சனி, 30 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 4


டிக்கட் பரிசோதகர் என்னிடம் டிக்கெட் கேட்டார். நானும் வாங்கி வைத்திருந்த டூரிஸ்ட் டிக்கட்டைக் காட்டினேன். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். அப்போதே ஏதோ வில்லங்கம் போல் இருக்கிறது என்று மனதிற்குள் பொறி தட்டியது. இருந்தாலும் "கெத்தை" (Self Confidence) விடாமல் ஏதாவது பிரச்சினையா என்றேன். அவர் சொன்னார், "இந்த பாஸ் சிட்டி வரம்பிற்குள் பிரயாணம் செய்வதற்குத்தான் செல்லுபடியாகும். நீங்கள் சிட்டி லிமிட்டைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டீர்கள் என்றார்."

நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு மாறினேன். "ஐயா, நான் அசலூருங்க, உங்க ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று வந்தேன். இந்த உள்  விவகாரங்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம்" என்றேன். அவர் நீங்கள் டூரிஸ்ட்டாக இருப்பதால் இது வரைக்கும் வந்ததற்கும் திரும்ப போவதற்கும் உண்டான சாதாரண கட்டணம் மட்டும் வசூலிக்கிறேன். இதுவே ஊள்ளூர்க்காரர்களாயிருந்தால் பெரிய தொகை பைன் கட்ட வேண்டியிருக்கும் என்றார்.

எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையுடனே போயிற்று என்று நினைத்துக்கொண்டு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். அவர் ரசீது கொடுத்து விட்டு, வரும் ஸ்டேஷனில் இறங்கி, திரும்பிப் போகும் ரயிலில் சிட்டி போய்ச் சேருங்கள் என்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான காட்சியைக் கண்டேன்.

அந்த ஊர் நகரின் வெளிப்புறத்தால் உள்ள ஒரு சிறாய கிராமம். அன்று ஒரு விடுமுறை நாள் போலும். அங்கு ஒரு பெரிய வேளியில் சிறிய சிறிய பிளாட்டுகள் போட்டிருந்தார்கள். அதில் பலவிதமான செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிளாட்டிலும் பெரியவர்கள், சிறியவர்கள் ஆகியோர் குடும்பம் குடும்பமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். இது ஒரு வழக்கம் போல் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு நான் திரும்ப வேண்டிய ரயில் வந்ததால் திரும்பி விட்டேன்.

நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில். 

வியாழன், 28 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 3


நான் பலமுறை முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. வேறு வழி தெரியாமல் ரிசப்ஷனில் சென்று முறையிட்டேன். அவர்கள் நீங்கள் சாவியை எப்படி போட்டீர்கள் என்று கேட்டார்கள். நான் காட்டினேன். அவர்கள் இப்படிப் போட்டால் உங்கள் ஆயுளுக்கும் அந்தக் கதவு திறக்காது. சாவியைத் திருப்புங்கள் என்றார்கள். திருப்பினேன். இப்போது இந்த சாவியின் ஒரு மூலையில் ஒரு கருப்பு புள்ளி இருக்கிறதல்லவா? அந்தக் கருப்பு புள்ளி தெரிகிற மாதிரி வைத்துக்கொண்டு சாவியைப் போட்டால்தான் கதவு திறக்கும் என்றார்கள்.

நான் திரும்ப ரூமுக்கு வந்து அதே மாதிரி சாவியைப் போட்டேன். மந்திரம் போட்ட மாதிரி கதவு அழகாகத் திறந்தது. ஆஹா, இப்படியா இருக்கிறது சூட்சுமம் என்று நினைத்துக்கொண்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியில் வந்தேன். ரிசப்ஷனில் உள்ள பெண்கள் என்னைப் பார்த்து சிரிப்பது போல் ஒரு உணர்வு வந்தது. என்ன செய்ய முடியும்? உள்ளூர் யானை அசலூரில் பூனைதானே!

என்னுடைய அன்றைய பிளான் சும்மா ஊரைச்சுற்றிப் பார்ப்பதுதான். பக்கத்திலிருந்த பஸ் ஸடாப்பிற்குப் போனேன். அங்கு ஒரு அறிவிப்பு இருந்தது. ஒரு நாள் முழுவதும் அல்லது இரண்டு, மூன்று, நான்கு நாட்கள் வரையில் அங்கு சுற்றிப்பார்க்க விரும்பினால் ஸ்பெஷல் டூரிஸ்ட் பாஸ்கள் கிடைக்கும், இந்த பாஸ்களை பஸ்களிலேயே வாங்கிக்கொள்ளலாம் என்று போட்டிருந்தது. விலையோ மிகவும் சலீசாக இருந்தது. இரண்டு ட்ரிப் தனித்தனியாக வாங்கும் டிக்கட் சார்ஜை விட கொஞ்சம்தான் அதிகம்.

அடிச்சது லக்கி சான்ஸ் என்று பஸ்சில் ஏறினதும் இந்த பாஸை வாங்கிவிட்டேன். அந்த ஊரில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அங்கு உள்ளூர் போக்குவரத்திற்கு மூன்று வகையான வசதிகள் இருக்கின்றன.

ஒன்று - நம்ம ஊர் டவுன் பஸ் மாதிரியான சர்வீஸ். நம்ம ஊர் பஸ் மாதிரி என்று நான் எழுதியுள்ளதை அந்த ஊர்க்காரர்கள் பார்த்தால் என் மேல் கேஸ் போட்டுவிடுவார்கள்.

இரண்டு - சென்னையிலுள்ள லோகல் மின்சார வண்டிகள் மாதிரியான ஒரு சர்வீஸ். இந்த சர்வீசிலுள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் நேரம் தவறாமை. 9.22 ரயில் என்றால் சரியாக 9.21க்கு பிளாட்பாரத்தில் வந்து நிற்கும். 9.22 க்கு புறப்படும். எப்பொழுதும் எந்த மாறுபாடும் இல்லாமல் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப் படுகிறது. தவிர, இந்த ரயில்களின் அட்டவணை காலம் காலமாக மாற்றப்படாமல் அப்படியே இருக்கிறது.

மூன்று - டிராம் வண்டி. இந்தக் காலத்து இளைஞர்கள் சென்னையில் பார்க்கக் கிடைக்காத ஒன்று. ரோட்டின் நடுவில் தண்டவாளம் பதித்து அதில் போகும் ரயில் மாதிரி ஒரு வாகனம்.

எதற்கு இந்த மூன்றையும் குறிப்பிட்டேனென்றால், இந்த மூன்றுக்கும் ஒரே டிக்கட்தான். நாம் போகவேண்டிய இடத்திற்கு இந்த மூன்றிலும் மாறி மாறிப் போகவேண்டியிருந்தால், ஆரம்பத்தில் ஒரு டிக்கட் வாங்கினால் போதும். எல்லா வண்டிகளுக்கும் அது செல்லுபடியாகும்.

நான் வாங்கிய மூன்று தினங்களுக்கான பாஸ் இந்த மூன்று வகை வாகனங்களுக்கும் செல்லுபடியாகும். எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். சின்னப்பிள்ளை மாதிரி அன்று முழுவதும் இப்படி ஊர் சுற்றினேன்.

