திங்கள், 22 செப்டம்பர், 2014

காதல் வங்கி - சிறுகதை விமர்சனம்.

காதல் வங்கி

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

விமர்சனம்:

ஆற்று நீர் சலசலப்பில்லாமல் அமைதியாக ஓடும்போது அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சுகம். மனதிற்கு சாந்தியளிக்கும் ஒரு அனுபவம். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

அதேபோல் கோயிலில் கடவுள் விக்கிரகத்தை ஒரு நல்ல அர்ச்சகர் தேர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தால் அதையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றே தோன்றும்.

சில கதைகள்தான் அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க வல்லவை. காதல் வங்கி அந்த மாதிரியான ஒரு சிறுகதை. எந்த விதமான நெருடலும் இல்லாமல், அபஸ்வரம் அற்ற ஒரு நல்ல சங்கீதத்தைக் கேட்கும் அனுபவத்தைத் தருகிறது.

அழகை அனுபவிப்பது பல வகைப்படும். அழகில் தெய்வீகத்தைப் பார்ப்பது ஒரு வகை. குழந்தையின் கபடமற்ற அழகு ஒரு வகை. பெண்களைத் தெய்வமாகப் பார்ப்பது ஒரு வகை. இப்படி அழகின் பல பரிமாணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் திரு. வை.கோ. அவர்கள்.

கண்டதும் காதல் என்பதை நாசூக்காக கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். இக்காலத்து நவநாரீமணிகளுக்கு மிகவும் வேறுபட்டவளாக கதாநாயகியை சித்தரித்திருப்பது மனதை தொடுகிறது. மிக இயல்பாக அவள் தன் நாயகனுடைய பழக்கவழக்கங்களுக்கு மாற்றிக்கொள்கிறாள்.


ஆனால் நடைமுறையில் இத்தகைய சம்பவங்கள் நடக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாய் மனதில் தங்குகிறது.