புதன், 12 ஜனவரி, 2011

சிவப்பு நாடா தர்பார் – தொடர்ச்சி.


என்னுடைய சிவப்பு நாடா தர்பார் பதிவில் வடுவூர் குமார் போட்ட பின்னூட்டமும் அதற்கு என்னுடைய எதிர்வினையும்.

படிக்கும் போதே எரிச்சலாக வருதே எப்படி மனம் ஒப்பி செய்தீர்கள்? இம்மாதிரி கால விரயம் அடுத்தவர் வாழ்வை கெடுக்கும் சான்ஸ் இருப்பதால் நீங்கள் மேலதிகாரிக்கு ஆலோசனை சொல்லவில்லையா? அல்லது மரியாதை நிமித்தமாக சொல்லக்கூடாதா? :-)
வர வர அரசாங்க அலுவலகத்தை அதிலிலும் அதன் உள்ளே நம் ஏதாவது வேலைக்காக செல்லனும் என்றால் ஆயிரம் முறை யோசிக்கவேண்டியிருக்கு.சமீபத்தில் என்னுடைய கடவுச்சீட்டை புதுப்பிக்க சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு சென்ற போது கண்டவை ...

உட்கார கூட இருக்கை இல்லை, தேவையில்லாத கியூ அதைக்கட்டுப்படுத்த ஒளிப்பான் இருந்தாலும் அது வேலை செய்யவில்லை ஆனால் பணம் வாங்கும் இடத்தில் அது வேலை செய்கிறது.காறி துப்பனும் போல் இருந்தது.மண்டை உள்ளே இருப்பது எந்த அளவுக்கு காய்ந்துபோயிருந்தால் பொது ஜனத்தை இப்படியெல்லாம் பழிவாங்க முடியும்.
அவர்கள் தேவை என்பதை கியூவில் நிற்கும் போது அல்லது உங்கள் முறை வரும் போது தான் தெரிந்துகொள்ளமுடியும்.இணையத்தில் அவர்கள் தேவை முழுமையாக இல்லை அல்லது அன்று வேலை பார்க்கும் அதிகாரியின் மன நிலையை பொருந்து உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் எத்தனியோ!!
வடுவூர் குமார் அவர்களுக்கு,
உங்களுடைய ஆதங்கத்தை நன்கு புரிந்து கொண்டேன். ஆனால் அன்று நான் செய்தது தவறுதான். இளமை வேகத்தில், நான் சரியாக என் கடமைகளைச் செய்துகொண்டு இருக்கும்போது தார்க்குச்சி போடுகிறாரே என்ற வேகம்தான் என்னை அப்படிச் செய்யத்தூண்டியது. வாயில்லாப் பிராணிகளான மாட்டையோ, குதிரையையோ கூட அதிகம் விரட்டினால் முரண்டு பிடிப்பதில்லையா? அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இதைப்பற்றி மேலும் ஒரு பதிவு போடுகிறேன்.


அரசு அலுவலகங்களில் இப்போது இருக்கும் நிலையைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. நான் ஏதோ நகைச் சுவைக்காகப் போட்ட பதிவு என்றாலும் இந்த நிலை எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை. இதன் காரணத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழிஎன்ற பழமொழியைத்தான் உதாரணம் காட்டவேண்டும்


அரசு ஊழியர்கள் என்று ஒரு கூட்டம் ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்களும் இந்த சமுதாயத்திலிருந்து வந்தவர்களே. இன்றைய சமுதாயத்தில் என்னென்ன கேடுகள் ஊறியிருக்கின்றனவோ, அத்தனையும் அரசு ஊழியர்களிடமும் இருக்கின்றன. மக்களின் மனப்போக்கு இன்று வெகுவாக மாறியிருக்கிறது. அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் சம்பளம் ஆபீசுக்கு வருவதற்காக மட்டும்தான் என்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள். வேலை செய்ய வேண்டுமென்றால் அந்த வேலை யாருக்கு உபயோகமாக இருக்கிறதோ, அவர்கள் அதற்குரிய கட்டணத்தைக் கட்டவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

சக ஊழியர்களுடைய பயணப்படியை சேங்க்ஷன் செய்யக்கூட கூலி எதிர்பார்க்கும் அலுவலகங்கள் உண்டு. அப்புறம் அந்த ஊழியர் பொய் பயணப்படி போடாமல் என்ன செய்வார்? மக்களிடம் நேர்மை என்ற குணம் அறவே இல்லாமற் போயிற்று.
 