இப்படி ஒரு ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது டிக்கட் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கொண்டேன்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 2


பழைய தொடர்ச்சி  ("எதற்கும் டெஸ்ட் செய்து பார்த்து விடலாம் என்று  அந்த லாக்கரில் சொன்ன பணத்தைப் போட்டு நெம்பரை செட் செய்து லாக்கர் கதவை இழுத்தேன்.")

லாக்கர் கதவு வெண்ணையில் கத்தி இறங்குவது போல் நைசாகத் திறந்தது. ஒன்றும் பிரச்சினை பண்ணவில்லை. அப்போதுதான் மூளையில் ஒரு பொறி தட்டியது. அடடா, இப்போ போட்ட காசு கோவிந்தாதான் அப்படீன்னு பட்டது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் திரும்பவும் நெம்பரை செட் செய்து லாக்கரை சாத்தினேன். நெம்பரை அந்த டயலில் மாற்றி வைத்தேன். பிறகு இழுத்துப்பார்த்தேன். திறக்கவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டு விட்டு அடுத்தவேலைக்குத் தயாரானேன்.

இந்த லாக்கர்களை ஒருவர் 48 மணி நேரம்தான் பயன்படுத்தலாம். அதற்கு மேல் டயம் ஆகிவிட்டால் லாக்கர் ஆட்டோமேடிக்காக லாக் ஆகிவிடும். இப்படி அந்த லாக்கரில் எழுதியிருந்தது. என் முதல் புரோக்ராம் வேகனிங்கன் போவது. இரண்டாவது புரொக்ராம் அங்கு போய் வந்தபின் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமில் தங்குவது. 

ஒரு மனக்கணக்கு போட்டுப் பார்த்தேன். வேகனிங்கன் போய்விட்டு 48 மணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று தெரிந்தது. சரி, அப்போது ஒரு தடவை திறந்து மூடினால் சரியாய்ப்போய்விடும் என்று முடிவு செய்து வேகனிங்கன்  புறப்பட்டேன். இதைப்பற்றி முன்பே பதிவிட்டு விட்டபடியால் அந்தக் கதை மறுபடியும் வேண்டியதில்லை.

வேகனிங்கனிலிருந்து திரும்ப வந்து லாக்கரைத் திறந்து மூடி விட்டு ஆம்ஸ்டர்டாம் ஓட்டலுக்குப் புறப்பட்டேன். ஓட்டல் விலாசம் மட்டும் தெரியும். அங்கு எப்படி போகவேண்டும் என்று தெரியாது. வல்லவனுக்கு ஆயுதம் வாயிலே என்று பெரியவர்கள் சொன்னதை நினைவில் கொண்டு அங்கு இருந்த ஒரு செக்யூரிடியிடம் விசாரித்தேன். அவர் ரயிலில் இன்ன ஸ்டேஷன் வரை சென்று, அங்கு ஒரு பஸ்சைப் பிடித்து அந்த டிரைவரிடம் சொன்னால் அந்த ஓட்டலுக்குப் பக்கத்தில் இறக்கி விடுவார் என்று சொன்னார். தேங்க்ஸ் சொல்லிவிட்டு ரயில்வே பிளாட்பாரத்திற்கு வந்தேன். 

ஏர்போர்ட்டிலிருந்து லக்கேஜ் வண்டியைத் தள்ளிக்கொண்டே பொடி நடையாய் ஒரு பத்து நிமிடம் நடந்தால் ரயில்வே பிளாட்பாரம் வந்துவிடும். நம் சென்னையிலும் அப்படி ஏர்போர்ட்டிலிருந்து திரிசூல் ஸ்டேஷனுக்குப் போகிற மாதிரி ஏற்பாடு செய்தால் வசதியாயிருக்கும்.

வழி சொன்னவர் குறிப்பிட்ட ஸ்டேஷனில் இறங்கி, வெளியில் வந்து பஸ் பிடித்தேன். அந்த டிரைவரிடம் நான் போகவேண்டிய ஓட்டலின் பெயரைக் காட்டியதும் அங்கு இறக்கி விடுவதாகச் சொன்னார். நல்ல மனுஷன். அங்கெல்லாம் பஸ்களுக்கு டிரைவர் மட்டும்தான். கண்டக்டர் கிடையாது. கூட்டமும் கிடையாது.

டிரைவர் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் ஓட்டல் தெரிந்தது. அங்கு போய் என் பெயரைச் சொன்னவுடன் ரூம் கொடுத்து விட்டார்கள். எனக்கு டூர் ஏற்பாடு செய்தவர்கள் எவ்வளவு கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள் பாருங்கள். ரூம் சாவி என்று ஒரு கிரெடிட் கார்டு மாதிரி, அதைவிடப் பெரிய சைஸில் ஒரு அட்டை கொடுத்தார்கள். அதில் ஓட்டை ஓட்டையாக டிசைன் போட்டிருந்தது. இது என்ன என்று கேட்டேன். இதுதான் ரூம் சாவி. இதை ரூம் கதவில் உள்ள துவாரத்தில் செருகினால் கதவு திறக்கும் என்றார்கள்.

எல்லாம் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்த கதைதான். ரூமிற்குச் சென்று செட்டில் ஆனேன். ரூமை விட்டு வெளியில் வந்த பிறகு கதவைச்சாத்தினால் அதுவே பூட்டிக்கொள்ளும். சாவியை எடுக்காமல் வெளியில் வந்து கதவைச்சாத்தினால் பிறகு உள்ளே போக முடியாது. இதில் நான் ஜாக்கிரதையாகவே இருந்தேன்.

இத்தகைய சாவிகள் பெரிய ஓட்டல்களில் கம்ப்யூட்டர் மூலமாக அவ்வப்போது தயார் செய்கிறார்கள். ஒருவர் ஒரு ரூமில் தங்கிவிட்டுப் போனபிறகு அடுத்தவர் வரும்போது அதே ரூமிற்கு வேறு சாவி தயார் செய்து கொடுக்கிறார்கள். இதேபோல் மலேசியாவில் ஜென்டிங்க் ஹைலேண்ட்டில் உள்ள பர்ஸ்ட் வர்ல்டு ஓட்டலிலும் செய்வதை அங்கு சென்றவர்கள் பார்த்திருக்கலாம். சாவியில் ஒரு வித்தியாசம். டிசைன் ஓட்டைகளுக்குப் பதிலாக மேக்னடிக் ஸ்ட்ரிப் வைத்துள்ளார்கள். டெக்னாலஜி முன்னேற்றம்.

கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஊரைச்சுற்றிப்பார்க்கலாம் என்று வெளியில் வந்தேன். முன் ஜாக்கிரதையாக சாவியை எடுத்துக்கொண்டுதான் ரூம் கதவைச் சார்த்தினேன். எதற்கும் முன்ஜாக்கிரதையாக திறந்து பார்த்து விடலாமே என்று திறக்க சாவியை துவாரத்தில் போட்டேன். கதவு திறக்கவில்லை.
பகீரென்றது.

