ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஜாடை போடுவது

                                        Image result for gossip

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த ஜாடை பேசுவது பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். குறிப்பாக பெண்கள் இதில் வல்லவர்கள். யாரையாவது எதற்காவது  குத்திக்காட்ட வேண்டுமென்றால் நேரடியாகச் சொல்லமாட்டார்கள். ஜாடை போடுவார்கள்.

உதாரணத்திற்கு யாராவது கொஞ்சம் மற்றவர்களை விட தாராளமாக நடந்து கொண்டால், " மயிருள்ள சீமாட்டி, எப்படி வேண்டுமானாலும் கொண்டை முடிப்பாள்" என்பார்கள். அவள் தாராளத்தை நல்ல மனதுடன் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இப்படி ஜாடை பேசுவதில் உள்ள சௌகரியம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட நபர் இப்படிப் பேசினவர்களை நேருக்கு நேராகப் பார்த்து "என்னை ஏன் இப்படிப் பேசினீர்கள்" என்று கேட்டால், உடனே அவர்கள் தங்கள் பேச்சை அப்படியே பொரட்டி விடுவார்கள்.

"நான் உன்னையா அப்படிப் பேசினேன்? எங்க ஊர்ல ஒருத்தியைப் பற்றியல்லவா பேசினேன்" என்று தடாலடியாக தங்கள் பேச்சை அப்படியே மாற்றி விடுவார்கள். நான் டவுனில் பிறந்து வளர்ந்தவனாதலால் எனக்கு இந்த ஜாடைப் பேச்சுக்கள் அவ்வளவாக பரிச்சயம் இல்லை. இருந்தாலும் யாராவது ஜாடை பேசினால் புரிந்து கொள்வேன்.

இப்படித்தான் அன்று என் நண்பன் ஒருவன் "வெயில் காலம் வந்தால் சிலருக்கு ஸ்க்ரூ லூசாகி விடுகிறது" என்றான். நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இருக்கிறோம். என்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று புரிகிறது. ஆனால் உடனடியாக அதற்கேற்ற பதில் என்னால் சொல்ல முடியவில்லை. அதனால் பேசாமல் இருந்து விட்டேன்.

இது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. இதை எப்படி பழி தீர்ப்பது என்று யோசித்ததில் ஒரு வழி புலனாகியது. அடுத்த தடவை அவனைச் சந்தித்தபோது ஒரு கதை விட்டேன்.

நான் சொன்ன கதையாவது.

எங்க வீட்டிற்கு ஒரு வயதான சாமியார் வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்டு அருகில் அமரச்சொன்னார். என் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, உங்களுக்கு ஒரு ஸ்க்ரூ லூசாக இருக்கிறதே என்று சொன்னார். நான் கொஞ்ச நாளைக்கு முன்பு என் நண்பன் ஒருவனும் இதே மாதிரித்தான் சொன்னான் என்றேன். அவர் அந்த நண்பன் யார் என்று விபரங்கள் கேட்டு விட்டு இனிமேல் அந்த நண்பனைப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள் என்று சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் அந்த நண்பனுக்கு முகம் வெளுத்து விட்டது. என்னைப் பார்த்து அந்த சாமியார் சொன்னபடியே செய்யுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அவனுடைய நட்பு முறிந்து விட்டது என்றுதான் கொள்ளவேண்டும்.

உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

என் அந்தப்புரத்து ராணிகள்.

                                          Image result for அரண்மனைகள்
என்னுடய அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகள் கூட்டம் பெருகிப் போச்சு. இட நெருக்கடி ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு ராணியை அடுத்த நாட்டு இளவரசனுக்கு தானம் கொடுத்தேன். இப்போ ஐந்தே ஐந்து ராணிகளுடன் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறேன்.

அவர்கள் யார் யார், அவர்களால் எப்படி என் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் இந்த நாட்டு பட்டத்து ராணி.


சிம்மாசனத்தில் எப்படி அமர்ந்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?  இவர்கள் ஆலோசனைப்படி நான் நடந்து கொண்டிருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இப்படி என்று கொஞ்சம் டிராக் மாறினாலும் வினை வந்து விடும். நான் மூளையுள்ள ராஜாவல்லவா? வம்பு வழக்கிற்கெல்லாம் போக மாட்டேன்.

அடுத்த இளைய ராணி.


