புதன், 6 ஜூலை, 2011

தீவிர உடல் நலக்குறைவு ஏற்படும்போது…..




ஒவ்வொரு குடும்பத்திலும் திடீரென்று யாருக்காவது தீவிர உடல் நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பொதுவாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை எப்படியிருந்தாலும் அந்த நபரை அந்த ஊரிலுள்ள பெரிய, தனியார் ஆஸ்பத்திரிக்குத்தான் பொதுவாக கூட்டிச்  செல்வார்கள். எப்படியாவது, என்ன செலவானாலும் சரி, இவரைப் பிழைக்க வையுங்கள் என்று சொல்வார்கள் இப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரர்களாகவே இருக்கும். அந்த நபருக்காக செலவு செய்யும் குடும்ப அங்கத்தினர் அழுது கொண்டு இருப்பாரே தவிர, இந்த முடிவுகளில் தலையிடக்கூடிய மன நிலையில் இருக்க மாட்டார்.

வசதி இல்லாதவர்கள் முதல் நாள் செலவைப் பார்த்தே, இது நமக்குக் கட்டுப்படியாகாது என்று கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

மிகப் பணக்காரர்களுக்கு இந்த செலவுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இந்த இரண்டும் கெட்டானாக இருக்கிற நடுத்தர மக்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். சரியான முடிவு எடுக்க முடியாமல், திண்டாடி, சரி, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று கடன் வாங்கி அந்த தனியார் ஆஸ்பத்திரியிலேயே வைத்தியம் பார்ப்பார்கள்.

அந்த ஆள் உடல் நலம் தேறி, வீட்டுக்கு வந்தால், அவரின் மிச்ச ஆயுள் முழுவதும்  இந்த கடனை அடைக்கவே சரியாயிருக்கும். பல சமயங்களில் இந்தக் கடன் தீர்வதற்குள்ளாகவே அவர் போய்ச் சேர்ந்து விடுவார். அவருடைய குடும்பம் சின்னாபின்னமாகப் போய்விடும்.

நீதி: இந்த நிலை ஒரு குடும்பத்தில் இருக்குமானால் அவரை அரசாங்க ஆஸபத்திரியில் சேர்ப்பதே நல்லது. அரசாங்க ஆஸபத்திரிகளிலும் வைத்தியம் நன்றாகவே செய்கிறார்கள்.