திங்கள், 8 ஜூலை, 2013

மனித இயல்பும் அன்றாட நிகழ்வுகளும்


லண்டனில் ஒரு நிகழ்வு. ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் ஒரு நாள் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். அந்தக் கிளப் பெரிய பெரிய கனவான்கள் உறுப்பினராக உள்ள ஒரு கிளப். கீழே விழுந்தவர் அப்போதுதான் அந்தக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். யாரையும் அறிமுகமில்லை. மற்ற கிளப் மெம்பர்கள் எல்லோரும் அவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த பிறகும் உதவிக்குச் செல்லவில்லை. பின்னால் ஏன் நீங்கள் அவருக்கு உதவவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையை துல்லியமாக காட்டுகிறது.

"அவரை இதுவரை யாரும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையே, நாங்கள் எப்படி அறிமுகமில்லாத அவருக்கு உதவமுடியும்? "

இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். வந்தாரை வாழவைப்பவர்கள். இப்படியெல்லாம் பெயர் பெற்றவர்கள். அதிலும் தமிழர்களைப்போல் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமையும் பேசிக்கொள்கிறோம். ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்தல் என்று வரும்போது, பலரும் பின்வாங்குவதை அன்றாடம் நடைமுறையில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதை ரோடுகளில் விபத்து நடக்கும்போது கண்கூடாகப் பார்க்கலாம். ஒருவர் கீழே விழுந்து கிடக்கிறார். இரத்தக் காயம் ஒன்றுமில்லை. பக்கத்தில் ஒரு இருசக்கர வாகனம் கிடக்கிறது. இதைப் பார்க்கும் எத்தனை பேர் நின்று அவருக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நூற்றுக்கு ஒருவர் தேறக்கூடும். காரணம் என்னவென்று சிந்தித்தால், அப்படி உதவச் செல்லும்போது ஏதாவது வம்பு, வழக்கு வந்து விடுமோ என்ற பயம்தான் காரணம்.

சாதாரண விபத்துக்கே இப்படி என்றால், பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இடத்தில் மனித நேயம் அடிபட்டுப் போகிறது. ஆனால் இந்த மனோபாவம் சரிதானா? நாம் ஒரு உதவியை மனித நேய அடிப்படையில் செய்யத் தயங்கினால் நம் மனச்சாட்சி உறுத்தாதா?

முடிந்தவரையில் விபத்துகளின்போது ஒருவருக்கு உதவுவது சிறந்தது. ஆனால் இன்றுள்ள அவசர கதி வாழ்க்கையில் ஒருவர் இதற்காக தன் நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி கருத்து கூறுங்கள்.