இந்த ராணி அரன்மணைக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அரண்மனையின் இட நெருக்கடியைப் பாருங்கள். ரிவர்சில் கொண்டு வந்து சுவற்றோடு ஒட்டி நிறுத்தினாலும் ஒண்ணே முக்கால் அடி இடம்தான் மீதம் இருக்கும். இதைத்தான் அரண்மனைக்கு வருகிறவர்கள் உபயோகிக்க வேண்டும். ரதத்தைக்கொண்டு வந்து நிறுத்தின பிறகு, ரதத்தை விட்டு இறங்க நான் ஒரு சர்க்கஸ் செய்யவேண்டும். 

டிரைவர் சைடு கதவைத் திறக்க முடியாது. ஏனென்றால் அது சுவற்றை ஒட்டி இருக்கிறது. அதனால் ரதத்தை நிறுத்திய பிறகு, கியர் பாக்சைத் தாண்டி இடது புறம் வந்து பாசன்ஜர் சைடு கதவைத் திறந்து அதன் வழியாகத்தான் வெளியில் வரவேண்டும். ஏன் இந்தக் கஷ்டம், ரதத்தை நேராகக் கொண்டு வந்து நிறுத்தி விட்டால் சௌகரியமாக டிரைவர் சைடு கதவைத் திறந்து வெளியில் வரலாமே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

நல்ல ரத ஓட்டிகளுக்குத் தெரியும். ரிவர்சில் வரும்போதுதான் சுவற்றை ஒட்டினாற்போல் நிறுத்த முடியும். பார்வேர்டில் வந்தால் சுவற்றோடு ஒட்டி நிறுத்த முடியாது. இட நெருக்கடியால் சுவற்றோடு ஒட்டி நிறுத்தினால்தான் மீதி இருக்கும் இடத்தில் நடக்க முடியும்.

பழைய ரதமே நன்றாகத்தானே இருந்தது. இப்போது இவ்வளவு செலவு செய்து புது ரதம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்று பட்டத்து ராணி முணுமுணுத்தார்கள். அடியே ராணி, ராஜா இப்படி ஏதாவது செய்து கொண்டிருந்தால்தான் ராஜா இன்னும் நல்ல செல்வாக்குடன் இருக்கிறார் என்று குடிபடைகள் நம்புவார்கள். இல்லாவிட்டால் ராஜா ஓய்ந்து விட்டார் என்று பேசுவார்கள், அதனால் இது மாதிரி ஏதாவது ஸ்டன்ட் அவ்வப்போது செய்வது அவசியம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

அடுத்து மூன்று ராணிகள்.

1. கம்ப்யூட்டர்.


2. கேலக்சி டேஃப்.


3. ஸ்மார்ட் போன்.



இந்த மூன்று ராணிகளும் ஒரே ஜாதியானதால் இவர்களுக்குள் அடிக்கடி போட்டி வந்து விடுகின்றது. நீ பெரியவளா நான் பெரியவளா என்ற ஈகோ பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் கம்ப்யூட்டரிலிருந்துதான் மற்ற இருவரும் "வை-பை" சிக்னல்கள் பெற வேண்டும். சமீபத்தில் நடந்த லடாய் பற்றி அறிந்திருப்பீர்கள். 

இப்போதைக்கு இந்த ராணிகளை ஒரே மாதிரி சிந்திக்க வைப்பதில்தான் என் நேரம் முழுவதும் செலவாகிறது. எப்படியும் இவர்களை வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என்பதில் சந்தேகம் இல்லை.

அரண்மனையில் இட நெருக்கடி காரணமாக இனி மேல் புதிய ராணிகளை சேர்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

எங்க வீட்டுப் பிரளயம் ஒருவாறாக முடிவு பெற்று, இன்று கனி காணும் நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது.

காண்க, எங்கள் வீட்டு கனிகளை.






எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Image result for தமிழ் புத்தாண்டு 2015

திங்கள், 13 ஏப்ரல், 2015

தயிர் சாதம் செய்வது எப்படி?

                             
                                          Image result for curd rice

தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது மிக மிகத் தவறான கருத்தாகும். நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்ல நைஸ் பச்சரிசி அல்லது புழுங்கரிசி, அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும். புழுங்கரிசி பழைய அரிசியாக இருந்தால் அதிகம் தண்ணீரும் நேரமும் வேண்டும். புதிய அரிசியாக இருந்தால் தண்ணீர் குறைவாகவும் சீக்கிரமாகவும் வெந்து விடும்.

