களின் பொழுதுபோக்கு என்ன?




எல்லோருக்கும்
பெரும்பான்மையாக விவசாயம்தான் தொழில். வயலில் நாற்று நட்டு முடிந்துவிட்டால் அப்புறம் நீர் மணியகாரன் பாடு. அவன் பாட்டுக்கு வயலுக்கு தண்ணீர் கட்டிக்கொண்டு இருப்பான். கடலைக்காய் விவசாயத்திலும் கடலையை சித்திரையில் விதைத்து அது முளைத்து ஒரு மாதத்தில் ஒரு களை எடுத்துவிட்டால் பிறகு ஒன்றும் வேலையில்லை. மேலும் ஆனி மாதம் பிறந்துவிட்டால் அடை மழைக்காலம். வீட்டைவிட்டு எங்கும் வெளியில் போகமுடியாது.


அப்புறம் வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு எவ்வளவு நேரம் கூரையையே பார்த்துக்கொண்டு இருப்பது. இதற்கு ஆனைமலைக்காரர்கள் ஒரு நல்ல தீர்வு கண்டுபிடித்தார்கள். நல்ல ஜமாவாகச் சேர்ந்து கொண்டு ரம்மி ஆடுவதுதான் அந்த தீர்வு. மழை காலம் முடியும் வரைக்கும் இதுதான் அவர்களுடைய முக்கிய வேலை. சௌகரியமான ஒரு வீட்டில் கச்சேரி நடக்கும். பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொள்வார்கள். அவரவர்கள் இருக்கும் இடத்திற்கே டிபன், காப்பி, சாப்பாடு வகையறாக்கள் வந்துவிடும். இதற்கென்று ஒரு கடையை முதலிலேயே ஏற்பாடு செய்துகொள்வார்கள்.


மழைகாலம் ஏறக்குறைய இரண்டு மாதம் நீடிக்கும். இந்த இரண்டு மாதமும் இந்த ஜமா இரவு பகலாக, கலையாமல் ஆடிக்கொண்டே இருக்கும். வேலையிருப்பவர்கள் எழுந்து போவார்கள். அந்தக்காலி இடத்தில் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் உட்கார்ந்துகொள்வார். இப்படி ஒருவர் இருவர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள்.ஆனால் ஜமா நடந்துகொண்டே இருக்கும்.

மழையெல்லாம் ஓய்ந்து கடலை வெட்டு ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில்தான் ஜமாவைக் கலைப்பார்கள். ஒரு தடவை இப்படி ஜமா, இரண்டு மாதம் நடந்து முடிந்தபின் எல்லோருமாக ஒரு கணக்குப் பார்த்திருக்கிறார்கள். யாருக்கு எவ்வளவு லாபம், எவ்வளவு நஷ்டம் என்று கணக்குப்பார்த்தார்கள். அப்படிப்பார்த்ததில், எல்லோரும் எனக்கு இவ்வளவு நஷ்டம், எனக்கு இவ்வளவு நஷ்டம், என்றுதான் சொல்லுகிறார்களே தவிர ஒருத்தராவது, எனக்கு இவ்வளவு லாபம் என்று சொல்வாரில்லை. ஏறக்குறைய மொத்தமாக மூவாயிரம் ரூபாய் எல்லோருக்குமாக நஷடம். அன்றைய மூவாயிரம் ரூபாய் இன்றைக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு சமம்.

இது எப்படி ஆயிற்று என்று எல்லோரும் கூடி பேசினதில் அவர்கள் கண்டுபிடித்தது, இந்தப்பணம் பூராவும் அவர்கள் இரண்டு மாதமாகச் சாப்பிட்ட காப்பி, டிபன் வகையறாக்களின் செலவு. இது எப்படி இருக்கிறது பாருங்கள்?

நான் வேலை பார்த்த ஆபீஸ் ஆனைமலையிலும் பண்ணை வேட்டைகாரன்புதூரிலும் இருந்தன. நான் ஆனைமலையில் ரூமில் குடியிருந்தேன். தினமும் சைக்கிளில் பண்ணைக்குப்போய் மதியம் வரை இருந்துவிட்டு, மதியத்திற்கு மேல் ஆபீஸுக்கு வருவேன். என்கூட வேலை பார்த்தவனும், என் ஆபீசரும் லீவில் போய்விட்டபடியால், எல்லா வேலைகளையும் நான் ஒருவனாகப்பார்க்க வேண்டியதாயிற்று. பண்ணையில் அப்பொழுது நிலக்கடலை அறுவடை சமயம். மொத்தம் அறுபது ஏக்கர். அந்த வருடம் கடலை நல்ல மகசூல். ஏறக்குறைய 70-80 பேர் ஆட்கள் வேலை செய்கிறார்கள். கோயமுத்தூரிலிருந்து கடலை பிடுங்குவதற்காக டிராக்டரில் மாட்டப்பட்ட ஒரு கருவி வந்திருந்தது. அதன் உதவியுடன் ஏறக்குறைய முக்கால் பங்கு அறுவடை முடிந்திலுந்தது.

கடலையை அறுவடை செய்தவுடன் நன்றாக காயவைத்து, மூட்டைபோட்டு, குடோனில் அடுக்கி வைக்கவேண்டும். கடைசியாக அறுவடை செய்யும் சமயத்தில் மழை பிடித்துக்கொண்டது. கடலைக்காயை காயவைக்கமுடியவில்லை. அப்படியே அள்ளி ஒரு தாழ்வாரத்தில் போட்டோம். அந்த கடலைகளெல்லாம் அப்படியே முளைகட்டி, விதைக்கு உதவாமல் போயிற்று. இந்த வேலைகளையெல்லாம் நேரம் காலம் பார்க்காமல் மேற்பார்வை பார்த்ததில் என் உடல்நலம் கெட்டுப்போயிற்று.


எல்லா அறுவடையும் முடிந்து விட்டது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலையில் குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு பண்ணைக்கு போகலாம் என்று சைக்கிளை எடுத்தால், உடம்பு பூராவும் அப்படி ஒரு வலி. என்னடா, உடம்பு இப்படி இருக்கிறதே, எதற்கும் டாக்டரைப் பார்க்கலாம் என்று அந்த ஊரில் இருந்த ஒரே டாக்டரைப் பார்க்கப்போனேன். அவர் தெர்மாமீட்டரை வைத்துப்பார்த்துவிட்டு 102 டிகிரி காய்ச்சல் இருக்கிறது என்றார். காய்ச்சல் இருப்பது கூட தெரியாமல் நான் வேலை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். அவர் ஒரு ஊசி போட்டுவிட்டு, மருந்துகள் எழுதிக்கொடுத்துவிட்டு, பேசாமல் ரெஸ்ட் எடுக்கச்சொல்லிவிட்டார். ரூமுக்கு வந்து படுத்துக்கொண்டேன். அப்போதுதான் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது!

தொடரும்