புதன், 3 மார்ச், 2010

பதிவுலகத்திற்கு இன்று ஒரு பிளாட்டின நாள்



ஆஹா, 3-3-2010 ஆகிய இன்றைய நாள் பதிவுலகத்திற்கு ஒரு பிளாட்டின நாள். (எத்தனை நாட்களுக்குத்தான் பொன் நாள் என்றே சொல்லிக்கொண்டு இருப்பது). நேற்று இரவு 8.30 மணி சன் நியூஸ் ஒளிபரப்பானதிலிருந்து பதிவர்கள் ஒருவரும் தூங்கவே இல்லை. அவரவர்கள் தங்கள் பதிவுகளை போட்டபின் அடுத்த பதிவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து, அவர்கள் வேண்டியவர்களாயிருந்தால் ஒரு + ஓட்டும், பின்னூட்டமும் போட்டுவிட்டு உடனே நம்முடைய பதிவில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணிவிட்டு, அப்படி ஏதாவது பின்னூட்டம் வந்திருந்தால் அதற்கு எதிர்வினை போட்டுவிட்டு, பிறகு மற்ற பதிவுகளுக்கு ஓடி, இப்படியாக ராத்திரி பூராவும் முழித்திருந்து ஓவர்டைம் வேலை செய்தார்கள்.

கொஞ்ச நாட்களாகவே பதிவுலகம் மிகவும் டல்லாகிப்போய் விட்டது. டோண்டு, போலி டோண்டு விவகாரம் சுவாரஸ்யமாக பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது (டோண்டு ராகவன் மன்னிப்பாராக). அதன் பிறகு ஜ்யோவ்ராம் சுந்தரும் இன்னொருவரும் குஸ்தி பழகி சுந்தர் ஆஸ்பத்திரி போய் வந்ததில் பதிவுலகம் கொஞ்ச நாள் நன்றாக இருந்தது. அப்புறம் நம் ஜோக்கர் பதிவர் அவ்வப்போது வெறும் வாயை மெல்லுவதற்கு அவல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரையும் சொஞ்ச நாட்களாக காணவில்லை. பதிவுலகம் ரொம்பவுமே டல்லடித்துக்கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக, அநாதரட்சகனாக, அவதார புருஷனாக வந்து கைகொடுத்த நித்திய ஆனந்தனுக்கு பதிவர்கள் எல்லோரும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அவரை நமக்கு அடையாளம் காட்டிய சன்நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் பதிவர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.




நிற்க, ஒரு சமயம் ஆனந்தர் நம் சகாயத்திற்கு வராமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். பதிவிடுவதற்கு இது மாதிரி வேறு விஷயம் கிடைக்குமா? எவ்வளவு பதிவுகள், பின்னூட்டங்கள், எதிர்வினைகள் ? ஒவ்வொரு பதிவரும் நாம் இந்த ரேசில் கலந்து கொள்ளாவிட்டால் நம் ஜன்மம் சாபல்யமடையாது என்ற ஒரே நோக்கத்துடன் பதிவுகள் போட்டுவிட்டார்கள். இன்னும் பதிவு போடாதவர்கள் வெளிநாட்டு பதிவர்களும் பெரும்பான்மையான பெண் பதிவர்களும்தான். நான் நேற்றே 8.30 மணி செய்தி வெளியான சில நிமிடங்களில் 8.40க்கு என் பதிவைப்போட்டுவிட்டேன். அநேகமாக நான்தான் பர்ஸ்ட் ஆக இருக்கலாம். சரி, இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஏன் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. நமக்கு வழக்கமாக நாலு ரவுண்டு போட்டால்தான் சரிப்படும். இரண்டாவது ரவுண்டு ஆரம்பித்துவிட்டேன். ஜாயின் பண்ணுபவர்கள் ஜாயின் பண்ணலாம்.