ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்



11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தோம். ஆண்டாள் சந்நிதியில் கூட்டமே இல்லை. திவ்யமான தரிசனம். ஆண்டாள் திருவுருவம் அலங்காரத்தில் அழகாக காட்சியளித்தாள். பொதுவாகவே தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் தவிர மற்ற பெருமாள் கோவில்களுக்கு மவுசு கொஞ்சம் கம்மிதான்.
பிறகு ஆண்டாள் அவதரித்த ஸ்தலத்திற்குப் போனோம். போன தடவை பார்த்ததற்கு இப்போது பரவாயில்லை. கொஞ்சம் சுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கிறார்ப்போல் இல்லை.
பெருமாளைச்சேவித்து துளசி தீர்த்தமும் சடாரியும் வாங்கிவிட்டு புறப்படும்போது மணி 12½ ஆகிவிட்டது. பசியும் வந்துவிட்டது. பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இராஜபாளையத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புறப்பட்டோம்.

இராஜபாளையம் கொஞ்சம் பெரிய ஊர் என்றுதான் அங்கு சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் ஊர்தான் நீளமாக இருந்ததே தவிர ஒரு ஹோட்டல் கூட கண்ணில் படவில்லை. எல்லா ஹோட்டல்களையும் மெயின் ரோட்டிலிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. கையில் எடுத்துக்கொண்டு போன முறுக்கு இத்தியாதிகளை மென்றுகொண்டே போனால் வழியில் எந்த ஹோட்டலும் கண்ணில் படவில்லை. ஏறக்குறைய இரண்டு மணி ஆகிவிட்டது. பசி வந்துவிட்டு போய்விட்டது.

இப்படியே போய்க்கொண்டிருக்கும்போது தென்காசி 5 கி.மீ. என்ற மைல்கல் தெரிந்தது. சரி, தென்காசியில்தான் நமக்கு மதிய உணவுக்கு ஆண்டாள் ஏற்பாடு செய்திருக்கிறாள் போல என்று மனதைத்தேற்றிக்கோண்டோம். அங்கு விசாரித்து ஒரு நல்ல ஹோட்டலைக்கண்டு பிடித்து சாப்பிட்டோம். நிஜமாகவே உணவு நன்றாக இருந்த்து. ஆண்டாளுக்கு மனசிலே நன்றி  சொல்லிவிட்டு குற்றாலம் சென்றோம்.

நாம் எல்லோருமே பல விஷயங்களைப்பற்றி, ஊர்களைப்பற்றி ஒரு விதமான கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நேரில் பார்க்கும்போது நம் கற்பனைக்கும் நிஜத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கும். நான் குற்றாலத்திற்குப் போய் பல வருடங்கள் ஆகின்றன. என் மனதிற்குள் ஒரு ரம்யமான அருவியும் இயற்கைக்காட்சிகளும் நிறைந்த ஒரு கற்பனை இருந்தது. ஆனால் நான் நேரில் கண்டதோ முற்றிலும் மாறுபட்டு  இருந்தது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக், பழைய துணிகள், காலி ஷாம்பு பாக்கெட்டுகள் இறைந்து கிடந்தன.


நாங்கள் போன கோவில்களிலும் இப்படித்தான் இருந்தது. நம் மதத்தலைவர்கள் மத மாற்றம் பற்றி பிரமாதமாகப் பேசுவார்கள். ஒரு மதத்தலைவர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘ மதமாற்றம் ஒரு கிரிமினல் குற்றம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் மற்ற மதத்தினரின் வழிபாட்டு இடங்களையும் இந்து வழிபாட்டு இடங்களையும் ஒப்பிட்டு பார்த்து இந்து வழிபாட்டு இடங்களையும் சுத்தமாக வைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? தவிர இந்து தலித் மக்களை இந்த மத குருக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

குற்றாலம் வந்துவிட்டு குளிக்காமல் போகக்கூடாது என்று நான் மட்டும் அருவியில் குளித்தேன். என் கூட வந்த மற்றவர்கள் குளிக்கவில்லை. பிறகு அங்கிருந்து கிளம்பி நேராக நெல்லை வந்து சேர்ந்தோம். நெல்லையில் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த ஓட்டலில் போய்க்கேட்டால் ரூம் இன்னும் காலியாகவில்லை, இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்கோ அலுப்பும் களைப்பும். எங்காவது உடம்பைக்கிடத்தவேண்டும் போல் இருந்தது. எப்படியும் அடுத்த நாள் திருச்செந்தூர் போவதாகத்தான் பிளான். இன்றே திருச்செந்தூர் போய்விட்டால் என்ன என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்றோம். டாக்சி டிரைவர் ஒரு லாட்ஜுக்கு கூட்டிக்கொண்டு போனார் (சிவமுருகன் லாட்ஜ்). ரூம்கள் நன்றாக இருந்தன. வாடகையும் அதிகமில்லை. ஆகவே அங்கேயே ரூம் எடுத்து தங்கினோம். பக்கத்திலேயே மணிஅய்யர் ஓட்டல். டிபன் நன்றாகவே இருந்தது. சாப்பிட்டுவிட்டு படுத்தோம். பயண அலுப்பில் உடனே தூங்கி விட்டோம்.

 
பார்க்காமல் விட்ட தென்காசி விஸ்வநாதர் கோவில்


தொடரும்.....