சனி, 7 ஜனவரி, 2012

சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?

அவைநாயகன் எனும் நா.சபாபதி, போக்குவரத்துத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி, சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை செய்து வருகிறார். அவர் தன்னுடைய பதிவில் சக பதிவர்களுக்காக ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். இப்போது நடக்கும் சாலைப் பாதுகாப்பு வாரம் முடிவடையும் நாளான 7-1-2012 அன்று, அனைத்துப் பதிவர்களும் சாலைப் பாlதுகாப்பு பற்றி ஒரு பதிவு இட்டால் சாலை விபத்துகள் குறையலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதை திரு. தருமி அவர்களும் தன்னுடைய பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார். அவைநாயகன் அவர்களின் ஆதங்கத்தைப் பாருங்கள்.

"என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?
அவைநாயகன் எனும் நா.சபாபதி"  


சாலை விபத்துகளைப் பற்றி 13, ஜூன், 2011 ல் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்தப் பதிவு இன்றும் பொருத்தமாகவே இருப்பதால் அதை இன்று மீள்பதிவு செய்கிறேன்.



சமீப காலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன. நான் பல ஆண்டுகளாக இந்த விபத்துகளை கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுவான சில காரணிகள் என் மனதிற்குத் தோன்றின. அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

   1.   அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா? இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாக பயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது. சீக்கிரம் போகவேண்டுமென்று அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது பல தவறுகள் நிகழும். அதனால் நிச்சயமாக விபத்துகள் ஏற்படும்.

   2.   உடல் சோர்வு: உடலுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் அது ஒரு கட்டத்தில் நம் அனுமதி கேட்காமலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள முயலும். இது உடலின் இயற்கை. இயற்கை விதிகளை மீறுவதால் ஏற்படும் அனர்த்தங்களை வேறு பல சூழ்நிலைகளிலும் காண்கிறோம். வாகனம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக விபத்தை உண்டாக்கும்.

ஆனால் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்பவர்களை என்ன செய்ய முடியும்?

   3.   தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். அது உயிர்த் தியாகத்தில் முடியும் என்பதை உணருவதில்லை. எவ்வளவுதான் அனுபவம் உள்ள ஓட்டுநர்களானாலும் அவர்களின் உடம்பும் மற்றவர்களின் உடம்பு மாதிரிதானே ?
  
அறுபது கிலோமீட்டர் வேகத்தில் போகும் வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் போகும், அதாவது ஒரு விநாடிக்கு 16.7 மீட்டர் அல்லது ஏறக்குறைய 50 அடி தூரம். ஓட்டுபவர் ஒரு விநாடி கண் மூடினால் வாகனம் 50 அடி சென்றுவிடும். அந்த 50 அடிக்குள் ஒரு பாலம் இருக்கலாம். அல்லது ஒரு வளைவு இருக்கலாம். அதைக் கவனிக்க முடியாததால் விபத்து ஏற்படலாம்.

   4.   தேவையற்ற ரிஸ்க்: ஒருவர் சென்னையில் வியாபாரியாக இருப்பார். சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அவருடைய சொந்தங்கள் ஒரு விசேஷம் வைத்திருந்தால், அவர் என்ன செய்வார் என்றால் – சனிக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு ஒரு டாக்சியில் புறப்படுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குப்போய் அந்த விசேஷத்தைப் பார்த்துவிட்டு, அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு திங்கள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்து வழக்கம்போல் வியாபாரத்தைக் கவனிப்பதாகத் திட்டம்.

திட்டம் என்னமோ நல்ல திட்டம்தான். ஆனால் அந்த ஓட்டுநர், சனிக்கிழமை பகல் முழுவதும் வேலை செய்திருக்கக் கூடும். அவருடைய முதலாளி வரும் கிராக்கியை விட மனமில்லாமல் இந்த ஒட்டுநரையே அனுப்புவார். அவருக்கும் வேறு ஓட்டுநர் கைவசம் இருந்திருக்கமாட்டார். இந்த ஓட்டுநரும் கிடைக்கப்போகும் அதிக ஊதியத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்வார்.

நிகழ்வதென்ன? விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான்.