பல்கலைக் கழகங்கள் சரஸ்வதி குடியிருக்கும் ஆலயம் என்று போற்றுகிறோம். அங்கே சரஸ்வதி படும் பாடு பிரம்மாவிற்குத்தான் தெரியும். முதுகலை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எப்படி தயாராகின்றன என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? நினைக்க நினைக்க வயிறு எரிவதுதான் மிச்சம். புரோபசர்களின் இன்றைய சம்பளம் என்னவென்று தெரியுமா? அந்தச் சம்பளம் செரிக்க அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா? கெழவனுக்கு எதற்கு இந்த வீண் புலம்பல் என்று நையாண்டி மட்டும் செய்வார்கள். தெருவில் பார்த்தால் கல்லெடுத்து அடித்தாலும் அடிப்பார்கள்.



அரசு ஊழியர்களும் இன்று கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். அது போதவில்லையென்றுதான் கிம்பளமும் வாங்குகிறார்கள். விலை வாசி ஏறிவிட்டபடியால் கிம்பளமும் இப்போது ஆயிரத்தில் இருந்து லட்சங்களுக்கு ஏறியிருக்கிறது.
இதோடு இந்த நாற்றம் புடிச்ச பதிவு போதும். வேறு ஏதாவது போற வழிக்கு புண்ணியம் தேடற வழியைப் பார்ப்போம்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

சிவப்பு நாடா தர்பார்


இன்றைய அரசு அலுவலக நடைமுறைகள், நமக்கு, நம்மை ஆண்ட ஆங்கிலேயத் துரைமார்கள் விட்டுச்சென்றவை. நாம் அரசியல் ரீதியாகச் சுதந்திரம் வாங்கிவிட்டதாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் நாம் நம் அலுவலக நடைமுறைகளில் இன்னமும் ஆங்கிலேயத் துரைமார்களின் அடிவருடிகளாகத்தான் இருக்கிறோம்.

வெகு நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். அரசு அலுவலகங்களில் ஒரு கடிதம் பத்திரமாக இருக்கிறதா என்று காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு கூட அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதில் காட்டமாட்டார்கள் என்று அதில் கூறியிருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் அந்தக் கடிதம் பத்திரமாக இருந்தால் அதில் கூறப்பட்டுள்ள விஷயத்தைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் செயல் ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடிதம் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும்

இந்தக் காரணத்தினால் அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை முறைப்படுத்தி அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்ப ஏகப்பட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படி விதிகளின்படி நகரும் கடிதங்கள், அரசு அலுவலகங்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் போவதற்கு பல நாட்கள் ஆகலாம். இதை ஒரு மேஜையில் இருந்து இன்னொரு மேஜைக்குப் போவது என்று வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அரசு அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மேஜை இருக்கும். எப்படி மேஜைக்கு உயிர் இல்லையோ அது போல அந்த மேஜையில் உட்கார்ந்து வேலை செய்யும் மனிதர்களுக்கும் உயிர் அதாவது மனசு கிடையாது

அரசு அலுவலகங்களில் கடிதங்கள், மற்ற காகிதங்களை ஒரு பழுப்பு அட்டைக் காகிதத்தில் (பள்ளிப் புத்தகங்களுக்கு அட்டை போடுவோமே, அந்த மாதிரி காகிதத்தில்) ஒரு டேக்கில் (Tag) கோர்த்து வைத்திருப்பார்கள். இதை பைஃல் என்று சொல்வார்கள். பைஃல்கள் ஒரு டேபிளிலிருந்து இன்னொரு டேபிளுக்குப் போகும்போது தொய்ந்து விடும். இதைத் தவிர்ப்பதற்காக ஒரு கெட்டி அட்டையை பைஃல் சைசுக்கு வெட்டி அதில் ஒரு நாடா கோர்த்திருப்பார்கள். இந்த அட்டைகளில் பைஃல்களைக் கட்டித்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும். இதில் உள்ள நாடாக்கள் பொதுவாக சிவப்பு கலரில்தான் இருக்கும். அதனால்தான் அரசு அலுவலக நடவடிக்கைகளை சிவப்பு நாடா தர்பார்என்று குறிப்பிடுவது வழக்கம்.   

