திங்கள், 29 பிப்ரவரி, 2016

என் தலைக்கனம் மறைந்தது.


விவசாயக் கல்லூரியில் 1953 முதல் 1956 வரை படித்து பாஸ் செய்து இன்று வரை உயிருடன் இருக்கும் வகுப்புத் தோழர்கள் ஒன்று கூடி நாங்கள் பாஸ் செய்து 60 வருடங்கள் ஆனதைக் கொண்டாட முடிவு செய்தோம் என்கிற விபரம் அன்பர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

இப்படி விழா ஒன்று கொண்டாடலாம் என்று சென்னையிலிருக்கும் எனது வகுப்புத் தோழர் முனைவர் வசந்தராஜ் டேவிட் என்பவருக்குத்தான் முதலில் ஞானோதயம் தோன்றியது. அதற்குக் காரணம் பத்து வருடங்களுக்கு முன் இதேமாதிரி என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பை அவர்தான் திட்டமிட்டு நடத்தினார்.


இவர்தான் வசந்த்ராஜ் டேவிட்
பிரபல பூச்சி இயல் விஞ்ஞானி

நாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே கொண்டாடலாம் என்று அவர் முடிவு செய்து, என்னைத் தொடர்பு கொண்டார். காரணம் கோயமுத்தூரில் இருக்கும் என் வகுப்புத் தோழர்களில் இணைய வசதி வைத்துக்கொண்டு அதை நோண்டிக் கொண்டிருப்பவன் நான் ஒருவன் மட்டும்தான். அவர் கேட்டவுடன் நான் "அதற்கென்ன, கொண்டாடினால் போச்சு" என்று சொல்லிவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருக்கும். அப்படியானால் அதற்கான வேலைகளைத் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.

எனக்குள் வேறு ஒரு மனிதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவன் தன்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டவன். நான் சும்மா இருந்தால் கூட அவன் முந்திரிக்கொட்டை போல இந்த மாதிரி விஷயங்களில் என்ன இழுத்து விட்டு விடுவான். அப்படித்தான் இந்த வேலை என் தலை மேல் ஏறிவிட்டது. அதிலிருந்து எனக்கு ஒரே தலைக்கனம்தான்.

எனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. அதாவது தலையில் பொறுப்பு ஏறி விட்டது.
மூன்று மாதமாக அல்லும் பகலும் இதே நினைப்புத்தான். இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை அனுபவித்து வந்தேன். ஒரு பொறுப்பு எடுத்தால் அதை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம்தான் இப்படி ஒருவனை அலைக்கழிக்கும்.

எப்படியோ விழாவிற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து 27-1-2016 அன்று விழாவைக் கொண்டாடிவிட்டோம். எங்கள் ஆசிரியர்களில் நான்கு பேர் தவிர மற்றவர்கள் இப்போது இல்லை. அதில் ஒருவர் 97 வயது ஆகிவிட்டாலும் உற்சாகம் குறையாமல் எங்கள் விழாவில் கலந்து கொண்டார். அவர்தான் முனைவர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


நடுவில் பட்டு வேஷ்டியுடன் இருப்பவர்தான் டாக்டர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


விழாவில் ஒரு குறையும் ஏற்படவில்லை. தலையிலிருந்த கனம்  அதாவது தலைக்கனம் மறைந்து விட்டது. விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள்


டாக்டர் தனபாலன், திரு பார்த்தசாரதி, திரு சிவராமன்விழாவின் விருந்தினர்கள் அனைவருமாக எடுத்துக்கொண்ட போட்டோ.