வெள்ளி, 24 டிசம்பர், 2010

இயற்கை விவசாயம்

இன்றைக்கு இதுக்குத்தான் மார்க்கெட். வெங்காய மார்க்கெட்டல்லாம் சரிஞ்சு போய்ட்டுது. ஆனா இயற்கை விவசாயத்துக்கு மார்க்கெட் எப்பவும் சரியாது.

கம்யூனிஸ்ட் தொழிற் சங்கங்களின் கொள்கையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லைன்னா தெரிஞ்சுக்குங்க. “அடைய முடியாத இலக்கை குறிக்கோளாகக் கொள்”. கொஞ்சம் யோசிச்சாத்தான் இதனுடைய முழு அர்த்தமும் விளங்கும். யோசிச்சிட்டு இருங்க. அதுக்குள்ள வேற ஒரு சமாச்சாரம் சொல்றேன்.

பொய்ய பொருந்தச் சொன்னா நெஜம் திரு திருன்னு முளிக்குமாம்.

இது மாதிரி சில சமாச்சாரங்கள் எப்போதும் ஜனங்களுக்குப் பிடிக்கும். காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம். எலெக்ஷன் சமயத்தில் இது மிகவும் சொல்லப்படும் வசனம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஏழ்மை ஒழிப்பு, ஓசோன் லேயரில் ஓட்டை, மரம் நடுவோம், இவைகளெல்லாம் சாஸவதமான சமாச்சாரங்கள். எப்போது வேண்டுமென்றாலும் யார் வேண்டுமென்றாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கை வழி வாழ்வோம் அப்படீன்னு சொன்னா யாருதான் வேண்டாம்னு சொல்வாங்க. ஆஹா, அப்படித்தான் வாழவேண்டும் என்று எல்லோரும் ஜால்ரா போடுவார்கள். சரீப்பா, இயற்கை வழின்னு சொல்றயே, அப்படீன்னா என்ன அர்த்தம், அப்படி வாழறது எப்படீன்னு கேட்டீங்கன்னா, இவன் இயற்கைக்கு விரோதின்னு பட்டம் கொடுத்து உங்களை மென்டல் பண்ணீடுவாங்க.

ஏன் சில பேர் இந்த மாதிரி திரியறாங்கன்னு தெரியுமுங்களா? அதுல காசு இருக்குங்க. NGO அப்படீன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லையா. அப்ப நீங்க இந்த லோகத்துல வாழ லாயக்கில்லீங்க. அத மொதல்ல தெரிஞ்சுக்குங்க. இந்தியாவுல லட்சக்கணக்குல இந்த NGO க்கள் இருக்குங்க. அவங்களுக்கு என்ன தொழில்னா, இந்த மாதிரி சமூக சேவை செய்யறதுதான். அதாவது ஏழ்மை ஒழிப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு, இப்படி ஏதாச்சும் ஒண்ணு. இதுக்கு வெளிநாட்டுக்காரனும், நம்ம இந்திய அரசாங்கமும் கோடிக்கணக்குல பணத்தைக்கொட்டறாங்க. வாங்கி அப்படியே உங்க பேங்குல போட்டுக்க வேண்டியதுதான். ஆனா ஒழுங்கா கணக்கு காட்டோணும். அதுக்குத்தான் இந்த மாதிரி இயற்கை வழி வாழ்வு போன்ற சங்கதிகளெல்லாம்.

எதாச்சும் புரியுதுங்களா. புரிஞ்சா அடுத்த பதிவுக்கும் வாங்க. புரியலேன்னா, எதாச்சும் 3ஷா பத்தி யாராச்சும் போட்டோ போட்டு எளுதியிருப்பாங்க. அங்க போயிடுங்க.

புதன், 22 டிசம்பர், 2010

இன்னும் நான்கு நாள்தான் இருக்கு

ஈரோடு பதிவர் சங்கமம்.

முழு விவரங்களை இங்கே பாருங்கள். இதைப்பார்த்தவுடனே மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்து விடுங்கள். இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன.

விழா நடக்கும் இடம்:

டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,

URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்

காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ் வணக்கம்
*வரவேற்புரை
*பதிவர்கள் அறிமுகம்
*கூட்ட துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)

*சிறுகதைகளை உருவாக்குவோம் -

எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் -

எழுத்தாளர். பாமரன்
*குறும்படம் எடுக்கலாம் வாங்க -

அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில் நேர்த்தி -

கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை -

சிதம்பரன்.கி

மதியம் 01-30 – 02.30 மதிய உணவு

இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)

*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -

ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -

லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)

மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)

*பதிவர்கள் கலந்துரையாடல் -

ஒருங்கிணைப்பு சேர்தளம்

நன்றியுரை
மாலை 05.00 மணி நிகழ்ச்சி நிறைவு

(முக்கிய அறிவிப்பு) இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.