ஒரு அலுவலகத்திற்கு வரும் கடிதம், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டிய நபருக்குப் போய் சேருவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகும். அவரிடம் இந்த மாதிரி ஒரு 10 அல்லது 15 கடிதங்கள் தினமும் வரும். அவைகளின் முக்கியத்துவத்தை அனுமானித்து அவர் ஒவ்வொன்றாக செயல் எடுப்பார். எப்படியும் ஒரு 5 கடிதங்களுக்கு அவரால் செயல் எடுக்கமுடியாமல் போகும். சரி, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று அதை மேஜையின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டுப்போவார். அடுத்த நாள் திரும்பவும் 10/15 கடிதங்கள் வரும். அதிலும் ஒரு 5 கடிதங்கள் நின்றுவிடும். இப்படியே தொடர்ந்து ஒவ்வொருவர் மேஜையிலும் நூற்றுக்கணக்கில் பெண்டிங்க் கடிதங்கள் தேங்கிவிடும்.

அவைகளில் பெரும்பாலான கடிதங்களுக்கு செயல் எடுக்க வேண்டிய அவசியமில்லாமலே போகும். அப்படி செயல் எடுக்கவேண்டிய கடிதங்கள் ஏதாவது இருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட நபர் வந்து விசாரிக்கும்போதுதான் அந்தக் கடிதத்தைத் தேடி எடுப்பார்கள். அரசு அலுவலர்களுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம். அந்த நூற்றுக்கணக்கான கடிதங்களில் வந்த நபரின் கடிதத்தை நொடியில் எடுத்து விடுவார். அந்த நபர் நடந்துகொள்ளும் முறையைப் (?) பொறுத்து அந்தக் கடிதத்திற்கு செயல் எடுக்கப்படும்

எல்லா அலுவலகங்களிலும் அலுவலக உதவியாளர் என்று ஒருவர் இருப்பார். அந்தக் காலத்தில் இவருக்கு பியூன் என்று பெயர். இந்தப் பெயர் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று போராடி பெயர் மாற்றம் செய்தார்கள். அவருக்கு எந்தக் கடிதம் யாரிடம் பெண்டிங்காக இருக்கிறது என்ற விவரம் முழுவதும் அத்துபடி. ஒவ்வொரு அலுவலகத்திலும் இவர்தான் மிகவும் முக்கியமானவர். அங்கு என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இவரிடம் சொன்னால் போதும். தகுந்த மாதிரி கவனித்தால் இவரே அந்த காரியத்தை முடித்துக்கொடுத்து விடுவார் அல்லது அதற்கான சரியான வழிமுறைகளைச் சொல்லுவார். இவருக்குத் தெரியாத ரகசியம் அந்த அலுவலகத்தில் எதுவும் இருக்காது.

இந்தக் கடிதங்களை இவ்வாறு ஒவ்வொருவரும் தாமதம் செய்வார்கள் என்பதற்காக அதைத் தடுக்க ஒரு விதி ஏற்படுத்தினார்கள். அதாவது யாரும் எந்தக் கடிதத்தையும் மூன்று நாளைக்கு மேல் செயல் எடுக்காமல் தங்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு விதி. நான் முதன்முதலில் வேலை பார்த்த அலுவலகத்தில் இந்த விதி எப்படி வேலை செய்தது என்று பார்க்கலாமா?

