திங்கள், 10 நவம்பர், 2014

VGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையின் விமர்சனம்.

ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களும் மகிழ்ச்சியும் வேதனைகளும் கலந்துதான் ஆரம்பித்திருக்கின்றன. அவரவர் விதிப்படி அவர்கள் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறார்கள்.
அந்தக் காலத்து ஸ்டோர் வாழ்க்கை என்பதை இன்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ஆனால் மக்கள் அவைகளில் வசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

அந்த வாழ்க்கை முறையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கதாசிரியர். அந்த வாழ்க்கையிலும் இளம் பருவ ஆசைகள் வரத்தான் செய்யும்.

அப்படி அவர் வாழ்வில் வந்தவர்கள் மூவர். ஆனால் ஒருவருடன்தான் வாழ்க்கைப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் குடும்ப பாரம்பரியம். குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறப்பவனுக்கு சில கடமைகள் இருக்கின்றன. தன் சுகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு போக முடியாது. அவனுக்குப் பின் இருக்கும் தம்பி தங்கைகளின் வாழ்வும் அவன் கையில்தான் இருக்கிறது.

அந்தக்காலத்தில் இந்தப் பொறுப்பை மக்கள் உணர்ந்து நடந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. இது ஒரு வேள்வி என்றே சொல்லலாம். இந்த வேள்வியில் அவ்வப்போது தோன்றும் ஆசாபாசங்கள் எரிந்து போகும்.


அப்படி எரிக்கப்பட்டவைகளில் சில பிற்காலத்தில் வாழ்வில் தலை காட்டலாம். அப்போது அவை எந்த நிலையிலும் இருக்கலாம். இந்த உண்மையை இரண்டு சம்பவங்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இது போன்ற நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. நிஜவாழ்விலும் நடக்கலாம். அப்படியான ஒரு கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டது.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சன் டிவி மகாபாரதம்.



மகாபாரதக் கதையை சிறு வயதிலிருந்து அறிந்திருந்தாலும் இப்போது வரும் டிவி சீரியல்களைப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யத்தைத் தருகிறது.

விஜய் டிவி யில் வந்து கொண்டிருந்த மகாபாரத சீரியல் முடிந்து விட்டது. சன் டிவியில் இன்னும் வந்து கொண்டிருக்கிறது.

நான் டிவி யில் ஒளி பரப்பாகும்போது நேரடியாகப் பார்க்க முடிவதில்லை. யூட்யூப்பில் வருவதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  விஜய் டிவியில் வரும் அனைத்து எபிசோடுகளும் யூட்யூபில் வந்து விட்டன.

ஆனால் சன் டிவியில் வரும் மகாபாரத எபிசோடுகள் 82 வது எபிசோடு வரைக்கும் யூட்யூபில் பிரசுரமாகியது. அதன் பின்னர் நின்று விட்டது. சாம் என்பவர் இதை செய்து வந்திருக்கிறார், காப்பிரைட் பிரச்சினையால் என்னால் தொடர முடியவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்த சன் டிவி மகாபாரத சீரியல் வேறு எங்காவது கிடைக்கிறதா? பதிவுலக நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்.

புதன், 29 அக்டோபர், 2014

அஞ்சலை - சிறுகதை


வைகோ வின் அஞ்சலை கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

இந்தக் கதைக்கு என் விமர்சனம். ஒரு சமாச்சாரம். எனக்கு சிறுகதை எழுதத் தெரியாது. ஒரு செய்தியை விரிவாக எழுதவும் தெரியாது. ஆகவே சுருக்கமான விமர்சனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தக் கதைக்கு பல  உப-சிறுகதைகளை பலரும் எழுதியிருக்கிறார்கள். அவைகளைப் படிக்க இந்தப்  போட்டியில் வெற்றி பெற்ற விமர்சனங்களைப் பார்க்கவும்.

விமர்சனம்.

“அஞ்சலை”

தாய்ப் பாசம் என்பது பல வகைகளில் வெளிப்படும். மனிதர்களிடையே மட்டுமல்ல, விலங்குகளிடையேயும் இந்தப் பாசத்தை காண்கிறோம்.

ஆனால் இந்தப் பாசம் சூழ்நிலையின் அழுத்தத்தால் மாற வேண்டிய அவசியம் உண்டாகிறது. இந்தக் கதையின் கதாநாயகியும் இந்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறாள்.