அரை லிட்டர் அரிசியை எடுத்து ஊறவைத்து களைந்து குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். சாதாரணமாக சாப்பாடு செய்யும் அளவிற்கு மேல் ஒரு அரை டம்ளர் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும். சாதம் நன்றாகக் குழையவேண்டும். அதற்காக ஓரிரண்டு விசில் அதிகமாக விடவும். பிறகு குக்கரை இறக்கி ஆற விடவும்.

ஓரளவு ஆறினதும் குக்கர் வெய்ட்டை எடுத்து விட்டு மூடியைத் திறக்கவும்.
சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும். இப்போது ஒரு பருப்பு மத்தினால் சாதத்தை நன்கு மசிக்கவும். கொஞ்சம் வெண்ணையையும் போட்டுக்கொள்ளலாம். சாதம் எவ்வளவு குழைவாக ஆகிறதோ அந்த அளவிற்கு மசிக்கவும்.

கடைசியாக மசிக்கு முன் தேவையான பொடி உப்பைச் சேர்த்து மசிக்கவும். இப்போது சாதம் கை பொறுக்கும் அளவில் சூடாக இருக்கவேண்டும். இப்போது நன்கு காய்ச்சி ஓரளவிற்கு ஆறின ஒரு லிட்டர் பாலை இந்த மசித்த சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது சாதம் நன்கு இளகி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் பாலை ஊற்றவும்.

ஆச்சா, இப்போது ஒரு ஸ்பூன் தயிரை இதனுள் ஊற்றி கலக்கவும். அப்படியே ஒரு தட்டினால் மூடி வைக்கவும். ஒரு மூன்று மணி நேரம் கழித்து பாத்தாரத்தைத் திறந்து வைக்கவும். ஒரு சிறு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு போட்டு பொரிய விடவும். சூடவே இரண்டு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து வாணலியில் போட்டு வதக்கவும். கூட சிறிது பெருங்காயம் சேர்த்து, எல்லாவற்றையும் சாதத்திற்குள் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், விதையில்லா திராக்ஷைப் பழம், மாதுளை முத்துகள் ஆகியவைகளையும் சாதத்தினுள் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.

இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் தயிர் சாதம் ரெடி. நல்ல ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப்  போதும். சாதாரண ஆட்களாக இருந்தால் ஆறு பேர் சாப்பிடலாம்.

பருப்பு மத்து என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக-

                                         Image result for மத்து

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நான் படித்துக் கிழித்தவை



தாங்கள் எஸ்.எஸ்.எல்.சி முடித்துள்ளீர்கள் என்று சத்தியமாக நம்புகிறேன்....:)

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் நான் SSLC முடித்துள்ளேன் என்பதை சத்தியமாக நம்புகிறார்களாம். அப்படி என்றால் நான் மற்ற படிப்புகளை முடித்தது பற்றி இப்படி சத்தியம் செய்ய முடியாது என்று அர்த்தம். அவர்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது ஒரு பதிவரின் கடமையல்லவா?

நான் SSLC முடித்தவுடன் இன்டர்மீடியட் படித்தேன். இரண்டு வருடம். கோவை அரசு கலைக்கல்லூரியில் 1951-53 ம் வருடங்கள். திரு.நமச்சிவாயம் அவர்கள் பிரின்சிபல். நான் பதிப்பதற்கு வெகு காலம் முன்பு இந்தப் படிப்பு முடித்தவர்களை Fellow of Arts (FA) என்று அழைப்பார்களாம். இங்கு சேர்வதற்கு கம்யூனிடி சர்ட்டிபிகேட் வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். அதற்காக வாங்கின சர்ட்டிபிகேட்.


என்னுடைய இன்டர்மீடியட் பாஸ் சர்டிபிகேட்.


அடுத்து கோவை விவசாயக் கல்லூரியில் மூன்று வருடம் (1953-56) படித்து B.Sc.(Ag.) பட்டம் மெட்ராஸ் சர்வ கலாசாலையில் வாங்கினேன். 


இந்தப் பட்டம் பிரபல துணைவேந்தர் டாக்டர் ஏ.லக்ஷ்மணசாமி முதலியார் கையெழுத்துப் போட்டதாக்கும்.