(பதிவர்களே, இதற்கு மேலும் என்ன வேண்டும்? உடனே தயாராகுங்கள். நான் இன்றையிலிருந்தே உபவாசம் இருக்கப்போகிறேன்- ப.க.)

குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

(பதிவர்களே, இதைக் கவனியுங்கள். ரொம்ப முக்கியமான பாயின்ட். ஈரோட்டுக்காரர்களின் மனசுதான் மனசு!!!!!- ப.க.)

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

(நன்றிகளை ஏற்றுக்கொள்கிறோம். எதுக்கும் நாங்க நேர்ல வர்ரப்ப கொடுக்கறதுக்கு கொஞ்சம் மிச்சம் வச்சுருங்க? – ப.க.)

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com
அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...
உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்

உறுதிப்படுத்தி விட்டீர்களா????????

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இயற்கை விவசாயம்


இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் நடைமுறைக்கு சாத்தியமா? அதனால் அதிகரித்து வரும் இந்திய மக்களுக்கான உணவை உற்பத்தி செய்ய முடியுமா? தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்வது சாத்தியம்தானா?

இயற்கை விவசாயத்தை ஆதரிப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முடியும் என்று ஒரே பதிலை சொல்வார்கள். அதற்கு எதிர்வாதம் செய்து ஒரு முடிவுக்கு வருவது சாத்தியமல்ல. என்ன செய்யலாம் என்றால் அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டு விடுவதுதான் ஒரே வழி. உண்மையில் இயற்கை விவசாயம் லாபகரமாக இருந்தால் விவசாயிகள் அதைக் கடைப்பிடிப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. அப்படி அந்த முறை ஒத்து வரவில்லையென்றால் விவசாயிகளே அந்த முறையை தள்ளி விடுவார்கள்.

சுதந்திர நாடான இந்தியாவில் பேச்சுரிமை தாராளம். யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் பேசலாம். சில தலைப்புகள் கவர்ச்சிகரமானவை. அதில் இயற்கை விவசாயமும் ஒன்று. இதைப்பற்றி அவ்வப்போது எழுதுவேன்.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஈரோடு, ஈரோடு,ஈரோடு,

நானும் ஈரோட்டுக்குப் போறேன். என்னோடு வருபவர்கள் எல்லாம் கோயமுத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டேண்டிற்கு 26ம் தேதி காலை 8 மணிக்கு வந்துவிடுங்கள். அங்கே "ஈரோடு, ஈரோடு, ஈரோடு" என்று கூவிக்கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் இந்த பஸ் நேராக ஈரோடு போகுமா என்று கேட்டு விட்டு பஸ்ஸில் ஏறினால் நேராக ஈரோடு கொண்டுபோய் விடும். பஸ் கண்டக்டரிடம் என் பெயரைச் சொல்லி 50 ரூபாய் கொடுத்தால் ஈரோடுக்கு டிக்கெட் கொடுப்பார். ஈரோடு பஸ் ஸ்டேண்ட் போய் இறங்கியதும் என் பெயரைச் சொன்னால் உங்களை நேராக.....

வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்

நிகழ்ச்சியில்

நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்

எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

உங்கள் வருகையே எங்களின் வெற்றி!

திங்கள், 6 டிசம்பர், 2010

இந்தியாவில் உணவுப்புரட்சி



இந்தியாவில் உணவுப்புரட்சி


இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட அரசியல், சமூக, மதக் குழப்பங்கள் தீர்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1960 களின் கடைசியில் ஒரு குழு தெய்வாதீனமாக அமைந்தது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் பொறுப்பேற்றார். திரு.சி.சுப்பிரமணியம் மத்திய விவசாய அமைச்சராக இருந்தார். இருவரும் கலந்து ஆலோசித்து இந்திய உணவுப் பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். டாக்டர் எம்.எஸ். ஸ்வாமிநாதனுக்குத் தெரிந்த ஒரு அமெரிக்க விவசாய விஞ்ஞானி, நோபல் பரிசு வாங்கியவரான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரை இந்தியாவிற்கு வரவழைத்தார்கள்.

