புதன், 29 ஏப்ரல், 2015

வயதாவதின் நன்மைகள்.

                                       Image result for மூன்று குரங்குகள்

நேற்றைய பதிவில் மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் பொம்மை வைத்திருந்தார் என்று பார்த்தோம். அதில் ஒன்று கண்ணை மூடிக்கொண்டும், இன்னொன்று காதைப் பொத்திக்கொண்டும், மற்றொன்று வாயைப் பொத்திக்கொண்டும் இருக்கும்.

அந்த பொம்மைகளின் தாத்பரியம் என்னவென்றால் தீயதைப் பார்க்காதே. தீயதைக்கேட்காதே, தீயதைப் பேசாதே என்பதாகும். ஒருவன் நல்லவனாக வாழ அவன் இந்தக் கொள்கைகளை அனுசரிக்கவேண்டும்.

ஆனாலும் இளமை வேகத்தில் இதையெல்லாம் யோசித்து அனுசரிக்கும் பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை. மனிதனைப் படைத்த கடவுள் இதற்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தியுள்ளார். இளமையில் அவன் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும், வயதான பின்பாவது அவன் இந்தக் குற்றங்களைச் செய்யாமல் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளட்டும் என்று சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.

முதலில் கண்களை எடுத்துக் கொள்வோம். வயதாக வயதாக கண் பார்வை மங்குகிறது. இது நம்மைப் படைத்தவன் ஏற்பாடு. இதை மனிதன் தன்னுடைய மூளூயினால் எப்படியோ ஓரளவு சரி செய்து காலத்தை ஓட்டுகிறான். ஆனாலும் கடைசி காலத்தில் அவனுக்கு முழுவதுமாக பார்க்க முடிவதில்லை. இப்போது அவனால் கெட்டது எதையும் பார்க்க முடியாதல்லவா?

இரண்டாவது காதுகளை எடுத்துக்கொள்வோம். அறுபது வயதானால் எல்லோருக்கும் காது கேட்கும் திறன் குறையும். நல்ல புண்ணியம் செய்த ஒரு சிலருக்கு சீக்கிரம் காது மந்தமாகி விடும். (காது நன்றாகக் கேட்கும் வயதானவர்கள் புண்ணியம் குறைவாக செய்திருக்கிறார்கள் எனக்கொள்க.) இதனால் அவர்கள் தீயவைகளைக் கேட்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.

மூன்றாவது வாய். இது இரண்டு வகைகளில் மனிதனுக்கு எதிரி. நாக்கு இளம் வயதில் ருசியை நன்கு அறிந்து கொள்வதினால் கண்டதையும் சாப்பிடத் தோன்றும். இரண்டாவது வாய் நன்றாகப் பேச முடிவதால் கண்டதையும் பேசத் தோன்றும். வயதானவர்களுக்கு நாக்கு ருசி போய்விடும். எதைத் தின்றாலும் மண்ணைத் தினபது போலவே இருக்கும். அதனால் கண்டதைச் சாப்பிட முடியாது. அடுத்து பேச்சு குழறும். இதனால் இவர்கள் பேசுவதைக் கேட்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்படி இவர்கள் தீயதைப் பேச மாட்டாமல் கடவுள் ஆக்கி விட்டார்.

ஆகவே மனிதர்களே, நீங்கள் இயற்கையோடு ஒத்துழைத்தீர்களேயானால் ஆண்டவன் உங்களுக்கு நற்கதி அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறியவும்.