புதன், 14 ஜூன், 2017

11. நாட்டு நடப்பு – 3

                                           Image result for மணப்பெண் அலங்காரம்
இன்றைய செய்தி-கோவையில் நான்கு இடங்களில் பெண்களிடமிருந்து நகை பறிப்பு. தங்கம் பவுன் 11 ஆயிரம் ரூபாயக்கு மேல் விற்கிறது. தங்கத்தை விற்பது எளிது. ஆகவே அதை திருட பல கயவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் தமிழ்நாட்டுப்பெண்களுக்கு கழுத்தில் ஒரு இரண்டு பவுனாவது இல்லாவிட்டால் அவர்களுக்கு மூச்சு விட முடியாது. மிடில் கிளாஸ் குடும்பம் என்றால் குறைந்தது ஒரு பத்து பவுனாவது கழுத்தில் வேண்டும். பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.

இதைப்பார்க்கும் வழிப்பறித்திருடனுக்கு அல்வா சாப்படுகிற மாதிரி. இரு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் வேகமாக மேலே இடிப்பது போல் பக்கத்தில் உரசிக்கொண்டு போவார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவன் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் கழுத்தில் இருக்கும் நகையை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுவார்கள். என்ன நடந்தது என்று அந்த பெண்ணுக்குத் தெரிவதற்குள் அந்த திருடர்கள் கண்ணுக்குத்தெரியாத தூரத்திற்கு சென்று விடுவார்கள்.

நகையை பறிகொடுத்த பெண் சுதாரித்து சத்தம் போடுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருக்கும். போலீசுக்கு தகவல் போய் அவர்கள் வந்து விசாரிக்கும்போது இந்தப்பெண்ணிற்கு அழுகைதான் வருமே ஒழிய கோவையாக வார்த்தைகள் வராது.

பிறகு என்ன? வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் துக்க விசாரிப்புகள் வேறு. 

சொந்தக்காரர்களின் விசாரிப்பு வேறு விதமாக இருக்கும். உனக்கு எப்போதும் ஜாக்கிரதை போறாது. வெளியில் நகை போட்டுக்கொண்டு போகையில் அக்கம் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக போகக்கூடாதா? நகை போன துக்கம் ஒரு பக்கம், இந்த ஈவிரக்கமில்லாத விசாரிப்புகள் இன்னொரு பக்கம், எல்லாம் சேர்ந்து அந்தப்பெண் படும் பாடு இருக்கறதே அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

இதை விடக்கொடுமை என்னவென்றால் அந்தப்பெண்ணின் கணவன் இருக்கிறானே அவன் படுத்தும் பாடு ஆயுளுக்கும் தொடர் கதையாகத்தொடரும். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த நகையாக இருந்ததோ போச்சு, அவன் பேச்சைக் கேட்டு காதில் இரத்தம் வந்து விடும்.

சரி உலகத்தில் இப்படி நடக்கிறதே, நாமாவது ஜாக்கிரதையாக ஏதாவது டூப்ளிகேட் நகை அல்லது வடநாட்டுப்பெண்கள் போடுவது போல் ஏதாவது ஒரு அரை பவுனில் ஒரு செயின் கண்ணுக்குத் தெரியாமல் போடலாம் என்று நினைப்பார்களா? மாட்டார்கள், அவள் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் அவள் நகையை திருடன் அறுத்துக்கொண்டு போனான். நானெல்லாம் அப்படி அஜாக்கிரதையாக போகமாட்டேன் என்று பீத்திக்கொள்வாள். அவளும் ஒரு நாள் தன் நகையை திருட்டுக்கொடுப்பாள்.

வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும். மேலும் அவர்கள் அணிவது 18 அல்லது 14 கேரட் தங்க நகைகள்தான். நம் தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நகை மோகம் எப்படி பிடித்த்து என்று தனியாக ஒரு ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

சனி, 3 ஜூன், 2017

10. நாட்டு நடப்பு – 2

                                        Image result for யானை
தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் முக்கியமானவை திருட்டுச்செய்திகள்தான். திருட்டுகளில் பலவகை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது திருட்டுக்கொடுப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. இரண்டொரு பண நோட்டுக்களை வழியில் போட்டுவிட்டு ‘ஐயா, இந்த நோட்டு உங்களது போல இருக்குதே’ என்று கூறுவார்கள். நீங்களும் ஓஹோ, நம் பணம் தானோ என்று அதை எடுக்க முயற்சி செயவீர்கள். அந்த சமயத்தில் உங்கள் கவனம் அந்த கீழே கிடக்கும் பணத்தின் மீதுதான் இருக்கும். அப்போது அந்த திருடர்கள் உங்கள் பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. இரண்டொரு நிமிடங்கள் கழித்துத்தான் என்ன நடந்தது என்று புரியும். அதற்குள் அந்த திருடன் கண்காணாமல் போயிருப்பான்.

