புதன், 30 ஜனவரி, 2013

கடவுளும் பின்னே நானும்



Extracts from Google+ comments

  End of World » 18-12-2012
Last night, the God came in my dream and assured that the world will end only next year and not this year. So we have one whole year to do further sinful deeds. Hurray!


 
  balagopal venkatramanDec 19, 2012
So i can wish you happy new year on the evening of 31/12/2012. A happy seasonal greetings             More dreams with God


 
  Seeni VasanJan 17, 2013
When I was worried about 21.12.12, God hinted me that one Mr. so on so who has more than one name of Lord Muruga knows the answer, find him to clear your doubts.            Thank God, I have found you now. 



ஆஹா, சிஷ்யா. உம் பக்திக்கு மெச்சினோம். குருவைத் தரிசிக்க வருமுன் சொல்லிவிட்டு வரவும்.

dharumi -Jan 18, 2013
இப்படி அடிக்கடி உங்கள் கனவில் நான் வருவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குது !!!

கடவுளுக்கே கஷ்டம்னா நாங்க எல்லாம் என்ன செய்யறது கடவுளே!

dharumi -Jan 18, 2013
ஏதோ நல்ல மனுஷரா இருக்கிறாரேன்னு கஷ்டம் பாராம வந்துகிட்டு இருக்கேன்!

இதயெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டி கிள்ளிக்கிட்டு இருக்காதீங்க ... சரியா?

சரீங்க, இருந்தாலும் அறிந்தும் அறியாமலும் அடியேன் செய்த, செய்யும், செய்யப்போகின்ற பிழைகளைப் பொறுத்து ரட்சிக்கவேண்டும்.

dharumi -Jan 19, 2013
செஞ்சதுக்கு சரி .. போனா போகுதுன்னு உட்டுர்ரேன். ஆனா இந்த மாதிரி anticipatory bail எடுத்தா  என்ன பண்றதுன்னு தெரியலையே! ம்ம்... பாத்து நடந்துக்குங்க ....... எதுக்கும் சித்திரகுப்தன் / St.Peter கிட்ட கன்சல்ட் பண்ணிக்கிறேன்.

அவங்களையெல்லாம் மொதல்லயே கரெக்ட் பண்ணீட்டனுங்க. நீங்க மட்டும் கண்டுக்காம இருந்தா போதுமுங்க.

dharumi -Jan 19, 2013
அடப் பாவிகளா! (நான் அவங்க ரெண்டு பேத்தையும் சொன்னேன்.) எனக்கு வரவேண்டிய கமிஷன் என்னாச்சு ...? சரி.. அப்டின்னா என்னையும் கண்டுக்குங்க!

ஒரு பெரிய டீல் கரெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன், கடவுளே. அது சக்சஸ் ஆகட்டும். உங்களையும் கண்டுக்கிறேன்.

 dharumi -Jan 19, 2013
crossed cheques, please

Crossed cheque –ஆ. என்ன கடவுள்ங்கிறீங்க, சுத்த வெவரங்கெட்ட கடவுளா இருக்கீங்களே. இந்த டீலிங்க்குகள்ல எல்லாம் உங்களுக்கு முன்ன பின்ன பரிச்சயம் இல்ல போல இருக்கு. அதான் Crossed cheque கேக்கறிங்க. உங்க அசிஸ்டன்ட்கள் கிட்ட ட்யூஷன் எடுத்துக்குங்க.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

எத்தனை பட்டும் புத்தி வரவில்லையே?

நம் தொழில் நுட்ப பதிவர்கள் சில முறை நல்ல உதவி புரிந்தாலும் பெரும்பாலான தடவைகளில் தவறான பாதைகளைக் காட்டி விடுகிறார்கள்.

இன்டர்நெட்டில் நல்ல பல புரொக்ராம்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் பல புரொக்ராம்கள் சோதனைப் பதிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன. நம் தொழில் நுட்ப பதிவர்கள் ஒரு புரொக்ராமை பரிந்துரைக்கும்போது, இது சோதனைக்காக மட்டும், சோதனைக் காலம் முடிந்ததும் இதற்கு நீங்கள் விலை கொடுக்கவேண்டும் என்று ஏன் சொல்வதில்லை என்று எனக்குப் புரியவில்லை?

