வெள்ளி, 17 ஜூன், 2016

ஒரு காதல் கதையும் ஒரு கொலையும்

                                   Image result for காதலர்கள் படங்கள்

ஒரே ஒரு ஊர்ல ஒரு இளிச்சவாய விவசாயி. அவனுக்கு ஒரு பொண்டாட்டியும் ஒரு வைப்பாட்டியும். பொண்டாட்டிக்கு ஒரு பையன், ரெண்டு பெண்கள். வைப்பாட்டிக்கு எத்தனைன்னு தெரியலை.  பணம் நெறய பேங்கில போட்டு வச்சிருக்கான். குடும்பத்த ஒரு ஊர்ல விட்டுட்டு இவன் வைப்பாட்டியோட வேற ஊர்ல விவசாயம் பாக்கறான்.

ஆனா எழுதப் படிக்கத் தெரியாது. சரி, பொண்ணாவது நல்லாப் படிக்கட்டும் என்று பொண்ணைப் படிக்க வைக்கிறான். பொண்ணு புத்தகப் படிப்பை விட வாழ்க்கைப் படிப்பை அதிகமாகப் படிக்கிறாள். அவ காலேஜுக்குப் போற வழில ஒரு தெல்லவாரி. எட்டாம்  கிளாசோட படிப்பு போதும்னு நின்னுட்டான். அவன் (வயது 20) நல்லா ஸடைலா டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருந்தான்.

நம்ம கதாநாயகி (வயது 18) அவனக்கண்டு மயங்கிட்டாள். அப்பன்காரன் பேங்க் கணக்கிலிருந்து இவதான் பணம் எடுக்குற வழக்கம். கதாநாயகனுக்கு சொந்தமா பைக் இல்லை. இவ அப்பன்காரன் கணக்கில இருந்து அறுபது ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொடுத்து அவனை பைக் வாங்கச்சொல்லி இருக்கிறாள்.

அந்த பைக்கில ரெண்டு பேரும் ஊர் சுற்றியிருக்கிறார்கள். இது அப்பன்காரனுக்குத் தெரிஞ்சு போச்சு. பொண்ணைக் கூப்பிட்டு கண்டிச்சிருக்கிறான்.  பொண்ணோட அம்மா பொண்ணு கட்சி. அம்மாவும் பொண்ணும் யோசனை பண்ணுனாங்க. அப்பன்காரனைப் போட்டுத்   தள்ளினாத்தான் நாம நம்ம இஷ்டம் போல் இருக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

நம்ம கதாநாயகி நம்ம கதாநாயகனைக் கலந்து ஆலோசனை பண்ணினாள். அவன் கொஞ்சம் பணம் கொடுத்தால் நான் ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கதாநாயகி ஒன்றரை லட்சம் ரூபாய் பேங்கிலிருந்து எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் நன் நணபர்கள் மூன்று பேரைச் சேர்த்துக்கொண்டு அவன் விவசாயம் பார்க்கும் ஊருக்குப்போய் காத்திருந்திருக்கிறார்கள்.

அந்த விவசாயி தன் பண்ணையில் இருக்கும் மாடுகளிலிருந்து பால் கறந்து அதை பால் சொசைட்டியில் ஊற்றுவதற்காக காலை 4 மணிக்கு புறப்பட்டிருக்கிறான். ஒரு மறைவான இடத்தில் இந்த நான்கு பேரும் அவனை வழிமறித்து அருவாட்களால் வெட்டிச் சாய்த்து விட்டு வந்து விட்டார்கள்.

போலீஸ் வந்து பார்த்தது. உடனடியாக ஏதும் துப்புக் கிடைக்கவில்லை. பிணத்தைக் குடும்பத்தார்கள் எடுத்து அடக்கம் செய்து விட்டார்கள். போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே நம் கதாநாயகிக்கு பயம் வந்து விட்டது. கோர்ட்டில் போய் சரண்டைந்து  விட்டாள். பிறகு நம் கதாநாயகனும் அவன் கூட்டாளிகளும் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். எல்லோரும் இப்போது ஜெயில் களி சாப்பிட்டுக்கொண்டு சுகமாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையின் நீதி என்னவென்றால் தன் பணத்தை தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

                               Image result for காதலர்கள் படங்கள்