வியாழன், 19 மார்ச், 2015

கோதுமை வடை- கோவை ஸ்பெஷல்

  Image result for உப்புக் கச்சாயம்
இது சரியான படம் இல்லை. ஆனா கோதுமை வடை ஏறக்குறைய இந்த மாதிதான் இருக்கும்.


இது எங்க ஊரு ஸ்பெஷல் ஐட்டமுங்க. இதை எங்கூர்ல கோதுமை கச்சாயம்னு சொல்லுவாங்க. நாந்தான் நாம இப்ப வடை சீசன்ல இருக்கறதால இதுக்கு கோதுமை வடைன்னு பேர் வச்சேனுங்க.

இதை ரெண்டு தினுசாப் பண்ணுவாங்க. ஒண்ணு, உப்பு, காரம் போட்டு பண்றதுங்க. அதுக்கு உப்புக் கச்சாயம்னு பேருங்க. இன்னொண்ணு வெல்லம், ஏலக்காய் எல்லாம் போட்டு பண்றது. அதுக்கு இனிப்புக் கச்சாயம்னு பேரு. ஒவ்வொண்ணாச் சுட்டு,  நாலு நாலாச் சாப்பிடலாங்க.

கோயமுத்தூர் ஜில்லாவில அந்தக் காலத்தில கோதுமை விவசாயம் பண்ணுவாங்க. இதுக்கு சம்பா கோதுமைன்னு பேரு. மானாவாரியா எறங்காட்டுல (கரிசல் காட்டுக்கு எங்க ஊர்ல எறங்காடுன்னு சொல்வோம்) செய்யற விவசாயம். குளிர் காலத்தில வெளையற பயிருங்க. தானியம் நீளநீளமா நல்ல கோதுமை நெறத்தில இருக்குமுங்க.

இதை ரவை பண்ணி உப்புமா செய்து சாப்பிட்டா, ஹூம், அது அந்தக்காலம். இப்ப எங்கேங்க அந்த மாதிரி ரவை கெடைக்குது. அந்த உப்புமா செய்யறதப் பத்தி ஒரு பதிவில தனியா சொல்றேனுங்க. மத்த ஜில்லாக்காரங்களுக்கு ரவைன்னா, வெள்ளையா இருக்கு பாருங்க, சூஜி, அதுதான் ரவை அப்படீம்பாக. இந்த பிரவுன் ரவையை ரொம்ப பேர் பார்த்தே இருக்க மாட்டாங்க.

அத விடுங்க. இப்ப நம்ம கோதுமை வடைக்கு வருவோம். இந்த மாதிரி கோதுமை இப்ப கெடைக்கறது ரொம்பக் கஷ்டமுங்க. பஞ்சாப் கோதுமைன்னு பலசரக்குக் கடைகள்ல கேட்டா தருவாங்க. கொஞ்சம் வெல ஜாஸ்தியா இருக்குமுங்க. நல்லா வடை சாப்பிடணும்னா வெலயப் பாத்தா ஆகுமுங்களா.

இந்த வடை சுடுவதற்கு கட்டாயம் ஆட்டுக்கல் அதாங்க ஆட்டாங்கல் அதாங்க உங்க ஊர்ல சொல்லுவீங்களே கல்லுரல், அது கண்டிப்பா வேணுமுங்க. மிக்சி, கிரைண்டர் இதெல்லாம் உதவாதுங்க. அப்புறம் ஆட்டறதுக்கு வலுவா நெண்டு பேர் வேணுமுங்க. ஏன்னா, கோதுமை ஆட்ட ஆட்ட கோந்து மாதிரி பசையா ஆகிடுமுங்க.

நீங்க சின்னவங்களா இருக்கறப்போ இந்தக் கோதுமையை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு மென்றிருக்கீர்களா? கொஞ்ச நேரம் மென்றவுடன் ஒரு ரப்பர் மாதிரி ஆகிவிடும். எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்து chewing gum இதுதான். இந்தக் கோதுமையை ஆட்டும்போது இந்த மாதிரி ஒரு ரப்பர் பதத்திற்கு வருமுங்க. அப்படி வர்றதுக்கு கை வலுவா இருக்கற ரெண்டு பேர் ஆட்டோணுமுங்க.

இந்தக் கோதுமை ஒரு இரண்டு லிட்டர் எடுத்து மதியமே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. சாயங்காலம் 4 மணிக்கு எந்திரிச்சு, ஒரு லிட்டர் கோதுமையை எடுத்து ஆட்டாங்கல்லில் போட்டு ஆட்ட ஆரம்பிங்க. கொஞ்சம் ஆட்டினதும் அளவாக உப்பு, உரிச்ச சின்ன வெங்காயம் கொஞ்சம், ஒரு பத்து பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, எல்லாம் சேத்தி நல்லா ஆட்டுங்க. கோதுமை கொஞ்ச நேரத்தில் அல்வா பதத்திற்கு வந்துவிடும்.

அப்போது மாவை கல்லுரலில் இருந்து எடுத்து சமையலறைக்குக் கொண்டுபோய் கொஞ்சம் கொஞ்சமாக வடை அளவிற்கு எடுத்து விரல்களால் தட்டையாகப் பண்ணி காயந்த எண்ணையில் போட்டு சுட்டு எடுக்கவும். சொந்தமாக தயார் செய்த தேங்காய் எண்ணையில் சுட்டால் வடை தேவாம்ருதம் போல் இருக்கும். இந்த வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் தூங்கி எழுந்து கைகால் மொகம் களுவீட்டு ஹாலில் தயாராக ஈசி சேரில் உட்கார்ந்திருக்கவும்.

வடைகள் தயாரானவுடன் ஒரு தட்டில் நாலைந்து வடைகள் வைத்து உங்களுக்கு வரும். இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. பல் மட்டும் கொஞ்சம் வலுவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். இந்த வடையை உளுந்து வடை மாதிரி லேசாக நெனைக்காதீங்க. பாதி வடையைக் கடித்து வாயில் போட்டு நன்றாக மெல்லவேண்டும். அப்போதுதான் அதன் ருசி நாவிற்குத் தெரியும்.

                     

                                               இனிப்புக் கச்சாயம்

பல் வலிக்க ஆரம்பித்தவுடன் வடை சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டு பல்களுக்கு ஓய்வு கொடுங்கள். இதற்குள் ஊறவைத்ததில் மீதி இருக்கும் கோதுமையை வெல்லம், ஏலக்காய் போட்டு ஆட்டி, இனிப்பு வடை சுட ஆரம்பித்திருப்பார்கள். இப்போது பற்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்திருக்கும். பிறகு என்ன, இனிப்பு வடைகளைச் சாப்பிடவேண்டியதுதான். சாப்பிடும் முறை பழைய மாதிரிதான். பாதி வடையைக் கடித்து நன்றாக மென்று கூழாக்கி ருசித்து விழுங்க வேண்டியதுதான்.

இந்த வடைகளை இரண்டு நாட்கள் வரைக்கும் வைத்திருந்து சாப்பிடலாம். மறுநாள் சாப்பிடும்போது ருசி இன்னும் அதிகமாக இருக்குமுங்க. இதுதாங்க கொங்கு பூமியில புது மாப்பிள்ளைக்கு செஞ்சு போடற பலகாரமுங்க. செஞ்சு சாப்பிட்டுப் பாத்திட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க.