வெள்ளி, 3 ஜூலை, 2015

இவரைத் தெரிகிறதா?


இது ஒரு மடத்தனமான கேள்வி என்று சின்னப்பிள்ளை கூடச் சொல்லும். இன்றைய தேதியில் இவரைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவரை சந்தித்து அளவளாவி என் வீட்டிற்குக் கூட்டி வந்து, பிறகு ஒரு கோவிலுக்குப் போய் வந்தேன் என்றால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன் என் ஒரு பதிவில் இவர் இட்ட பின்னூட்டத்தில், தான் ஜூன் மாத இறுதியில் கோவைக்கு வரவிருப்பதாக ஒரு குறிப்பு காட்டியிருந்தார். நான் அப்படி நீங்கள் கோவை வரும்போது எனக்கு தவறாமல் தகவல் கொடுக்கவேண்டும். நாம் இருவரும் சந்திக்கலாம் என்று கூறியிருந்தேன்.

அதன்படி அவருடைய அண்ணன் மகள் கல்யாணம் 26-6-2015ல் கோவையில் ஒரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. அதற்கு அவசியம் வாருங்கள் என்று செய்தி அனுப்பியிருந்தார். அதன்படியே அந்த மண்டபத்தில் சென்று சந்தித்தேன்.

ஒரிரு நாளில் உங்களை, உங்கள் சௌகரியத்தை அனுசரித்து மருதமலை அழைத்துச் செல்கிறேன், முதலில் ஊட்டி போய்வரலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அங்கு இப்போது மழைக் காலமாதலால் அங்கு போய் அந்த ஊரை ரசிக்க முடியாது. ஆதலால் மருதமலைக்குப் போக முடிவு செய்தேன். அப்படியே 30-6-2015 அன்று அவரை, அவருடைய அண்ணார் வீட்டில் போய் அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து ஒரு காப்பி குடித்து விட்டு மருதமலை போய் வந்தோம்.


பின்பு அன்னபூர்ணாவில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அவரை அவருடைய அண்ணார் வீட்டில் விட்டு விட்டு வந்தேன். அவருடைய மகளும் மகனும் கோவையில் அவருடைய அண்ணார் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கில்லர்ஜி கோவைக்காரர்தான்.