வியாழன், 16 ஜூலை, 2009

சென்னை தமிழும் கொங்கு கவுண்டரும்

எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ரொம்ப நாளாக சென்னையில் வசித்து விட்டு சமீபத்தில் கோவைக்கு வேலை மாற்றலாகி குடி வந்தார்கள். அந்த வீட்டிலுள்ள காலேஜ் போகும் பெண் என் மகளுக்கு பழக்கம். அந்த பெண் கோவையில் பேசும் தமிழைக்கேட்டு விட்டு ‘ இங்கே என்ன தமிழ் இப்படி பேசுகிறார்கள், இழுத்து இழுத்து பேசுகிறார்கள். அப்புறம் அது என்ன எதற்கெடுத்தாலும் ஒரு ‘..ங்க’ போட்டு, என்னங்ங்ங்ங்கேகேகே... என்று இழுக்கிறார்கள்’. கொங்கு தமிழ் ஏறக்குறைய சினிமாவில் கோவை சரளா வசனங்கள் மூலமாக அனைவரிக்கும் பரிச்சயமாயிருக்கும். சினிமா பார்க்காதவர்களுக்காக சில மாதிரி சம்பாஷணைகள்;

வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வரும் புருஷனிடம் மனைவி;
ஏனுங்க, வேலையிலிந்து ஊட்டுக்கு வர இத்தனை நேரம் ஏனுங்க, நீங்க வேலைக்கு போனதுக்கப்பறம் உங்க அம்மா பண்ற ரவுசு என்னாலெயெ தாங்க முடியலைங்க. அப்பறம் உங்க பசங்க பண்ற லொள்ளு மீறிப்போச்சுங்க, இதுக்கு என்னாச்சும் பண்ணுங்க’.
இந்த ரேஞ்சில் பேச்சு போகும்.

சென்னையில் எப்படியென்றால்;
‘என்னா நீ, வூட்ல சொல்லிகினு வந்த்ட்யா, கஸ்மாலம், நட்ரோட்ல போறயே, மண்டேலே மசாலா (க்)கீதா, எத்னாச்யும் லாரி கீரி பட்டா என்னா, ஆஸ்பத்ரிக்கு பூடுவே.’

கோயமுத்தூரிலிருந்து புதிதாக சென்னை செல்பவர்களுக்கு இந்த பாஷை ஒரு ஷாக்காக இருக்கும். யாரையும் ஒருமையில் அழைத்துப்பழக்கமில்லாத கோயமுத்தூர் கவுண்டர் ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போய் விடுவார். பிறகு கொஞ்சம் பழகின பிறகுதான் இதை சகித்துக் கொள்வார். ஊருக்கு திரும்பிப்போனதும் பல நாட்களுக்கு பார்த்தவர் எல்லோரிடமும் இந்த மெட்ராஸ் பாஷையைப்பற்றித்தான் பேசுவார். ‘’மெட்ராஸில ஒரு பயலுக்கும் மரியாதையே தெரியாது. அங்க பேசற மாதிரி நம்ம ஊர்லெ பேசினா எல்லாப்பயலும் நம்மை அடிக்க வந்த்ருவான்.’’ இப்படியே பல நாட்களுக்கு புலம்பிக்கொண்டு இருப்பார்.
தொடரும்....