அடுத்து வேலையில் சேர்ந்து மூன்று வருடம் சர்வீஸ் போட்டபின் M.Sc.(Ag.)  பட்டம் 1961ல் மண்வளத்துறையில் வாங்கினேன். இதுவும் மெட்ராஸ் யூனிவர்சிடி பட்டம்தான். 


பிறகு வெகு நாள் கழித்து வேலையில் இருந்து கொண்டே ஆராய்ச்சிகள் செய்து தீசிஸ் எழுதி அமெரிக்காவிற்கு மூன்று எக்சாமினர்களுக்கு அனுப்பி, அவர்கள் ஒப்புதல் கொடுத்து Ph.D. பட்டம் 1976 ல் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் வாங்கினேன். டாக்டர் ஜி. ரங்கசாமி அவர்கள் துணைவேந்தர்.


பிறகு வேலையில் இருக்கும்போது மூன்று உள்நாட்டுப் பயிற்சிகளுக்கும் ஒரு வெளிநாட்டுப் பயிற்சிக்கும் சென்றிருக்கிறேன்.

முதல் பயிற்சி 
Soil Salinity Research Institute, Karnal, Hariyana State.

களர் மண்ணின் தன்மைகளைப் பற்றி ஒரு மாதம் பயிற்சி.


இரண்டாவது பயிற்சி.
கோவிந்த் வல்லப் பந்த் விவசாயப் பல்கலைக்கழகத்தில் மண்ணின் பௌதிகக் குணங்கள் பற்றி ஒரு மாதம் பயிற்சி.


மூன்றாவது பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் கதிர் வீச்சுகளின் காப்பு முறைகளைப் பற்றி பதினைந்து நாள் பயிற்சி.



பிலிப்பைன்சில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒன்றரை மாதம் நெல் பாசனம் பற்றிப் பயிற்சி.


அங்கேயே நடந்த இன்னொரு பயிற்சி.


இந்த சர்ட்டிபிகேட்டில் பிரபல சர்வதேச வேளாண் விஞ்ஞானி டாக்டர் M.S. சுவாமிநாதன் அவர்கள் கையெழுத்தைப் பாருங்கள்.

அதே ஆராய்ச்சி நிலையத்திற்கு மூன்று வருடம் கழித்து ஒரு சர்வதேச கருத்தரங்குல் கலந்து கொண்டபோது எடுத்த போட்டோ. உட்கார்ந்திருக்கும் வரிசையில் வலது கோடியில் இருப்பதுதான் அடியேன்.




தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள் என்று நன்னூலில் குறிப்பிட்ட ஒரு இடம் - தன்னைப் பற்றி அறியாதவர்களிடத்தில் தன் பெருமைகளைச் சொல்லிக்கொள்வது குற்றமல்ல. அந்த இலக்கணப்படி நான் செய்திருக்கிறேன். 

சனி, 11 ஏப்ரல், 2015

என் வண்டவாளம் என்னும் தண்டவாளம்



"அப்பப்பா என்ன வெய்யில்" என்கிற போன பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம். என்னுடைய SSLC சர்டிபிகேட்டைப் பார்க்க எத்தனை மக்களுக்கு எத்தனை ஆர்வம். அதைத் தீர்க்கவில்லை என்றால் நான் பதிவராக இருப்பதில் அர்த்தமே இல்லை.





  • // உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?//

    இவ்வளவு அழகாக பதிவுகள் போடுபவர், வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியராக குப்பை கொட்டினவர், தனது அறையை இவ்வளவு அழகாக (மனைவியின் தொந்திரவு தாங்காமல்தான் என்றாலும் கூட) வைத்திருப்பவர், என்பதை நெருங்கும் வயதிலும் தனது அந்தப்புரத்துக்கு புதுப்புது ராணிகளை சேர்த்துக்கொண்டிருப்பவர், தன்னை யாராவது சீண்டினால் ஆக்ரோஷமாக பதிலளிப்பவர், எல்லாவற்றுக்கும் மேலாக "வண்டவாளம்" என்று கிண்டல் செய்யும் பின்னூட்டங்களையும் போடுபவர் - இவ்வளவும் செய்பவர் கண்டிப்பாக SSLC இல் நல்ல மதிப்பெண்தான் பெற்றிருப்பார் என்பது எனது யூகம்.

