வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

சுத்தம் சோறு போடுமா?



நாம் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போது கற்றுக் கொடுக்கப்பட்ட வாக்கியம் இது. சுத்தமாக இருக்கவேண்டும் என்பது நமது கலாசாரத்தில் ஒன்றிப்போன ஒரு குணம்.

தினமும் குளிக்கவேண்டும். சுத்தமான ஆடைகளை அணியவேண்டும். சாப்பிடும் முன்பும், பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். இத்தியாதிகள். கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ, இவைகளை நாம் அறிவோம்.

சமீபத்தில் ஒரு விசேஷத்திற்குப் போய் காலை டிபன் சாப்பிட்டேன். நான் இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடுவது என்றால் அரை வயிறு மட்டுமே சாப்பிடுவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டுவிட்டு வந்தேன். இதைத் தவிர வெளியில் வேறு ஒன்றும் சாப்பிடவில்லை. அன்றெல்லாம் ஒன்றும் தொந்திரவு இல்லை. மறு நாள் காலையிலிருந்தே நெஞ்சுப் பகுதியில் ஒரு மாதிரி இருந்தது. சரிதான், மிருத்யுவின் ஓலை வந்துவிட்டது போல் இருக்கிறது, பரவாயில்லை, அதனால் என்ன ? நாமதான் ரெடியாகத்தானே இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். மாலையில் இரண்டு தடவை லூஸ் மோஷன் போயிற்று. கை, கால்கள் எல்லாம் சோர்ந்து விட்டன.

மாலை 7 மணிக்கே படுத்துவிட்டேன். அப்படியே துங்கி விட்டேன். சுமார் 9 மணி வாக்கில் விழிப்பு வந்துவிட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னை அறியாமல் வயிற்றுப் போக்கு ஆகியிருக்கிறது. உடனடியாக எழுந்து பாத்ரூம் சென்று துணி மாற்றிவிட்டு அசுத்தமான துணிகளை அலசி, பாத்ரூமைக் கழுவி, என்னையும் கழுவி எல்லாம் முடிக்க அரை மணி நேரம் ஆயிற்று. மனைவியும் ஒத்தாசைக்கு வந்தாள். நான் நிஜமாகவே கொடுத்து வைத்தவன்.

வயதான காலத்தில் ஒருவனுக்கு இந்த நிலை வரக்கூடாது. வந்தால் அதை விடக் கேவலமான சூழ்நிலை ஒன்றும் இல்லை. ஏனென்றால் இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் நலம் விசாரிக்கும் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் தொடுக்கும் கண்டனக்கணைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு வந்திருக்கும் வியாதியை விட அந்தக் கண்டனங்கள்தான் அதிகம் வருத்தத்தைத் தரக்கூடியவை. “வயதான காலத்தில் கண்டதையும் தின்றுவிட்டு இப்படிப் பண்ணினால் யாரால் பார்த்துக் கொள்ள முடியும்?”
இதுதான் மிகவும் அன்பான கண்டனம். இந்த ரீதியில் சுருதி படிப்படியாக ஏறும். வேறு வழியில்லாமல் இந்தக் கண்டனங்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும்.

பிறகு என் டாக்டர் மகள் கொடுத்த மருந்துகளினால், வேறு தொந்திரவு இல்லாமல் நலமானேன். இதனால் நான் கற்ற படிப்பினை என்னவென்றால், இனிமேற்கொண்டு விசேஷங்களுக்குப் போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை, அவசியம் போகவேண்டுமானால், போய் தலையைக் காட்டிவிட்டு எதுவும் சாப்பிடாமல் வந்து விட வேண்டும். ஒன்றும் சாப்பிடாமல் வந்தால் உறவினர்களின் கண்டனம் இருக்கிறதே, அவை இன்னும் மோசம். அதைக் கேட்பதை விட போகாமல் இருப்பதே உத்தமம்.

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்என்று ஒரு சினிமாவில் ரங்காராவ் பாடியிருக்கிறார். அந்த உணவு தற்காலத்தில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பாருங்கள்.

எவ்வளவு பேர் கல்யாண மண்டப சமையல் அறையைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அடுத்த முறை போனால் அவசியம் சென்று பாருங்கள். பல உண்மைகள் புரியும். எனக்குப் பட்ட சில விஷயங்களை மட்டும் இங்கே எழுதுகிறேன்.