   5.   வாகனத்தின் தன்மையை அறியாதிருத்தல்: வாடகை வண்டிகள் ஓட்டும் ஓட்டுநர்கள் வழக்கமாக ஒரே வண்டியைத்தான் ஓட்டுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வண்டியின் நெளிவு சுளிவுகள் நன்றாகத் தெரிந்திருக்கும். சில சமயம் அவர்கள் வேறு வண்டிகளை ஓட்டவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் அந்த வண்டியை ஓட்டவேண்டும். ஆனால் அதிக அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பழைய வண்டி ஞாபகத்திலேயே ஓட்டுவார்கள்.

இதுவும் விபத்துக்களை ஏற்படுத்தும்.

   6.   அதிக பயணிகள்: சொந்த வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனம் ஓட்டும்போது மிகுந்த வித்தியாசம் தெரியும். வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.

   7.   செல்போன்: விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் செல்போன்தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். ஆனால் இதுவே, முறையற்ற பயன்பாட்டினால் பல அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியது.


எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸ்ஸை ஓட்டுகிறார்கள். ஆங்காங்கே வைத்திருக்கும் போர்டுகளில் ‘’ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் ‘’ என்று விளம்பரம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள். எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது? 

   8.   ஆணவம் அல்லது Road Rage: நல்ல சாதுவான, பொறுமையான மனிதர்கள் கூட வாகனம் ஓட்டும்போது தங்கள் இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் என்று சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ, பெரும்பாலான சமயங்களில் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

   9.   சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. அல்லது அவை போலீஸ்காரர் இருக்கும்போது மட்டும்தான் அமலில் உள்ளவை என்று நினைக்கிறோம். மேலை நாடுகளில், நடு இரவில் கூட சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நின்றுதான் செல்லும் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் மடையர்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.

சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு சேரும்.

புதன், 4 ஜனவரி, 2012

2012 ம் வருடத்தில் இன்பமாக இருக்கப் போகிறேன்.



மனித மனம் எப்போதும் இன்பத்தையே விரும்புகிறது. துக்கத்தை வெறுக்கிறது. இது இயற்கை. ஆனாலும் இன்பம் துன்பம் இரண்டமே கலந்துதான் வாழ்க்கை அமைகின்றது. இதில் துன்பத்தை விலக்கி இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது என்று எனது பதிவுலக வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

யாரோ ஒருவன் சொன்னானாம். “என் உயிரே போவதாக இருந்தாலும் சரி, நான் இந்த சுகத்தை பூரணமாக அனுபவிக்கப்போகிறேன்.”

நான் அப்படியெல்லாம் உயிரை விடுவதாக இல்லை. ஆனாலும் உயிரை விடாமலேயே இன்பமாக இருக்க பல வழிகள் இருக்கும்போது எதற்காக வீணாக உயிரை விடுவானேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்கிற பரந்த மனப்பான்மையின் காரணமாக அந்த வழிகளை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.  

   1.   வம்பு பேசுதல்.

இரண்டு நண்பர்கள் பேசினால் அவர்கள் பேசுவது மூன்றாவது நண்பனைப்பற்றித்தான் என்று ஒரு பொன்மொழி உண்டு. காரணம் இந்த மாதிரி வம்பு பேசுதில் உள்ள இன்பம் வேறு எதைப் பற்றி பேசுவதிலும் இல்லை. அந்த மூன்றாவது நண்பன் உண்மையான நண்பனாக இருந்தால், மற்ற இருவரும் அவனைப்பற்றி பேசி இன்புற்றார்கள் என்று தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படவேண்டும்.

இந்தக் காரணத்தினால்தான் நண்பர்கள் எங்காவது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் அங்கு தவறாது ஆஜர் ஆகி விடவேண்டும். இல்லையென்றால் அன்றைய தாளிப்புக்கு நீங்கள்தான் கருவேப்பிலை.

   2.   அடுத்தவர் சண்டையை வேடிக்கை பார்த்தல்.

இதில் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெறும் இன்பம் மட்டுமே. அதிலும் நிஜ உலகத்தில் நடப்பவைகளை விட பதிவுலகத்தில் நடக்கும் சண்டைகளே அதிக சுவாரஸ்யமும் பரபரப்பும் உள்ளவை. நமக்கு எந்த விதமான ரிஸ்க்கும் கிடையாது. இதில் ஒரே வருத்தம் என்னவென்றால் தற்சமயம் பழைய மாதிரி சண்டைகள் அடிக்கடி நடப்பதில்லை. முற்போக்கு பதிவர்கள் இந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.

   3.   டெம்ப்ளேட்/எமோடிகான் பின்னூட்டங்கள் போடுதல்.

