புதன், 3 பிப்ரவரி, 2016

போட்டியும் பொறாமையும்

                                Image result for fight
சிறு வயதிலிருந்தே மனிதனாகப் பிறந்தவனுக்கு போட்டியும் பொறாமையும் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குணங்கள் இருப்பவர்கள் நல்ல பண்பாடு உள்ள மனிதர்கள் இல்லை என்ற கருத்து நம் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும்.  தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது மிச்சம் மீதி இருக்கிற மூளையைக் கொண்டு  நான் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். அப்படி யோசித்தபோது தோன்றிய எண்ணங்களை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்கிற பரந்த நோக்கத்தில் உங்களுடன் பகிர்கிறேன்.

சில உதாரணங்களை எடுத்துக் காட்டினால் என்னுடைய கருத்துக்களைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்துப் பேர் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் பத்து பேரும் போட்டி மனப்பான்மை இல்லாதவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஓடும்போது என்ன நினைப்பார்கள்? மற்றவர்களில் யாராவது ஜெயிக்கட்டுமே என்று தாராள மனப்பான்மையில் ஓடினால் என்ன ஆகும்? அவரால் தன் முழு சக்தியையும் காட்ட முடியாது. இப்படியே ஒவ்வொருவரும் நினைத்தால் அந்த ஓட்டப் பந்தயம் எப்படி இருக்கும்?

ஓட்டப்பந்தயம் வேறு, வாழ்க்கை வேறு. "வாழ்க்கையில்தான் போட்டி பொறாமை கூடாது என்று சொல்கிறோம்" என்று ஒரு சாரார் வாதம் செய்யலாம். சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். கல்லூரியில் ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை அனைவரும் நமக்குள் எந்த வேற்றுமையும் கூடாது. போட்டி, பொறாமையெல்லாம் கெட்ட குணங்கள், ஆகவே நாம் அனைவரும் ஒரே மாதிரியான மார்க்குகள்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியிருக்கும்?

இப்படியே பல வருடங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லோரும் என்ன ஆவார்கள்? ஒரு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? எல்லோருக்கும் ஒரே மாதிரியான மந்த புத்தியே இருக்கும் அல்லவா?

வாழ்க்கைக்கு வருவோம். நாங்கள் அனைவரும் சமம், எல்லோரும் ஒரே மாதிரியான வேலை செய்வோம், ஒரே அளவு சம்பளம் வாங்குவோம் என்று இருந்தால் என்ன ஆகும்? சமூகத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா?

மக்களே, யோசித்துப் பாருங்கள். போட்டி, பொறாமை இருந்தால்தான் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முனைவார்கள். ஏனெனில் இறைவன் அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரி படைக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமையை வைத்திருக்கிறான். சிலருக்கு தலைமைப் பண்பு இருக்கும். சிலர் சாதாரண வேலைகளைச் செய்யும் அளவிற்கே திறன் இருக்கும்.

அதனால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கவேண்டும் என்று நினைத்தால் மனித சமூகம் முன்னேறாது. ஆகவே போட்டியும் பொறாமையும் இவ்வுலகில் அவசியம்.