அது ஒரு மிகச்சிறிய அலுவலகம். ஒரு ஆபீசர், இரண்டு டெக்னிகல் அசிஸ்டன்ட்ஸ், ஒரு டைப்பிஸ்ட், இரண்டு பியூன்கள், மற்றும் சிலர். அந்த ஆபீசுக்கு ஏதாவது கடிதம் வந்தால் அதை ஆபீசர் பிரித்துப் பார்த்துவிட்டு ஏதாவது செயல் எடுக்கவேண்டிய கடிதம் இருந்தால் அதை நேராக என்னிடம் கொடுக்கச் சொல்லி பியூனிடம் கொடுப்பார். பியூன் என்னிடம் கொடுப்பார். நான் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அதற்கு என்ன பதில் எழுத வேண்டுமோ அதை எழுதி பியூனிடம் கொடுத்தால் அவன் அதை ஆபீசர் டேபிளில் வைத்து விடுவார். (ஆபீசரை அவசியமில்லாமல் நேரில் சென்று பார்ப்பது அநாகரிகம்).

அந்தக் கடிதத்தை ஆபீசர் பார்த்து அப்ரூவ் செய்ததும், டைப்பிஸ்ட்டிடம் போகும். அவர் அதை டைப் செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்புவார். நான் அதை சரி பார்த்து ஆபீசருக்கு அனுப்பினால் அவர் அதில் கையெழுத்துப் போட்டு திரும்பவும் டைப்பிஸ்ட்டிற்குப் போகும். அவர் அதை கவரில் போட்டு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு தபாலில் அனுப்பி விடுவார். இந்த வேலையெல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடும்.

ஒரு நாள் அந்த ஆபீசருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரு சர்குலர் அனுப்பினார். அதில் என்ன எழுதியிருந்தது என்றால் - இனி மேற்கொண்டு இந்த ஆபீசில் யாரும் எந்தப் பேப்பரையும் மூன்று நாட்களுக்கு மேல் செயல் எடுக்காமல் வைத்திருக்கக் கூடாது. அப்படி யாராவது வைத்திருந்தால் அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இத்தியாதி, இத்தியாதி. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் அவர் என்னைப் பார்த்தால் முறைத்துக்கொண்டு வேறு இருந்தார். சரி, ஆபீஸ் ஆர்டர் என்றால் ஆர்டர்தான், கடைப்பிடித்துவிடுவோம் என்று முடிவு செய்தேன்.

அது முதல் கடிதங்கள் வந்தால் அவை நேரே டைப்பிஸ்ட்டுக்கே கொடுக்கப்பட்டன. அவர் அவைகளை எல்லாம் ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து, யார் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு, பின்பே அந்த கடிதங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். ஓஹோ ஏதோ வெடிக்கப்போகிறது என்று நானும் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க ஆரம்பித்தேன். கையெழுத்து போடும்போதே தேதியுடன் போட்டேன். நானும் ஒரு ரிஜிஸ்டர் தயார் செய்து வைத்துக்கொண்டேன். திரும்பக் கொடுக்கும்போது கையெழுத்து வாங்கவேண்டுமல்லவா?


அரசு அலுவலங்களில் நடைமுறை என்னவென்றால், தலைமை ஆபீசர் தவிர வேறு யாரும் தனிப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடாது. ஒரு கடிதத்திற்கு பதில் எழுதுவதாக இருந்தால், இன்னொரு முழுதாள் எடுத்துக்கொண்டு அதில், “இந்தக் கடிதத்தில் இன்னார், இன்ன விவரம் கேட்டிருக்கிறார், அந்த விபரம் இந்த ஆபீசில் இல்லை, வேறு (ஏதாவது ஒரு ஆபீஸ் பெயரைச்சொல்லி) ஆபீஸில் இருக்கலாம், என்ன செய்வது?” என்று எழுதி அந்தக்காகிதத்தை முதல் கடிதத்துடன் சேர்த்து ஆபீசரின் உத்திரவுக்காக என்று எழுதி ஆபீசருக்கு அனுப்பவேண்டும். இதற்கு நோட் பைஃல் என்று சொல்வார்கள். நானும் அதேமாதிரி செய்து மூன்றாவது நாள் என் ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிவிட்டு, டைப்பிஸ்ட்டிடம் கொடுத்தேன்.  


