வியாழன், 9 நவம்பர், 2017

22. மூட நம்பிக்கைகள் - சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது

                                          Image result for sleeping beauty
சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்துத்தான் தூங்கவேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். இவ்வாறு பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். அநேகமாக நீங்களும் படித்திருக்கலாம். இதைப்போன்ற அபத்தமான ஒரு மூட நம்பிக்கை இவ்வுலகில் இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்று பார்ப்போம்.

''உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு'' என்ற பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் கருத்தை ஆழமாக யாரும் சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.

உணவு உண்டவுடன் அது இரைப்பைக்கு செல்கிறது. அங்கு அந்த உணவு ஜீரணமாவதற்குத் தேவையான பல அமிலங்களும் என்சைம்களும் சுரந்து அந்த உணவை ஜீரணிக்க உதவுகின்றன. இதற்கு இரைப்பைக்கு அதிக ரத்தம் தேவைப் படுகின்றது. உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்ற ரத்தத்தைக் குறைத்து இரைப்பைக்கு அதிக ரத்தம் வருகிறது. இந்த நிகழ்ச்சி இயற்கையாக நடக்கும் ஒன்றாகும்.

இப்படி நடக்கும்போது மூளைக்குச் செல்லும் இரத்தமும் குறைகிறது. அதனால் மூளை தன் வேலைப்பாட்டை குறைத்துக்கொள்கிறது. இதே போல் மற்ற அவயவங்களும் தங்கள் தங்கள் வேலையைக் குறைத்துக்கொள்கிறது. இந்த செயல்களால் மொத்த உடலும் ஒரு வகை சோர்வுக்கு உள்ளாகிறது. இதைத்தான் உண்ட மயக்கம் என்கிறோம்.

இந்த மயக்கம் தெளிய ஒரு மணி நேரம் ஆகலாம். இந்த நேரத்தில் தூங்கினால் தூக்கம் சுகமாக வரும். இரவு சாப்பிட்டபின் தூங்கினால் சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இது இயற்கையுடன் ஒத்து வாழும் வழி.

இதை விடுத்து சாப்பிட்ட உணவு ஜீரணமானவுடன்தான் தூங்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால் அப்போது உடலின் எல்லா அவயவங்களும் தயார் நிலையில் இருக்கும். மூளைக்கு ரத்தம் நல்ல நிலையில் சென்று கொண்டிருப்பதால் மூளை விழிப்புடன் இருக்கும். அப்போது தூங்கச்சென்றால் தூக்கம் வருவதற்கு நேரமாகும். உடல் அசதி இருந்தால்தான் தூக்கம் வரும். இல்லாவிட்டால் தூக்கம் வராது.

ஏன் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும்? தூக்கம் வரும்போது தூங்குவதை விட்டு விட்டு தூக்கம் வராத வேளையில் எதற்கு தூங்கச் செல்ல வேண்டும்? மக்களே, இது ஒரு விஞ்ஞானத் தத்துவம். சரியாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள். நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இவ்வாறுதான் தூங்குகிறேன். இப்போது எனக்கு 83 வயது ஆகிறது. நன்றாகத்தான் இருக்கிறேன்.

ஆகாவே இந்த 'சாப்பிட்வுடன் தூங்கக்கூடாது' என்கிற மூட நம்பிக்கையிலிருந்து விடுபடுங்கள்.