இந்த மாதிரியான செய்திகள் அநேகமாக வாரத்திற்கு ஒருமுறையாவது வருகின்றன. மக்கள் இந்த செய்திகளைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்று புரியவில்லை. நமக்கு இந்த மாதிரி நடக்காது என்று நினைப்பார்கள் போலும்.  ஆனால் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் மனித மனம் சபல புத்தி உள்ளது. எதுவும் சும்மா கிடைக்கிறது என்றால் அவனது புத்தி அப்போது வேலை செய்வதில்லை.

என் பாட்டி ஒரு கதை சொல்வார்கள் – ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒருவன் யானை, யானை, கடனுக்கு யானை என்று விற்றுக்கொண்டு போனான். இந்த சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, பேச முடியவில்லை, இடது கையினால் எனக்கு ஐந்து என்று சாடை காட்டினானாம்.

அது போல சும்மா கிடைக்கு மென்றால் எதுவாக இருந்தாலும் கை நீட்டுவதுதான் நம் ஜனங்களுக்கு பழக்கம். இந்த பழக்கம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பணத்தை கீழே பார்த்தவுடன் அது நம்முடையதுதானா என்று கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுக்க முயற்சிக்கிறான். நஷ்டம் அடைகிறான். இந்த ஆசையானது மக்களை மேலும் எப்படி அலைக்கழிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொடரும்....

செவ்வாய், 30 மே, 2017

9. நாட்டு நடப்பு - 1

முதலில் வெளியிட்டது :

28 பிப்ரவரி, 2009

                                                        Image result for வயதானவர்கள்
உலகத்தில் எல்லோரும் தனக்கு எல்லாம் தெரியும்; தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தினால் அடுத்தவர் சொல்லும் நல்லதைக் கேட்க விருப்பப் படுவதில்லை. ஆனால் யாராவது துர்புத்தி சொன்னால் அதை மட்டும் கேட்டுக்கொள்வார்கள். இது உலக வழக்கம்.

தனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற தெளிவு 75 வயதுக்கு மேல்தான் வருகிறது. ஆனால் அப்போது இந்த அறிவு வருவதினால் அவனுக்கு பெரிதாக நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை. ஆனால் ஒரு நன்மை உண்டு. முன்னால் கேட்பவர்கள் கேட்காதவர்கள் எல்லோருக்கும் இலவச அறிவுரை கூறி வந்ததை இப்போது நிறுத்திக்கொள்ளலாம். அப்படி நிறுத்துபவர்கள் புத்திசாலிகள். பெரும்பாலானவர்கள் அவ்வாறு நிறுத்துவதில்லை. அவர்கள்தான் தங்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்படுகிறார்கள்.

வயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா தங்களை அறியாமல் வந்து விடுகிறது. இதை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். இது மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு வயதானவரும் இந்த எச்சரிக்கையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். 

....தொடரும்....

சனி, 27 மே, 2017

8. பொது சேவை-3

                                    Image result for செம்மறியாடு

இந்திய தேசீய குணங்களில் ஒன்று செம்மறியாட்டு மனப்பான்மை. கூட்டமாக இருக்கும்போது தலைவன் என்ன சொன்னாலும் அதைப்பற்றி சிறிதும் சிந்தியாது உடனே காரியத்தில் இறங்குவார்கள். நூறு பேர் சேர்ந்து ஒரு கோஷம் போட்டால் இவனும் அவர்களுடன் சேர்ந்து கோஷம் போடுவான். என்ன, ஏது என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டான். ஆஹா நம் தலைவர் சொல்லிவிட்டார், அந்த காரியத்தை உடனே செய். அவ்வளவுதான்.அதிலும் இன, மதம், மொழி, ஜாதி விவகாரம் என்று வந்து விட்டால் அவ்வளவுதான், வேறு எதையும் பார்க்கமாட்டான். தலைவன் என்ன சொல்லுகிறானோ அதுதான் வேதவாக்கு. வெட்டு என்றால் வெட்டுவான், அடி என்றால் அடிப்பான், கொல் என்றால் கொலவான். அதன் பின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டான். 

தலைவன் தன் ஆபீஸ் ரூமின் பாதுகாப்பில் உட்கார்ந்து கொண்டு மக்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டு இருப்பான்.அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கட்சிகளை வளர்ப்பது இவ்வாறுதான். அவர்கள் சூழ்நிலையை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதும். உடனே போராட்டம் ஆரம்பித்து விட வேண்டியதுதான். 

