வியாழன், 4 ஜூன், 2015

தாமரை இலைத் தண்ணீர்

                                     Image result for lotus leaf
வாழ்வில் என்றும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்று சில நாட்களுக்கு முன் பார்த்தோம். சுகதுக்கங்களை சமமாகப் பாவிக்கவேண்டும் என்று அதில் சொல்லியிருந்தேன். அப்போதுதான் மனது அமைதியாக இருக்கும். அதுதான் ஆனந்தம் என்று சொல்லியிருந்தேன்.

அது எப்படி சுக துக்கங்களால் பாதிக்காமல் இருக்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். நல்ல கேள்விதான். பதில் சொல்வது கொஞ்சம் சிரமம்தான்.

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். ஒருவனுடைய அருமை மனைவி இறந்து விட்டாள். அவள் புருஷன் "ஐயோ, நான் என் ஆசை மனைவியைப் பிரிந்து எப்படி வாழ்வேன், நானும் அவளுடனேயே இறந்து போகிறேன்" என்று பிரலாபிக்கிறான். உறவினர்கள் எப்படியோ அவனைச் சமாதானம் செய்து மனைவியின் ஈமக்கடன்களைச் செய்ய வைக்கிறார்கள்.

ஒரு வருடம் சென்றது. அவன் ஒரு அழைப்பிதழோடு உறவினர்களைப் பார்க்கப் போகிறான். என்ன அழைப்பிதழ் என்று நினைக்கிறீர்கள்? அவனுடைய இரண்டாம் கல்யாணத்திற்கான  அழைப்பிதழ்தான் அது. அழைப்பிதழைப் பெற்ற உறவினர்கள் நினைக்கிறார்கள் "இதுதான் உலகம்" என்று. இது எப்படி நடந்தது.

காலம் செய்யும் மாயம் இது. எப்படிப்பட்ட துக்கத்தையும் நாளாவட்டத்தில் மனிதன் மறக்கிறான். இந்த இயல்பு இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி மறக்கும் இயல்பு இல்லாவிட்டால் மனிதன் நொறுங்கிப் போய்விடுவான். துக்கத்திலேயே மூழ்கிக்கிடந்தால் அவன் வாழ்வு என்ன ஆகும்?

இந்த இயற்கை நியதி எல்லோரும் அறிந்ததே. எப்படி சில காலம் சென்ற பிறகு அந்த துக்கத்தை மறக்கிறானோ, அது போல அந்த துக்கம் நிகழ்கிறபோதும் ஒரு சாட்சியாக நின்று அதைப் பார்க்க முடியுமா? இது ஒரு பெரிய ஆன்மீகப் புதிர். இதைத் தான் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது என்கிறார்கள். தண்ணீர் தாமரை இலையில்தான் இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டவில்லை.

ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதன் நிகழ்வுகளில் அதீத ஒட்டுதல் இருக்கக் கூடாது. இந்த பண்பு இளம் வயதில் வருவது கடினம். ஆனால் வயது ஆன பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் பட்ட சுக துக்கங்கள் காரணமாக, வாழ்க்கையில் எதுவும் நிலையில்லாதது என்று உணர்கிறார்கள். அப்போது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அவர்களுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இந்த நிலையை அடைந்த ஒருவன் சுகதுக்கங்களை ஒன்றாகவே ஏற்றுக்கொள்வான்.