கணிணியில் சீட்டு விளையாடுவதைப்பற்றி போன பகுதியில் எழுதியிருந்ததின் தொடர்ச்சி. ஒரு நாள் போனில் என் மனைவி வழி உறவினர் யாரோ என்னைக் கூப்பிட்டிருக்கறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு என் மனைவி, அவர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல ஒரே கூத்தாகிப்போய்விட்டது. சீட்டு விளையாடுவது என்பது பஞ்சமா பாதகங்களில ஒன்றாக கருதப்படும் சமூகத்தில் பிறகு என் மாமனார் வகை உறவில் என் மதிப்பு என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.
சரி இந்த வம்பு வேண்டாம், ஆனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
இப்படி இருக்கும்போது என் நண்பர் ஒருவர் அமெரிக்காவுக்கு தன்னுடைய மகன் வீட்டிற்கு 6 மாத தங்கலுக்காக சென்று விட்டார். அவரும் என்னைப்போலவே ஓய்வு பெற்றவர். அவர் இங்கே இருக்கும்போது அவருக்கு என்ன வேலை என்றால் தினமும் காலையில் டிபன் சாப்பிட்டு முடிந்த்தும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வார். அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் பேசி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வார். உலக நடப்பென்றால், திருவிளையாடல் சினிமாவில் சிவாஜி கணேசன் பாணியில் ‘நடந்தது, நடவாதது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும்’ அவருக்கு தெரிந்தாகவேண்டும். இல்லையென்றால் அன்று இரவு அவருக்கு தூக்கம் வராது.
இப்படியாக தினமும் காலையில் ஒரு நண்பர், மாலையில் ஒரு நண்பர் என்று முறை வைத்துக்கொண்டு நான்கு நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் வலம் வந்து செய்திகளை தெரிந்து கொள்வார். இது தவிர காலையிலும் மாலையிலும் இரண்டு குழுவினருடன் நடைப்பயிற்சியும் போவார். நடைப்பயிற்சியை விட அவருக்கு நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இப்படிப்பட்ட அகோர செய்திப்பசி கொண்டவர் அமெரிக்காவில் போய் சிக்கிக்கொண்டால் எப்படியிருக்கும் ?
பொறுத்திருக்கவும்...