உதாரணத்திற்கு இலங்கைத்தமிழர் பிரச்சினை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்து அகதிகளாக வருடக்கணக்கில் முகாம்களில் பல இன்னல்களுக்கு இடையே தங்கியிருக்கிறார்கள். இப்போது பல விதமான போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சித்தலைவர்கள் அந்த முகாம்களுக்குப் போயிருப்பார்களா என்பது சந்தேகமே.ஆனால் இப்போது இலங்கையில் விடுதலைப்புலிகளின் மேல் இலங்கை அரசு போர் தொடுத்தவுடன் இங்கே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் தமிழர்களின் பேரில் அப்படி ஒரு பாசம் பொத்துக்கொண்டு போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களினால் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன பயன் இருக்கிறதோ இல்லையோ, இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்ளும். 

அதே மாதிரிதான் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும். 60 -70 வருடங்களாக இதை வைத்துத்தான் திராவிட கட்சிகள் வளர்ந்துள்ளன. தமிழனின் காதில் நன்றாக பூச்சுத்தி பழகி விட்டார்கள். இந்தி மொழி மிகக்குறைந்த அளவு மக்களே தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள் என்பது இவர்களின் ஒரு வாதம். ஆனால் இந்தி  மொழி தெரிந்திருந்தால் வடநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற உண்மையை ஒத்துக்கொள்வதில்லை.

தமிழ் நாட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லாதவர்கள்தான் இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார்கள். என் போன்று அரசு வேலையில் இருந்து கொண்டு பல வட இந்தியப் பகுதிகளுக்குப் போய் வந்தவர்களுக்குத்தான் இந்த இந்தி படிக்காததின் வேதனை புரியும். இப்போது  "இந்தி எதிர்ப்பு" என்பதை "இந்தித் திணிப்பு எதிர்ப்பு" என்று வார்த்தை ஜாலம் செய்கிறார்கள். எல்லாம் ஒன்றேதான். இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் மக்கள் மாக்களாக இருக்கப்போகிறார்களோ, தெரியவில்லை.

புதன், 24 மே, 2017

7.பொது சேவை-2

         

 முதலில்  வெளியிட்ட நாள் -  ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

             
 
                               Image result for இந்திய பார்லிமென்ட்
ஒவ்வொரு நாட்டிற்கும் தேசீய குணம் என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஜப்பான் நாட்டை ஒடுத்துக்கொண்டால் அந்த நாட்டு மக்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். ஜெர்மனி நாட்டவர்கள எடுத்துக்கொண்டால் தரமான பொருட்களை தயாரிப்பதில் வல்லுநர்கள். ஐரோப்பியர்களை எடுத்துக்கொண்டால் ஒழுக்கமும்  எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் கடமையை செய்வதிலும் முனைப்பாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட குணாதசியங்கள் இருக்கிறது.

ஆனால் இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குணாதசியங்கள் என்று எதைக்கூறுவது என்பது பெரிய கஷ்டமான சமாசாரம் ஆகும். முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நாடும் மற்றவர்களும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போகட்டும்; நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற பரந்த மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

 மற்ற எல்லா நாட்டு மக்களும் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாடும் மற்ற மக்களும் நன்றாக இருந்தால்தான் நானும் நன்றாக இருக்க முடியும் என்று எண்ணி அதற்காக தங்கள் கடமைகளை சரியாகச்செய்கிறார்கள். ஆனால் இந்திய நாட்டு மக்களோ என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்று செயல்படுபவர்கள். அப்படி ஏதும் வீடு எரியவில்லை என்றால் அவர்களே வீட்டிற்கு தீ வைப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

அப்படி வைத்த தீயைத்தான் சமீபத்தில் சின்னத்திரைகளில் விரிவாகக் காட்டினார்கள். சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் காவல் துறையினரும் சட்ட வல்லுனர்களும் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்திய போராட்டம் ஒரு உச்ச கட்ட ஜனநாயகப் படுகொலை. அநாகரிகத்தின் எல்லைக்கோடு. அதுவும் ஒரு நீதிபதிக்கும் கூட தலையில் காயம் பட்டிருக்கிறது.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டது. எதிர்காலத்தில் மக்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவது கூட அச்சத்துடன்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இப்படி ஏன் நடக்கிறது என்று யோசித்தால் அதற்கு காரணம் நமது நாட்டிற்கு என்று ஒரு தேசிய குணம் கிடையாது. தேசப்பற்று கிடையாது. நாட்டின் உச்ச ஸ்தாபனமான நாடாளுமன்ற சபையிலேயே மக்களின் நடவடிக்கைகளுக்கு முன் உதாரணம் இருக்கிறது. இந்த நாட்டின் தலை விதியையே நிர்ணயிக்கும் நாடாளுமன்ற உருப்பினர்களின் நடத்தையைப் பார்க்கும்போது உயர்நீதி மன்றத்தில் நடந்தவை மிகவும் சாதாரணமானவையே. இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதற்கு நாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 தொடரும்.....