தன் குழந்தை தன்னிடமே இருக்கவேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம். ஆனால் இதை குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கொடுத்தால் அது நல்ல சூழ்நிலையில் வளருமே என்ற ஆசை இன்னொரு பக்கம்.

இந்த பாசப் போராட்டத்தில் அவள் தன் குழந்தையை தத்துக் கொடுத்து விடலாம் என்கிற முடிவை எடுக்கிறாள். இதைத் தவிர அவளுக்கு தான் இருக்கும் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் போகிறது. இந்த சோக முடிவில் நாமும் நம்மை அறியாமல் கண்ணீர் சிந்துகிறோம்.

இதுவே கதாசிரியரின் வெற்றியாகும்.   

வெள்ளி, 24 அக்டோபர், 2014

அமுதைப் பொழியும் நிலவே !



 இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

“காற்று வாங்கப்போனேன், காதல் வாங்கி வந்தேன்” என்ற சினிமா பாட்டு பாணியில் நம் கதாநாயகர் பஸ் பிரயாணத்தில் ஒரு காதலியைக் கண்டு பிடித்திருக்கிறார். ஆனால் அது ஒரு பகல் கனவாய்ப் போனதுதான் ஒரு சோகம். கனவென்றால் சாதாரணக் கனவா? அப்படியே ஆகாயத்தில் பறக்க வைத்த கனவு.

இருந்தாலும் அந்த நினைவுகள் இனிமையானவைகளே. கனவில் வந்த நிலவின் அழகு, படிக்கும் நம்மையே சொக்கவைக்கிறது. அரைத்த சந்தனம் போல் மேனி. மேனியில் இருந்து சந்தன வாசம் வந்திருக்குமோ. வந்திருக்கலாம்.

பாரதியிலிருந்து இன்றைய கதாசிரியர் வரை கேரள அழகிகள் மேல் அப்படியென்ன மோகமோ தெரியவில்லை. அதுவும் பாலக்காடாம். நானும் பாலக்காட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறேன். என் கண்ணில் அப்படி சந்தன மேனிக்காரிகள் யாரும் கண்ணில் படக் காணோம்.

இப்படி சொர்க்க லோகத்தில் உலா வந்து கொண்டிருந்தவரை பூலோகத்திற்கு இழுத்த அந்த படுபாவி கண்டக்டர் அடுத்த ஜன்மத்தில் நபும்சகனாகத்தான் பிறப்பான்.

அத்தோடு விதி விட்டதா? திரும்பி வரும்போது பக்த்து சீட்டில் ஒரு கர்ண கடூரக் கிழவி. இதுதான் விதியின் விளையாட்டோ?

ஒரு சாதாரண நிகழ்வை ரசனை மிக்க கதையாக மாற்றிய வைகோவும் கேரள கன்னிகளும் நீடூழி வாழ்க.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

பதிவுகளில் கோளாறா இல்லை எனக்குக் கோளாறா, தெரியலையே?



கடந்த நான்கு நாட்களாக பதிவுகளைத் திறந்தால் சில விநாடிகளில் அது கருப்பாக மங்கி விடுகிறது. ஒரு சில பதிவுகள் அப்படியே மங்காமல் இருக்கின்றன.

இந்த கோளாறு எப்படி வருகிறதெனத் தெரியவில்லை.

1. என் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதா?

2. அல்லது என் கண்ணில் வைரஸ் புகுந்து விட்டதா?

எனக்கு மட்டும்தான் இப்படியா? வேறு யாருக்காவது இப்படி இருக்கிறதா?

என்ன கோளாறென்று தெரியாமல் விழிக்கிறேன். யாராவது வழி அல்லது விழி காட்ட முடியுமா?

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்

இளம் வயதில் ஏற்படும் உறவுகள் பல பரிமாணங்களில் ஏற்படும். அறியாப் பருவ சிநேகிதம் கால ஓட்டத்தில் எப்படி பரிணமிக்கும் என்று யூகிக்க முடியாது. சகோதர பாசமாகவோ அல்லது காதலாகவோ மாறும் சாத்தியக் கூறுகள் சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.

இந்தக் கதையில் அவன் அதைக் காதலாக எண்ணுகிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அதை சகோதர பாசமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். இதற்கு காரணம் பெண்களின் மன வளரச்சி ஆண்களை விட துரிதமாக ஏற்பட்டு விடுகிறது. பெண் தன் எதிர் காலத்தை துல்லியமாகத் திட்டமிடுகிறாள். ஆணுக்கு அந்த திறமை வெகு நாட்களுக்குப் பிறகே ஏற்படுகிறது.

