திங்கள், 28 நவம்பர், 2016

பதிவுலகைப் புதுப்பிப்போம் வாரீர் !பதிவுலகம் க்ஷீணித்துக் கொண்டு வருகிறது என்பதை பதிவர்கள் எல்லோரும் அறிவார்கள். காரணம் என்னவென்று சிந்தித்ததில் ஒன்று புலனாகியது.

அதாவது பதிவுலகில் விறுவிறுப்பு இல்லாமல் போயிற்று. ஏதோ என்னைப்போல் ஓரிருவர் மட்டுமே விறுவிறுப்பான பதிவுகள் எழுதுகிறோம். மற்றவர்கள் அன்வரும் எங்க ஊட்ல மாடு கண்ணு போட்டது, நான் சாமி கும்பிட்டேன், தெரு முனைல ஒரு பாட்டி போண்டா சுடுகிறாள், இந்த மாதிரி பதிவுகளே எழுதுகிறார்கள்.

இந்த மாதிரிப் பதிவுகளை யார் படிப்பார்கள்?

செய்தித்தாள் துறையில் ஒரு பழைய ஜோக் உண்டு. அதாவது நாய் மனிதனைக் கடித்தால் அதில் என்ன செய்தி இருக்கிறது? மனிதன் நாயைக் கடித்தான் என்றால் அதுதான் செய்தி என்பார்கள்.

உதாரணத்திற்கு நமது தேசீய நெடுஞ்சாலைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தினத்தந்தியில் தினமும் "நேற்று இரண்டு லட்சத்தி முப்பத்தியைந்தாயிரம் வாகனங்கள் நம் தேசீய நெடுஞ்சாலையில் பயணித்தன, எல்லோரும் பத்திரமாக அவரவர்கள் போக வேண்டிய இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்" என்று செய்தி வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்.எவனாவது தினத்தந்தி பேப்பரை வாங்குவானா?

நேற்று ஒரு சொகுசு காரும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரில் பயணம் செய்த ஆறு பேரும் ஸ்தலத்திலேயே மரணம். இப்படி ஒரு செய்தியை பிரசுரம் செய்து அதை முக்கிய செய்தியாக வால்போஸ்டில் போட்டால் விற்பனை பிச்சுக்கிட்டுப் போகும்.

அந்த மாதிரி பதிவுலகிலும் பதிவுகள் விறுவிறுப்பாக வரவேண்டும். அப்போதுதான் அதிகப்பேர் பதிவுலகிற்கு வருவார்கள். புதிய பதிவர்கள் தோன்றுவார்கள். வலைச்சரம் மீண்டும் பிரசுரமாகும்.

இரண்டொரு உதாரணங்கள் கொடுத்தால்தான் நம் பதிவர்களுக்கு நன்றாக விளங்கும்.

ஒரு ஆன்மீகப் பதிவு.  நேற்று நான் அங்காளம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கு அர்ச்சகரும் அங்காளம்மனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததை நான் என் இரு கண்களாலும் பார்த்தேன்.
இப்படி எழுதலாம்.

இல்லாவிட்டால் இன்னொரு உதாரணம். காளிகாம்பாள் கோவிலுக்குப் போய் கண்ணை மூடி தியானித்துக்  கொண்டிருந்தபோது யாரோ என்னைத் தொட்ட மாதிரி இருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் சாட்சாத் அம்மனேதான் என் முன் நிற்கிறாள்.

பயணக் கட்டுரைகளில் நான் பத்ரினாத் போனேன். பத்ரிநாதரைப் பார்த்துக் கும்பிட்டேன். இந்த மாதிரி எழுதினால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும். நான் பத்ரிநாத் போகும்போது நாங்கள் போய்க்கொண்டிருந்த பஸ் கங்கை ஆற்றில் விழுந்தது என்று எழுதினால் பலர் சுவாரஸ்யமாகப் படிக்க வருவார்கள்.

அடுத்த பதிவில் பஸ் போகும்போது நான் தூங்கி விட்டேன் அப்போது பஸ் ஆற்றில் விழுவது மாதிரி கனாக் கண்டேன் என்று சமாளித்து விட்டால் போகிறது.

ஆகவே பதிவர்களே, உங்கள் எழுத்து பாணியை மாற்றாவிட்டால் பதிவுலகம் நசித்துப் போய் காணாமல் போகும் என்று எச்சரிக்கிறேன்.