மீதி அடுத்த பதிவில். இப்படியேதான் இந்தத் தொடர் பதிவு சஸ்பென்ஸ்களுடன் முடியும். பழைய காலத்து கிரைம் நாவல்கள் நம் வாரப்பத்திரிக்கைகளில் வந்திருப்பதைப் படித்திருப்பீர்கள். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் ஒரு சஸ்பென்ஸ்சில் நிறுத்துவார்கள். சுஜாதா கடைப்பிடித்த உத்தி. இப்போது பதிவுலகில் "பரம(ன்) ரகசியம்" எழுதும் கணேசன் தவறாமல் இந்த உத்தியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். ஆகவே நான் புதிதாக ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. மற்றவர்களைக் காப்பிதான் அடிக்கிறேன்.

ஈயடிச்சான் காப்பி அடிக்கும் கலையில் பிஎச்டி பட்டம் வாங்கினவனாக்கும் நான்!!!

ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 1


நான் முன்பு ஒரு தரம் நெதர்லாந்து அனுபவம் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அப்போது ஒருவர் பின்னூட்டத்தில் "உங்கள் அனுபவங்களை விரிவாக சொல்லியிருக்கலாமே" என்று எழுதியிருந்தார். "அடிச்சது ஒரு லக்கி சான்ஸ் - என்னுடைய பிரதாபங்களை பறை சாற்ற" என்று இந்த தொடர் பதிவு எழுதுகின்றேன்.

என்னுடைய நெதர்லாந்து டூர் நாங்கள் ஆராய்ச்சி தொடர்பு கொண்டுள்ள ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி சார்பில் திட்டமிடப்பட்டது. மேலை நாடுகளில் ஒரு பிரயாணத் திட்டத்தை வகுப்பது என்பது மிகவும் துல்லியமாக இருக்கும்.

ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்தின் தலைநகர். அந்த ஊர் டூருக்கான குறிப்புகள் ஒரு நான்கு வரிகளில் டைப் செய்து கோடுத்திருந்தார்கள். நான் தங்கவேண்டிய ஓட்டலின் பெயர், தங்கும் நாட்கள் ஆகிய விபரங்கள் அதில் இருந்தன.

வெளிநாடுகளில் டூர் செல்லும்போது நாம் நம் பொது அறிவையும் நன்றாக பயன்படுத்தவேண்டும். (இருந்தால்! இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவேண்டாம்).  ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்ட்டின் பெயர் "ஷிபோல்" Schipol. அங்கு இறங்கியதும் நான் தேடியது சாமான் வைக்கும் அறை. ஏனெனில் என்னிடம் நான்கு ஐட்டங்கள் சேர்ந்து விட்டன. அவைகள் அனைத்தையும் தூக்கிக்கொண்டு போவது சிரமம் மற்றும் தேவையில்லை. அதனால் இரண்டு சாமான்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து விட்டு, திரும்பும்போது எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அந்த அறை இருக்கும் இடத்தை விசாரித்து அங்கு சென்றேன்.

அங்கே ஒருவரையும் காணவில்லை. நமக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் க்ளோக் ரூம்தான் பரிச்சயம். கூச்சல் போட்டு முண்டியடித்து லக்கேஜைக் கொடுத்தால் அங்கிருக்கும் ஆள் அந்தப் பூட்டைத் தொட்டவுடன் திறந்து கொள்ளும். வேற பூட்டு போட்டு கொண்டு வாருங்கள் சார் என்று முகத்திலடித்தாற்போல சொல்லி விடுவான்.

என்ன செய்வது என்று யோசித்தேன். ஆள் இல்லையே தவிர அந்த அறையை எப்படி உபயோகிப்பது என்பதைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்கள். அங்கு நிறைய கப்போர்டுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும்  ஒரு நெம்பர் லாக் வைத்திருந்தார்கள். அதை நமக்கு வேண்டிய ஒரு நெம்பருக்கு செட் செய்து கப்போர்டை மூடிவிட்டால் லாக் ஆகிவிடும். பிறகு திறக்கும்போது அதற்குண்டான வாடகைப்பணத்தை அந்த கப்போர்டில் உள்ள துவாரத்தில் போட்டு விட்டு நாம் லாக் செய்த நெம்பரை செட் செய்தால் கப்போர்டு திறக்கும்.

சரி என்று சாமான்களை வைத்துவிட்டு, நெம்பரை செட் செய்து விட்டு பூட்டினேன். கதவை இரண்டு தரம் இழுத்துப் பார்த்தேன். திறக்கவில்லை. சரியாகத்தான் பூட்டியிருந்தது. பிறகுதான் என் குயுக்தி மூளை வேலை செய்தது. நாம் திரும்பி வரும்போது இது சரியாகத் திறக்குமா என்ற சந்தேகம் வந்தது.

நாமதான் வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு பர்லாங்க் வந்த பிறகு திரும்பவும் வீட்டிற்குப் போய் பூட்டை இழுத்துப் பார்க்கும் ரகமாயிற்றே. அப்படிப் பார்த்து விட்டு கல்யாண வீட்டில் சாப்பிடும்போது பொண்டாட்டி கிட்ட வீட்டைச் சரியாகப் பூட்டினோமா என்று கேட்போம். தவிர இந்த மாதிரி லாக்கர்களை முன்பின் பார்த்துவுமில்லை. எதற்கும் டெஸ்ட் செய்து பார்த்து விடலாம் என்று  அந்த லாக்கரில் சொன்ன பணத்தைப் போட்டு நெம்பரை செட் செய்து லாக்கர் கதவை இழுத்தேன்.

மீதி அடுத்தபதிவில். இந்தப் பதிவை ஒரு மாதத்திற்கு ஜவ் மிட்டாய் மாதிரி இழுப்பதுதான் என் நோக்கம். என்ன செய்வது? பதிவெழுத தலைப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது.

சனி, 16 நவம்பர், 2013

முதுமையின் அவலங்கள்


என்னுடைய கடந்த 

"வயது வந்தவர்களுக்கு மட்டும்"


என்ற  பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.

ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன் என்கிறீர்களே. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?

காலையில் நாளிதழை திறந்தவுடன் விபத்துக்களை பார்க்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்போது எளிதாக மனதில் எந்த ஒரு கணமும் இல்லாமல் அடுத்த செய்திக்கு போய்விடுகிறோம். ஆனால் அதே விபத்தில் நமக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருந்திருந்தால் - அடிபட்டவர்கள் மட்டும் அல்ல, விபத்துக்கு காரணமானவர்களே ஆனாலும் சரி - மனது கிடந்து துடிக்கிறதே. உடனே ஓடிபோய் உதவி செய்ய மனது அலை பாய்கிறதே. நீங்கள் ரொம்ப எளிதாக ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்கிறீர்கள். உங்கள் உறவினர்களை நினைத்து பரிதாபபடுகிறேன்

திருச்சி காயத்ரி மணாளன்

-----------------------------------------------------------------------

உங்களுக்கே இது நியாயமாய்ப் படுகிறதா?
நல்ல கேள்வி. சரியாக பாய்ன்டைப் பிடித்து விட்டீர்கள்.
அதாவது நான் ஒரு மனிதப் பண்புகள் இல்லாதவன் என்கிற மாதிரி ஒரு உருவத்தை உருவகப்படுத்தியுள்ளீர்கள். நான் அதை மறுக்கவில்லை. உயர்ந்த பண்புகள் ஒருவனுக்கு இருப்பது மிகவும் போற்றத்தக்கது.  அப்படிப்பட்ட நல்ல பண்புகளில் வயதானவர்களை அவர்கள் முகம் கோணாமல் பராமரிப்பது என்பது மிக மிக உன்னதமான பண்பு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அந்தப் பண்புகள் மனதளவில் மட்டும் இருந்தால் போதுமா? அதை செயலில் காட்டினால்தானே பலன்.

