புதன், 30 டிசம்பர், 2015

ஏன் மனிதன் மிருகமாகிறான் ?

                                                Image result for டீக்கடை                   

சமீபத்தில் எங்களூரில் நடந்த இரு நிகழ்ச்சிகள்.

ஒன்று; டீக்கடை ஒன்றில் ஒருவன் குடித்து விட்டு வந்து தாறுமாறாகப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறான். அதை அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவன் கண்டித்திருக்கிறான்.

இருவருக்கும் வாக்குவாதம் பெரிதாகி குடிகாரன் மற்றொருவனை தான் வைத்திருந்த கத்தியால் பல இடங்களில் குத்தியிருக்கிறான். குத்துப்பட்டவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டான்.

இன்னொரு நிகழ்வு;

ஒரு குடிசைவாழ் பகுதி. அங்கு ஒரு குடும்பம் - கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குப் போய் ஜீவனம் செய்பவர்கள்.

அதே போல் பக்கத்து குடிசையிலும் ஒரு கணவன் மனைவி. இதேபோல் கூலி வேலைக்காரர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

அந்த குழந்தை இல்லாத பெண்ணிற்கும் குழந்தை பெற்ற ஆணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவன் இதைக் கண்டித்திருக்கிறான். ஆனால் பலன் இல்லை.

ஒரு நாள்  அந்த தம்பதிகள் வேலைக்குப் போகும்போது இந்தக் குழந்தை பெறாத ஆள் துணைக்கு ஒரு உறவினனைக் கூட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய் அவர்கள் இருவரையும் கொலை செய்திருக்கிறான்.

இந்த மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி செய்தித்தாள்களில் வருகிறது. மனிதன் என்னவாக மாறிக்கொண்டு வருகிறான் என்று யோசித்தால், அவன் மிருகமாகத்தான் ஆகிக்கொண்டு வருகிறான் என்பது புலனாகிறது.

இந்த நிகழ்வுகளை செய்திகள் என்ற அளவில் நாம் படித்து விட்டு அடுத்த நிமிடம் இந்த உலகம் அப்படித்தான் என்று நம் மனதிற்கு ஒரு ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்த செய்தியைப் படிக்கப்போய் விடுகிறோம். 

பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் நிலை என்ன ஆகும் என்று நாம் யாரும் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. பல உப்புச்சப்பு இல்லாத காரணங்களுக்காக பெரிய பெரிய போராட்டங்கள் நடத்தும் சமூக அமைப்புகள் இத்தகைய மக்களிடம் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினால் இத்தகைய சமூகம் கொஞ்சமாவது சீராகுமே என்று என் மனதிற்குத்தோன்றுகிறது. 

நான் நினைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் என் நினைவுகளில் அத்தகைய எண்ணம் தோன்றுகிறது.