ஆகவே, சக பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. தேவையில்லாமல் தொழில் நுட்ப பதிவர்கள் பரிந்துரைக்கும் புரொக்ராம்களை தரவிறக்கி, தலைவலியையும் திருகு வலியையும் ஒன்றாக வாங்கவேண்டாம். எல்லா தொழில் நுட்ப பதிவுகளும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்தான்.

ஏன் இவ்வளவு காட்டமாக எழுதுகிறேன் என்றால், பல முறை சூடு வாங்கியதால்தான். இன்று வாங்கிய சூடு கொஞ்சம் அதிகமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.

திங்கள், 28 ஜனவரி, 2013

பல் குத்தும் கலை


ஸ்ரீராம்.22 ஜனவரி, 2013 7:49 PM என்னுடைய "காது குடைவது எப்படி" என்ற பதிவில் போட்ட பின்னூட்டம்.
மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கவலையை விடுங்கள். இதோ உங்கள் அபிமான பதிவுகள் ஒவ்வொன்றாக வருகின்றன.
நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.
காரணம் - அவர் அவ்வப்போது கொடுக்கும் பதிவிற்கான டிப்ஸ்கள். இப்ப பாருங்க, மூணு பதிவிற்கான தலைப்புகளை ஒண்ணாக் கொடுத்திருக்கார். ஒண்ணாக் கொடுத்திருந்தாலும் நான் தனித்தனி பதிவாகத்தான் போடப்போகிறேன். பதிவுக்கணக்கு தேத்தணுமில்ல.

அவருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்-அவ்வப்போது இவ்வாறு டிப்ஸ்கள் கொடுத்து என்னை ஊக்கப் படுத்தவேண்டும்.

மொதல்ல இப்ப பல் குத்தறதப் பார்ப்போம். (பல் குடைவதும், குத்தறதும் ஒன்றுதான்)

பல் குத்தறது ஒரு பெரிய கலை. இதைப் பற்றி பெரிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் இன்டர்நெட்டில் எழுதியிருக்கறதை இப்பத்தான் பார்த்தேன். யுட்யூப் விடியோவெல்லாம் கூட இருக்குது.

மொதல்ல பல்லை எதுக்காகக் குத்தறது என்று பார்ப்போம். உணவு உண்ணும்போது பல் இடுக்குகளில் உணவுத் துண்டங்கள், குறிப்பாக அசைவ உணவு உண்ணும்போது, சிக்கிக்கொள்ளும். இந்த அனுபவம் அநேகமாக எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். சாப்பிட்டு முடித்த பின், இந்த சிக்கலைத் தீர்க்கவிட்டால், அது கொடுக்கும் வேதனை தாங்க முடியாது. அதற்காகத்தான் அசைவ உணவு விடுதிகளில் பில் கொண்டு வரும்போதே இந்த பல் குச்சிகளையும் தருகிறார்கள்.

பல் குச்சி வந்து விட்டதே என்று நம் ஆட்கள் பலரும் அங்கேயே பல் குத்த ஆரம்பித்து விடுவார்கள். இது காட்டுமிராண்டித்தனம். வெளிநாடாக இருந்தால் உங்களை பார்வையாலேயே கொன்று விடுவார்கள். இந்தியாதான் விவஸ்தை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடாயிற்றே. எங்கேயும் எதை வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு. அதற்காகத்தானே சுதந்திரம் வாங்கினோம்!

நியாயமாக பல் குத்துவதற்கு சாப்பிட்ட இடத்தை விட்டு அப்பால் செல்ல வேண்டும். மற்றவர் பார்வையில் படாத மாதிரி இந்த வேலையைச் செய்யவேண்டும். பின்பு கைகளைக் கழுவிவிட்டு, மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். இதுதான் நாகரிகம்.