ஆஹா, இதில் இருக்கும் த்ரில் + இன்பம் வேறு எதிலும் கிடையாது. இந்த கமென்ட்டுகளைப் பார்க்கும் பதிவர்கள் உடனே கயிற்றை எடுத்துக்கொண்டு புளியமரத்தை தேடிக்கொண்டு ஓடவேண்டும்.

   4.   மொக்கைப் பதிவுகள் போடுதல்.

அந்தப் பதிவுகளைப் படிக்கும் வாசகர் அதன் பிறகு பதிவுலகையை திரும்பிப் பார்க்கக் கூடாது. எவ்வளவுக் கெவ்வளவு மொக்கை போடுகிறாரோ அந்த அளவு அவர் பிரபலமாவார். அதனால் வரக்கூடிய இன்பமே இன்பம். (அடுத்த பதிவர் சங்கமத்தில் அதிக மொக்கை போட்டவர்களுக்கு ஒரு விருது கொடுக்குமாறு அமைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் மொக்கைகள் அதிகரிக்கும்). அப்படி கொடுக்காவிட்டால் மொக்கைப் பதிவர்கள் சங்கமம் என்று தனியாக ஆரம்பிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

   5.   பதிவர்கள் சந்திப்பு.

இவை நடந்தால் எல்லோருக்கும் ஆனந்தமே. கலந்து கொண்டால் நல்ல விருந்து சாப்பிடலாம். கலந்து கொண்டாலும்  கொள்ளாவிட்டாலும் நாலைந்து பதிவுகளுக்கு மேட்டர் தேத்தி விடலாம். என்ன ஒரு இன்பமான நிகழ்வு. வம்பு பேசுவதற்கும் நல்ல, நல்ல ஆட்களின் அறிமுகம் கிடைக்கும். ஏன் ஈரோட்டிலும் நெல்லையிலும் மட்டும் இந்த சந்திப்பு நடக்கவேண்டும். மற்ற ஊர்க்காரர்களுக்கு மானம் ரோஷம் இல்லையா? மற்ற இடங்களிலும் நடந்தால் அப்புறம் பதிவர்களுக்கு எழுத விஷயத் தட்டுப்பாடே இருக்காது. இதுதான் டாப் இன்பமான சமாசாரம்.

   6.   ஓசியில் சினிமா பார்த்தல்.

பிரிவியூ ஷோவிற்கு அழைப்பிதழ் கிடைத்து பஜ்ஜி காப்பியுடன் சினிமா பார்க்கும் இன்பமே இன்பம். என்ன ஒரே பின்விளைவு என்றால் அதைப் பற்றி உயர்வாக ஒரு விமர்சனம் நம் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எழுதி பதிவில் போடவேண்டும்.

2013 ம் வருடத்திற்கான இன்பமாக இருப்பது பற்றிய வழிகள் அடுத்த வருடப் பிறப்பு அன்று பதிவிடப்படும்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

நான் பதிவுலகில் சாதித்தது என்ன?


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



இது என்னுடைய 300 வது பதிவு.

மூன்று வருடத்தில் இதைப் பெரிய சாதனை என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ஒரு வருடத்திலேயே இதைவிட அதிக பதிவுகள் போட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். தான் பதிவராக இருப்பதால் தனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள் என்று பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். எனக்கும் அப்படி ஓரிரண்டு நண்பர்களும், பல அறிமுகங்களும் கிடைத்துள்ளன. பதிவுலகத்திலுள்ள சில பேருக்கு என் பதிவு பரிச்சயமாகி இருக்கிறது. இதைத் தவிர நான் பதிவுகள் எழுதி என்ன சாதித்தேன் என்று இந்தப் புதுவருடத்தன்று யோசித்தால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் பல பதிவர்கள், பதிவு போடுவதால் தனி மனித, சமூக, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். தங்களுக்கும் தனிப்பட்ட முறையில் பல உதவிகள் கிட்டியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இது அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.

இன்னும் ஒரு விஷயம். பதிவுலகில் எல்லோரும் ஆசைப்படுவது என்னவென்றால் தங்கள் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டம் வரவேண்டும், நிறைய ஹிட்ஸ் வரவேண்டும். தமிழ்மணம் திரட்டியில் நல்ல ரேங்க் வரவேண்டும். இந்த ஆசைகளில் தவறு ஒன்றும் கிடையாது. நானும் இந்த ஆசையில் சிக்குண்டவன்தான். ஆனால் இந்தப் புது வருட தினத்தன்று  யோசித்தால் இந்த ஆசைக்காக நான் இழந்தது, இழந்துகொண்டிருப்பது மிகவும் அதிகம். இது தவிர்க்கப்பட வேண்டியது என்று உணர்கிறேன்.

