வியாழன், 28 ஜூலை, 2016

ஆர்க்கெஸ்ட்ராவில் எதுக்கு ஒருத்தன் ரெண்டு கையையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறான்.

      

இந்த இங்கிலீஷ்காரன் பாட்டுகள் ஆர்கெஸ்ட்ரா என்ற முறையில் நூற்றுக் கணக்கானவர்களை வைத்துக்கொண்டு பாடுகிறார்கள். பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. அதில் எல்லோரும் ஒரே சமயத்தில் அவரவர்கள் வாத்தியத்தை வாசிப்பார்களா, அல்லது ஒரு சிலர் மட்டுமே வாசித்துக் கொண்டு மற்றவர்கள் எல்லாம் டம்மியாக வாசிப்பது போல் பாவனை செய்வார்களா என்பது என்னுடைய தீராத சந்தேகம்.

ஏனென்றால் அத்தனை பேரும் ஒரே சமயத்தில் வாசித்தால் அது வெறும் சத்தமாகப் போய்விடுமே, சங்கீதம் வராதே  என்கிற எண்ணம்தான். இது ஒரு புறம் இருக்க, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஒரு ஆள் டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு, கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிற மாதிரி கையையும் உடலையும் ஆட்டிக்கொண்டு நிற்கிறாரே அவர் எதற்கு அந்த மாதிரி சேஷ்டைகள் செய்து கொண்டு இருக்கிறார் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.

என் ஆப்த நண்பர்களில் சிலர் இந்த மாதிரி பாட்டுகள் கேட்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். இந்த சந்தேகத்தை அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் என்னைப் பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு பிறகு சொன்னார்கள். அந்த ஆளுக்குப் பெயர் ம்யூசிக் கண்டக்டர். அவர்தான் இந்த ஆட்களையெல்லாம் இயக்குகிறார். அவருடைய கை அசைவுகளைப் பார்த்துத்தான் இந்த பாடகர்கள் எல்லாம் பாடவோ வாசிக்கவோ செய்வார்கள் என்றார்கள்.

அப்புறமும் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. அப்படியானால் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் காகிதத்தில் எதையோ எழுதி வைத்துக் கொண்டு, அதைப் பார்த்துப் பார்த்து வாசிக்கிறார்களே, அது எதற்காக என்றேன். என் நண்பர்களுக்கு அதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. சரி, தொலையட்டும் என்று விட்டு விட்டேன். ஆனால் இப்போது தமிழ் சினிமா உலகத்திலும் இந்த மாதிரி பேஷன் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு பிரபல இசையமைப்பாளர் இருக்கிறார். அவர் ஒரு பாட்டிற்கு ஏகப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார்.
   
               

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானவர்கள் பல விதமான வாத்தியங்களை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒருவன் கையை ஆட்டிக்கொண்டு இருக்கிறான். வாத்தியங்கள் வாசிக்கும் ஒருவனாவது அவரைப் பார்கிகிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் அவர்கள் பாட்டுக்கு வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இத்தனை பேரும் சேர்ந்துதான் அந்த இசையைக் கொண்டு வருகிறார்களா அல்லது சும்மா ஷோவுக்காக இத்தனை பேர்களை சேர்த்திருக்கிறார்களா என்பது எனக்கு இது வரை புரியாத ஒன்று.

அடுத்த விடியாவைப் பாருங்கள். ஒரு (அழகான) பெண் நாலைஞ்சு வாத்தியங்களுடன் இதே பாட்டைப் பாடுகிறாள். நன்றாகத்தான் இருக்கிறது.

                 

நம் கர்னாடக சங்கீதக் கச்சேரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலத்து வித்வான்கள் பாட்டு நோட்டை முன்னால் வைத்துக் கொள்கிறார்கள். அதை ஒரு கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டேதான் பாடுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்து வித்வான்கள் பல மணி நேரம் கச்சேரிகள் செய்த போதும் எந்த விதமான குறிப்புகளையும் உபயோகப் படுத்தவில்லை. இந்தக் காலத்து வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் தேவைப்படுகிறது?    அதேபோல் ஆங்கில இசை வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் மற்றும் கண்டக்டர் தேவைப்படுகிறது என்பது ஒரு விடுகதையாகத்தான் தெரிகிறது. யாருக்காவது விடை தெரிந்தால் கூறலாம்.

இல்லை, உன் மரமண்டையில் இந்த நுணுக்கங்கள் எல்லாம் ஏறாது என்று நினைத்தால் அதையும் சொல்லி விடலாம். நான இந்த பிரச்சினையை மறந்து விட்டு வேறு பிரச்சினைகளை அலசுவதற்கு சரியாக இருக்கும்.