திங்கள், 29 ஜூலை, 2013

உலகில் பேரின்பம் தருவது எது ?


பல கால ஆராய்ச்சியின் சாரத்தை இப்போது நான் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விதிப்பயனால் தீர்மானிக்கப்படும்.

உலகில் பேரின்பம் மற்றும் சிற்றின்பம் என்று இரண்டு வகை இருப்பதை எல்லோரும் அறிவீர்கள். சிறிது நேரமே இருந்து பின் மறைந்து போவதை சிற்றின்பம் என்று சொல்வது மரபு. ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். சாப்பிடும்போது இன்பமாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இன்பம் மறைந்து விடுகிறது.

இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்பங்கள் இவ்வகையைச் சேர்ந்ததுதான். அதனால்தான் பெரியவர்கள் பேரின்பத்தை நாடு என்று சொல்லி வைத்துப் போனார்கள். ஆனால் பேரின்பம் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்கிற வழிவகைகளை அவர்கள் சொல்லவில்லை.

ஆண்டவனை உணர்வதுதான் பேரின்பத்திற்கு வழி என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த வழியில் போய் பேரின்பத்தை நுகர்ந்தவர்களை யாரையும் காணோம்.

இவ்வுலக மாந்தர் உய்யும்பொருட்டு பலகாலம் சிந்தித்து பேரின்பம் அடையும் மார்க்கத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். இந்தப் பொருளை நினைக்க நினைக்க இன்பம் தரும். பார்த்தால் இன்பம் பலமடங்கு பெருகும். தொட்டாலோ பேரின்பம் பயக்கும்.

இந்த இன்பம் எப்போதும் தெவிட்டாது. இந்தப் பொருளை எவ்வளவு அடைந்தாலும் மேலும் மேலும் வேண்டும் என்றே தோன்றும்.

அது என்னவென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா?

இதோ பாருங்கள்.

பணம் ஒரு பேய், பணத்தாசை கூடாது, பணத்திற்கு அடிமையாகாதீர்கள் என்றெல்லாம் கூறுபவர்களை நம்பாதீர்கள். ஒன்று அவர்களிடம் பணம் இல்லை அல்லது ஏற்கெனவே ஏகப்பட்ட பணத்தைச் சேர்த்துவிட்டார்கள். நம்ம கார்பரேட் சாமியார்களைப் பாருங்கள். அவர்களிடம் ரிசர்வ் பேங்க் கஜானாவே இருக்கிறது. ஆனால் அவர்கள் போதிப்பது என்னவென்றால் பணத்தாசை கூடாது என்று.

ஆகவே பதிவர்களே, விவேகத்துடன் பணத்தை சேமியுங்கள்.