ஞாயிறு, 21 மே, 2017

6. பொது சேவை-1

                                                   Image result for உலகம் உள்ளங்கையில்                                             

ஆகவே எப்படியாவது இந்த சமூகத்தை சீர்திருத்தி விடுவது என்று தீர்மானம் செய்தாகிவிட்டது. அதை எப்படி செய்யலாம் என்று யோசித்தபோது இந்த வலைத்தளத்தை அதற்கு பயன்படுத்தலாமே என்ற எண்ணம் உதித்தது. உடனே அதை நடைமுறைப்படுத்துகிறேன்.

ஆனால் உலகத்தில் நடைமுறை எப்படியென்றால் யாரும் அடுத்தவர் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில்லை.நேற்றுப்பிறந்த குழந்தை முதல் நாளை சாகப்போகும் கிழவன் வரை யாரும் பிறர் சொல்வதை, அது நன்மையே பயக்குமென்றாலும் கேட்பதில்லை. தான் நினைத்ததுதான் சரி, எனக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறார்கள். இது மனிதனின் இயற்கை குணம். இதை யாராலும் மாற்ற முடியாது.

பிறகு ஏன் எல்லோரும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முற்படுகிறார்கள் என்றால் தனக்கு மற்றவர்களை விட அறிவு அதிகம் என்று காட்டிக் கொள்ளத்தான். அவன் சொல்வதை அடுத்தவன் கேட்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ஏன் அறிவுரை கூற முற்படுகிறான் என்றால் பின்னால் மற்றவன் ஒரு கஷ்டம் என்று சொல்லும்போது ‘’ நான் அன்றே சொன்னேனே கேட்டியா?’’ என்று குத்திக் காட்டுவதற்காகத்தான்.

 இவ்வளவு பேசும் நீ எதற்காக இப்போது அறிவுரை கூற முற்பட்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கோ வேறு வேலை இல்லை, மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால  சந்ததியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான்.

ஊதற சங்கை ஊதி வைத்தால் விடியும்போது விடியட்டும் எனகிற பரந்த நோக்கில் இந்த தளத்தைப்பயன்படுத்துகிறேன்.

தொடரும்.....

புதன், 17 மே, 2017

5. நதிமூலம்-5

Image result for அவதாரங்கள்

உலகம் உய்வதற்காக பல அவதார  புருஷர்கள் நம் நாட்டில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல. தற்கால சமூகத்தை புணருத்தாரணம் செய்ய அவதரித்துள்ள அவதார புருஷர்கள் இன்றைய இன்டர்நெட் வலைத்தளங்களில்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சேவையை நீங்களே அனுபவித்தால்தான் அதனுடைய பூரண இனபத்தைப்பெற முடியும். இருந்தாலும் என்னால் முடிந்த வரையில் விவரிக்கிறேன்.

மனிதனுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம். இந்த வலைத் தளங்கள் இந்த ஆசையை பூரணமாக நிறைவேற்றுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்கிறேன்.

‘’நான் இன்று காலையில் எழுந்தேன். பல் விளக்கினேன். காபி குடித்தேன். நாயைக்குளிப்பாட்டினேன். நானும் குளித்தேன். டிபன் சாப்பிட்டேன். என் சமையல் அறையில் கரப்பான் பூச்சி வந்தது. கம்ப்யூட்டரில் இதை எழுதினேன். ........ இப்படியே இரவு தூங்கப்போவது வரை விலாவாரியாக விவரித்து விட்டு, பிறகு தூங்குவார்கள் (என்று நினைக்கிறேன்)’’

நல்ல வேளை அதற்குப்பிறகு நடப்பவற்றை தற்சமயம் விவரிப்பதில்லை. அதைப்பற்றியும் விவரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லது அப்படி எழுதியவை என் கண்ணில் படாது போயிருக்கலாம். 

ஆஹா தேச சேவை செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கிறதா, இத்தனை நாள் நமக்கு தெரியாமல் போய்விட்டதே, நம் ஓய்வு நாளை பயனுள்ளதாய் கழித்து போகுமிடத்திற்கு புண்ணியம் தேடிக்கொள்வோம் என்று முடிவு செய்து இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன்.

எவ்வளவு நாள் நடக்கும், எத்தனை பேர் இதைப்பார்ப்பார்கள் என்றெல்லாம் எனக்கு யோசனை இல்லை. எப்படியோ, பொழுது போவதற்கு ஒரு வழி பிறந்தது. மேலும் என் மாமனார் வீட்டார் நான் பஞ்சமா பாதகத்திலிருந்து மீண்டு விட்டேன்      (அதாவது சீட்டு விளையாடுவதிலிருந்து) என்ற சந்தோஷமும் அடையவும் இந்த வேலை காரணமாய் அமைந்தது. ஆகவே எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன். இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இதுதான் இந்த வலைத்தளத்தின் நதிமூலம்..............தொடரும்..

Image result for அவதாரங்கள்