    சேலம் குரு
    நீக்கு
  • இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்கே, நான் SSLC படித்தேனா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஒரு நாள் டைம் கொடுங்க, வீட்டையே பொரட்டி அந்த SSLC பொஸ்தகத்தைக் கண்டுபிடிச்சு போட்டோ எடுத்து ஒரு பதிவு போடாட்டி என் பேரை மாத்தி வச்சுக்கறேன்.

  • நான் SSLC படித்த வருடம் 1950-51. படித்த பள்ளி - கோயமுத்தூர் ஆர். எஸ். புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி. அப்பொழுது SSLC படிப்பு மொத்தம் 11 வருடம். SSLC பரீட்சையில் மொத்தம் 5 பாடங்கள். பாடத்திற்கு 100 மார்க்குகள் வீதம் மொத்தம் 500 மார்க்குகள். அந்தக் காலத்தில் பொதுவாக 40 லிருந்து 60 மார்க் வரைதான் போடுவார்கள். சென்டம் என்பதெல்லாம் அந்தக்காலத்தில் கேள்விப்பட்டதே இல்லை. கணக்குப் பாடத்தில் மட்டும் கொஞ்சம் அதிகம் மார்க் போடுவார்கள்.

    என் மார்க்குகளை கவனித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

    இந்தப் படங்களைப் பாருங்க

    1. SSLC புஸ்தகத்தின் அட்டை.


    2. SSLC புஸ்தகத்தில் அந்தக்காலத்தில் தகப்பனார் கையெழுத்துடன் ஒட்டப்படும் பிறந்த தேதிக்கான சர்ட்டிபிகேட். உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் அந்தக்காலத்தில் அத்தாட்சி.


    இதில் உள்ள என் தகப்பனாரின் கையெழுத்தைப் பாருங்கள். இந்தக் கையெழுத்தை அந்தக் காலத்தில் நான் சர்வ சாதாரணமாகப் போடுவேன். பின்னே ஸ்கூல் புராக்ரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவிடமா கையெழுத்து  வாங்க முடியும்? அப்பாவிடம் நேரில் நின்று பேசினதே இல்லை. அப்புறம் எங்க கையெழுத்து வாங்கறது?

    3. SSLC முதல் பக்கம்


    எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் இ.வி. சிங்காரவேலு அவர்களின் கையெழுத்தைப் பாருங்கள். கட்டைப் பேனாவினால் போட்டது.

    4. ஸ்கூல் பரீட்சைகளில் என் மார்க்குகள்.


    எல்லா மார்க்குகளும் 40 முதல் 50 க்குள்தான்.

    5. ஹைஸ்கூல் வருடங்களில் என்னுடைய உயரம் மற்றும் எடை. சரியாக கண்டு பிடிப்பவர்களின் கண் கூர்மையாக இருக்கிறதென்று சர்டிபிகேட் கொடுக்கிறேன்.




    6. ஆஹா, என்னுடைய தண்டவாளம் (வண்டவாளம்)




                            1. தமிழ்
                            2. ஆங்கிலம்
                            3.  கணக்கு
                            4.  பொது விஞ்ஞானம்
                            5.  சமூகப் பாடங்கள்

    மொத்த மார்க்குகள்  324/500. =  65 %

    கடைசியில் இருப்பது பிரசிடென்சி ஏவரேஜ். என் மார்க்குகள் அனைத்தும் இதைவிட அதிகமாக இருப்பதைக் கவனிக்கவும்.

    நான் SSLC என்பதை இப்பொழுதாவது நம்புகிறீர்களா? இல்லை என் ஹெட்மாஸ்டர் காலம் சென்ற திரு. சிங்காரவேலு முதலியாரை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வரவா?

                                                  Image result for RS Puram Municipal High School

    இல்லை, என் வகுப்புத் தோழர் காலம் சென்ற திரு. C.T. தண்டபாணி M.P. அவர்களைக் கூட்டிக்கொண்டு வரவா?

    வெள்ளி, 10 ஏப்ரல், 2015

    அப்பப்பா, என்ன வெய்யில்?

                                      Image result for hot sun

    நானும் ஒரு காலத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். சந்தேகம் வேண்டாம். என் S.S.L.C. புத்தகத்தை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். சந்தேகப்படுபவர்கள் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்.