அவர் அதை ஆபீசர் டேபிளில் வைத்தார். ஆபீசர் அந்த பைலில் எஸ்என்று எழுதி திரும்பவும் எனக்கு பழய மாதிரியே வந்தது. நானும் உடனே ஒரு பதில் எழுதி வைத்திருந்து, மூன்றாவது நாள் திரும்பக் கொடுத்தேன். அந்த லெட்டர் மறுநாள் ஆபீசர் கையெழுத்து போட்டு டைப்பிஸ்ட்டிடம் வந்து அவர் அதை டைப் அடித்து மூன்று நாள் கழித்து என்னிடம் வந்தது. நானும் அதை என்னிடம் மூன்று நாள் வைத்திருந்து திரும்பக் கொடுத்தேன். அப்புறம் அந்தக் கடிதம் ஆபீசர் கையெழுத்துப்போட்டு தபாலில் சேர இரண்டு நாள் ஆயிற்று. ஆக மொத்தம் முன்பு ஒரே நாளில் பதிலளித்த கடிதத்திற்கு, புது ஆர்டர் போட்டபிறகு 18 நாட்கள் கழித்து பதில் போனது. ஆனால் இதுதான் சரியான அரசு ஆபீஸ் நடைமுறை ஆகும். யாருக்கு என்ன வந்தது? அரசு அலுவலகங்களில் ரூல்ஸை அனுசரித்தால் போதும்.

இதைத்தான் சிவப்பு நாடா தர்பார் என்று சொல்வார்கள்.
 

சனி, 8 ஜனவரி, 2011

எனக்குப் புரியாத ஒரு விசயம்.

கீழ்க்கண்ட மாதிரி நிறைய பதிவுகளில் பார்க்கிறேன். என்னுடைய சந்தேகம், அப்படி ஓட்டுப்போட்டால் அந்த விசயம் நெஜமாலுமே நெறயப்பேரச் சென்றடையுமா?


நண்பர்களே! நீங்கள் தற்போது படித்த விசயம் உங்களோடு மாத்திரம் நின்று விடாது பிறரையும் சென்றடைய தங்களின் மேலான ஓட்டினை போட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 6 ஜனவரி, 2011

அரசு அலுவலகங்களில் தணிக்கை


வாழ்க்கையில் கணக்கு வைப்பதும் அந்தக் கணக்கை உரியவர்களிடம் அவ்வப்போது காட்டி ஒப்புதல் வாங்குவதும் நடைமுறையில் உள்ள வழக்கம்தான். கணக்கு பணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற செயல்களுக்கும் சேர்த்துத்தான். நான் யாருக்கும் கணக்குக் காட்டவேண்டியதில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியாவின் பெரிய பணக்காரரான அம்பானியும் கூட தன் மனச்சாட்சிக்கு கணக்கு (பதில்) சொல்லித்தான் தீரவேண்டும்.

அரசு அலுவலகங்களில் இன்றும் நிலவும் பல நடைமுறைகள், வெள்ளைக்காரத் துரைகள் விட்டுச் சென்றவைகள்தான். அவர்களுக்கு இந்தியர்கள் மேல் தீராத சந்தேகம் இருந்தது. அதனால் தணிக்கை முறைகளை மிக தீவிரமாகக் கையாண்டு வந்தார்கள். இதில் இரண்டு விதமான தணிக்கைகள் உண்டு.

ஒன்று, துறை சார்ந்த தணிக்கை. இது மேலதிகாரிகள் தொழில் நுட்ப ரீதியாகச் செய்வது. அந்த அலுவலகத்தில் கடந்த வருடத்தில் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்திருக்கிறார்களா? அவ்வாறு செய்யாவிட்டால், ஏன் செய்யவில்லை? என்ன வசதிகள் இல்லை, என்ன வசதிகள் வேண்டும்? இப்படி ஆக்கபூர்வமாக தணிக்கை நடக்கும். இதிலும் சில அதிகாரிகள் வெறும் குற்றம் கண்டு பிடிப்பவர்களாகவே அமைவதும் உண்டு. இந்தத் தணிக்கை அந்த அலுவலகத்தில் செய்யவேண்டிய வேலைகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும்.

