செவ்வாய், 31 மே, 2016

தமிழன் என்பது ஒரு நாடக வேடமே !

                           Image result for தமிழன் வரலாறு

பொது உறவு அதிகாரியாக இருக்க பிரபல பதிவர் ஒத்துக்கொண்டபடியால் அவரை உடனே அப்பதவிக்கு நியமனம் செய்து அவரும் உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார். அவருக்கு நான் கொடுத்த முதல் வேலை என்னவென்றால் நம் சங்கத்தின் செயல்பாடுகளை நல்ல முறையில் மக்களிடம் போய்ச்சேறுமாறு நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே. அவரும் சரியென்று சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனிக்கப்போய்விட்டார்.

ஒரு மாதம் சென்ற பிறகு அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் கூடவே பத்து ஆராய்ச்சி மாணவ, மாணவிகளும் வந்தார்கள். தேனீர் அருந்தியவுடன் விவாதத்தை ஆரம்பித்தோம்.

த.து.தலைவர்தான் ஆரம்பித்தார். கி.த.ச. தலைவரே, நீங்கள் கேட்ட விவரத்தைப் பற்றி சிந்தித்தேன். சிந்திக்க சிந்திக்க குழப்பம்தான் மிஞ்சுகிறதே தவிர ஒரு தெளிவு கிடைக்க மாட்டேனென்கிறது.

நான் -  இதிலென்ன குழப்பம். தமிழ் இனம் எவ்வளவு தொன்மையானது? இந்த இனத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமா?

ததுத (அதாவது தமிழ்த்துறைத் தலைவர்) - மண்ணின் மைந்தர்கள் என்று பார்த்தால் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசுபவர்கள்தான் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். அவர்களைத்தான் தமிழர் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.  தமிழ் நாட்டில் வசிக்கும் பலர் வெளியில் தமிழிலும் வீட்டிற்குள் தெலுங்கு, கன்னடம், மலயாளம், ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி என்று இப்படி பல மொழிகளில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை எப்படி தமிழன் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

நான் - இது ஒரு சரியான குழப்பமான நிலைதான். அப்படி வீட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசக்கூடிய தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

ததுத - இந்தக் கணக்கை அரசு புள்ளி விவர ஏடுகளிலிருந்து சேகரித்தேன். அந்த விவரத்தைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.

நான் - பலவாயில்லை, சொல்லுங்கள்

ததுத - அப்படிப்பட்டவர்கள் மொத்தம் 24 சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள்.

நான் - அப்போ தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை சமூகம்தானா, இதென்ன அநியாயம் ?

ததுத - அது மட்டுமா? இந்த மாதிரி தமிழர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்து கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் 2030 ல் தமிழ் நாட்டில் தமிழர்களே இருக்க மாட்டார்கள். எல்லோரும் அமெரிக்கா போயிருப்பார்கள். அங்கே அவர்கள் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்கர்களாக மாறியிருப்பார்கள்.

நான் - என்னய்யா இது அக்கிரமம்? தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்க மாட்டார்களா? அப்புறம் இங்கு இருப்பவர்கள் என்ன மொழி பேசுவார்கள்?

{இதற்குள் திமுதிமுவென்று ஒரு பதினைந்து பேர் விவாத அரங்கினுள் நுழைந்தார்கள். நான் "பொது" (அதாவது பொது உறவு அதிகாரி) யைப் பார்த்தேன். அவர் சொன்னார். நீங்கள் சொன்ன மாதிரி நமது கருத்துகள் மக்களுக்கு போய்ச்சேர நான்தான் இந்த பத்திரிக்கை நிருபர்களை வரச்சொன்னேன் என்றார். சரி அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து அமரச்சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு விவாதத்தைத் தொடர்ந்தோம்.}

ததுத - இதற்கு ஒரு வழி இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றுவதுதான் அந்த வழி.

நான் - இதை சட்ட பூரவமாகச் செய்ய முடியாதே. மத்திய அரசு ஒத்துக்கொள்ளாதே.

ததுத -  இதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது. தமிழர்களை விட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம். தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று கோஷம் போடலாம். அப்போது இந்த வந்தேறிகள் பயந்து கொண்டு அவரவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள்.

நான் - இது ஒரு நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. "பொது" வைப் பார்த்து இதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி விட்டு கூட்டத்தை முடித்தேன்.

எல்லோரும் மதிய விருந்து உண்டுவிட்டு கிளம்பிப்போனார்கள்.

