வெள்ளி, 24 நவம்பர், 2017

26. கல்யாணங்களில் மேக்கப் கலைஞர்களும் விடியோக்காரர்களும்.

                                                 Image result for marriage makeup in tamilnadu
இரண்டு நாட்களுக்கு முன் நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். கல்யாண சடங்குகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ளுமாறு பெண்ணின் தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். காலை சரியாக 9 மணிக்கு சடங்குகளை ஆரம்பித்து விடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

நானும் அதே போல் உறவினர்களை எல்லாம் தயார் பண்ணி வைத்திருந்தேன். 9 மணிக்கு மணப்பெண் மேடைக்கு வரவேண்டும். 9 மணி, 9.15, 9.30, 9.45, 10 மணியும் ஆகி விட்டது. மணப்பெண் வருவதாகக் காணோம். மணப்பெண்ணின் அறைக்குப் போய் பெண்ணின் தாயாரிடம் '' என்னம்மா, ஏன் இப்படி லேட்'' என்று கேட்டேன்.

மேக்கப் போடும் அம்மா விடமாட்டேன் என்று சொல்கிறாள் என்று பதில் வந்தது. ஏம்மா, மேக்கப்காரியிடம் முதலிலேயே இந்த நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்கவேண்டும் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். சொன்னதுதானுங்க, ஆனால் இப்போது சொன்ன நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்க வில்லையே, நான் என்ன செய்வது என்று புரியவில்லை என்று பெண்ணின் தாயார் தன் கஷ்டத்தைச் சொல்லி புலம்பினாள்.

பல கல்யாணங்களில் இப்படித்தான் மேக்கப் போடுபவர்கள் அநியாயத்திற்கு காலதாமதம் செய்கிறார்கள். பாதி மேக்கப்பில் பெண்ணை கூட்டி வருவது இயலாத காரியம். கல்யாணக்காரர்களின் பாடு படு திண்டாட்டம்.

அடுத்து கல்யாண சடங்குகள் நடைபெறும்போது இந்த போட்டோக்காரனும் விடியோக்காரனும் பண்ணும் அழும்புகள் இருக்கிறதே அதைச்சொல்லி மாளாது. எந்த சடங்கையும் வந்திருக்கும் உறவினர்கள் பார்க்க முடியாது. இந்த ஆட்கள் சுற்றிலும் நின்று கொள்வார்கள். யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

அதிலும் இவன்கள் செய்யும் இன்னொரு கொடுமை என்னவென்றால், ஒரு சடங்கு முடிந்தவுடன், இவன் எடுத்த போட்டோ சரியாக இல்லை என்றால் அந்த சடங்கை மறுபடியும் செய்யச்சொல்வான். இந்த சடங்குகள் மந்திரங்கள் சொல்லி புனிதமாகச் செய்யப்படுபவை. அதைப்பற்றி இந்த போட்டோக்காரனுக்கு கவலை இல்லை. அவனுக்கு போட்டோ நன்றாக வரவேண்டும். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். தாலி கட்டுவதையே இன்னொரு முறை செய்யச்சொன்னாலும் நம் ஆட்கள் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.

இனிமேல் கல்யாணத்தை நடத்த இந்த மேக்கப்காரிகளும் விடியோக்காரன்களுமே போதுமானதாக ஆகி விடும். விருந்தினர்கள் போய் தலையைக்காட்டி விட்டு சாப்பிட்டுவிட்டு வருவதோடு சரி. என்னைப் போன்ற கிழங்கட்டைகளுக்கு இந்தக் கூத்தைப் பார்க்க சகிப்பதில்லை. நாம் ஏதாவது சொல்லப்போனால் ''பெரிசு, இதுதான் இந்தக் காலத்து நாகரிகம், உங்க காலம் மாதிரி பொண்ணு தலையைக் குனிஞ்சிகிட்டு இருந்த தெல்லாம் உங்க காலத்தோட போச்சு. பேசாம சாப்பிட்டுட்டுப் போவயா, அது சொத்தை, இது சொத்தைன்னு புலம்பாதே'' என்ற அறிவுரைதான் வரும்.

நம்ம மரியாதையைக் காப்பாத்திக்கணும்னா இந்த மாதிரி வைபவங்களுக்குப் போகாமலிருப்பதுதான் சிறந்தது.

                                       Image result for videographer