இந்த நுணுக்கமான உணர்ச்சிப் போராட்டத்தை வெகு நாசூக்காக கதாசிரியர் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. எந்த விதமான விரசங்களும் இல்லாமல் ஒரு காதல் கதையை சொல்வது மிகவும் சிரமம். திரு வை.கோ. அதை நிறைவாக செய்திருக்கிறார்.

தன் கற்பனைகள் சிதையும்போது கதாநாயகன் அதை மிகவும் நாகரிகமாக எடுத்துக் கொள்கிறான். இந்தக் கதை ஐம்பது வருடங்களுக்கு முன்  இருந்த சமூக சூழ்நிலையில் நடக்கக் கூடிய கதை. இன்று காலம் மாறி விட்டது. கதாநாயகன் கதாநாயகிக்கு தான் வரைந்த அவளுடைய ஓவியத்தை பரிசாக தருவதற்குப் பதில் முகத்தில் ஆசிட் வீசியிருப்பான்.

ஒரு நல்ல எளிமையான கதை. மனதிற்கு இதமாக இருந்தது.


வெள்ளி, 17 அக்டோபர், 2014

நான் என் வாழ்நாளில் இதுவரை சாப்பிடாத இனிப்பு


எனக்கு சிறு வயது முதற்கொண்டே இனிப்பு மேல் அதிகப் பிரியம். நான் ஐந்து வயதாயிருக்கும்போது டிராயர் பாக்கெட்டில் சர்க்கரையை திருடிப் போட்டுக்கொண்டு சிறிது சிறிதாக சாப்பிடுவேன். வெல்லம் கிடைத்தால் இன்னும் அதிக குஷி. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சாப்பிட்டுத்தான் இன்று டயாபெடீஸ் என்னும் நோவை வாங்கி வைத்திருக்கிறேன்.

அதற்காக ஸ்வீட் சாப்பிடுவதை விட முடியுமா, என்ன? நோவு ஒரு பக்கம், ஸ்வீட் சாப்பிடுவது இன்னொரு பக்கம்.

சமீபத்தில் நான் இரண்டு ஸ்வீட்டுகள் (தனித்தனியான விசேஷங்களில்தான்) சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. இது வரை அந்த ஸ்வீட்டுகளை நான் பார்த்ததே இல்லை. சாப்பிட்டதும் இல்லை. (பார்க்காதபோது எப்படி சாப்பிட முடியும்? அது வேறு விஷயம்) அவைகளின் சுவை எழுத்தில் சொல்லி முடியாது. சாப்பிட்டால்தான் அனுபவிக்க முடியும்.

இதில் என்ன கொடுமை என்றால், அந்த ஸ்வீட்டுகளின் பெயர் எனக்குத் தெரியவில்லை. பந்தியில் சாப்பிடும்போது பட்டிக்காட்டான் மாதிரி அதன் பெயரைக் கேட்க முடியுமா என்ன? நாம் அது வரை அந்த ஸவீட்டை பார்த்ததில்லை, சாப்பிட்டதில்லை என்கிற விஷயத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டால் நம் கௌரவம் என்ன ஆகிறது? ஆகவே ஏதோ தினமும் அந்த மாதிரி ஸ்வீட்டுகளைத்தான் வீட்டில் சாப்பிடுவது மாதிரி ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வந்து விட்டேன்.

இப்போது என் வருத்தம் என்னவென்றால் எங்காவது பெரிய ஓட்டலில் யாராவது ஓசியில் விருந்து வைத்தால் இந்த ஸ்வீட்டை எப்படி கேட்பது என்பதுதான்? இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டித்தான் இந்தப் பதிவு. நண்பர்கள் உதவ வேண்டும்.

முதல் ஸ்வீட் ஒருவருடைய சதாபிஷேக விருந்தில் சாப்பிட்டது. அவர் மைசூரைச் சேர்ந்தவர். அந்த விருந்தில் பூரி மாதிரி ஒன்றைப் போட்டு அதன் மேல் ஜீரா சக்கரையைத் தூவினார்கள். ஜீரா சர்க்கரை என்றால் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சாதா சர்க்கரையை நைசாக அரைத்ததுதான் ஜீரா சர்க்கரை.  பிறகு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றினார்கள். இந்தக் கலவையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டால் தேவாம்ருதம் தோற்றது போங்கள்? அவ்வளவு சுவை.