பல சமயங்களில் இந்த பல்குச்சி கிடைக்காது. அப்போது பக்கத்திலுள்ள செடிகளிலிருந்து பதமான ஒரு குச்சியை ஒடித்து உபயோகப் படுத்துவது காலம் காலமாக வந்த பழக்கம். சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள், இதற்காக ஓட்டலில் பல் குச்சி கொடுக்கும்போது ஒரு நாலைந்தை எடுத்து பர்சில் வைத்துக் கொள்வது உண்டு.

ஆபிசில் பல் குத்த வேண்டுமென்றால் குண்டூசி அவசரத்திற்கு கிடைக்கும். அதை உபயோகப் படுத்துவார்கள். இதில் உள்ள சௌகரியம் என்னவென்றால் இரண்டொரு நாளில் உங்கள் அபிமான பல் டாக்ரைப் பார்க்கவேண்டி வரும். ஏனென்றால் ஈறுகளில் குண்டூசி குத்தி செப்டிக் ஆகும்.

இன்னும் சிலருக்கு எந்த உபகரணமும் தேவையில்லை. பல்லிடுக்கில் சிக்கியிருப்பவைகளை ஒரு ஸ்பெஷல் டெக்னிக்கில் உறிஞ்சி எடுப்பார்கள். அப்போது ஒரு வித சப்தம் உண்டாக்குவார்கள். இதைக் காண, கேட்க முன் ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதைப் போன்ற கண்றாவிக் காட்சிகள் உலகத்தில் வெகு சிலதே உண்டு.

அடுத்ததுதான் வெகு முக்கியம். இப்படி பல் குத்தி எடுத்ததை என்ன செய்வது? பொதுவாக சாப்பாட்டு டேபிளாக இருந்தாலும் சரி, பந்தியாக இருந்தாலும் சரி, வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி, அங்கே மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அப்படியே துப்புவதுதான் நம் ஆட்கள் செய்யும் பழக்கம். இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பது உத்தமம்.

பல் குத்தின குச்சியை குப்பைக்கூடையில் போடுவதுதான் உத்தமம். எக்காரணம் கொண்டும் அதை மணிபர்சில் பத்திரப்படுத்தக் கூடாது. இந்த வேலைகள் முடிந்த பின் கைகளைக் கழுவுதல் அவசியம். சாப்பிட்ட பிறகு கூட கை கழுவாதவர்கள் இதைப் பொருட்படுத்த வேண்டாம்.

கூகுளில் பார்த்தது. ஆங்கிலத்தில் இருப்பதை தமிழ்படுத்த முடியவில்லை.

On tooth picking
"Should the left hand be used when handling the Tooth Pick?
Should one cover one's mouth, whilst Tooth Picking?
What should be done with the detritus?
A) Placed on napkin
B) Spat into the fan to share around
C) Saved for when hungry later
D) If saved, what is the time limit?

ஆகவே பல் குத்துவது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? இப்படியே செய்து வரவும். சீக்கிரமே மக்கள் உங்களைக் கண்டதும் ஓட ஆரம்பிப்பார்கள்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா

புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு நான் எடுத்த சில புகைப்படங்கள்.










வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரதத்தை ஏன் கொள்ளை விலைக்கு விற்கிறார்கள்?

சரவணன்
ஒரு சந்தேகம்- புரோட்டீன் உணவுகள் (பருப்பு, கறி, புரோடீன் பானங்கள் உட்பட) விலை அதிகமாக இருப்பது ஏன்? கார்போஹைட்ரேடை விட புரோடீனை விளைவிப்பது செலவு அதிகமாக இருப்பது ஏன்? ஆம்வே நியூட்ரிலைட் பானம் 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்குமேல். அதில் பலன் உண்டா?

கொள்ளைக்காரனைப் பார்த்து "ஐயோ, கொள்ளையடிக்கிறானே" என்று புலம்புவதில் பயனில்லை.

