செவ்வாய், 31 மே, 2011

ரோட்டில் மரணமடையாமல் நடந்து வீட்டுக்குத் திரும்புவது எப்படி?


 (வயதானவர்களுக்கு மட்டுமான பதிவு. மற்றவர்களும் படிக்கலாம்)

விஞ்ஞான வளர்ச்சியில் பல மாற்றங்களை நாம் காண்கிறோம். அவைகளில் பல விஷயங்கள்  நமக்குத் தேவைப்படுவதில்லை. ஆகவே அவைகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. குறிப்பாக கணினிகள். மைக்ரோவேவ் அவன்கள், மேக்கப் சாதனங்கள், அவைகள் எதற்குப் பயன்படும் என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால், நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக வீட்டைவிட்டு வெளியில் போய் வர வேண்டியிருக்கிறது. அந்த சமயங்களில் ரோடுகளில்தான் நடந்து போக வேண்டியிருக்கிறது. நம் இளம் வயதில் ரோடுகள் நடப்பதற்காக மட்டுமே உபயோகத்திலிருந்தது ஞாபகத்தில் இருக்கலாம்.. இரண்டு நண்பர்கள் சந்தித்தால் நடு ரோட்டில் நின்று குசலம் விசாரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. சைக்கிள்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் வந்தால் அவை ஒதுங்கிப் போய்விடும். ஏதாவது வண்டிக்காரன் சத்தம் போட்டால், ஏனய்யா, ரோட்டில் இவ்வளவு இடம் இருக்கிறதே, தள்ளிப் போகவேண்டியதுதானே என்று கூசாமல் சொல்லியிருக்கிறோம்.

ஆனால் இன்றோ வாகனங்கள் பெருகிவிட்டன. நடுரோடில் நின்றால் அடுத்த நிமிடம் சட்டினி ஆகிவிடுவோம். ரோட்டில் நடப்பதே இன்று ஒரு தனி கலையாய் இருக்கிறது. அதில் நான் கற்ற சில நுணுக்கங்களை இங்கு கூறுகிறேன்.

1.   முதலில் ரோடு என்பது நடப்பவர்களுக்காக அல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். லாரி, பஸ்காரர்களின் தயவால்தான் நீங்கள் ரோட்டில் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

2.   நடப்பவர்களுக்காகத்தான் ரோடுகளின் ஓரத்தில் பிளாட்பாரம் கட்டியிருக்கிறார்கள். அப்படி பிளாட்பாரம் கட்டாத ரோடுகளில் என்ன செய்வது என்று முட்டாள்தனமாக கேள்விகள் கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்படி பிளாட்பாரம் இல்லாத ரோடுகள் மனிதர்கள் நடப்பதற்காக இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

3.   அந்தப் பிளாட்பாரங்களில் கடைகள் இருக்கும் அதற்கு முன்பாக ஐந்தாறு பேர் பீடி, சிகரட் குடித்துக்கொண்டு நின்றிருப்பார்கள். அது அவர்களின் தேசீய உரிமை. அவர்களைப்பார்த்து ஒரு சலாம் வைத்தால் போனால் போகிறது என்று கொஞ்சம் வழி விடுவார்கள். அந்த இடைவெளியில் ஜாக்கிரதையாக கீழே விழாமல் நடக்கவேண்டும்.

4.   எப்போதும் ரோடுகளில் இருக்கும் மரம். கரன்ட் கம்பங்கள் இவைகளின் பாதுகாப்பிலேயே நடக்க வேண்டும். அதாவது அந்த மரம், கம்பம் அவைகளுக்கும், கட்டிடங்களுக்கும் இடையிலேயே சாக்கடைக்குள் விழுந்து விடாமல் நடக்க வேண்டும்.

5.   பஸ் ஸ்டாப்புகளின் ஓரத்தில் நடக்கும்போது பஸ் வந்தால் உடனே ஓடி ஓளிந்து கொள்ளவேண்டும். பஸ் டிரைவர்களுக்கு பாதசாரிகள் அல்வா மாதிரி. எப்படியாவது அவர்கள் மேல் ஏற்றிவிடவே முயல்வார்கள்.

6.   மோட்டார் சைக்கிள் வீரர்கள் அனைவரும் யமனுடன் அக்ரீமென்ட் போட்டுவிட்டுத்தான் வெளியில் வருகிறார்கள். அதாவது ஒன்று அவர்கள் வீர மரணம் அடையவேண்டும் அல்லது யாரையாவது வீரமரணம் அடைய வைக்கவேண்டும். இவர்களை தூரத்தில் பார்த்தவுடன் ஏதாவது கடைக்குள் புகுந்து விடுவது உத்தமம்.

7.   ரோட்டின் வலது புறத்தில் பாதசாரிகள் நடக்க வேண்டுமென்பது சட்டம். அப்போதுதான் இடதுபுறமாக வரும் வாகனங்கள் எதிரில் வரும்போது அதற்கு ஏற்ப நாம் ஒளிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் வரும் வாகனங்கள் நம் மீது மோதாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு கனரக வாகனத்தை இன்னொரு கனரக வாகனம் ஓவர்டேக் செய்து கொண்டிருக்கும் போதே, அந்த இரண்டாவது வாகனத்தை மூன்றாவதாக ஒருவன் ஓவர்டேக் செய்வான். அவன் சத்தியமாக உங்கள் மீது மோதி உங்கள் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்வதற்கு வழி பண்ணுவான்.

இதையெல்லாம் தவிர்த்து நீங்கள் உயிருடன் வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்ந்தீர்களானால் அது நீங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் என்று உண்ர்ந்து கொள்ளுங்கள்.