முழுவதும் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னொன்று சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அத்தனை பேருக்கு முன்னால் கேட்க வெட்கமாய் இருந்ததினால் கேட்காமல் வந்து விட்டேன். ஆனாலும் இந்த பாழாய்ப்போன மனசு அந்த ஸ்வீட்டுக்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறது.

அந்த ஸ்வீட்டின் பெயரும் அது தமிழ் நாட்டில் எங்கு கிடைக்கும் என்று யாராவது தெரிவித்தால் நான் என் ஆயுளுக்கும் (என் ஆயுள் இன்னும் கொஞ்ச காலம்தான்) நன்றியுடையவனாக இருப்பேன்.

இரண்டாவது ஸ்வீட் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்த என் மனைவியிடம் கொடுத்தனுப்பிய ஸ்வீட் பேக்கட்டில் இருந்தது. அவர்கள் ஆந்திராக்காரர்கள். இந்த ஸ்வீட் பேக்கட் மேல் ஒரு கடையில் பெயர் இருந்தது. SIRI A Sweet World, Shop No. 13, NTR Stadium Complex, Brindhavan Gardens,Guntur-7.

அந்த ஸ்வீட் ஒரு காகித ரோல் போல இருந்தது. அது காகிதம் தான் என்று நினைத்துக்கொண்டு அதை பிரித்தேன். பெரிய காகிதமாக பிரிந்தது. உள்ளே பிரவுன் கலரில் ஏதோ இருந்தது. தொட்டு சுவைத்துப் பார்த்தேன். இனிப்பாக இருந்தது. இதை ஏன் இவ்வளவு பெரிய காகிதத்தில் சுருட்டி வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தேன். என்னுடைய கிழட்டு மூளையில் ஒரு பொறி தட்டியது. அந்தக் காகிதத்தை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டேன் அது வாயில் கரைந்தது.

ஆஹா, இதுவா விஷயம் என்று புரிந்தது. அதாவது அந்தக் காகிதச்சுருளைப் பிரிக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் போல என்ற உண்மை புரிந்தது. இதை அப்படியே சுருட்டி சாப்பிட்டேன். இந்த ஸ்வீட் முழுவதும் நெய்யோ நெய். கையில் ஒட்டிக்கொண்ட நெய் வாசனை இரண்டு நாள் போகவில்லை. ருசியோ ருசி. அப்படி ஒரு ருசியை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.

அடுத்த நான் இன்னொரு ஸ்வீட் மிச்சம் இருந்தது. முதல் நாள் சாப்பிட்டபோது வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் பங்கு போட்டு கொடுத்ததினால் எனக்கு குறைவாகத்தான் கிடைத்தது. மனதிற்குத் திருப்தி ஏற்படவில்லை. ஆகவே இந்த மிச்சம் இருந்த ஸ்வீட்டை நான் ஒருவனாகவே சாப்பிட்டு முடித்து விட்டேன். நன்றாக இருந்தது. திருப்தி அடைந்தேன்.

இதன் விளைவு ஒன்றே ஒன்றுதான். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பசியே தோன்றவில்லை. இந்த தீபாவளிக்கு குண்டூர் போய் இந்த ஸ்வீட் ஒரு நூறு பீஸ் வாங்கி வரலாமா என்று யோசித்தேன். வீட்டிற்குத் தெரியாமல் அவ்வளவு தூரம் சென்று வருவது சாத்தியமில்லையாதலால் வீட்டில் பர்மிஷன் கேட்டேன். ஒரு ஸ்வீட் சாப்பிட்டே இரண்டு நாள் வயிற்று மந்தத்தில் இருந்தீர்கள். நூறு ஸ்வீட் வாங்கி வந்து எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் போகவா என்று என் முயற்சியை தடுத்து விட்டார்கள்.

இது என்ன ஸ்வீட்? இது எங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். தெரிந்தவர்கள் உதவ வேண்டும்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.



வெள்ளி, 10 அக்டோபர், 2014

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மனித இயல்புகளை துல்லியமாக படம் பிடித்துக்காட்டும் இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டுங்கள்.


விமர்சனம்

மனித மனத்தின் அவலங்களை போட்டோ பிடித்தது போல் காட்டியிருக்கும் இக்கதை எல்லோருடைய மனதிலும் நீண்ட நாள் இடம் பிடித்துக் கொள்ளும்.

