புதன், 18 ஜனவரி, 2017

பணமும் பயமும்

                                   
                                        Image result for பணம் image

வயதாகும்போது சில பயங்கள் வந்து விடுகின்றன. குறிப்பாக வரும் காலத்தில் நான் உடல் நலத்தோடு இருப்பேனா? என்னுடைய அன்றாட காரியங்களை நானே செய்து கொள்வேனா? எனக்கு உடல் நலம் குன்றினால் ஆஸ்பத்திரி செலவிற்கு நான் இப்போது சேமித்திருக்கும் பணம் போதுமா? இப்படியான பயங்கள் வருகின்றன.

இந்தப் பயங்களுக்கு சரியான பதில்கள் கிடையாது. உன் விதிப்படி எல்லாம் நடக்கும் என்று பொதுவாக சொல்வார்களே தவிர குறிப்பிட்டு எந்த விவரமும் சொல்ல முடியாது. அவரவர்கள்தான் தங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, அடுத்தவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பது விவேகமல்ல.

இந்தப் பயங்களைப் போக்கத்தான் பலர் (நான் உட்பட) பணத்தை தங்கள் கடைசி காலத்திற்கு வேண்டும் என்று சேமிக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சிதான் என்றாலும் இதில் உள்ள பெரும் சங்கடம் என்னவென்றால், எவ்வளவு பணம் இருந்தால் நல்லது என்பதற்கு ஒரு அளவு இல்லை. ஒருவர் பத்து லட்சம் ரூபாய் இருந்தால் நமது தேவைக்குப் போதும் என்று நினைக்கலாம்.

இன்னொருவர் ஒரு கோடி ரூபாய் இருந்தால்தான் நமது கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணலாம். எப்படி நினைத்தாலும் கடைசியில் ஒவ்வொருவரும் பணத்தை எப்படியாவது சம்பாதித்து சேமிக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதற்கு வரம்பு இல்லாமல் போகிறது. ஒரு பூதமும் ஏழு ஜாடி தங்கமும் என்ற கதை இந்த மனப்பான்மைக்கு நல்ல உதாரணம்.

இந்தக் கதை தெரியாதவர்கள் என்னுடைய இந்தப் பதிவை வாசிக்கவும். http://swamysmusings.blogspot.com/2012/04/blog-post_8346.html

நான் இப்போது அனுபவிக்கும் வேதனை என்னவென்றால் என்னுடைய இப்போதைய சேமிப்பு என் வாழ்நாளுக்குப் போதுமா அல்லது போதாதா? இந்தக் கேள்விக்கு நானேதான் விடையளிக்கவேண்டும்.

போதும் என்றால் இனி வரும் வருமானங்களை என்ன செய்வது? யாருக்காவது கொடுக்க முடியாது. ஏனென்றால் பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள் இருக்கிறார்கள். நானே திங்கலாம் என்றால் பல்லெல்லாம் போன பிறகு எதைத் திங்க முடிகிறது? வேறு ஏதாவது செலவு செய்யலாம் என்றால் பெண்டாட்டி திட்டுகிறாள். சரி, சும்மா இருக்கலாம் என்றால் மனது "நான் அப்படியெல்லாம் சும்மா இருக்க மாட்டேன், எனக்கு ஏதாவது தீனி போட்டால்தான் ஆச்சு" என்று அடம் பிடிக்கிறது.

இப்போது இருக்கும் சேமிப்பு போதாது என்று வைத்துக்கொண்டால், இப்போது இருக்கும் வருமானத்தைக் கொண்டு இன்னும் எவ்வளவு நாள் சேமிப்பது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த சேமிப்பையெல்லாம் நாளைக்கு ஒரு மோடி மஸ்தான் வந்து உங்கள் பேங்க் டெபாசிட் எல்லாம் "ஓகயா". எல்லாப்பணமும் அரசாங்க கஜானாவில் சேர்த்து விட்டாம் என்று சொல்லி விட்டால் அந்தச் செய்தியை இந்த இதயம் தாங்குமா என்ற கவலை வேறு இன்னொரு பக்கம் அரிக்கிறது.

இப்படியாக சாகவும் முடியாமல் பிழைக்கவும் முடியாமல் செய்து விட்ட அந்த ஆண்டவனை திட்டிக்கொண்டு இருக்கிறேன். அவன் எப்போது கண் திறப்பானோ?