அவர் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள விவசாய தொழில் நுட்பங்களை ஆராய்ந்து இங்குள்ள விவசாய நிபணர்களிடமும் கலந்தாலோசித்து சில முடிவுகளைச் சொன்னார். இந்திய விவசாயத்தை மேம்படுத்த முக்கியமாக மூன்று அபிவிருத்திகள் செய்ய வேண்டும் என்றார். ஒன்று - நல்ல விதை. இரண்டுநல்ல உரம். மூன்றுநல்ல பயிர் பாதுகாப்பு. நல்ல விளைச்சல் தரக்கூடிய கோதுமை விதைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உரங்களும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும் பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. இவைகளை உபயோகப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதில் விளைச்சல் பலமடங்கு அதிகமாக விளைந்தது. இந்திய நாடு உணவு வகையில் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொண்டது.


பசுமைப்புரட்சிஎன்றழைக்கப்பட்ட இந்த விவசாயப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களினால் இந்திய மக்கள் பஞ்சத்திலிருந்து விடுபட்டார்கள். ஆனாலும் இந்திய மக்கள் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்தார்கள். அதாவது எலிகள் போல் பெருகினார்கள். முப்பது கோடியாய் இருந்தவர்கள் அறுபது வருடங்களுக்குள் நூற்று இருபது கோடியாய் பெருகி இருக்கிறார்கள். இந்தியாவின் சாபக்கேடே இந்த மனித உற்பத்திப் பெருக்கம்தான். சரி, இருக்கிற ஜனங்களாவது ஒழுங்காக, தேசப்பற்றுடன், நாடு முன்னேற பாடுபடுகின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஏறக்குறைய தரை மட்டமாக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்கர்களே பயப்படும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசப்பற்று இருக்கிறது. நமக்கு?????



இந்தியர்களின் பசியைப் போக்கியதில் உரங்களும் பயிர்பாதுகாப்பு மருந்துகளும் முக்கிமான பங்கை ஆற்றியிருக்கின்றன. இவைகளின் உபயோகம் வருடாவருடம் அதிகரித்து வந்துள்ளது. இந்த உண்மையை மனதில் கொள்ளாமல் திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இந்திய உணவுப்பஞ்சம் 1943-50


மீள்பதிவு:

இந்திய உணவுப்பஞ்சம் 1943-50

1943 ல் இந்திய நாட்டின் ஜனத்தொகை ஏறக்குறைய முப்பது கோடி மட்டுமே. நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டு இருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமர். உலக யுத்தத்தை சமாளிப்பதற்காகவே அவரை பிரிட்டிஷ் பார்லிமென்ட் ஸ்பெஷலாக பிரதமராக அமர்த்தியிருந்தது. அவர்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். இரும்பு இதயம் படைத்தவர். இந்திய மக்கள் உணவுப் பஞ்சத்தினால் இறந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னபோது “let them die. They will breed like rats” சொன்னவர்.


நமது நாட்டிலுள்ள அனைத்து செல்வங்களும் யுத்தத்திற்காக கட்டாயக் கொள்முதல் செய்யப்பட்டு யுத்த முனைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. மனிதர்கள், உணவு தானியங்கள், துணிகள், மற்றும் எல்லாப் பொருட்களும் யுத்தத் தேவைக்காக கொள்முதல் செய்யப்பட்டு சென்று கொண்டிருந்தன. தொழிற்சாலைகள் அனைத்தும் யுத்தத்திற்கு வேண்டிய பொருட்களைத்தான் தயார் செய்து அனுப்பிக்கொண்டிருந்தன. உள்நாட்டு உபயோகத்துக்காக மிகக்குறைந்த அளவு பொருட்களே விநியோகிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் பற்றாக்குறை.
ரோடுகளில் கிடக்கும் ஆணிகள், லாடங்களுக்கு கூட கிராக்கி. அவைகளைச் சேகரிக்க அந்தக்காலத்து TVS பஸ்களின் பின்புறத்தில் ஸ்பெஷல் காந்தங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அரிசிக்கு ரேஷன் முறை கொண்டு வரப்பட்டது. வாரத்துக்கு ஒரு முறை அரிசி போடப்படும். முதலில் 16 அவுன்ஸ் (அதாவது ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஏறக்குறைய 400 கிராம் அரிசி, மூன்று வேளைக்கும் சேர்த்து) ரேஷன் கொடுத்தார்கள். பிறகு 12, 10, 8 என்று படிப்படியாகக் குறைத்து ஒரு சமயத்தில் 6 அவுன்ஸ் ரேஷன் மட்டுமே போடப்பட்டது. இந்த சமயத்தில் ரொட்டி வாங்க டோக்கன் கொடுத்தார்கள். அதை பேக்கரியில் கொடுத்தால் ரொட்டி கொடுப்பார்கள்.