வெளித்தோற்றங்கள் ஒருவரின் குணங்களை பிரதிபலிக்கிறது என்கிற ஆழ்ந்த நம்பிக்கையில் நாம் வாழ்கிறோம். புறத்தோற்றத்தைத் தாண்டி உள் மனதின் அழகைக் காண நம் அனுபவ அறிவு நம்மை அனுமதிப்பதில்லை. அதுவே மனிதனின் பெரிய குறைபாடு.

சிறு குழந்தைகளுக்கு அத்தகைய குணங்கள் இன்னும் வரவில்லை என்பதை மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. அவர்களும் பெரியவர்களானதும் இந்த கபடமற்ற தன்மை மறைந்து போகுமோ என்னமோ?

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் ரயில் பயணம் அந்தக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை தத்ரூபமாக பட்டாபி-பங்கஜம் தம்பதியினர் மூலமாக அனுபவிக்கிறோம். நீண்ட தூரப் பயணத்தில் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை பட்டாபி பாதுகாக்கும் விதம் எல்லோரும் செய்யும் முறையே.

ஆனால் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பொருட்களை எண்ணி கொண்டு போனாலும் தவறு ஏற்படுவது உண்டு என்பதை காண்கிறோம். ஆனால் அந்தத் தவறு சக மனிதரின் மேல் ஏற்பட்ட வெறுப்பினால் விளைந்தது என்பதை அழகாக கதாசிரியர் சுட்டிக் காண்பிக்கிறார்.

அந்த தவறு அவர்கள் வெறுத்த ஒருவராலேயே நிவர்த்திக்கப்படும்போது அவர்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியை வார்த்தைகளால் அளவிட முடியாது. அதற்கு பிராயச்சித்தமாக அவர்கள் செய்யும் தானம் மனதில் வெறுப்பைத்தான் உண்டு பண்ணுகிறது. மனித மனம் நொடியில் எவ்வாறு தன்னை மாற்றிக்கொள்கிறது என்பதை நம்மால் எளிதாக ஜீரணம் செய்ய முடியவில்லை.

இந்தக் கதையை பல நாட்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். மனதை விட்டு அகலவில்லை. என்றும் சிரஞ்சீவியாக வாழும் கதைகளில் இதுவும் ஒன்று.

பழனி.கந்தசாமி

http://swamysmusings.blogspot.com

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பத்துமலை முருகன்

தமிழ் இளங்கோவின் இந்தப் பதிவைப் படித்த பின் இந்தப் படங்களைப் பார்க்கவும்.


மலேசியாவில் யாரும் கோவிலில் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்வதில்லை. பத்துமலை முரிகன் கோவிலில் எடுத்த படம்.

                                         .

அதே போல் சிங்கப்பூரிலும் மாரியம்மன் கோவிலில் எடுத்த படம். அங்கும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை. நான்தான் பயந்து கொண்டே போட்டோ எடுத்தேன்.


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காதலாவது கத்திரிக்காயாவது

விமர்சனம்.


காதலாவது கத்திரிக்காயாவது என்ற வைகோவின் சிறுகதைக்கு என் சிறு விமர்சனம். இதைப் படித்த பின் இந்த சிறுகதையைப் படிக்கத் தோன்றினால் இங்கே செல்லவும்.

காதலாவது கத்திரிக்காயாவது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதன் பொருள் என்னவென்றால் சமூகத்தில் வாழும் சாதாரண மனிதர்களுக்கு காதல் என்பது ஒரு எட்டாக்கனி அல்லது காதல் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்பதேயாகும்.

ஆனாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் இயற்கையை ஒட்டிய உணர்வுகள் வரும் என்பதை அன்றாட வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளுக்கிடையே பின்னியிருக்கும் விதம் அருமை. ஒரு ஆதரவற்ற இளைஞனுக்கும் இளைஞிக்கும் தற்செயலாக ஏற்படும் சந்திப்பு, பரஸ்பர நட்பாக மாறி இறுதியில் காதலாக உருவெடுக்கும் ரசாயன மாற்றத்தை கதாசிரியர் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.