எனக்கும் இந்தக் கொள்கை மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு கடவுள் சர்வ வல்லமையும் மற்ற வசதிகளையும் அளவில்லாமல் கொடுத்திருந்தால் நானும் இந்த கொள்கைகளை தடையில்லாமல் என் உறவினர்கள் அனைவருக்கும் நிறைவேற்றத் தயார்தான். என்ன, அதற்குண்டான ஆட்களைப் போட்டுவிட்டு அவர்களுக்குண்டான கூலியை தாராளமாகக் கொடுத்தால் வேலை நடந்துவிடும்.

உங்கள் நேரடி அனுபவத்தைப் பற்றி கேள்விகள் கேட்பது தேவையில்லை.  என்  குடும்பம் சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் இங்கு குறிப்பிடுவது தற்பெருமை பேசுவது போல் ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன். என் பக்கத்து வாதங்களை மட்டும்  முன் வைக்கிறேன்.

வயதானவர்களின் முதல் ஆதங்கம் அவர்களின் உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது. "நான் பத்து வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு தெம்பாக இருந்தேன். இப்பொழுது என்னால் அப்படி இருக்க முடியவில்லையே.  இப்பொழுது மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். என்னை முன்பு போல தெம்பானவனாக மாற்ற ஏன்முடியாது?"  

அவர்களைப் பராமரித்துக் கொள்பவர்களை ப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். "நீங்கள் ஏன் அப்படிப்பட்ட மருத்துவரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் வைத்தியம் செய்யக்கூடாது?"

இதுதான் பெரும்பாலான வயதானவர்களின் ஆதங்கம்.

முதுமையின் தாக்கங்களை மாற்றக்கூடிய வைத்தியம் இருந்தால் பணம் படைத்தவர்கள் ஒருவரும் இறக்கவே மாட்டார்கள். முதுமையின் மாற்றங்களுக்கு தற்காலிக சாந்தி செய்யலாமே தவிர அவைகளை முற்றிலும் நிரந்தரமாக மாற்ற முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மாற்றம் தற்காலிகமானது.

முதல் தடவை வயதான ஒருவருக்கு இந்த மாதிரி வைத்தியம் செய்தால் சில நாட்களுக்கு தெம்பாக இருப்பார். கொஞ்ச நாட்கள் போன பிறகு பழையபடி சோர்வு வரும். திரும்பவும் வைத்தியம் செய்ய ஆசைப் படுவார். வைத்தியம் செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். திரும்பவும் தெம்பாக உணருவார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் வைத்தியம் செய்யவேண்டி வரும். இந்த இடைவெளி குறைந்து கொண்டே போய் கடைசியில் எந்த வைத்தியமும் பலனளிக்காத நிலை ஏற்படும்.

அப்போது டாக்டர்கள் "இனி இவருக்கு வைத்தியம் செய்து பலனில்லை. அவரை வீட்டோடு வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி விடுவார்கள். சொந்தக்கார்ர்களும்  "நாங்கள் எங்களால் முடிந்தவரை வைத்தியம் செய்தோம், இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்" என்று வருபவர்களிடம் சாதாரணமாகவோ அல்லது பெருமையாகவோ சொல்லிக்கொள்ளலாம்.

அந்த நிலையில் அந்த வயதானவரின் நிலையை யோசித்துப் பாருங்கள். உடலில் தெம்பு இல்லை. உடல் உபாதைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்த மருந்தும் நிவாரணம் கொடுக்க மாட்டேனென்கிறது. பார்த்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச ஆளில்லை. மரண வாதனை அவர்களை வாட்டுகிறது.

இந்த நிலையில் யார் என்ன  செய்து அவர் வேதனையைக் குறைக்க முடியும்? இப்படி வேதனைப் படாமல் தூக்கத்திலேயே இறந்து போகிறவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்க்ள. ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த மரண வாதனையை அனுபவித்து விட்டுத்தான் இறக்கிறார்கள்.

இந்த மாதிரி ஒருவருக்கு வைத்தியம் பார்க்க ஆள் வசதியும் பணவசதியும் வேண்டும். அப்படி இருந்தாலும் தொடர்ந்து வைத்தியம் பார்க்க மன வலிமை வேண்டும். இப்படி எத்தனை குடும்பங்களில் செய்ய முடியும்?

நான் சமீபத்தில் பார்த்த ஒரு குடும்பத்தில், குடும்பத்தலைவன் இறந்து விட்டார். அந்தக் குடும்பத்தலைவி இரண்டு மகன்களையும் வயதான தன்னுடைய தாய் தந்தையரையும் வைத்து காப்பாற்றிக்கொண்டு இருக்கிறாள். ஓரளவு வசதி இருக்கிறது. மகன்கள் இப்போதுதான் வாழ்க்கையில் வேரூன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு மகனுக்கு சமீபத்தில் கல்யாணம் ஆயிற்று.

தந்தைக்கு நடக்க முடியாது. பாத் ரூமில் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை. அவருடைய மனைவிக்கும் வயதாகி விட்டது. அவரைத் தூக்கும் சக்தி இல்லை. அவர்கள் இருப்பதோ ஒரு அபார்ட்மென்டில் ஐந்தாவது மாடியில். அவரை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றால் இரண்டு வலுவான ஆட்கள் வேண்டும். ஆம்புலன்ஸ் வேண்டும். இந்த மகளும் உடன் செல்லவேண்டும். இதற்கெல்லாம் நேரம் வேண்டும்.

அந்தப் பெண் என்ன செய்வாள்? இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு தயார் செய்வாளா? அப்பாவின் வைத்தியத்திற்கு கூடப் போவாளா? அப்படி வைத்தியம் செய்து இவரால் என்ன செய்ய முடியும்? உதவிக்கு அடிக்கடி வர இன்றைய உங்கில் யாரால் முடியும்?

இந்த நிலையில் அவருக்கு நான் சொன்ன யோசனை -" இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்" என்று யோசனை சொன்னேன். 

இது நியாயமானதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள். மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரியும். தர்மம் உதுதான் என்று வரையறுத்து கூறமுடியாது. சூழ்நலைகளுக்கு ஏற்ப தர்மம் மாற்படும் என்று தர்மத்திற்கே உதாரணமாக சொல்லப்படும் தர்மரே பல இடங்களில் கூறியிருக்கிறார்.

திங்கள், 11 நவம்பர், 2013

வயது வந்தவர்களுக்கு மட்டும்.


தலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு வயதானவரை எனக்கு வேண்டியவர்களின் குடும்பத்தில் பார்த்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் சாரம்.

 மனிதன் வாழ்க்கையில் பல பருவங்களைத் தாண்டி வளர்கிறான். அதில் முதுமைப் பருவமும் ஒன்று.