    அப்போதெல்லாம் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் பாதிக்குள் முடிந்து விடும். மீதி பாதி ஏப்ரலும் மே முழுவதும் கோடை விடுமுறை. ஒரு சில தினங்கள் பாட்டி ஊருக்குப் போய் வந்த பின் சொந்த ஊரில்தான் வாசம். பாட்டியின் ஊர் ஒன்றும் அயல்நாட்டில் இல்லை. என் சொந்த வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தில்தான் இருந்தது. என் உறவினர்கள் அனைவரும் ஒரு ஐந்து மைல் சுற்றளவிற்குள்தான் இருந்தார்கள்.

    வீட்டில் இருக்கும்போது உடன் படிக்கும் தோழர்களுடன் நாள் முழுவதும் ஊர் சுற்றுவோம். பகல் 12 மணிக்கு வீதிகளில் சுற்றிக்கொண்டு இருப்போம். அப்போது பெரிதாக வெய்யில் அடித்ததாக நினைவு இல்லை. அல்லது அந்த வயதில் அந்த வெய்யில் எங்களுக்கு உறைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

    அப்போதெல்லாம் கோவையில் எப்போதும் மேகமூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காற்றும் சிலுசிலுவென்று அடித்துக் கொண்டே இருக்கும். இதனால் நாங்கள் வெய்யிலை உணர்ந்ததே இல்லை. ஏழைகளின் ஊட்டி என்று வெள்ளைக்காரன் கோவைக்குப் பெயர் வைத்திருந்தான்.

    இப்போது கோவையில் ஏப்ரல் மாதத்திலேயே வெய்யில் மிகக் கடுமையாக இருக்கிறது. 10 மணிக்கு மேல் வெளியில் தலை காட்ட முடிவதில்லை. அப்படிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குடை பிடித்துக் கொண்டு செல்லவேண்டி இருக்கிறது.  இது ஏன் என்று யோசித்தேன். வெய்யில் அதுவாகவே அதிகம் ஆகி விட்டதா? இல்லை எனக்கு வயதாகி விட்டதால் வெய்யிலைப் பொறுத்துக்கொள்ளும் சக்தி குறைந்து விட்டதா? அல்லது இரண்டும் சேர்ந்து இம்மாதிரி உபத்திரவம் கொடுக்கிறதா? புரியாமல் மயங்குகிறேன்.

    ஆனாலும் வீதிகளில் ஜனங்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. சாலைகளில் தார் உருக ஆரம்பித்து விட்டது. இந்த சாலைகளிலும் பலர் காலில் செருப்பில்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இவ்வாறு நடக்க முடிகிறது என்று யோசித்தால் சரியான விடை கிடைக்கவில்லை.

    வாழ்க்கைத் தரம் உயர உயர நம் மன நிலையும் உடல் நிலையும் வெகுவாக மாறி விடுகின்றன என்று கருதுகின்றேன். இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்று செய்ய முடிவதில்லை. ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.

    வசதிகள் வளர வளர மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை நினைக்கும்போது அதிசயமாகத் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் பணக்காரர்களின் சில நடவடிக்கைகளைக் கேலி செய்த நான் இப்போது அதே நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. ஆனாலும் சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ்டங்களை ஏற்க மறுக்கிறது. இதுதான் உலக நியதி என்று நினைக்கிறேன்.

    புதன், 8 ஏப்ரல், 2015

    எங்க வீட்டுப் பிரளயம்

                                      Image result for catastrophe
    உலகத்தில் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு யுகப் பிரளயம் நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒருவரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல, வருடத்திற்கு மூன்று பிரளயங்களை நான் சந்திக்கிறேன்.

    தமிழ் வருடப் பிறப்பு, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய மூன்று சமயங்களிலும் என் வீட்டுக்காரிக்கு ஒரு வேகம் வந்து விடும். வீட்டை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து எல்லா சாமான்களையும் கழுவித் துடைத்து திரும்பவும் அதனதன் இடத்தில் வைக்காவிட்டால் அவள் தலையே வெடித்து விடும்.

    இதற்காக அவள் ஒரு படையே வைத்திருக்கிறாள்.அந்தப் படையைத் திரட்டி வேலை கொடுத்து கண் கொத்திப் பாம்பாக கூடவே இருந்து அந்த வேலைகளை முடித்து வாங்கும் திறமை இருக்கிறதே, அது ஒரு தேசப் படைத் தலைவருக்குக் கூட வராது.

