திங்கள், 9 ஜூன், 2014

பூதம் காத்த புதையல்


ஆசைகளில் தீராத ஆசை பணத்தின் மேல் உள்ள ஆசைதான். இந்த ஆசை எல்லாவற்றையும் முற்றும் துறந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நாள் மாடர்ன் சாமியார்களையும் விடவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்?

நான் ஒரு சராசரி மனிதன். ஏதோ கொஞ்சம் ஆன்மீகத்தில் பரிச்சயம் உண்டு. ஆசையே மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று பல குருமார்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவர்களும் பிரசங்கம் முடிந்தவுடன் சீடர்களை தட்டுடன் வசூலுக்கு அனுப்புவதையும் பார்த்திருக்கிறேன்.

சில சமயம் நானும் சன்னியாசம் வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் துறந்து விட்டு இமயமலைக்குப் போய்விட்டால் என்ன என்று யோசித்ததுண்டு. ஆனால் இன்னும் தைரியம் வரவில்லை. இப்போது கிடைக்கும் சௌகரியங்களெல்லாம் அங்கு வெறும் கையுடன் போனால் கிடைக்குமா என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

எங்கு சென்றாலும் பணம் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை என்பதை கண்கூடாகப் பார்த்திருப்பதால் இப்போது அனுபவிக்கும் சுகங்களை விட்டு விட்டு புதிதாக வேறொரு இடத்திற்குப் போவானேன் என்ற சிந்தனையும் மூளையின் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

என் இளம்பிராயத்தில் என்னிடம் பணம் எப்போதும் இருந்ததில்லை. யாராவது சொந்தக்காரர்கள் வந்து போகும்போது காலணா அரையணா கொடுப்பார்கள். அதை வாங்கும்போதே அம்மாவிடம் அர்ச்சனை வாங்கவும் தயாராகிக் கொள்ளவேண்டும். ஏண்டா அவர்களிடம் காசு வாங்கினே என்று ஆரம்பித்து சில சமயம் அடிகளும் கூடக் கிடைக்கும். எப்படியோ, என்ன நடந்தாலும் அந்தக் காசு லாபம்தானே. சில சுகங்களுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்.

கொஞ்சம் பெரிய பையன் ஆன பிறகு நான் கமிஷன் ஏஜண்ட் ஆனேன். அதாவது கடைகளுக்கு ஏதாவது பொருட்கள் வாங்க அனுப்பினால் அதில் கொஞ்சம் காசு கமிஷனாக எடுத்துக் கொள்வது. இதில் ஒரு நியாயத்தைக் கடைப்பிடித்தேன். காலணா அல்லது அரையணாவிற்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மேல் எடுத்துக்கொண்டால் அது தெரிந்துபோய் அப்பாவிடம் புகார் சென்று விடும். அப்புறம் நடப்பதை எல்லாம் எழுதினால் இந்தப் பதிவு கிரைம் நாவலாகிவிடும். வேண்டாம்.

நான் தொழிலதிபராக உருவெடுத்ததை முன்பு ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். புக் பைண்டிங்க் செய்திருக்கிறேன். காப்பிக்கொட்டை வறுத்திருக்கிறேன். இதிலெல்லாம் ஏதோ கொஞ்சம் சில்லறை நடமாட்டம் இருந்தது. கல்லூரி படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. ஆரம்ப சம்பளத்தை சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு சரித்திரம் என்றால் உண்மையை அறிவிக்க வேண்டுமல்லவா.

மாத சம்பளம் நூறு ரூபாய். பஞ்சப்படி இருபத்திநான்கு ரூபாய். (1956 ம் வருடம்). இப்படியாக இருந்து படிப்படியாக உயர்ந்து நான் ஓய்வு பெறும்போது (1994)  பெற்ற சம்பளம் ஆறாயிரம் ரூபாய். அதில் பாதி மூவாயிரம் ரூபாய் பென்ஷன் கொடுத்தார்கள். இருபது வருடம் கழித்து பென்ஷன் அதைப்போல் பல மடங்கு வாங்குகிறேன். இதனால்தான் அன்றே பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். காலணா உத்தியோகம் என்றாலும் கவர்மென்டு உத்தியோகம் வேண்டும் என்று.

இப்படியான வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், கையில் காசில்லாதவன் வாழ்வில் நடைப்பிணமே. ஆகவே என்னால் முடிந்த அளவு சேமிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச கொஞ்சமாக சேமித்தது இப்போது கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் இன்னும் சேர்க்கவேண்டும் என்ற ஆசையைத் தவிர்க்க முடியவில்லை.

சேமித்த பணத்தை எதற்காவது செலவு செய்யலாம் என்றால் மனம் அதற்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இந்த சேமிப்பினால் எனக்கு ஏதும் பயன் இல்லை என்றாலும் அது ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. ஏதாவது இன்னல் வந்தால் யார் கையையும் எதிர் பார்க்காமல் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தை அளிக்கிறது.

அதற்காகவே பூதம் காப்பது போல் இந்தப் பணத்தைக் காத்துக்கொண்டு இருக்கிறேன். வேறு வழிகள் யாருக்காவது தெரிந்திருந்தால் தெரிவிக்கவும்.