திங்கள், 27 ஜூன், 2016

கடவுள்களுக்கு நோய்கள் வராதா?

                                  Image result for கடவுள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது ஒரு பெரும் விவாதத்திற்குரிய விஷயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.

கடவுளை மனிதன்தான் உருவாக்கினான் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அப்படி கடவுள்களை உண்டாக்கும்போது அந்தக் கடவுள்களை தன் உருவம் மாதிரியே உண்டாக்கினான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில கடவுள்களுக்கு நான்கு தலை, ஆறு தலை, நான்கு கைகள், பனிரெண்டு கைகள் என்று உருவகப்படுத்தினான்.

அத்துடன் நில்லாது கடவுள்களுக்கு தன்னைப்போலவே ஆசா பாசங்களையும் கற்பித்தான். கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டிகள், பலதார மணம், சக்களத்திச் சண்டை, பங்காளிச் சண்டை, கற்பழிப்பு, பிறன் மனை விழைதல் இப்படி எல்லாம் கற்பித்தான். அப்புறம் கடவுள்களுக்கு பசி, தாகத்தையும் உண்டு பண்ணினான்.

கடவுள்களும் இப்படியே ஆசா பாசங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள்கள் இப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது வருகின்றன. அவைகளுக்கு பல காலமாக விடை தேடுகிறேன். அவ்வளவுதான்.

1. கடவுள்கள் காலையில் எழுந்ததும் குளிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். மாலை வந்தால் ஆடல் பாடல்களைக் கண்டு களிக்கிறார்கள், இரவானால் சகதர்மிணியுடன் பள்ளியறை எழுந்தருள்கிறார்கள். இவ்வளவும் செய்கிறார்கள். ஆனால் மனிதர்கள் மாதிரி அவர்கள் காலை எழுந்தவுடன் ஏன் பாத்ரூம் போவதில்லை என்று தெரியவில்லை. எந்தக் கோவில்களிலும் கடவுள்களுக்காக பாத் ரூம் கட்டப்படவில்லையே, ஏன்?

2. மனிதர்களில் நோய்வாய்ப் படாதவர்கள் அபூர்வம். அவர்களுக்கு நோய் தீர்க்க தெருவிற்குத் தெரு பல விதமான ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. இப்படி கடவுள்களுக்கும் நோய் வராதா? தேவலோகத்தில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே. அவர்களுக்கு நோய் வந்தால் எப்படி அந்த நோயைக் குணப்படுத்திக் கொள்வார்கள்?

பல நாட்களாக இந்த இரண்டு சந்தேகங்களும் என் மண்டையில் புரண்டு கொண்டேயிருக்கின்றன. இந்த சந்தேகங்கள் வந்ததினால் நான் கடவுள்களுக்கு விரோதியாய் விடுவேனோ என்ற சந்தேகமும் இப்போது புதிதாய் முளைத்திருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு நான் உங்களிடம் விடை கேட்கப்போவதில்லை. ஏனெனில் உங்கள் மனம் புண்படலாம். ஆகவே இந்தப் பதிவைப் படித்து விட்டு ஒரு ஸ்னானம் செய்து நீங்கள் இதைப் படித்த பாவத்தைப் போக்கிக்கொள்ளவும்.

எனக்கு நரகம்தான் பலிக்கும் என்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் ஆப்த நண்பர்கள் எல்லோரும் அங்குதான் இருப்பார்களாகையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.