    பலசரக்கு சாமான்கள், அரிசி, பருப்பு, லொட்டு லொசுக்கு என்று அத்தனையையும் எடுத்து வெளியில் வெய்யிலில் காயவைத்து, அவைகள் இருந்த பாத்திரங்கள், பாட்டில்கள், டப்பாக்கள் இத்தியாதிகளைக் கழுவி அவைகளையும் வெய்யிலில் காய வைத்து, பிறகு பழைய பிரகாரம் அவைகளை அந்தந்த ஏனங்களில் போட்டு அந்தந்த இடங்களில் வைக்கவேண்டும்.

    பீரோவில் இருக்கும் துணிகளை எல்லாம் எடுத்து வெளியில் காற்றாடக் காயப் போட்டு, பீரோவின் ஒவ்வொரு தட்டிற்கும் புது நியூஸ் பேப்பர்களை மடித்துப் போட்டு, துணிகளை அடுக்கி வைக்க வேண்டும். கட்டிலில் இருக்கும் மெத்தைகளைத் தூக்கி வெய்யிலில் போட்டுக் காய வைக்கவேண்டும்.

    இப்படியாக வீட்டைத் துடைத்து வைக்க ஏறக்குறைய ஒரு பத்து நாள் போல ஆகிவிடும். இந்த வேலைகளில் அவ்வப்போது எனக்கும் பங்கு வரும். அதை செய்யாவிட்டால் அர்ச்சனை ஆரம்பமாகிவிடும். நான் அதற்குப் பயந்து கொண்டு சொன்ன வேலைகளை உடனுக்குடன் முடித்து விடுவேன்.

    இதுவெல்லாம் பரவாயில்லை. எனக்கு என்று சில ஏரியாக்கள் இருக்கிறதல்லவா? என் டேபிள், கம்ப்யூட்டர், புஸ்தக அலமாரிகள், இவைகளையும் சுத்தப்படுத்தச் சொல்லி பத்து நாட்களுக்கு முன்பிருந்தே நச்சரிப்பு ஆரம்பித்து விடும். இந்த சுத்தப்டுத்தலைக்கூடச் செய்து விடலாம். ஆனால் அதை அவள் கண் முன்னால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் சும்மா பொய் சொல்லுகிறேன் என்பாள். ஆகவே அவள் கண் முன்பாகவே எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வைத்து, பேப்பர் மாற்றி பின்பு பழையபடி அடுக்குவேன்.

    அப்படி நான் சுத்தம் செய்த என் ஏரியாக்களை நீங்களும் பாருங்கள்.

    என் டேபிள்.

    டேபிளுக்கு மேல் உள்ள ரேக்குகள்.



    என் புத்தக அலமாரிகள்




    அதற்கு கீழ் உள்ள ரேக்குகள்


    அதற்கு கீழ் உள்ள கம்ப்யூட்டர் ஏரியா




    அதற்கும் கீழே உள்ள சிபியூ ஏரியா

    ஷோகேஸ்

    போட்டோக்கள் அனைத்தும் என்மனைவிக்குத் தெரியாமல் காலை 4 மணிக்கு என் புது டேப்பில் எடுக்கப்பட்டவை.

    இது போக இன்னும் சோபா செட்டுகளில் இருக்கும் குஷன்களின் உறைகளை கழற்றி, அவை துவைத்து வந்த பின் அவைகளை திரும்பவும் மாட்டும் வேலை பாக்கி இருக்கிறது. என் நல்ல காலம் அவைகளை துவைக்க வேறு ஆள் வைத்திருக்கிறாள். இது ஒரு பெரிய கண்டம்.

    இவைகள் எல்லாம் முடிந்து வருடப் பிறப்பு வருவதற்குள் என் முதுகெலும்பு கணிசமாகத் தேய்ந்து விடும். வருடப் பிறப்பு அமர்க்களத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

    என் நிலையைக் கண்டு ஆறுதல் கூறுவீர்க்ள என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவைப் போட்டிருக்கிறேன்.

    செவ்வாய், 7 ஏப்ரல், 2015

    ஆஹா, மோடம் வந்துடுச்சு.

