சனி, 5 பிப்ரவரி, 2011

வெற்றிச் சிந்தனைகள்


(ஒரு கல்யாண அழைப்பிதழில் அச்சடித்திருந்தது.)

  1. தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும்.   
  2. துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.
  3. புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும். வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும். பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.
  4. விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.
  5. நோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்.
  6. இளமையில் கல்வி கற்காமலும், பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில் கஷ்டப்பட நேரிடும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.
  7. உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.
  8. உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.
  9. யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம். நம் வருவாயில் வாழ்வது கௌரவம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவது கௌரவம்.
  10. ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
  11. பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது.
  12. ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன், தயவுதான் நண்பன், அடக்கம்தான் மனைவி, பொறுமைதான் மகன். இவர்களே உறவினர்கள்.
  13. வீரனைப் போரிலும், நண்பனைக் கஷ்ட காலத்திலும், மனைவியை வறுமையிலும், யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.
  14. பெருந்துன்பமும், பெருங்கவலையும் உற்ற காலத்திலும் ஒரு பெண் தன் ஆலோசனையால் கணவனின் உயிர் காப்பாள்.