மற்ற எல்லா பருவங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் மனிதன் இந்த முதுமைப் பருவத்தை எதிர் கொள்ள எந்த முன் நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அவலம். இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அந்திம காலம் என்று ஒன்று உண்டு. அதன் முடிவில் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய உண்மை இது.

ஆனால் மனிதன் முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சுகிறான். ஆகவே அதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறான். அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவை அவன் வாழ்வில் வராமல் போய்விடுமா என்ன?

இதனால் பல முதியவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில், மிகவும் வேதனைப்படுகிறார்கள். தாங்கள் வேதனைப்படுவது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்துகிறார்கள்.

ஏதாவது வைத்தியம் செய்து தன்னைப் பழைய மாதிரி (அதாவது இளமை நிலைக்கு) கொண்டு வரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் சொல்ல முடியாது.

பழங்காலத்தில் செவ்விந்தியர் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது நடக்க முடியாதவர்களை பழைய இடத்துலேயே விட்டு விட்டுப் போவது வழக்கம். அந்த ஆளுக்கு முன்னால் குச்சிகளினால் நெருப்பு மூட்டி விட்டு, பக்கமத்திலும் கொஞ்சம் குச்சிகளை வைத்து விட்டுப் போய்விடுவார்களாம். அந்த நெருப்பு முழுவதும் அணைந்த பிறகு ஏதாவது காட்டு மிருகங்க்ள வந்து அந்த ஆளை அடித்து சாப்பிட்டு விடுமாம்.

இந்த நடைமுறையைக் கேட்க காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றினாலும் அவர்களின் வாழ்வில் வேறு வழியில்லாததினால்தான் அப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்.  இன்றும் கூட நம் தாய்த்திரு நாட்டில் மன நோயாளிகளைக் கொண்டு போய் கண் காணாத இடத்தில் விட்டு விட்டு வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பழங்காலத்தில் முதுமக்கள் தாழி இருந்த செய்தி அநேகருக்குத் தெரியும். இன்று சாதாரண குடும்பங்களில் இந்த வழக்கங்களெல்லாம் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் வயதானவர்கள் இருக்கும் குடும்பங்களில் அவர்களைப் பராமரிப்பதில் பல சங்கடங்கள் இருக்கின்றன.

இதைப்பற்றிய சிந்தனை பல நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மரணம் என்பது சிலருக்கு அநாயாசமாக வந்து விடுகிறது. நேற்று பார்த்தேன், நல்லாத்தானே இருந்தார் என்று சொல்லும்படியான மரணங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்.

மற்றவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் பல துன்பங்களை சந்திக்க நேரலாம். அத்துன்பங்களை ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுவது மூலம் குறைத்துக்கொள்ளலாமே தவிர முற்றிலும் குணப்படுத்துவது இயலாத காரியம். ஆஸ்பத்திரியில் சேர்த்து உபாதைகளைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் மிகுந்த பொருட்செலவைத் தரும் வேலைகள். தவிர அதற்குத் தகுந்த ஆள் பலம், பொருள் பலம் வேண்டும்.

ஆகவே சிறிதாவது சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு முதுமையில் வரும் துன்பங்களை, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தாராமல் பொறுத்துக்கொள்ள பழக வேண்டும். இன்றுள்ள சமுதாயத்தில் எது எதற்கோ பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.

இயற்கையைப் புரிந்து அதற்குத் தக்க வாழ எல்லோருக்கும் இறைவன் அருள் புரிவானாக.

வெள்ளி, 8 நவம்பர், 2013

நேத்து ராத்திரி தூக்கம் போச்சுதே!


போன வாரம் நான் இரண்டாவது பெண்டாட்டி கட்டினேன். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை. அதிலிருந்து ராத்திரியில் சரியாகத் தூங்க முடிவதில்லை. காலையில் இரண்டு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது.

எழுந்தவுடன் அவள் முகத்தில்தான் முழிக்கிறேன். அவளுடன் என் நேரத்தை முழுவதுமாக செலவழிக்கிறேன். அவளை அணு அணுவாக ஆராய்கிறேன். புது டிரஸ் வாங்கிக்கொடுத்தேன். என்னால் முடிந்த அளவு அவளுக்கு சேவை செய்கிறேன். இருந்தாலும் அவள் என் வழிக்கு வரமாட்டேனென்கிறாள்.

இதனால்தான் காலையில் எழுந்தவுடன் "நேத்து ராத்திரி..." பாடவேண்டி வருகிறது. புதுப்பொண்டாட்டி என்றால் அப்படித்தான் இருக்கும் என்று அனுபவம் கூறுகிறது. என்னதான் புதுப்பொண்டாட்டி என்றாலும் இப்படி இருக்கக் கூடாது என்று அறிவு கூறுகிறது. நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.

கெழவனுக்கு வந்த வாழ்வைப் பாருங்கய்யா என்றுதான் கூறுவீர்கள் என்று தெரியும். ஆகவே மர்மத்தை விடுவிக்கிறேன்.

போனவாரம் என் நண்பர் ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் புதிதாக இருந்தது. அதைப் பற்றிய விவரங்கள் விசாரித்தேன். போனை கையில் வாங்கிப் பார்த்தேன். கண்டவுடன் காதல் என்பார்களே, அது அன்று என் வாழ்வில் வந்து விட்டது. அந்த போனை வாங்கியே தீரவேண்டும் என்ற தணியாத தாகம் தோன்றி விட்டது.

அடுத்த நாளே அந்த நண்பரையும் உடன் அழைத்துக்கொண்டு போய் அந்த போனை வாங்கியே விட்டேன். அதிலிருந்துதான் சோதனை பிறந்தது. "நேத்து ராத்திரி" பாட்டும் அன்றிலிருந்துதான் பாட ஆரம்பித்தேன்.

அந்த போன் இதுதான்.


Nokia Lumia 520


இது விண்டோஸ் 8 ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ள போன். விலை 9500 ரூபாய். கம்ப்யூட்டரில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அதில் பாதிக்கு மேல் இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை.

ஒன்று மட்டும் புரிகிறது. என்ன வேலை செய்தாலும் உடனே காசு கேட்கிறது. ஏனெனில் எல்லா வேலைகளும் இன்டர்நெட் மூலமாகத்தான் நடக்கிறது. நான் தெரியாத்தனமாக முதல் நாள் ஏகப்பட்ட நேரம் அதில் செலவழித்து விட்டேன். அவ்வளவுதான் என் இருப்பில் உள்ள காசெல்லாம் காலி. (நான் BSNL Prepaid பிளானில் இருக்கிறேன்.)

அடுத்த நாள் முதல் வேலையாக டெலிபோன் ஆபீசுக்கு ஓடினேன். என்னய்யா இது அநியாயமாக இருக்கிறது. இந்த போன் ஒரே நாளில் என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டதே என்று மூக்கால் அழுதேன். அங்கிருந்த இன்ஜினியர் பொறுமையாக என் கதையைக் கேட்டுவிட்டு சொன்னார். இந்த போனில் நீங்கள் "டேட்டா பிளான்" ஒன்றை இன்ஸ்டால் செய்யவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எத்தனை ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் அத்தனையையும் இது விழுங்கி விடும் என்றார்.

அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்றேன். அதிகம் ஒன்றமில்லை, மாதம் 139 ரூபாய்தான். ஒரு மாதத்திற்கு 1 ஜிபி உபயோகித்துக் கொள்ளலாம் என்றார் சரியென்று அதற்கு பணத்தைக் கட்டி அந்த பிளானையும் கம்ப்யூட்டரில் ஏற்றினேன், புதுப்பெண்டாட்டிக்கு பூவும் அல்வாவும் வாங்கிக் கொடுத்துத்தானே ஆகவேண்டும். செய்கிறேன் வேறு வழி?

ஆகவே வாசக நண்பர்கள் எல்லாம் என் கதையைக் கேட்ட பிறகு ஜாக்கிரதையாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

தீபாவளி பிரளயம்



என்னங்க அய்யா! தீபாவளியை முன்னிட்டு நகைச்சுவையாக நாலு வார்த்தை எப்போதும் போல் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு படத்தோடு நிறுத்தி விட்டீர்களே? 

இப்படி ஒருத்தர் பின்னூட்டம் போட்டு விட்டார். அவர் ஆசையை நிறைவேற்றவேண்டாமா?

அதுதான் இந்த உண்மைப் பதிவு.

தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு சோதனை வந்தது. அதாவது என் நண்பர் ஒருவர் அவருடைய வீட்டில் ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய வசதி இல்லாததால் ஒரு பிரியாணிக்கடையில் ஒரு கிலோ பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். என்னிடம் உங்களுக்கும் ஒரு பங்கு வரும் என்று சொல்லியிருந்தார். இது நடந்தது நான்கைந்து நாள் முன்பு. நான் அதை பெரிய விஷயமாக கருதவில்லை. பிரியாணி சாப்பிடுபவர்கள் என் வீட்டில் என்னைத்தவிர வேறு யாருமில்லை. அதனால் ஒருவருடனும் சொல்லவில்லை.

வீட்டில் அன்று எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது இதை எதற்கும் சொல்லிவிடலாமே என்று சொன்னேன். பிரளயம் ஆரம்பித்தது.

"உங்களுக்கு மூளையே கிடையாது. நல்ல நாள் பொல்லா நாள் என்று எதுவும் கிடையாது. அதுக்கு மேலே ஒரு கட்டையில போறவன் கூட சகவாசம். அவனுக்கும் விவஸ்தை கிடையாது. அவனுக்கு வீட்டில் ஒன்றும் கிடைப்பதில்லை. அதனால் அலைகிறான். உங்களுக்கு என்ன கேடு. நான்தான் உங்களுக்கு வேண்டியதை செஞ்சு கொட்டிக்கொண்டு இருக்கிறேனே, அது பத்தாதா, ஓசியில எவனோ பிரியாணி கொடுத்தா அதை வாங்கீக்கறதா. ஆமா, சொல்லீட்டேன், வீட்டுக்குள் பிரியாணி வந்துதோ, நாங்க யாரும் வீட்டுக்குள் இருக்கமாட்டோம். ................................................................"

இதற்கு மேலும் தொடர்ந்த அர்ச்சனையை இங்கு எழுதுவது பதிவுலக நாகரிகம் கருதி தவிர்க்கிறேன்.

திடீரென்று மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. (எப்பவாவது இது போல் அபூர்வமாக நடக்கும்). நான் சொன்னேன். ஆமா நீ செஞ்சயே உலகத்தில இல்லாத பலகாரம். அதை அவனுக்குக் கொடுத்துட்டு வாங்க என்று நீதானே கொடுத்தனுப்பிச்சே. அவன் அதை பதில் பேசாமல் வாங்கிக்கொண்டான் இல்லையா. அப்புறம் அவன் ஏதாச்சும் கொடுத்தால் அதை மரியாதைக்காக நான் வாங்கிக்கொள்ள வேண்டாமா, என்னை என்னவென்று நெனச்சாய்? என்று ஒரு போடு போட்டேன்.

எக்கேடோ கெட்டுப்போங்க. ஆனா அந்த கருமாந்திரம் ஊட்டுக்குள்ள வரப்படாது. எங்கயோ வச்சு சாப்பிட்டுக்குங்க. அப்படீன்னு ஒரு பைசல் ஆச்சு.

சரீம்மா, அதை நான் வாசல்லயே வச்சு சாப்பிட்டுட்டு, வந்துடறேன், அப்படியே சாப்பிட்ட எடத்தையும் நல்ல கழுவி விட்டுட்டு வர்றேன், சரித்தானே என்று முடிவுரை வாசிச்சேன்.

தீபாவளி அன்று நண்பனிடமிருந்து நானே போய் பிரியாணியை வாங்கி வந்து என் மகள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு நல்ல பிள்ளையாக வீட்டிற்கு வந்து விட்டேன்.

இப்படியாக தீபாவளி பிரளயம் ஓய்ந்தது. 




திங்கள், 28 அக்டோபர், 2013

பெற்றோரின் பொறுப்புகளும் கடமைகளும்.


இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல பொறுப்புள்ள மனிதர்களாக்குவது எப்படி என்று சிந்திக்கக்கூட நேரம் இருப்பதில்லை. எப்படியோ குழந்தைகள் பிறந்தார்கள், எப்படியோ வளர்கிறார்கள் என்ற அளவில்தான் சிந்தனைகள் இருக்கின்றனவே தவிர, அவர்களை பொறுப்பான மனிதனாக உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று பெரும்பாலான பெற்றோர்கள் உணருவதில்லை. அப்படி உணர்ந்தாலும் அந்த நோக்கத்தை எப்படி அடைவது என்ற ஞானம் இருப்பதில்லை.

ஒவ்வொரு குழந்தையின் குணங்கள் கரு உற்பத்தியாகும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.  அந்த குணங்கள், அந்தக் குழந்தைகள் வளரும் பருவத்தில் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டு, ஒருவனுடைய திறன் வெளிப்படுகிறது. பெற்றோர்கள் இந்த சூழ்நிலையை அந்த குழந்தை நன்கு வளர்ந்து அவனுடைய திறமைகள் வெளிப்படுமாறு அமைத்துக் கொடுக்கவேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.

குழந்தை வளர்ப்பை யாரும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வருவதில்லை. இந்த அறிவு அனுபவத்தால் மட்டுமே வருவது. அதனால் இந்த அனுபவத்தைப் பெற ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இருக்கவேண்டும். வேலைப்ளுவைக் காரணம் காட்டி இந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.

குழந்தை பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறக்கலாம். அதை நல்ல டாக்டரிடம் காண்பிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலில் குறையிருக்கலாம் அல்லது மூளையில் குறையிருக்கலாம். இதை முதலிலேயே தெரிந்து கொண்டால் அந்தக் குழந்தையை வளர்க்கும்போது தேவையான சிகிச்சைகளைச் செய்ய வசதியாயிருக்கும்.

