சனி, 25 ஆகஸ்ட், 2012

இலவசக் கலாச்சாரம் ஏன்?


இலவசம்னு சொல்லக்கூடாதாம், "விலையில்லா" என்று சொல்லணுமாம். அம்மாவின் லேடஸ்ட் அறிவுறுத்தல். "விலையில்லா" என்றால் மதிப்பில்லாதது என்றே என் களிமண் மூளை சிந்திக்கிறது. அதனால் இலவசம் என்றே நாம் கூறுவோம். இலவசம் என்றாலும் மதிப்பில்லாததுதான். ஆனாலும் இந்த வார்த்தை பழகிப்போனதால் அவ்வளவு கேவலமாகத் தெரியவில்லை.

என் பாட்டி ஒரு கதை சொல்லும். ஒருத்தன் சாப்பிட்டுட்டு இருந்தானாம். அப்போது வீதியில் ஒருத்தன் "யானை வாங்கலியோ யானை, யானை கடனுக்கு விற்கிறோம்" அப்படீன்னு கூவிட்டுப் போனான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, வாயைத்திறந்து பேச முடியவில்லை. இடது கையினால் ஐந்து என்று ஜாடை காட்டினானாம். ஆகவே மக்கள் கடனில் கிடைக்கிறது என்றால் யானையைக்கூட ஐந்து வாங்க விரும்புகிறார்கள். கடனும் இலவசமும் ஒன்றுதான் என்று என்னுடைய போன பதிவைப் படித்தவர்களும்முத் தெரியும்.

ஏன் ஒவ்வொரு அரசும் பதவி ஏற்றவுடன் இலவசங்களை அறிவிக்கிறார்கள் தெரியுமா? ரஷ்யப் புரட்சி பற்ற அறிந்தவர்களுக்குத் தெரியும். அந்தப் புரட்சி சமுதாயத்தின் அடித்தள மக்கள் பட்டினியினால் அவதிப்பட்டதால் வந்தது. இதை நம் அரசியல்வாதிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அடித்தள மக்கள் பட்டினியால் வாடாமலிருக்க தேவையான இலவசங்களைக் கொடுத்து அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களும் நாம் மயங்கிக்கிடக்கிறோம் என்ற உணர்வில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் சொந்தக் காசிலிருந்தா இந்த இலவசங்களைத் தருகிறார்கள்? எல்லாம் மக்கள் வரிப்பணத்திலிருந்துதானே நடக்கிறது. அப்படி வரிப்பணம் போதாவிட்டால் கடன் வாங்குகிறார்கள். எங்கிருந்து வாங்குகிறார்கள்? இதற்காகத்தானே உலக வங்கி போன்ற நிறுவனங்க்ள இருக்கின்றன.

சரி, கடன் வாங்கினால் எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கேட்கிறீர்களா? சுத்த விவரங்கெட்ட ஆளா இருக்கிறீங்களே? என்னுடைய பதிவுகள்ப் படிப்பதில்லையா? இப்பத்தானே ஒரு பதிவு போட்டேன். கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை என்று. இந்தக் கொள்கைக்கு அரசுதான் வழிகாட்டி. இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.

இலவசங்களுக்கு வருவோம். சாப்பாட்டுக்கு இலவச அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க என்ன செய்வது? அதற்குத்தான் இலவச டி.வி. யும் இலவச மின்சாரமும். இதெல்லாம் சரி, அப்பப்ப "கிக்" வேண்டுமே, அதற்கென்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் வேலை வாய்ப்புத்திட்டம். ஒரு தாளைக்குப் போய் புளிய மரத்தடியில் நான்கு மணி நேரம் உட்கார்ந்து கொண்டு ஒரு தூக்கம் போட்டால், தூங்கி எழுந்தவுடன் ஒரு குவார்ட்டருக்குத் தேவையான காசு கொடுக்கப்படும்.

வெயில் கடுமையாக இருக்கிறதா? இதோ ஃபேன். ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி கை வலிக்கிறதா? இதோ கிரைண்டர். குழம்புக்கு ஆட்டவேண்டுமா? இதோ மிக்சி. என்ன இல்லை நம் தாய்த்திரு நாட்டில்? சரி, நம்ம தோஸ்த் கூடப் பேசணுமே? என்ன பண்றதுன்னு யோசனையா? இதோ செல் போன் வந்து கொண்டே இருக்கிறது.

எல்லாம் சரி, தினசரி வெளிக்கி வருதே, அதுக்கு என்ன பண்றதுன்னு கேக்கப்படாது. இந்தியாவில பொறந்த ஒவ்வொருத்தனுக்கும் இதுக்கு என்ன பண்ணனும்னு தெரியும். ஊரு நாத்தமடிக்குதே? அதப்பத்தி நீ ஏனய்யா கவலைப் படறே? உன் காரியம் ஆச்சா? உன்வேலையைப் பார்த்தமான்னு இரு.