  1.   சமையலுக்கு எந்தக் காயையும் கழுவும் வழக்கம் இல்லை. காலிபிளவர், முள்ளங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலிய காய்களுக்கு எவ்வளவு பூச்சி மருந்துகள் அடிக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் அப்புறம் ஆயுளுக்கும் அந்தக் காய்களை சாப்பிடமாட்டீர்கள்.
  2.   மளிகை சாமான்களை அப்படியே பாத்திரங்களில் போடுவார்கள். குப்பை ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கும் வழக்கம் இல்லை.
  3.   மிளகாய்த்தூள், சாம்பார்ப் பொடி, மஞ்சட்பொடி, மல்லிப்பொடி இவைகள் கடைகளில் வாங்கப்பட்டு அப்படியே உபயோகிக்கப்படும்.
  4.   சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் தண்ணீருக்கு எந்த மரியாதையும் இல்லை.
  5.   அங்கு வேலை செய்யும் ஆள்காரர்களில் 90 சதம் பேர் குளிக்காமல், அழுக்கு ஆடைகளுடன் பீடி குடித்துக் கொண்டு இருப்பார்கள். பல சமயங்களில் பீடித்துண்டு காய்கறிகளில் இருக்கும்.
  6.   சாமான்கள் லிஸ்ட்டில் இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணை எழுதியிருப்பார்கள். அது இந்த ஆட்கள் தலைக்குத் தேய்ப்பதற்காகத்தான். அவர்கள் தலைக்கு எண்ணை அடுத்த கல்யாணத்தில்தான்.
  7.   மாஸ்டர் குக்குகளின் மேல் துண்டை அடுப்பில் போட்டாலும் எரியாமல் அப்படியே இருக்கும்.
  8.   இந்த ஆட்கள் பாத்ரூம் போய் விட்டு வந்து அப்படியே வேலை பார்ப்பார்கள்.
  9.   காயகறிகளை வெறும் தரையில் கொட்டித்தான் வெட்டுவார்கள்.
  10. சப்பாத்தி தேய்ப்பது கழுவாத டைனிங்க் டேபிளின் மேல்தான்.
  11. தோசை சுடும் இரும்புக்கல்லை கழுவும் வழக்கமே இல்லை.
  12. சுட்ட எண்ணை, சுடாத எண்ணை என்கிற வேறுபாடுகள் எல்லாம் சமையல்காரர்களுக்கு இல்லை.

இன்னும் பல கொடுமைகள் உள்ளன. விசேஷம் நடத்துபவர்கள் அஜினோ மோட்டோ போடக்கூடாது என்று சொன்னால் சமையல்காரர் அதை லிஸ்ட்டில் எழுதமாட்டார். ஆனால் தனியே வாங்கி வந்து சமையலில் சேர்ப்பார். ஜிலேபிக்கு குங்குமப்பூ வாங்கிக்கொடுத்தால் அதை திருடுபவர்கள்தான் அதிகம்.

இதையெல்லாம் பார்த்தும் விசேஷங்களில் சாப்பிட வேண்டுமானால் தனி மனோதைரியம் வேண்டும். அதைத் தவிர அந்த உணவை ஜீரணம் பண்ணக்கூடிய உடல்நிலையும் வேண்டும். எனக்கு இந்த இரண்டும் காலியாகி விட்டன.

இந்த தர்ம சங்கடத்திலிருந்து விடுபட சரியான வழிமுறைகளை யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் பதிவர்கள், தங்களுக்குத் தெரிந்த யோசனைகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


புதன், 22 பிப்ரவரி, 2012

திருட்டு என்றால் என்ன?



என்ன, சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் கேள்வியை முன் வைக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? தெரிந்தேதான் இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

அடுத்தவர்களின் பொருள்களை அதன் சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வது திருட்டு என்பதை சிறு குழந்தையும் அறியும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் திருட்டுகள் இவ்வளவு வெளிப்படையாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவருடைய பதிவை எடுத்து தங்களுடைய தளத்தில் பிரசுரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது திருட்டா இல்லையா? பொருளைத் திருடினால்தான் திருட்டு, கருத்தை அல்லது எழுத்தை திருடினால் அது திருட்டல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அது பொருளாக இருந்தாலும், கருத்தாக இருந்தாலும், அவைகளினுடைய சொந்தக் காரர்களுடைய அனுமதி இல்லாமல் எடுத்தால் அது திருட்டுத்தான் என்பது என் கருத்து. அது என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டாலும் சரியே, அது திருட்டுதான். சொந்தக்காரர் யாரென்று தெரியாத நிலையிலும் ஒரு பொருளை நம்முடைய உபயோகத்துக்காக எடுத்துக் கொண்டால் அதுவும் திருட்டே.

சில நாட்களுக்கு முன் ஒரு துப்புரவுத் தொழிலாளி, ரயில் கம்பார்ட்மென்டில் தான் பார்த்த பணப்பையை அதிகாரிகளிடம் கொடுத்ததை செய்தித் தாள்களில் படித்தோம். அதை அவர் வைத்துக் கொண்டால் யாருக்கும் தெரிந்திருக்காது. இருந்தாலும் நமக்கு சொந்தமில்லாதவற்றை நாம் வைத்துக்கொள்வது திருட்டு என்று அவர் நினைத்ததால்தான் அவர் அதை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதுதான் மனச்சாட்சி.

நான் தினமும் வாக்கிங்க் போகும்போது பலர் (அவர்களும் வாக்கிங்க் செல்பவர்கள்தான்) கையில் ஒரு பையும் கோலும் வைத்துக் கொண்டு மற்றவர்கள் வீடுகளிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பூச்செடிகளிலிருந்து குச்சியால் இழுத்து பூக்களைப் பறித்துச் செல்லுகிறார்கள். இது அவர்கள் வீட்டிலிருக்கும் சாமிக்குப் போடுவதற்காக இருக்கும்.

இதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் கேள்விகள் இரண்டு.
   
   1. இது திருட்டா, அல்லவா. அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமல் இந்த வேலை நடைபெறுகிறது. அப்போது இதை திருட்டு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

   2.     இந்த மாதிரி பறித்த பூக்களைக் கொண்டு செய்யப்படும் வழிபாட்டினால் கடவுளுக்கு என்ன ப்ரீதி ஏற்படும்?