ஞாயிறு, 29 மே, 2016

தமிழன் என்பவன் யார்?

                              Image result for board meeting images
எங்கள் விவாதத்தில் முதலில் விவாதிக்கப்பட்ட பொருள் - தமிழன் என்பவன் யார்? என்பதே.

பல நூற்றாண்டு காலத்திற்கு முன் பாரதத்தின் தென் பகுதியில் தமிழர்கள் வசித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதைய கேரளப் பகுதியும் தமிழ் நாடாகவே இருந்தது. தமிழகத்தில் மூன்று பேரரசர்கள் அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இந்த மூன்று அரசர்கள் ஆண்டு வந்த பகுதிகளில் உள்ளவர்கள் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

அப்போது போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத காரணத்தால் மக்கள் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குப் போவது அரிதாக இருந்தது. ஆகவே இந்த மூவேந்தர்களின் ஆட்சிப்பகுதியில் குடியிருந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் குடியிருந்தார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருந்து வந்தன.

இவர்களே தமிழர்கள் என்று அழைக்கப்ப்ட்டார்கள். அவர்கள் வாழ்ந்த முறையே தமிழர்களின் கலாச்சாரம் என்று அழைக்கப்ப்ட்டது. இந்தக்காலத்தில்தான் அரசர்கள் தினமும் தங்கள் சபா மண்டபத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்திரியைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி "மந்திரியே, மாதம் மும்மாரி பெய்கிறதா" என்பதே. மந்திரியும் இந்தக்கேள்விக்குப் பதிலாக, "ஆம் அரசே, மாதம் மும்மாரி பெய்கிறது" என்று பதில் கூறுவார்.

பிற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் பெருகின. தமிழ் நாட்டின் வளத்தினால் ஈர்க்கப்பட்டு பல தரப்பு மக்களும் இங்கே வரத்தொடங்கினார்கள். அதில் குறிப்பாக வட நாட்டிலிருந்து ஆரியர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னட தேசத்திலிருந்து  கன்னடர்களும் ஆவார்கள்.

இதன் பிறகே வர்ணாசிரம நியதிகள் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டன. நான்கு வர்ணங்களும் ஒவ்வொரு வர்ணத்திற்குள்ளும் நூற்றுக்கணக்கான ஜாதிகளும் வரையறுக்கப்ப்ட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் வாழும் முறைகள் தனித்தனியாக உருவாகின. இதன் பிறகுதான் மக்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பித்தன.

உன் ஜாதி பெரிதா, என் ஜாதி பெரிதா என்கிற போட்டி உருவாக ஆரம்பித்தது. இந்தப் போட்டியை சிலர் ஆதரித்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இதில் சில சௌகரியங்கள் இருந்தன.

இப்படி உருவானதுதான் ஜாதிகள். சில ஜாதிகள் தீண்டத்தகாதவை என்று குறிப்பிடப்பட்டன. சில ஜாதிகள் மேல் ஜாதிகள் என்று குறிப்பிடப்பட்டன. ஆளும் வர்க்கத்தினர் இந்த ஜாதி வேறுபாடுகளை தங்கள் சொந்த நலனுக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மன்னர்கள் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. அவர்கள் ஆட்சியும் மறைந்து மக்களே மக்களை ஆட்சி புரியும் காலம் வந்தது. தற்போது அந்த முறைதான் இருக்கிறது. மக்கள் பல விதமான குண நலன்கள் உடையவர்களாய் இருந்தபடியால் யாரை ஆட்சி செய்ய அனுமதிக்கலாம் என்று யோசித்தபோது ஒரு நல்ல விடை கிடைத்தது. "தடியெடுத்தவன் தண்டல்காரன்" என்று ஒரு முது மொழி தமிழில் உள்ளது. அப்படியே தடியெடுத்தவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் பல தேசங்களிலிருந்து பல பாஷைகள் பேசும் மக்கள் தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்து இங்கேயே பலமாக வேறூன்றி விட்டார்கள். ஆகவே தற்போது தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்களா அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மட்டும் தமிழர்களா என்ற குழப்பம் நிலவுகிறது. மண்ணின் மைந்தர்கள் என்று யாரை அடையாளம் காண முடியும்? "வந்தேறிகள்" என்று யாரைச் சொல்வது?

இந்தக் குழப்பங்களுக்குத்  தீர்வு வேண்டும் என்று வந்திருந்த தமிழ்த் துறைத் தலவரைக் கேட்டுக்கொண்டேன்.  அவர் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டவுடன் எனக்கு குழப்பம் அதிகமாகி விட்டது. எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் இதைப்பற்றி தீர சிந்தித்து ஒரு தெளிவான கருத்துடன் வருகிறேன். பிறகு நம் விவாதத்தைத் தொடரலாம் என்றார்.

