சனி, 3 ஜூலை, 2010

என்னைப் பிடித்திருக்கும் பெருங்கவலை?



 
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பழைய நண்பர் வீட்டுக்கு வந்தார். அவரை ஒரு 50 வருடங்களாக அறிமுகம் என்றாலும் நெருங்கிப் பழகியதில்லை.
என் வீடு அவருக்கு எப்படித் தெரிந்தது என்றால் இரண்டு மாதத்திற்கு முன் என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் நானும் இன்னொரு நண்பரும் வந்து கொண்டிருந்தபோது நேர் எதிரில் அவர் வந்தபடியால் பேசவேண்டியதாயிற்று. என் கூட வந்த நண்பருக்கும் அவர் தெரிந்தவர்தான். அன்று என் நாக்கில் சனி பகவான் இருந்திருக்கிறார். ஒரு மரியாதைக்காக என் வீடு பக்கத்தில்தான் இருக்கறது, வாங்களேன், ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று அழைத்தேன். அவரும் ஆஹா, பேஷா வருகிறேன் என்று சொல்லி எங்களுடனே வீட்டுக்கு வந்தார்.
எங்கள் வீட்டு அம்மாவிடம் சொல்லி அவருக்கு ஒரு காப்பி கொடுத்தேன். நாங்கள் இருவரும் முன்பே அன்னபூர்ணாவில் காபி குடித்துவிட்டுத்தான் திரும்பிக் கொண்டிருந்தோம். அவர் காபி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். முக்கால்வாசி அவர் பேசினார். நாங்கள் இருவரும் சேர்ந்து கால்வாசி பேசினோம். எல்லாம் அவருடைய சுயபுராணம்தான். ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டார். எப்படியோ கஷ்டப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் கழித்து அவர் புறப்பட்டுச் சென்றார். அவர் போன பிறகு என் நண்பர் சொன்னார், நான் கண்ணால் ஜாடை காட்டினேனே, அதைப்புரிந்து கொள்ளாமல் இவரை எதற்கு வீட்டிற்கு கூப்பிட்டீர்கள் என்று கூறினார்.
சரி, எப்படியோ இந்த முறை தெரியாமல் நடந்துகொண்டேன், இனிமேல் ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன் என்று கூறினேன். அப்புறம் அவரும் போய்விட்டார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் போன் செய்து வீட்டில் இருக்கிறீர்களா என்று கேட்டார். போனை எடுத்த பிறகு நான் வீட்டில் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். நான் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்து விட்டார். அப்புறம் என்ன செய்யமுடியும்? விதிப்பிரகாரம் நடக்கட்டும் என்று முடிவு செய்தேன். பதினைந்து நிமிடத்தில் அவர் வந்துவிட்டார்.
பிறகு ஒரு காபி (வீட்டம்மா கருணையுடன்) கொடுத்தேன். காபி குடித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதாவது அவர் பேசினார், நான்ஊம்கொட்டிக்கொண்டிருந்தேன். நடுவில் நான் பேச முயற்சித்தால் அவர் விடுவதில்லை. மொதல்லே இதைக்கேளுங்க என்று சொல்லி என்னைப்பேச விடுவதில்லை.
என்ன பேசினாரென்றால் முழுவதும் சுயபுராணம்தான். அவர் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து இன்று வரையில் நடந்த அத்தனை கதைகளையும் சொல்லி விட்டார். இதில் பாதி கதைகள் போன தடவை வந்தபோதே சொன்னவை. ஒரு கட்டத்தில் புறப்படுகிறேன் என்று சொன்னவர் திரும்பவும் விட்டுப்போனதை சொல்ல ஒரு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.
கடைசியாக விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். ஒரு மரியாதைக்காக வாசல் வரை சென்றேன். அங்கே நின்றுகொண்டு மீண்டும் அரை மணி நேரம் பேசினார். கடைசியாக அப்பப்போ நேரம் இருக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
எனக்கு இப்போதைய பெருங்கவலை என்னவென்றால் அடுத்த தடவை இவர் வந்தால் எப்படி தப்பிப்பது என்பதுதான். நண்பர்கள் யாராவது யோசனை கூறினால் அவர்களுக்கு கோயில் கட்டி கும்பிடுகிறேன் என்று உறுதி கூறுகிறேன்.