துவரைக் காய்கள்

புரதச்சத்து மனித உடலுக்கு எவ்வளவு அவசியம் என்று முன்பொரு பதிவில் பார்த்தோம். மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதம் மிகமிக அவசியம்.
வளரும் குழந்தைகளுக்கு போதுமான புரதச்சத்து இல்லாவிட்டால் அவர்களுக்கு பல குறைபாடுகள் உண்டாகும்.

இன்றைய வளர்ந்த சமுதாயத்தில், குறிப்பாக நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்று வளர்க்கிறார்கள். அவர்களைக் குறி வைத்துத்தான் விளம்பரங்கள் அனைத்தும் வெளிவருகின்றன.

புரதச்சத்து இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் என்று சொல்லிவிட்டால் போதும், இந்தப் பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே, அதை எழுத்தில் விளக்கவே முடியாது. மக்களின் இந்த குணத்தைப் பயன்படுத்தி பெரிய கம்பெனிகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதை மூளைச்சலவை செய்து தங்கள் பொருட்களை வியாபாரம் செய்து விடுகிறார்கள். 

பத்து ரூபாய் பெறும் ஒரு சத்தை இவர்கள் விளம்பரத்தின் மூலம் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். "ஆம்வே" கம்பெனி இந்தக் கொள்ளையில் முதலிடம் வகிக்கிறது.

மனிதன் ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் அவன் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் போதும். அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, அவரைப் பருப்பு, கொள்ளு, நல்லெண்ணை, கடலை எண்ணை, காய்கறிகள், பால் இந்த உணவுகளை முறையாக சாப்பிட்டு வந்தால் போதும். எந்தக் குறைபாடும் வராது.

வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை, வெல்லம், பால் இவை மூன்றுமே அவர்களுடைய புரதத் தேவையை பூர்த்தி செய்து, அவர்கள் நன்கு வளரப் போதுமானவை. கடைகளில் விற்கும் கண்ட கண்ட பானங்களையோ, பொருட்களையோ வாங்கிக் கொடுப்பதினால் ஒன்றும் பலனில்லை. ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததினால்தான் இவ்வாறு மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்.

புரதச்சத்து தானியங்கள் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் அவைகளின் விளைச்சல், மாவுச்சத்து தானியங்களை விடக் குறைவு. அதனால் அவைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கரில் நெல் 2 டன் விளையும். ஆனால் துவரம்பருப்பு 400-500 கிலோ மட்டுமே விளையும். தவிர நெல் 4 மாதத்தில் விளைந்துவிடும். துவரம்பருப்பு விளைய 8 மாதங்கள் ஆகும்.

இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தேவையில்லாமல் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி பணத்தை வீணாக்க வேண்டாம்.

புதன், 23 ஜனவரி, 2013

மனிதனுக்குள் ஒரு மிருகம்

மனிதன் ஆதி காலத்தில் மிருகமாக இருந்து, பின்பு மனிதனாக மாறினான் என்று உயிரியல் தத்துவங்கள் கூறுகின்றன. மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு என்னவென்றால், மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலருக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

மனிதன் மிருகமாக செயல்பட்டதை சமீபத்தில் பார்த்தோம். ஆகவே மனிதனுக்குள் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அது அவ்வப்போது எட்டிப் பார்க்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால்தான் மனிதன் அனுபவிக்கும் பல இன்பங்களை மிருக-இன்பம் (Animal Pleasure) என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு, பசிக்காக உணவு உண்கிறோம். தாகத்திற்காக தண்ணீர் குடிக்கிறோம். வேறு காரணங்களுக்காக என்னென்னமோ செய்கிறோம். இதையெல்லாம் மிருக-இச்சை என்று சொல்கிறோம் அல்லவா? ஒருவன் நாகரிகமில்லாமல் சாப்பிட்டால் என்ன சொல்கிறோம், “பன்னி மாதிரி தின்கிறான் பார்” என்று சொல்கிறோம். ஒருவன் நன்றாகச் சாப்பிட்டு விட்டு, படுக்கையில் படுத்து புரண்டால் “மலைப் பாம்பு தின்னுப்புட்டு நெளியற மாதிரி நெளியறான் பாரு” என்று சொல்கிறோம். ஏனென்றால் இவையெல்லாம் மிருக இச்சைகள்.