அடுத்தது, கணக்கு ரீதியான தணிக்கை. ஒரு அலுவலகத்தில் கடந்த ஆண்டு செய்த செலவுகள் முறையாகச் செய்யப்பட்டிருக்கறதா, ஏதாவது தில்லு முல்லு செய்திருக்கிறார்களா? என்று சரி பார்க்கும் தணிக்கை. பல அலுவலகத் தலைவர்கள் இந்தத் தணிக்கையைக் கண்டு பயந்து கொள்வார்கள். காரணம் அவர்களுக்கு தங்கள் துறை சார்ந்த விதி முறைகள் பற்றிய அறிவு போறாமல் இருக்கும். அவர்கள் இந்த தணிக்கைக்கு வரும் உதவி அதிகாரிகளுக்கு வேண்டிய உபசாரங்களை அதிகமாகச் செய்து அவர்களை சந்தோஷப்படுத்தி, அதிகமான தணிக்கைக் குறிப்புகளை எழுதாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். என்ன சௌகரியங்கள் என்று தெரியவேண்டுமல்லவா? அதிகம் ஒன்றுமில்லை. அவர்கள் அந்த அலுவலகங்களிலேயே தங்கிக்கொள்வார்கள். அவர்கள் தங்கும் நாட்களில் இலவச உணவு, டீ, காபி, எடுபிடி வேலைகளுக்கு ஒரு ஆள், ஒரு நாள் சினிமா, பக்கத்திலிருக்கும் ஒரு பிரபல கோவிலுக்கு ஒரு விசிட், அசைவம் சாப்பிடுபவர்களாயிருந்தால் ஒரு நாள் அசைவ விருந்து, ஊருக்குப் போகும்போது பண்ணையிலிருந்து தேங்காய், மற்ற காய்கறிகள், இவ்வளவுதான்.

இந்த மாதிரி சௌகரியங்களை அனுபவித்த அந்த உதவி அதிகாரிகள், தாங்கள் போகும் எல்லா அலுவலங்களிலும் இந்த மாதிரி சௌகரியங்களை எதிர்பார்ப்பார்கள். அந்த சௌகரியங்கள் செய்யப்படாவிட்டால் வேண்டுமென்றே பல தணிக்கைக் குறிப்புகளை எழுதி அந்த அலுவலகத் தலைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். அதனால் பெரும்பாலான அலுவலகங்களில் இந்த சௌகரியங்களைச் செய்து கொடுத்து விடுவார்கள். அதற்கு ஆகும் செலவை அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறை.

இந்த தணிக்கைகளில் பல சமயம் வேடிக்கைகள் நடக்கும். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம். நான் வேலை செய்தது வேதியல் துறை. அங்கு நிறைய வேதியல் பொருட்கள் தேவைப்படும். அவைகளை டெண்டர் விட்டு வாங்குவோம். அதில் கந்தக அமிலமும் ஒன்று. அது அந்தக் காலத்தில் பீங்கான் ஜாடிகளில் வரும். அந்த அமிலம் தீர்ந்தவுடன் அந்த பீங்கான் ஜாடிகளை ஊறுகாய் போடுவதற்காக அங்கு பணி புரியும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆகவே அந்த காலி ஜாடிகளை கணக்கில் காட்டுவதில்லை. நியாயமாக அவைகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.