இந்த சமயத்தில்தான் தமிழ்நாட்டுக்கு பஞ்சாப் கோதுமை அறிமுகப் படுத்தப்பட்டது. ரேஷன் கடைகளில் இது விற்கப்பட்டது. உள்ளூரில் விளையும் நாட்டுக்கோதுமையை விவசாயிகள் தங்கள் தேவைக்குப் பயிரிட்டு வந்தார்கள். அதை ரவை பண்ணி உப்புமா செய்து சாப்பிடுவார்கள். இந்த பஞ்சாப் கோதுமையைமொட்டைக் கோதுமைஎன்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஏனெனில் உள்ளூர் கோதுமை நீளமாக இருக்கும். வடநாட்டுக்கோதுமை குட்டையாக, குண்டாக இருக்கும். வட இந்திய சப்பாத்தி, தமிழர்களுக்கு அப்போது பரிச்சயம் இல்லை. அந்தக் கோதுமை சப்பாத்திக்குத்தான் நன்றாக இருக்கும். அதனால் சப்பாத்தி செய்வது எப்படி என்று பெரிய பிரச்சாரமே நடந்தது. ஹோட்டல்களில் இட்டிலி, தோசைக்குப் பதிலாக சப்பாத்தி போடும்படி அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள்.
கல்யாண விருந்துகளில் 25 பேருக்கு மேல் சாப்பாடு போடக்கூடாது என்று கவர்மென்ட் உத்திரவு போடப்பட்டது. எல்லா உணவுப்பொருட்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. தானியங்களை தனிப்பட்டவர்கள் இடம் விட்டு இடம் கொண்டு போகக்கூடாது. இப்படியெல்லாம் இருந்து, ஒரு வழியாக யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் முடிந்தவுடன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் காந்திக்கு வாக்குக் கொடுத்ததினால்தான், காந்தி இந்தியர்களை யுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆகவே யுத்தம் முடிந்தவுடன் இந்திய அரசியல்வாதிகள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வற்புறுத்த ஆரம்பித்தனர். பிரிட்டிஷ்காரனுக்கும்உடும்பு வேண்டாம், கை தப்பித்தால் போதும்என்கிற எண்ணம் வந்துவிட்டது.
ஏனென்றால் …..
1. இந்தியாவில் இருந்து கொண்டு போவதற்கு மிச்சம் மீதி ஒன்றுமில்லை.
2. இங்குள்ள மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டதால் இந்தியாவை இனிமேலும் அடிமை நாடாக வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை.
3. உலக நாடுகளின் கொள்கை மாற்றம்
4. தவிர இங்கிலாந்து நாட்டையே யுத்த சீரழிவுகளிலிருந்து மீட்கவேண்டிய வேலை தலைக்கு மேல் இருந்தது.
5. இந்தியாவை வறுமையின் பிடியிலிருந்து மீட்க ஏகப்பட்ட செலவாகும்.
இக்காரணங்களினால் இந்தியாவுக்கு 1947 ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தான்.
இந்த 1943-47 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட பட்டினிச்சாவுகள் ஏற்பட்டன. வங்காளத்தில்தான் மிக அதிகம். தமிழ்நாட்டிலும் கூட வயிறு நிறைய சாப்பிட்டவர்கள் பாதிப்பேர்தான். ராமநாதபுரத்தில் புளியங்கொட்டையைக்கூட வறுத்து தின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டு ஏழைகளுக்கு கஞ்சி வார்க்கப்பட்டது. இதில் நான் கூற வருவது என்னவென்றால் அன்றைக்கு இருந்த முப்பது கோடி ஜனங்களுக்கே உணவு உற்பத்தி போதவில்லை என்பதுதான். அன்றைக்கு விவசாயம் நான் போன பதிவில் சொல்லியிருந்தபடி இயற்கை முறையில்தான் நடந்துகொண்டிருந்தது.
இன்றைக்கு 120 கோடி மக்களுக்கும் நமது விவசாயம் உணவு கொடுக்கிறது என்றால் அது எப்படி சாத்தியமாயிற்று

பின் குறிப்பு : என்னுடைய சென்ற பதிவின் காரணத்தை இங்கு சென்று பார்க்கவும்.