கதையில் குறிப்பிடும் நிகழ்வுகள் சாதாரணமாக யாருக்கும் ஏற்படக்கூடியவை. அவைகளைப் பின்னி ஒரு காதல் கதையை புனைந்த வை.கோ. அவர்களை பாராட்டவேண்டும். கதையின் ஓட்டம் ரோல்ஸ்ராய் காரில் பயணம் செய்வது போல் அவ்வளவு சுகமாக இருக்கிறது. இது அவரின் ஒரு தனித்துவம்.


பரமு காமாட்சி ஜோடியின் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்று கதையைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயற்கையாகவே தோன்றும். 

திங்கள், 22 செப்டம்பர், 2014

காதல் வங்கி - சிறுகதை விமர்சனம்.

காதல் வங்கி

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

விமர்சனம்:

ஆற்று நீர் சலசலப்பில்லாமல் அமைதியாக ஓடும்போது அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சுகம். மனதிற்கு சாந்தியளிக்கும் ஒரு அனுபவம். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

அதேபோல் கோயிலில் கடவுள் விக்கிரகத்தை ஒரு நல்ல அர்ச்சகர் தேர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தால் அதையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றே தோன்றும்.

சில கதைகள்தான் அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க வல்லவை. காதல் வங்கி அந்த மாதிரியான ஒரு சிறுகதை. எந்த விதமான நெருடலும் இல்லாமல், அபஸ்வரம் அற்ற ஒரு நல்ல சங்கீதத்தைக் கேட்கும் அனுபவத்தைத் தருகிறது.

அழகை அனுபவிப்பது பல வகைப்படும். அழகில் தெய்வீகத்தைப் பார்ப்பது ஒரு வகை. குழந்தையின் கபடமற்ற அழகு ஒரு வகை. பெண்களைத் தெய்வமாகப் பார்ப்பது ஒரு வகை. இப்படி அழகின் பல பரிமாணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் திரு. வை.கோ. அவர்கள்.

கண்டதும் காதல் என்பதை நாசூக்காக கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். இக்காலத்து நவநாரீமணிகளுக்கு மிகவும் வேறுபட்டவளாக கதாநாயகியை சித்தரித்திருப்பது மனதை தொடுகிறது. மிக இயல்பாக அவள் தன் நாயகனுடைய பழக்கவழக்கங்களுக்கு மாற்றிக்கொள்கிறாள்.


ஆனால் நடைமுறையில் இத்தகைய சம்பவங்கள் நடக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாய் மனதில் தங்குகிறது.

சனி, 13 செப்டம்பர், 2014

இன்னுமொரு விமர்சனம்




இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.(சுடிதார் வாங்கப் போறேன்)

சிறுகதைகளுக்கு ஒரு சம்பவத்தை அப்படியே கண்முன் காட்சியாகக் கொண்டுவரும் வல்லமை உண்டு. ஆனால் இந்த திறமை அந்த கதையின் ஆசிரியரின் சாமர்த்தியம். அப்படிப்பட்டவர்களே சிறுகதை மன்னன் என்று போற்றப்படுகிறார்கள். திரு வை.கோ. அவர்களிடம் இந்தத் திறமை நன்றாக பளிச்சிடுகிறது.

கல்கி, தேவன், கி.வா.ஜ., அகிலன், மு.வ., புதிமைப்பித்தன் ஆகியோர் சிறுகதைகளைப் படித்து வளர்ந்தவன் நான். ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிக்கைகளில் அவர்களது
கதைகள் வெளிவரும். தவிர அந்தப் பத்திரிக்கைகளின் தீபாவளி மலர்களிலும் அவர்களது சிறப்புக் கதைகள் வெளியாகும். இது எல்லாம் ஒரு காலம்.

அப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் இன்றைய இதழ்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒரு துணுக்கைப் போட்டுவிட்டு இதுதான் ஒரு பக்கக்கதை என்கிறார்கள். சிறுகதை எழுதும் ஆசிரியர்களே இல்லையோ என்று மனது வெறுத்துப் போய் இருக்கும்போது பதிவுலகத்திலே திரு வை.கோ. அவர்களின் கைகளைப் படித்து வெகுவாக இன்புற்றவன் தான்.

இந்த சுடிதார் வாங்கும் கதையில் ஒரு மூத்த குடும்பஸ்தனின் மன எண்ணங்களை அப்படியே தத்ரூபமாக காட்டியிருக்கிறார். இவர் வாங்கி வரும் சேலைகளையே அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் மனைவிக்கு சுடிதார் போட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததுதான் வயதான குடும்பஸ்தனுக்கு வரக்கூடாத ஆசை. ஆனாலும் வருவதை எப்படி தடுக்க முடியும்? இதை வெகு நாசூக்காக கோடி காட்டியிருப்பது எல்லோருக்கும் பொருந்தும்.