ஒரு சில ஜாடிகளை இந்த தணிக்கை உதவியாளர்களுக்கும் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் ஒரு சமயம் அவர்கள் நன்றி கெட்டத்தனமாக, “இவ்வளவு அமிலங்கள் வாங்கியிருக்கிறீர்களே, அந்த காலி ஜாடிகளுக்கு கணக்கு எங்கேஎன்று எழுதி வைத்து விட்டார்கள். இந்த உதவியாளர்கள் எழுதி வைத்தது எல்லாவற்றையும் ஒரு மேலதிகாரி வந்து எல்லோரையும் வைத்து ஒரு விவாதம் நடத்தி பிறகுதான் அந்த குறிப்புகளை அப்ரூவ் செய்வார். நாங்கள் ஒரு யுக்தி செய்தோம். “சிட்ரிக் அமிலம்” (லெமன் சால்ட்) என்று ஒன்று இருக்கிறது. அது அட்டைப் பெட்டியில் வரும். அதை எடுத்து தயாராக வைத்திருந்தோம். அந்த தணிக்கை ஆபீசர் வந்து இந்தக் குறிப்பைப் படித்ததும் நாங்கள் இந்த சிட்ரிக் அமில பாக்கெட்டைக் காட்டி, எல்லா அமிலங்களும் இப்படி அட்டைப்பெட்டியில் போட்டுத்தான் வரும். நாங்கள் அந்த அமிலத்தை உபயோகித்தவுடன் இந்த அட்டையை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம் என்று சொன்னோம். அவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு, அப்படியே எழுதிக்கொடுங்கள் என்று எங்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அந்தக் குறிப்பை ரத்து செய்து விட்டார்.


உலத்திலேயே
கந்தக அமிலத்தை அட்டைப்பெட்டியில் வாங்கிய லேபரேட்டரி எங்களுடையதாகத்தான் இருக்கும். இன்னும் இதுபோல் பல வேடிக்கைகள் உண்டு. இந்தப் பதிவிற்கு கொடுக்கும் ஆதரவைப் பார்த்துவிட்டு அந்த வேடிக்கைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

சதாபிஷேகம்

சதாபிஷேகம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு கால கட்டம். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள் எடுத்து, அவர்கள் நல்ல வசதியான நிலையில் இருக்க, தானும் தன் இல்லாளுடன் நலமாகவும் வசதிகளுடனும் இருப்பது என்பது ஒரு பூரணமான வாழ்வாகும். எல்லோருக்கும் இந்த கொடுப்பினை இருக்காது. அப்படி இருக்கும் ஒருவருக்கு அவருடைய வாரிசுகள் ஒரு விழா எடுப்பது பெரிய பாராட்டுதலுக்குரியது. அத்தகைய ஒரு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கிடைத்தது. என்னுடைய நண்பரின் நண்பருடைய தந்தைக்கு அப்படிப்பட்ட விழா எடுத்தார்கள். நண்பர் என்னைத் துணைக்கு அழைத்தார். நானும் இந்த விழாவைப் பார்க்க விரும்பியதால் அவருடன் சேர்ந்து போனேன். விழா காரைக்காலில் நடந்தது.

சதாபிஷேக நடைமுறைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சதாபிஷேக தம்பதியருக்கு எல்லா உறவினர்கள் புடைசூழ யாகபூஜைகள் செய்து அந்த புனித நீரால் அபிஷேகம் செய்வித்து, கல்யாண உறசவம் நடத்துவார்கள். நான் கலந்து கொண்ட விழாவில் தாராளமாக செலவு செய்து எல்லா உறவினர்கள், நண்பர்கள் கூடியிருக்க இந்த விழா நிறைவாக நடந்தது. இதன் பல காட்சிகளைப் பாருங்கள்.

வேதவித்துக்கள்


யாகம் செய்தவர் : Dr. சிவஸ்ரீ பால சர்வேச்வர குருக்கள்
ஸ்தாபகர், ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாசார்ய வேதசிவகாம வித்யா பீடம், காரைக்கால்.


பூர்ணாகுதி


மகாதீபாராதனை


பேத்தி


மூத்த மகனும் மருமகளும்


திருமஞ்சனம்


சதாபிஷேகத் தம்பதியினர்


தம்பதியினர் கல்யாணத்திற்கு தயார்


மாங்கல்யதாரணம்


மங்கள வாத்தியம்- திருவாரூர் திரு. சிவாந ந்தம், B.Com.
அவர்கள் குழுவினர்


ஆசீர்வாதம் வாங்க காத்திருக்கும் உறவினர்கள்.


உறவினர் கூட்டம்