திங்கள், 4 ஜூன், 2012

தலைமுறை இடைவெளி என்பது என்ன?


நேற்று என் பேரன்கள் - பேரர்கள் என்று மரியாதையாகச் சொன்னால் அர்த்தம் வேறு விதமாகப் போய்விடும்- KFC போய் விட்டு வந்தார்கள். அங்கு என்ன விசேஷம் என்று கேட்டால் "அதெல்லாம் உங்களுக்குப் புரியாது தாத்தா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

அப்புறம் வெளியில் விசாரித்ததில் தெரிய வந்தது. கோழிக்கறிக்கு முலாம் பூசி கொள்ளையடிக்கும் இடம் என்று சொன்னார்கள். கோரைப் பாயில் படுத்துத் தூங்குகிறவனுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் ரூமில் படுக்கவைத்தால் அவன் எப்படித் தூங்குவான்?

இந்தக் காலத்துப் பசங்களுக்கு அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க அவர்கள் பெற்றோர் தயங்குவதில்லை. நமக்குத்தான் அந்தக் காலத்துல அனுபவிக்க முடியலே. நம்ம பசங்களாவது அனுபவிக்கட்டுமே என்பது அவர்கள் எண்ணம். நமக்கு ஒவ்வொரு பைசாவையும் எண்ணி செலவு செய்துதான் பழக்கம். எதுவானாலும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க என்பதுதான் நம் காலத்தில் எழுதாத சட்டம்.

அப்புறம் இன்னொண்ணு. இந்தக் காலத்துப் பசங்க காசைத் தொடுவதே இல்லை. எதற்கும் அட்டைகள்தான். காசு எங்கிருந்து, எப்படி வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

அந்தக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு போவோம். "அரை டவுசர்" என்பது சிறு பையன்களைக் குறிக்கும் சொல். ஒருநாள் ஜவுளிக்கடையில் 70 வயசு கிழவர் முக்கால் பேன்ட் வாங்கிக்கொண்டிருந்தார். என்ன சார், பேரனுக்கா என்று கேட்டேன். இல்லைங்க, எனக்குத்தான் என்றார். அவர் அமெரிக்காவிலிருக்கும் கமனைப் பார்க்கப் போகிறார். அங்கே அதுதான் பேஷனாம்.

அந்தக் காலத்தில முடி வெட்ட காசு இல்லாமல் முடி காடாக வளர்ந்தாருக்கும். இப்ப என்னடா என்றால் அதுதான் பேஷன் என்கிறான் என் பேரன்.

இதுதாங்க தலைமுறை இடைவெளி. இன்னும் என்னென்ன கண்றாவிகளெல்லாம் வரப்போகுதோ, தெரியாது. அதுக்குள்ள போய்ச்சேர்ந்துட்டா பரவாயில்லை.