குழந்தைகள் பள்ளிப் பருவத்திற்கு முன்னால் வூட்டில் பெற்றோர்களின் கண்காணிப்பில் வளருகின்றன. பள்ளிக்குச் சென்ற பிறகு அவர்களைப் பாதிப்பவர்கள் ஆசிரியர்களும் உடன் பயிலும் மாணவர்களும்தான். அவர்கள் வளர வளர சக மாணவர்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வரும். இதைத்தான் ஆங்கிலத்தில் Peer Pressure என்கிறார்கள். இது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

இந்த சூழ்நிலை பாதிப்பை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களை சரியான வழியில் நடத்துவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. பெற்றோர்களின் முதல் கடமை, தங்கள் பொறுப்புகளை உணருவதுதான். வழிமுறைகளை சிறிது முயற்சித்தால் கற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களை நன்கு கண்காணித்து அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளவேண்டியவைகளை பக்குவமாகச் சொல்லிப் புரியவைக்கவேண்டும்.
தவிர பெற்றோர்களும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு வேண்டிய சௌகரியங்களை தேவைக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு அவர்கள் தானாக வளர்ந்து நல்ல குடிமகன்களாக வளர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது பேதமை.

திங்கள், 21 அக்டோபர், 2013

தமிழ்மணம் ரேங்க்கும் நானும்.


பள்ளியில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் கல்வித்தரத்தை ரேங்க் மூலமாகக் கணிக்கிறார்கள் அல்லவா? ஒருவன் ஒன்றாவது ரேங்க் வாங்கியிருந்தால் அவன் அந்த வகுப்பில் முதல் மாணவன் என்று சொல்கிறோம். அவனே ஒரு பாடத்தில் ஒரு மார்க் வாங்கியிருந்தால் என்ன சொல்வோம்? அவன் படிப்பில் மிகவும் பின் தங்கியவன் என்று தயங்காமல் சொல்வோம்.

இந்த எண் "1" என்பது என்ன பாவம் பண்ணியது? ஒரு சமயம் அதைப்போற்றுகிறோம், இன்னொரு சமயம் அதைத் தூற்றுகிறோம். இது எனக்குச் சரியாகப் படவில்லை. எப்போதும் நாம் ஒரே மாதிரியான கொள்கையை வைத்திருக்கவேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். அதாவது எதுவாக இருந்தலும் எண்ணிக்கை கூடினால் அது நல்ல விஷயம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது என் கொள்கை.

ஒருவனிடம் இப்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. அடுத்த வருடம் அவனிடம் 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தால் என்ன சொல்வோம்? அவன் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று சொல்வோம் அல்லவா?

யாருக்காவது இந்த கொள்கையில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். அடுத்த பதிவர் மகாநாட்டில் இதை ஒரு பட்டிமன்றமாக நடத்தி விடுவோம்.

நிற்க, இந்த டாபிக் எதனால் விவாதத்திற்கு வந்ததென்றால்,  தமிழ்மணம் திரட்டியில் என்னுடைய பதிவின் ரேங்க் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு முன் 13 ஆக இருந்தது இன்று 35 ஐ எட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த அபரிமித வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என் சுகஜீவன வாழ்க்கை முறையே.

மிகவும் அத்தியாவசியமான காரியங்களை, அதாவது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் உயிர் போய்விடும் அல்லது பார்யாள் பூரிக்கட்டையைக் கையிலெடுப்பாள் என்றால்தான் அந்தக் காரியத்தைச் செய்வேன். மற்ற நேரங்களில் இன்ன இன்ன காரியங்கள் செய்யவேண்டும் என்று பேப்பரில் லிஸ்ட் போட்டு டேபிளின் மேல் வைத்திருப்பேன்.

ஏதாவது ஒரு நாள் திடீரென்று வேகம் வரும். அப்போது அந்த லிஸ்டிலுள்ள வேலைகளை முடித்து விடுவேன். என்னுடைய இந்தக் கொள்கையின் பிரகாரம் ஒரு காலத்தில் பதிவுகள் நிறைய போட்டேன். அப்போது தமிழ்மணம் ரேங்க் 13 வரை சென்றது. இப்போது நான் என்னுடைய இயற்கைக் குணத்திற்கு வந்து விட்டபடியால் பதிவுகள் போடுவது வாரத்திற்கு ஒன்று என்றாகி விட்டது.

இப்போது தமிழ்மணம் ரேங்க் 34 ஆக இருக்கிறது. இது இன்னும் கூடுதல் ஆகலாம். ஆனால் இந்த ரேங்கினால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் என் சுகஜீவன வாழ்க்கைச் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதில் சங்கடம் ஒன்றுமில்லை.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த சுகஜீவனம் என்றால் என்ன என்று சொல்லவேண்டுமல்லவா. எங்கள் ஊரில் கடன் வாங்கும்போது ஒரு பிராமிசரி பத்திரம் எழுதுவார்கள். அதில் கடன் வாங்குபவர் பெயர், அவருடைய தகப்பனார் பெயர், செய்யும் வேலை, குடியிருக்கும் விலாசம் எல்லாம் எழுதுவார்கள். ஒரு வேலையும் இல்லாமல் இருப்பவர்களுக்கு "சுகஜீவனம்" என்று எழுதுவார்கள். அதற்கு அர்த்தம் கொச்சைத்தமிழில் "தண்டச்சோற்று தடிராமன்" என்பதாகும். ஆங்கிலத்தில் RKD = Rice Killing Department என்றும் சொல்வார்கள்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

புலி வருகிறது, புலி வருகிறது ஆஹா புலி வந்தே விட்டது.


புலி வருது, புலி வருது என்ற மாட்டுக்காரப் பையன் கதை எல்லோருக்கும் தெரியும். அதேபோல் மைக்ரோசாஃப்ட்-காரன் "விண்டோஸ் 8.1" வருது வருது என்று மூன்று மாசமா கூவிக்கொண்டு இருந்த இந்த புது ஆபரேட்டிங்க் சிஸ்டம் இன்று வந்தே வந்து விட்டது.

மைக்ரோசாஃப்டின் அத்யந்த விசுவாசி என்கிற முறையில் அந்த விண்டோஸ் 8.1 மென்பொருளை இன்று டவுன்லோடு செய்து என் கணினியில் நிறுவி விட்டேன். இன்னும் அதை முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லை.

இந்த மென்பொருளை டவுன்லோடு செய்யவேண்டுமானால் நீங்கள் உங்கள் கணினியில் அதிகார பூர்வமான விண்டோஸ் 8 Pro ஆபரேட்டிங்க் சிஸ்டத்தை நிறுவியிருக்க வேண்டும். உங்களுக்கு இந்த விண்டோஸ் 8.1 Pro அப்கிரேடு விண்டோஸ் ஸ்டோர் மூலமாக இலவசமாகக் கிடைக்கும்.

தவிர நீங்கள் ஒரு நல்ல பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருக்கவேண்டும். அதில் இலவச டவுன்லோடு சௌகரியம் இருந்தால் உத்தமம். இல்லாவிட்டால் இந்த மென்பொருளை, (ஏறக்குறைய 4 GB உள்ளது) டவுன்லோடு செய்ய ஏகப்பட்ட பணம் ஆகிவிடும். தவிர இந்த மென்பொருள் முழுவதும் டவுன்லோடு ஆகி இன்ஸ்டால் ஆவதற்கு ஏறக்குறைய நான்கரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

இந்த தகவல்கள் சிலருக்காவது உபயோகப்படும் என்று நம்புகிறேன். மற்றவர்கள் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த கதையைத் திரும்பவும் நினைவுக்கு கொண்டு வரவும்.

