செவ்வாய், 2 அக்டோபர், 2012

லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதுவும் குற்றம்


மகாத்மா காந்தி நினைவுப் பதிவு

இந்த இரண்டும் குற்றமே இல்லை. போலீசில் மாட்டிக் கொள்வதுதான் குற்றம். நன்கு படித்த ஆசிரியர் சொல்லும் வார்த்தையா இது என்று பலரும் நினைக்கலாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இப்படி அடுக்கு மொழியில் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் நம் நாட்டின் நடைமுறையில், நான் மகாத்மா காந்தி மாதிரி சத்தியம் மட்டும்தான் பேசுவேன் என்று வாழும் தைரியம் எனக்கு இல்லை. ஒன்று மட்டும் என்னால் முடிந்தது. என் வாழ் நாளில் நான் எதற்கும் லஞ்சம் வாங்கியதில்லை. அப்படி வாய்ப்புள்ள வேலையில் நான் இருக்கவில்லை என்பதுதான் முழு உண்மை.

நான் பல இடங்களில் லஞ்சம் கொடுத்திருக்கிறேன். அதைப் பெரிய சாதனையாகவோ, கெட்டிக்காரத்தனமாகவோ நான் கருதவில்லை.   அதை நான் நியாயப் படுத்தவும் இல்லை.  என்னால் நேர்வழியில் சென்று அந்தக் காரியத்தை முடிக்க இயலவில்லை. அது என் கையாலாகத்தனம். அதை ஈடுகட்ட இந்த உபாயத்தைக் கையாண்டேன். அவ்வளவுதான்.

உதாரணத்திற்கு ஒரு காரியம். அந்தக்காலத்தில் கவர்ன்மென்ட் வேலை எதுவென்றாலும் அதற்குரிய பீஸை டிரஷரியில் கட்டி அந்த செலானைக் கொடுக்கவேண்டும். இந்த மாதிரி செலான் மூலம் பணம் கட்டியிருப்பவர்களுக்கு அதன் நடைமுறைகள் தெரியும்.

செலான் பாரம் வாங்குவதே ஒரு கலை. அதைப் பூர்த்தி செய்து உள்ளே கொடுத்தால் ஒரு மணி நேரம் கழித்து அதற்கு ஒரு நெம்பர் போட்டுக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுபோய் ஸ்டேட் பேங்கில் பணம் கட்டவேண்டும். ஏகப்பட்ட பேர் இருப்பார்கள். பணம் கட்டவே ஒரு மணி நேரம் ஆகும். பின் செலான் வர மாலை ஐந்து மணி ஆகும். கட்டாயம் ஒரு நாள் ஆகும்.

இந்த வேலையை முடித்துக்கொடுக்க புரோக்கர்கள் உண்டு. அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பணமும் கமிஷனும் கொடுத்துவிட்டு மறுநாள் போனால் செலான் ரெடியாக இருக்கும். இங்கு நான் சட்டப்பிரகாரம்தான் நடப்பேன் என்றால் வெட்டி அலைச்சல்தான் மிஞ்சும்.

ஆகவே என்னுடைய சுயநலத்திற்காக மனச்சாட்சிக்கு எதிராக செயல்பட்டிருக்கிறேன். இது சரியா இல்லை தவறா என்ற விவாதத்திற்கு முடிவே இருக்காது.

மகாத்மா காந்தியே இன்று உயிருடன் இருந்தாலும் நம் நாட்டின் தலைவிதியை மாற்ற அவரால் முடியாது என்பதுதான் உண்மை.