குளிப்பது மனிதனின் தேவை. மற்ற மிருகங்களும் குளிக்கின்றன. சீக்கிரம் குளிப்பவனை காக்காக் குளியல் போடுகிறவன் என்று சொல்கிறோம். சொரணை கம்மியாக இருப்பவனைப் பார்த்து “எருமை” என்று சொல்கிறோம். இதையெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நாம், பாத் டப்பில் குளிப்பவனை, (பாத் டப்பில் என்ன குளியல், தண்ணீரில் ஊறிக் கிடப்பதுதானே) குட்டையில் ஊறிக்கிடக்கும் எருமையுடன் ஒப்பிடுவதில் ஏதாவது தப்பு இருக்கிறதா? நியாயமாக எருமைகள்தான் தங்களை மனிதனுடன் ஒப்பிட்டதில் வருத்தப் படவேண்டும்.

கடைசி செய்தி: எருமைகள் சங்க வக்கீல் என் மீது கேஸ் போட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி.

திங்கள், 21 ஜனவரி, 2013

நவீன குளியல் அறையில் குளிப்பது எப்படி?


தங்கள் சொந்த வீட்டில் குளிப்பதானாலும் சரி, விருந்தாளியாகப் போய் மற்றவர்கள் வீட்டில் குளிப்பதானாலும் சரி, சில அடிப்படை நாகரிகங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.

நான் ஒரு ஆண். அதனால் ஆண்கள் குளிப்பதைப் பற்றித்தான் என்னால் சொல்ல முடியும்.

குளிப்பது என்பது நான்கு நிலையில் நடக்கும் ஒரு வேலை.

1. பல் விளக்குவது

2. ஷேவிங்க் செய்வது

3. குளித்தல்

4. ஆடை அணிதல்

(இந்த வேலைகளில் 1 மற்றும் 2 இவைகளை தனியாக பாத்ரூமுக்கு வெளியில் செய்ய வேண்டி வரலாம். அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்)

பல் விளக்குவதுவும் ஷேவிங்க் செய்வதும் வாஷ் பேசினுக்கு முன் செய்ய வேண்டிய வேலைகள்.

இதுதான் வாஷ் பேசின்


முதலில் பல் விளக்குவதைப் பார்ப்போம். பிரஷ், பேஸ்ட் உபயோகப்படுத்தினாலும் சரி, பல் பொடி உபயோகித்தாலும் சரி, உங்கள் வாயிலிருந்து வருபவை அனைத்தும் பேசினுக்குள்தான் விழ வேண்டும். பல் தேய்த்து முடித்த பின் வாய் கொப்பளித்து உமிழும் திரவங்கள் அனைத்தும் பேசினுக்குள் விழவேண்டும். இதுதான் முறை. இது முடியாதவர்கள் ஆற்றங்கரைக்குப் போய்விடுவது உத்தமம்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். வாயை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று, கையை வாய்க்குள் விட்டு ஊர் முழுவதும் சத்தம் கேட்கிற மாதிரி வாந்தி பண்ணக்கூடாது. நீங்கள் பாத்ரூமுக்குள் இருக்கும்போது, தண்ணீர் விழும் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் வெளியில் கேட்கக்கூடாது.

இப்போது வாஷ் பேசினை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து விட வேண்டும். நீங்கள் வரும்போது எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதே சுத்தம் நீங்கள் வாஷ் பேசினை விட்டுப் போகும்போதும் இருக்கவேண்டும்.

