திங்கள், 7 செப்டம்பர், 2015

சினிமா நடிகர்கள் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம்

                                          Image result for cine actor cutout worship
நான் சிறுவனாக இருந்தபோது சினிமா நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ரசிகர்களும் இருந்தார்கள். அந்தந்த ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்கள் நடித்த படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இப்போது போல் தொழில் நுட்பக் கருவிகள் கண்டு பிடிக்கப்படாத காலம்.

தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பல முறை, சிலர் தினமுமே பார்த்த காலம் அது. படங்கள் நல்ல முறையில் நல்ல கம்பெனிகள் தயாரித்தன. இன்று போல் கோடிக்கணக்கில் செலவு செய்தவர்கள் யாரும் இல்லை. சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் தாங்கள் போடும் முதலீட்டுக்கும் உழைப்பிற்கும் தகுந்த லாபம் பெற்று வந்தார்கள். ஏதோ ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் தங்கள் முதலை இழந்து ஓட்டாண்டிகளானார்கள்.

குறிப்பாக சில சினிமா நடிகர்கள், தாங்கள் நடித்த படங்கள் நல்ல வசூலைத் தருவது கண்டு பேராசைப்பட்டு சினிமா எடுக்கத் துணிந்து சினிமா எடுத்தார்கள். அப்படி சினிமா எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை இழந்ததுமல்லாமல் தங்கள் மார்க்கெட்டையும் இழந்தார்கள்.

பிற்காலத்தில் நடிக்கவந்தவர்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தத் தவறை செய்யாமல் தாங்கள் சம்பாதித்ததை நல்ல முதலீடுகளில் போட்டார்கள். அவர்களும் பிற்காலத்தில் சினிமா எடுக்கத் துணிந்தார்கள். சில படங்கள் வெற்றியளித்தன. ஆனாலும் அவர்கள் நல்ல முதலீடுகளில் பணம் போட்டிருந்ததால் சில தோல்விகள் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படியும் சிலர் தங்கள் கடைசி காலத்தில் வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்தக் காலகட்டம் வரையில் சினிமா நடிகர்களுக்கென்று யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை. ரஜனிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தபோது அவர்கள் பழைய நடிகர்களை போட்டியில் வென்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோதுதான் இந்த ரசிகர் மன்றம் அமைப்பதைப் பற்றி யாரோ ஒருவரின் மூளையில் உதித்திருக்கிறது.

இவர்கள் ஆரம்பித்து வைத்த ரசிகர் மன்ற கலாச்சாரம் இன்று அருகுபோல் வேறூன்றி ஆல்போல் தழைத்து நிற்கிறது. இந்த நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் தினத்தன்று அந்தந்த தியேட்டர்களின் முதல் காட்சியின் மொத்த டிக்கெட்டுகளும் இந்த ரசிகர் மன்றங்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்றங்கள்தான் அந்தப் படத்திற்கு தாரை தப்பட்டைகளுடன் விளம்பரம் செய்கிறார்கள். தியேட்டரில் வைத்திருக்கும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

இந்த முதல் காட்சியின்போது இவர்கள் தியேட்டருக்குள் செய்யும் அக்கிரமங்களை எழுத்தில் சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த ரசிகர் மன்றங்கள் அந்தந்த நடிகர்களின் அனுமதியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வாழ்க ரசிகர் மன்றம். வாழ்க நடிகர்கள்.