திங்கள், 14 அக்டோபர், 2013

வயசான காலத்தில் வந்த சோதனை.


சோதனை என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. நடைமுறை வாழ்க்கையில் சோதனை என்றால் கஷ்டம் என்று பொருள். இளம் வயதில் வரும் சில எதிர்பாராத நிகழ்வுகளை சோதனை என்று சொல்வதில்லை. அவைகளை அன்றாட நிகழ்வுகள் என்ற வகையில் சேர்த்து விடுவோம். அப்படிப்பட்ட நிகழ்வுகள் பல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் வந்து போகும். அத்தகைய நிகழ்வுகளைச் சமாளிக்க பெரிய முயற்சிகள் ஒன்றும் தேவையிருக்காது.

இத்தகைய நிகழ்வுகள் எந்த வயசிலும் வரலாம், வரும். ஆனால் இளம் வயதில் அவைகளை தூசிபோல் தட்டி விட்டு விட்டு நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் அதே நிகழ்வுகள் வயதான காலத்தில் வரும்போது அது சோதனையாக மாறுகிறது. அதை சமாளிக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று. நேற்று என் ஒன்றுவிட்ட தம்பியின் நேர்  சகலை தன் பெண்ணுடைய கல்யாணத்திற்கு அழைப்பு கொடுத்துவிட்டார். இதுதான் சோதனையின் ஆரம்பம். இதில் ரூம் போட்டு யோசிக்கவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சினை, கல்யாணத்திற்குப் போவதா, வேண்டாமா என்பது. மணப்பெண்ணின் பெற்றோரை என் தம்பி வீட்டு விசேஷங்களில் பார்த்ததைத் தவிர, அவர்கள் வீட்டிற்கு நான் போனதில்லை, என் வீட்டிற்கு அவர்கள் வந்ததில்லை. இந்தக் கணக்குப் பிரகாரம் நான் இந்தக் கல்யாணத்திற்குப் போக வேண்டியதில்லை.

ஆனால் என் ஒன்று விட்ட தம்பியும் தம்பி மனைவியும் கூட வந்து அழைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். ஆகவே என் தம்பிக்காக இந்த கல்யாணத்திற்குப் போகவேண்டும். போகாவிட்டால் தம்பிக்கு மன வருத்தம் ஏற்படும். அது என் வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஆகவே கல்யாணத்திற்குப் போவது என்று முடிவு செய்தோம். (அதாவது நானும் என் வாழ்க்கைத்துணையும் - இப்பவெல்லாம் எதையும் தனியாக முடிவு செய்வது கிடையாது. ஏனென்றால் அப்படி தனியாக எடுத்த முடிவுகள் எல்லாம் அப்பீலில் தோற்றுப்போய் விடுகின்றன)

அடுத்த பிரச்சினை ஒருவர் மட்டும் போனால் போதுமா அல்லது இருவரும் (தம்பதி சமேதராக) போகவேண்டுமா என்பது. எங்க ஊர் வழக்கப் பிரகாரம் கல்யாணப் பெண் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர் இருவரும் தம்பதி சமேதராக வந்து கூப்பிட்டால் நாங்கள் இருவரும் தம்பதி சமேதராகப் போகவேண்டும். ஆம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் ஆம்பிளை மட்டும் போகவேண்டும். பொம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் பொம்பிளை மட்டும் போகவேண்டும். பத்திரிக்கை தபாலில் வந்திருந்தால் தபாலில் வாழ்த்து அனுப்பினால் போதுமானது.

இதுதான் நான் கடைப்பிடிக்கும் கொள்கை. இந்தக் கல்யாணத்திற்கு மணப்பெண்ணின் தாயார் மட்டும்தான் அழைப்பிற்கு வந்திருந்தாள். இதன் பிரகாரம் என் மனைவி மட்டும் கல்யாணத்திற்குப் போனால் போதும். ஆனால் கூடவே என் தம்பியும் தம்பி மனைவியும் வந்து கூப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த சூழ் நிலையில் இருவரும் போவதுதான் மரியாதை. ஆகவே இருவரும் போவது என்று முடிவு செய்தோம்.

அடுத்ததாக மாலை ரிசப்ஷனுக்குப் போவதா அல்லது காலை முகூர்த்தத்திற்குப் போவதா என்பது. கல்யாண மண்டபம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது. மாலை ரிசப்ஷனுக்குப் போனால் திரும்பும்போது இருட்டிவிடும் இருட்டில் கார் ஓட்டுவது சிரமம். சரி காலையில் முகூர்த்தத்திற்குப் போகலாம் என்றால், எல்லா முக்கிய உறவினர்களும் மாலையே வந்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்களைப் பார்க்க முடியாது. கல்யாணத்திற்குப் போவதே இதற்குத்தானே. உறவினர்களைப் பார்த்து நாட்டு நடப்பு (கசமுசாக்கள்) தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் அல்லவா.

அதனால் கஷ்டமாக இருந்தாலும் ரிசப்ஷனுக்கே போய்விடலாம் என்று முடிவு எடுத்தோம். ஏன் ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்தக் காலத்தில் 500 ரூபாய்க்கு குறைந்து ஒரு டிரைவரும் வரமாட்டேன் என்கிறான், இந்தா இருக்கும் (20 கி.மீ) மண்டபத்திற்கு போய் வர 500 ரூபாயா. பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, எல்லாம் நீங்கள் ஓட்டினால் போதும், மெதுவா போய்ட்டு மெதுவா வந்தாப் போதும், அவனுக்கு எதற்கு 500 ரூபாய், இது என் ஊட்டுக்காரம்மா வாதம்,

சரி. முய் வைக்கவேண்டுமா, வேண்டாமா? அடுத்த பிரச்சினை. அவர்கள் நம் வீட்டு விசேஷங்கள் எதுக்கும் ஒரு முய்யும் வைக்கவில்லை. ஆகவே நாமும் சும்மா போய்வந்தால் போதும். இது ஊட்டுக்காரம்மாவின் பைனல் ஆர்டர் நோ அப்பீல்.

சரி, அங்க போய் பந்தியில் சாப்பிடலாமா இல்லை பஃபே யில் சாப்பிடலாமா? இப்பொழுதெல்லாம் பஃபேயில்தான் கூட்டம் அதிகம். தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். நாலு பேரிடம் கிசுகிசு சேகரிக்கலாம். இப்படி பஃபேயில் பல சௌகரியங்கள் உள்ளன. ஆகவே பஃபேயில் சாப்பிடலாம் என்று உத்திரவாகியது.

எத்தனை மணிக்குத் திரும்பலாம்? இது ஒரு கடைசிப் பிரச்சினை. எனக்கு இரவு 9 மணிக்குத் தூங்க வேண்டும். அம்மாவிற்கு பேச ஆள் கிடைத்து விட்டால் நேரம் காலம் கிடையாது. இந்த இரண்டையும் எப்படி சரிக்கட்டுவது? அம்மா கட்சிதான் ஜெயிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படியாக வயதான காலத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போய்வருவது என்பது ஒரு இமாலயப் பிரச்சினையாக இருக்கிறது. அநேகமாக வயதானவர்கள் அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.