ஞாயிறு, 26 டிசம்பர், 2010

குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம்தானே?



இயற்கை விவசாயம். இதற்கு எதிர்ப்பதம் என்ன? செயற்கை விவசாயம். சரிதானே! இந்த இரண்டு வார்த்தைகளையும் மறந்து விடாதீர்கள். நம்முடைய விவாதத்திற்கு இந்த இரண்டு வார்த்தைகளும் மிகவும் முக்கியம்.

முதலில் இயற்கை விவசாயம் என்றால் என்ன என்று பார்ப்போம். இன்று இயற்கை விவசாயத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் சொல்வது. விவசாயத்தில் இயற்கையாக கிடைக்கும் பொருள்களை மட்டும் உபயோகித்து பயிர் செய்வது. அதாவது உரத்தை எடுத்துக்கொண்டால், தொழு உரம், கம்போஸ்ட் உரம், பசுந்தாள் உரம், எண்ணைவித்து புண்ணாக்குகள், இப்போது பிரபலமாக இருக்கும் பஞ்சகவ்யம், இவை போன்றவைகளை மட்டும்தான் பயிர்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். பயிர்களுக்கு பூச்சி, நோய் வந்தால் வேப்பெண்ணை, நோய் கண்டு இறந்த பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, இப்படிப்பட்ட தடுப்பு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



விதைகளுக்கு எந்த ரசாயனப் பூச்சும் போடக்கூடாது. பயிர்கள் வளர்வதற்கு எந்த ரசாயன மருந்தையும் அடிக்கக் கூடாது. பஞ்சகவ்யம் மட்டும் அடிக்கலாம். பூக்கள், காய்கள் உதிர்வதைத் தடுக்க, பழங்கள் பெரிதாவதற்கு, களைகளை தடுப்பதற்கு என்று எந்தக் காரியத்திற்கும் ரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. இந்த லிஸ்ட்டில் ஏதாவது விட்டுப்போயிருக்கலாம். ஆனால் பொதுவான கருத்து இதுதான். பண்ணைக்குள் எந்த ரசாயனமும் வரக்கூடாது. இயற்கைப் பொருள்களைக் கொண்டுதான் எல்லா வேலைகளும் நடக்கவேண்டும்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், ரசாயனங்களை பயன் படுத்தினால் அவை பழம், காய், தானியங்கள் அவைகளில் சேர்ந்து நாம் சாப்பிடும்போது நம் உடலில் சேர்ந்து விஷமாக மாறிவிடுகின்றது. நாளாவட்டத்தில் இந்த விஷம் அதிகரிப்பதினால்தான் இன்று இவ்வளவு டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். இயற்கை விவசாயம் செய்து அதிலிருந்து வரும் மகசூலை மட்டும் சாப்பிட்டால் மனிதனுக்கு நோய் வராது. வந்தாலும் அதை குணப்படுத்த இயற்கை வைத்தியம் இருக்கிறது. இப்போது கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் டாக்டர்கள் எல்லாம் மம்மட்டியை தூக்கிக்கொண்டு இயற்கை விவசாயம் செய்யப் போக வேண்டியதுதான்.

இதைப் படிக்கும் ஐயாமார்களே, அம்மாமார்களே, சிறுவர் சிறுமிகளே, இப்படிப்பட்ட நிலைமை வந்தால் எப்படியிருக்கும்? பூலோகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம். எல்லோரும் மிகவும் ஆரோக்யமாக இருப்பார்கள். எல்லோருடைய ஆயுளும் நூறு வயது வரைக்கும் நீடிக்கும். இன்னும் என்னென்னவோ நன்மைகள் எல்லாம் சித்திக்கும். அத்தனையையும் எழுதினால் இடம் போதாது என்பதால் அவைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். எனக்கு இப்போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. “அந்த நாளும் வந்திடாதோஎன்று பாடலாம் போல இருக்கிறது.

இந்தப் பதிவில் என்னமோ நக்கல் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறு ஒன்றுமில்லை. அதனால் நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி என்று கணக்குப்போடாதீர்கள். நான் இயற்கை விவசாயத்தை முழுவதுமாக ஆதரிக்கிறேன். என்னுடைய ஒரே கவலை என்னவென்றால், இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதுதான். ஏன் நடக்காது? மனிதன் மனது வைத்தால் நடக்காதது ஒன்றுமில்லை என்று ஆணித்தரமாக சொல்பவர்கள் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் எத்தனை காலமாக வறுமையை, ஊழலை, லஞ்சத்தை, ஜாதியை, குழந்தைத் தொழிலாளர்களை, கலப்படங்களை, இன்னும் எத்தனையோ சமூக விரோத செயல்களை ஒழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நடக்குமா ? நடக்காதா ? பொறுத்திருந்து பாருங்கள்.



இதுக்கு என்ன பேரு வைக்கலாம்?