                                        Image result for பிராட்பேண்ட்
    நான் பிராட் பேண்ட் கனெக்ஷன் வாங்கி ஆறு வருடத்திற்கு மேல் ஆகிறது. அப்போது ஒரு மோடம் சொந்தக் காசு கொடுத்து வாங்கியிருந்தேன். இரண்டு மாதத்திற்கு முன்னால் அந்த மோடம் பொசுக்கென்று உயரை விட்டு விட்டது. பிஎஸ்என்எல் காரரிடம் புகார் சொன்னேன். "மோடம் உங்க கிட்டதானே வாங்கினேன். இப்படி உயிரை விட்டு விட்டதே" என்றேன்.

    அவர் "தான்" வந்து பார்க்கிறேன் என்று சொல்லி அடுத்த நாள் வந்தார். மோடம் வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு என்று கேட்டார். நான் ஆறு வருடம் ஆயிற்று என்றேன். அவர் ஒரு மோடம் சாதாரணமாக ஐந்து வருடம்தான் வேலை செய்யும். உங்களுக்கு ஆறு வருடம் உழைத்திருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் என்றார். மோடத்தை மேலும் கீழும் திருப்பியும் பார்த்தார். இது உயிரை விட்டு விட்டது உண்மைதான் என்றார்.

    அடுத்தது என்ன பண்ணுவது என்றேன். இதை அடக்கம் பண்ணி ஈமக்கடன்களை முடித்து விட்டு, நான் சொல்லும் போன் நெம்பருக்குப் போன் செய்யுங்கள். அவர்கள் வந்து வேறு மோடம் வைத்து விடுவார்கள், என்றார். முந்தியெல்லாம் பிஎஸ்என்எல் காரர்களே இந்த மோடம் சப்ளை பண்ணுவார்கள். இப்போது சிஸ்டத்தை மாற்றி விட்டார்கள். இதற்கென்று ஒரு தனி ஏஜென்ட் இருக்கிறார். அவரிடம் சொன்னால் உடனே புது மோடம் கொண்டு வந்து மாட்டி செட்டிங்க்ஸ் எல்லாம் செய்து விட்டுப் போவார்.

    அப்படியாக அவருக்குப் போன் பண்ணி புது மோடம் வாங்கி கனெக்ஷன் கொடுத்தேன். இப்போது ஒரு புது ராணி (கேலக்சி டேஃப்) என் அந்தப்புரத்திற்கு வந்தாள் என்று சொன்னேன் அல்லவா? அந்த ராணிக்கு இந்தப் பழைய ராணிதான் இன்டர்நெட்டை வைஃபி மூலம் தானம் பண்ணவேண்டும். இரண்டு பேருக்குமிடையில் ஏதோ சக்களத்திச் சண்டை மூண்டு விட்டது. டேஃபில் வைஃபி வேலை செய்யவில்லை. நான் எனக்குத் தெரிந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு பிஎஸ்என்எல் போர்ட்டல் உள்ளே போய் எதையோ நோண்டினேன். அவ்வளவுதான். இன்டர்நெட் மொத்தமாக அம்பேல்.

    மோடத்தில் உள்ள மூன்றாவது லைட் பச்சையாக எரியவேண்டியது சிகப்பாக எரிந்தது. ஆஹா, வந்தது வினை என்று முடிவு செய்தேன். இனி நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆண்டவனைச் சரண்டைவது தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து பிஎஸ்என்எல் காரருக்குப் போன் செய்தேன். அவர் வழக்கமாக வருகிறவர்தான். நல்ல மனுஷன்தான். ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட பிடுங்கல்கள்.

    ஒரு வழியாக இன்று காலை வந்து என்னென்னமோ செட்டிங்க்ஸ்களை மாற்றியமைத்தார். இன்டர்நெட் வர ஆரம்பித்தது. இனி ஒன்றும் பிரச்சினை இல்லை சார், அந்த மோடம் சப்ளை செய்தவர் சரியாக செட்டிங்க்ஸ்களை செட் பண்ணவில்லை. நான் எல்லாவற்றையும் சரியாக அமைத்திருக்கிறேன். இனி மேல் எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் அதை முழு மனதாக நம்புகிறேன்.

    இன்டர்நெட் வந்தவுடன் அதை நண்பர்களுக்குச் சொல்லவேண்டாமா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.