வரப்போகும் மருமகளுக்கு சுடிதார் வாங்கிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கவேண்டுமே என்ற ஆதங்கத்தை நுணுக்கமாக விவரித்திருக்கிறார். தெருவில் போகும் பெண்களின் சுடிதார் பேஷன்களைப் பார்த்து மதி மயங்குவது இயற்கையான ஒரு உணர்ச்சி. நாம் அதிக விலை கொடுத்து வாங்கின பொருளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமே என்ற மனதின் வேட்கை அந்த வார்த்தைகளில் புலப்படுகிறது.

ஜவுளிக்கடைகளில் ஜவுளிகளோடு அந்த விற்பனைப் பெண்களும் விற்பனைப் பொருளானால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை எல்லா இளைஞர்களுக்கும் இனிப்பாக இருக்கும். (பெரிசுகளுக்கும் கூடத்தான்)

கடைசியில் தான் வாங்கின சுடிதாருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அறியும்போது தான் பட்ட கஷ்டங்களெல்லாம் மறந்து ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே, அதற்காகத்தான் திரும்பத் திரும்ப மனிதர்கள் இந்தக் கஷ்டங்களை வலுவில் சுமக்கிறார்கள். இந்த உண்மையை மறைமுகமாக கதாசிரியர் இக்கதையின் மூலம் வலுவாக சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நல்ல சிறுகதை படித்த மனத்திருப்தி கொடுத்த ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நான் பெற்ற விருது

திருமதி ரஞ்சனி நாராயணனுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றி. இவர் ஒரு பிரபல பதிவர். பல வருடங்களாக பிளாக்கில் எழுதி வருகிறார். பதிவர் சந்திப்புகளில் நேரிலும் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்து என்னை மிகவும் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்.

                              versatile-blogger
இந்த விருது ஒரு பெரிய விருது என்று கருதுகின்றேன்.  இந்த விருதை எனக்களித்தற்காக அவருக்கு மீண்டும் நன்றி.

உலகில் எதுவும், தாயன்பு உட்பட, இலவசம் அல்ல என்று எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அப்படியே இந்த விருதுக்கும் சில விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

1. இந்த விருதினை என்னுடைய பிளாக்கில் போடவேண்டும். இது ஒரு ஜுஜுபி வேலை. காப்பி, பேஸ்ட் வேலை. அதைத்தான் தினமும் செய்து பழகி விட்டோமே. அதனால் அதை சுலபமாகச் செய்து விட்டேன்.

2. விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லவேண்டும். இதுவும் மிகவும் சுலபம்தான். அதையும் செய்து விட்டேன்.

3. என்னைப்பற்றி சில விஷயங்கள் கூற வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை. நான் இப்போதெல்லாம் எந்த கடின வேலையையும் செய்வதில்லை. ஆகவே இந்த வேலையைத் தவிர்க்கிறேன். தவிர தற்பெருமை குற்றம் என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. நான் ஒரு நன்னூல்தாசன்.

4. இந்த விருதை இன்னும் சில பேர்களுக்கு அளிக்கவேண்டும். இதுதான் இந்த விருதின் மிகக் கடுமையான நிபந்தனை. இந்தக் காரணத்திற்காகவே இந்த விருதினையே மறுக்கலாமா என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் அன்புடன் ஒருவர் கொடுக்கும் எதையும் நிராகரிக்கலாகாது என்னும் கருத்து காரணமாக இந்த விருதை ஏற்றுக்கொண்டேன்.

இப்படி நான் சொல்வதற்கு காரணம் இப்படியே ஒவ்வொருவரும்  பலருக்கு இந்த விருதைக் கொடுக்க முற்பட்டால் கொஞ்ச நாளில் இந்த விருதை வாங்குவதற்கு பதிவர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். இந்தக் காரணத்தை முன்னிட்டு நான் இந்த விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை.

ஆக மொத்தம் நான் பதிவர்களிலேயே வித்தியாசமானவன் என்பதை உணர்த்தி விட்டேன். அந்த வகையில் இந்த விருது எனக்கு மிகவும் பொருத்தமே.

திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.