வியாழன், 5 நவம்பர், 2015

போன மச்சான் திரும்பி வந்தான்..

                                             Image result for பிள்ளையார் படங்கள்
திரு. ஜிஎம்பி ஒரு முறை எழுதியிருந்தார். ஒருவர் மூன்று நாள் பதிவுகள் போடாவிட்டால் பதிவுலகம் அவரை மறந்து விடும் என்றார். நான் பதினைந்து நாட்கள் பதிவு போடவில்லை. என்ன நடந்திருக்கும் ? பழனி. கந்தசாமியா, யார் அது? என்று கேட்கும் அளவிற்கு பதிவுலகம் போயிருக்கும் என்று நம்புகிறேன்.

நான் பல வருடங்களாக BSNL  BROADBAND வைத்திருந்தேன். என்னென்னமோ மாற்றங்கள் (தரத்தைக் குறைக்கும் மார்க்கங்கள்தான், வேறென்ன?) கொண்டு வந்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவர்களை விட்டு விலகாமலிருந்தேன்.கடந்த மூன்று மாதங்களாகவே அவர்களின் சர்வரில் ஏதோ கோளாறு.

திடீரென்று BROADBAND  நின்று விடும். அதற்குண்டான நிபுணரைக் கூப்பிட்டு சொன்னால் வந்து சரி செய்வார். சில சமயம் தானாகவே சரியாய் விடுவதும் உண்டு. கடந்த மாதம் 20 ம் தேதி, ஆயுத பூஜைக்கு முந்தின நாள் BROADBAND  நின்று விட்டது. வழக்கம்போல் நிபுணரை அழைத்து விபரம் சொன்னேன். அவர் ஆபீசில் புகார் பதிந்து விடுங்கள் என்று சொன்னார். அப்போதே என் உள் மனதில் ஒரு ஸ்பார்க் அடித்தது. ஏதோ வில்லங்கம் வரப்போகிறது என்று மனது எச்சரிக்கை செய்தது.

அடுத்து இரண்டு நாட்கள் ஆயுத பூஜை லீவு. அதற்கடுத்த நாள் நிபுணர் வந்தார். ஒரு மணி நேரம் என்னென்னமோ செய்தார். ஒன்றும் சரியாகவில்லை. சார், எக்சேன்ச்சில் ஏதோ கோளாறு. அங்கு போய் சரி செய்து விடுகிறேன் என்று போனார். அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த நாள் போனில் நிபுணரைக் கேட்டேன். உள்ளே சொல்லியிருக்கிறேன். சரியாகி விடும் என்றார். அன்று சரியாகவில்லை.

அடுத்த நாள் எக்சேன்ச்சுக்கே போனேன். அங்கு எனக்குச் சொன்ன விபரம் - சார் அதை சரிபண்ணுகிறவர் நேற்று வரவில்லை. இன்று வருவார். வந்து சரி பண்ணி விடுவார். அப்படீன்னு சொன்னார்கள். நானும் நம்பி வீட்டுக்கு வந்து விட்டேன். அன்றும் சரியாகவில்லை.

அடுத்த நாள் நிபுணரும் போன் பண்ணி சார் இன்று சரியாகி விடும் என்று சொன்னார். அன்றும் சரியாகவில்லை. என் வீட்டில் எல்லோரும் துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என் மாப்பிள்ளை "நான் ஏர்டெல் பிராட்பேண்ட் வைத்திருக்கிறேன். தொந்திரவு இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. நீங்களும் ஏன் அதற்கு மாறக்கூடாது என்றார்."

அடுத்த நாள், அடுத்த நாள் என்று ஓடி, ஏறக்குறைய 10 நாள் ஆகி விட்டது. 28ம் தேதி காலை எழுந்தவுடன் ஒரு வேகம் வந்தது. நேராக BSNL அலுவலகம் சென்று எனக்கு இந்த போனும் வேண்டாம், அதனுடன் சேர்ந்த BROADBAND ம் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்தேன். ஏன் வேண்டாமென்கிறீர்கள் என்று கேட்டார்கள். என் பெண் பெங்களூரில் இருக்கிறாள். நான் அங்கு குடி பெயர்கிறேன் என்று ஒரு பொய் சொன்னேன். பொய் சொன்னால்தான் இந்தக் காலத்தில் காரியங்கள் ஒழுங்காக நடைபெறும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

நான் கொடுத்த விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டார்கள். எப்போது போனை நிறுத்துவீர்கள் என்று கேட்டேன். நாளைக்குள் நிறுத்திவிடுவோம் என்றார்கள். இந்த BSNL  காரர்கள் போனை நிறுத்திவிட்டாலும் பில் அனுப்புவதை நிறுத்த மாட்டார்கள் என்று என் நணபர்கள் பலர் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்கள்.  நானோ என் போன் பில்களை பேங்க் மூலமாக செலுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். இந்த மாதிரி பில்கள் வந்தால் பேங்கிலிருந்து பணம் கொடுத்து விடுவார்கள். என் பணம் கோவிந்தாதான்.

ஆகவே பேங்கிற்குப் போய் இனிமேல் BSNL  பில்கள் வந்தால் பணம் கொடுக்காதீர்கள் என்று எழுதிக்கொடுத்து அதை அவர்கள் கம்ப்யூட்டரில் சரி செய்த பிறகே வீட்டுக்கு வந்தேன்.

ஏர்டெல் பிரதிநிதி ஒருவர் வந்து வீட்டில் காத்திருந்தார். அவர் போட்டோ மற்றும் ஒரு அடையாள அட்டை காப்பி கேட்டார். அவைகளைக் கொடுத்து அனுப்பினேன். முந்தாநாள் இரவு 8 மணிக்கு ஒரு போன். சார், உங்க வீடு எங்கே இருக்கிறது என்று ஒருவர் கேட்டார். எதற்கு என்றேன். ஏர்டெல் போன் கனெக்ஷன் கொடுப்பதற்கு வருகிறேன் என்று சொன்னார். வீட்டு விலாசம் சொன்னேன். உடனே வந்தார். ஒரு மணி நேரத்தில் கனெக்ஷன் கொடுத்து எல்லா செட்டிங்சையும் செய்து முடித்து விட்டார். சார் இப்போது இன்டர்நேட் வேலை செய்கிறதா பாருங்கள் என்றார். பார்த்தேன். சரியாக இருந்தது.

சரி சார் என்று அவர் போய்விட்டார். அவர் வீட்டில் இருந்தபோது ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் வாங்கிக்குடித்தார். போகும்போது தலையைச் சொறியவில்லை.

இப்படியாக எனக்கு இன்டர்நெட் கனெக்ஷன் வந்து சேர்ந்தது. நானும் பதிவுகள் போடத் தயார் ஆகிவிட்டேன். இப்படி நான் தயாரானதில் சிலருக்கு வருத்தம் இருக்கலாம். ஏதோ கொஞ்ச நாள் நிம்மதியாக இருந்தோம். திரும்பவும் கழுத்தறுப்பு வந்து விட்டதே என்று வருத்தப்படலாம். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார்  கோவிலுக்கு தினமும் போய் என்னுடைய இன்டர்நெட் கனெக்ஷன் நிரந்தரமாக கெட்டுப்போகவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். நாம் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம்.