பதிவுலகம் ஒரு மாயா உலகம். நிஜ உலகத்தில் பெயர் வாங்கினாலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது. மாயா லோகத்தில் பெயர் வாங்கி என்ன செய்யப் போகிறோம். நிஜ உலகில் எனக்குத் தெரிந்தவர்களில், நான் பதிவு எழுதுவதைத் தெரிந்தவர்களை, ஒரு கை விரல்களை மட்டும் விட்டு எண்ணி விடலாம். இப்படிப்பட்ட ஒரு மாயைக்காக நான் எவ்வளவு சமரசங்கள் செய்திருக்கிறேன் என்று பார்த்தால், நான் தேவைக்கதிகமாக விலை கொடுத்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்த விலை கொடுப்பது அவசியமா என்றும் சிந்திக்கிறேன்.

புது வருடத்தில் உங்களுக்கு ஒரு கதை சொல்லலாம் என்று ஆசைப் படுகிறேன். பழைய, எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

வால் அறுந்த நரியின் கதையை எல்லோரும் கேட்டிருக்கிறோம். எங்கோ ஒரு இயந்திர பொறியில் சிக்கி ஒரு நரியின் வால் அறுந்து போய்விட்டது. இது ஒரு பெரிய அவமானம். ஆனால் நரிகள் இயற்கையாகவே புத்திசாலிகளல்லவா? அதனால் அந்த நரி யோசித்து ஒரு திட்டம் போட்டது. மற்ற நரிகள் வரும் வழியில் போய் நின்றுகொண்டது. நரிகள் வருவது தெரிந்தால் உடனே வானத்தைப் பார்த்து நின்று கொள்ளும். வானத்தில் எதையோ பார்த்து பரவசமடைவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும்.

சக நரிகள் பக்கத்தில் வந்து என்ன செய்கிறாய் என்று கேட்டால் வாலறுந்த நரி, ஏதோ மயக்கத்திலிருந்து விழித்த மாதிரி பாவனை செய்து “என்ன, ஏதாவது கேட்டீர்களா” என்று கேட்கும். அப்போது மற்ற நரிகள் “ஆமாம், ஏதோ ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாயே, அதுதான் என்னவென்று கேட்டோம்” என்று சொல்லின. அதற்கு வாலறுந்த நரி சொல்லியது: “எனக்கு வால் அறுந்த பிறகு ஆகாயத்தில் கடவுள் தெரிகிறார்” என்றது. இப்படியே பல நாடகள் ஆகின. மற்ற நரிகள் இந்த வாலறுந்த நரி சொல்வது உண்மையாக இருக்கலாமோ என்று நினைக்கத் தொடங்கின. இரண்டொரு நரிகள் வாலை அறுத்துக்கொண்டன. பிறகு அவைகள் வானைப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை.

அப்போதுதான் அவைகளுக்கு மண்டையில் உறைத்தது. ஞானம் பிறந்தது. ஆஹா, இந்த வாலறுந்த நரி நம்மை ஏமாற்றிவிட்டது பார் என்று கோபமடைந்தன. தாம் ஏமாந்துவிட்டோம் என்று தெரிந்தது. ஆனால் இதை வெளியில் சொன்னால் மானம் போகும். ஆகவே நாங்களும் கடவுளைக் கண்டோம் என்று சொல்லுவோம் என்று நினைத்து, புதிதாக வாலறுத்துக்கொண்ட நரிகளும் கடவுளைக் கண்டோம் என்று சொல்ல ஆரம்பித்தன. இவ்வாறாக அந்தக் காட்டிலுள்ள அனைத்து நரிகளும் வாலறுத்துக் கொண்டன.

பதிவுலகத்திற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது உங்கள் பொறுப்பு என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புது வருடப் பிறப்பன்று ஏதாவது புது வருடத் தீர்மானங்கள் போடாவிட்டால் நன்றாக இருக்காது. அதற்காக இரண்டு தீர்மானங்கள்.

    1.   பதிவர்கள் தங்கள் பதிவுகளைப் பற்றி ஈ.மெயில் அனுப்பினால் அந்தப் பதிவுகள் புறக்கணிக்கப்படும்.

    2.   பின்னூட்டங்களில் தங்கள் பதிவுகளின் சுட்டிகள் இருந்தால் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது.

                 வணக்கம், நன்றி.