பிறகு ஷேவிங்க் செய்த பிறகும் வாஷ்பேசினை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும். முடிகளை பேசினில் எக்காரணத்தைக் கொண்டும்  விட்டுவிடக்கூடாது. (ஷேவிங்க் செய்வது எப்படி என்று ஒரு தனி பதிவு தயாராகிக்கொண்டு இருக்கிறது)

பின்பு குளித்தல் எப்படி என்று பார்ப்போம். குளிப்பதை பல நிலைகளில் செய்யலாம். நின்றுகொண்டு, உட்கார்ந்து கொண்டு, பக்கெட்டிலிருந்து மக்கில் மோண்டு ஊற்றி, ஷவரின் அடியில் நின்று கொண்டு, ஹேண்ட் ஷவரை உபயோகித்து, இப்படி எப்படி வேண்டுமானாலும் குளிக்கலாம். உடம்பில் ஒட்டியிருக்கும் வியர்வை மற்ற அழுக்குகள் நீங்க வேண்டும், அவ்வளவுதான். சோப்பு அல்லது பயத்தம் மாவை உடலின் மேல் பூசிக் குளிக்கலாம்.

முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, தண்ணீரை அதிகம் உபயோகிக்காமல் அளவுடன் உபயோகிக்கவேண்டும். இன்று தண்ணீர் அரிதாகிக்கொண்டு வருகிறது. அதுவும் நகரங்களில் மிகவும் கஷ்டம். 

குளித்து முடித்தவுடன் புது உள்ளாடைகளையும் மேல் ஆடைகளையும் உடுத்திக்கொண்டு, பழைய ஆடைகளை அதற்குண்டான பக்கெட்டிலோ, குண்டானிலோ போட்டுவிடவேண்டும். பாத்ரூம் தரையில் எந்தவிதமான அழுக்குகளும் இல்லாமல் கழுவி விட்டு வெளியில் போட்டிருக்கும் கால்மிதியில் கால்களை ஈரம் போகத்துடைத்துவிட்டு வரவேண்டும்.

அநேகமாக இப்போது எல்லோர் வீட்டிலும் பாத்ரூமில் எக்ஸ்சாஸ்ட் பேன் வைத்திருப்பார்கள். பாத்ரூமை விட்டு வெளியில் வந்தவுடன், கதவை மூடிவிட்டு, இந்த பேனைப் போட்டுவிட்டால் பாத்ரூம் தரை சீக்கிரம் உலர்ந்துவிடும். இதற்கு பாத்ரூம் எலெக்ட்ரிக் ஸ்விட்ச்சுகள் அனைத்தும் வெளியில் இருக்கவேண்டும். பாத்ரூம் தரை உலர்ந்து இருப்பது அவசியம். ஏனென்றால் ஈரத்தரையில் நோய்க்கிருமிகள் வளர்வது மிக அதிகம்.

உங்கள் சொந்த வீடானாலும் உறவு முறைக்குப் போய்த் தங்கின வீடாக இருந்தாலும் இந்த முறையில் பாத்ரூமை உபயோகப்படுத்தினால் அனவருக்கும் சந்தோஷமாக இருக்கும். யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் விருந்தினர்கள் கவனமாக இருப்பது அவசியம்


                                    .

இது பாத்டப் எனப்படுவது. நம் கிராமத்து குட்டைகளில் எருமை மாடுகள் முங்கிக் கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது அதுவேதான். என்ன வித்தியாசம் என்றால் இதில் வெந்நீரும் வரும். டப்பை நிரப்பிவிட்டு அதில் மணிக்கணக்காக ஊறிக்கொண்டு இருப்பது ஒரு தனி சுகம் என்கிறார்கள். நான் அனுபவித்ததில்லை.


இது கேபின் என்று சொல்லப்படும் குளியல் அறை. இதில் தண்ணீர், வெந்நீர் இரண்டும் உங்களுக்கு வேண்டிய சூட்டில் இதமாக உங்கள் மீது பீய்ச்சி அடிக்கும். ஏறக்குறைய அருவியில் குளிக்கும் அனுபவம் கிடைக்கும். இந்த இரண்டு முறைகளும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வருந்தும் ஏழைகளுக்கானது. நமக்கு அந்த வருத்தம் இல்லாததால் இவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

கிணற்றடியில், பம்பு செட்டிற்கு கீழ் குளித்தவர்களுக்கு இந்த மாதிரி பாத்ரூமில் குளிப்பது காக்கைக் குளியலுக்கு சமம்தான். என்ன செய்யமுடியும்? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.