அதுவும் சரிதான் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். அவர்கள் போவதற்கு முன் அவர்களுக்கு நல்ல சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அவர்களுக்கு கைச்செலவிற்காக ஒரு கவரும் கொடுக்கப்பட்டது.

இந்த மாதிரி விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு நல்ல "பொது உறவுகள் அதிகாரி" இருந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு யாரைப்போடலாம் என்று யோசித்தபோது பிரபல பதிவர் திரு நடனசபாபதி அவர்கள் இந்த சங்கத்தில் பணி புரிய ஆசைப்பட்ட செய்தி தெரிந்தது. ஆஹா, நல்ல அனுபவம் வாய்ந்தவராயிற்றே, அவருடைய சம்மதத்தைக் கேட்டு அவரையே நம் சங்கத்தின் பொது உறவு அதிகாரியாக நியமனம் செய்து விடுவோம் என்று தீர்மானித்தோம்.

வெள்ளி, 27 மே, 2016

தமிழன் என்பவன் ஒரு தனி இனமல்ல !




அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் வந்திருந்தனர். அவர்களை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் புதிய அலுவலகத்தின் வரவேற்பறையில் சந்தித்தோம்.

அரசு கொடுத்த மான்யத்தில் கிறுக்கர்கள் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு அலுவலகம் ஏற்பாடு செய்தது பதிவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு சதுர அடி பரப்பில் நகர மத்தியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். லிப்ட் வசதி உண்டு. வாடகை வெறும் 50000 ரூபாய் மட்டுமே. மின்கட்டணம், அலுவலக பராமரிப்பு ஆகியவைகளுக்குத் தனியாக 5000 ரூபாய்.

அலுவலகத்திற்கு வேண்டிய மேஜை, நாற்காலிகள் இத்தியாதிகள் வாங்க 10 லட்சம் ஆனது. தலைவர், உபதலைவர், காரியதரிசி ஆகியோருக்கு தலா 50000 ரூபாயில் ஆப்பிள் ஸ்மார்ட் போன் கொடுக்கப்பட்டது. அலுவலகத்திற்கு தனியாக ஒரு லேண்ட்லைன் போன், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர், பிரின்டர் இத்தியாதிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கம்ப்யூட்டரைப் பராமரிக்க மற்றும் மற்ற அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு இளம் தமிழச்சியை அலுவலக உதவியாளராக மாதம் 10000 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தினோம்.

இன்டீரியர் டெக்கரேட்டர் ஒருவரைப்பிடித்து அலுவலகத்திற்குள் சிலபல டெக்கரேஷன்கள் ஒரு 10 லட்சம் ரூபாயில் செய்தோம். ஆங்காங்கே செயற்கைச் செடிகள் பொருத்தமாக வைக்கப்ப்ட்டன. அலுவலக உபயோகத்திற்காக ஒரு ஏசி கார் 20 லட்சம் ரூபாயில் வாங்கினோம். இந்தக் காரை ஓட்டுவதற்கு ஒரு நல்ல ஓட்டுனரை ஏற்பாடு செய்தோம். ஓட்டுனர் சம்பளம் மாதம் 15000 ரூபாய்.

இவை எல்லாம் வீண் செலவுகள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் இனம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஓர் இனத்தை முன்னேற்ற விரும்பும் ஒரு சங்கத்தின் அலுவலகம் எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்கவேண்டாமா? அதற்காகத்தான் இந்த செலவுகள் செய்தோம்.

சங்க ஆபீஸ் தடபுடல்களைப் பார்த்த அம்மா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவரும் கூட வந்த உதவிப்பேராசிரியர்களும் மலைத்துப்போய் விட்டார்கள். அவர்களை ஆசுவாசப் படுத்த குளிர் பானங்கள் கொடுத்து குடிக்கச்செய்தோம். பிறகு எங்களது செயல் திட்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம்.



                              

செவ்வாய், 24 மே, 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கத்திற்கு அரசு மான்யம்

                 

இந்த சட்டசபைத்தேர்தலில் கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கம் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து தமிழக அரசு இச்சங்கத்தின் செயல்பாடுகளுக்காக 10 கோடி ரூபாய் மான்யம் கொடுத்திருக்கிறது.

சங்கம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த அரசு தமிழர்களை எந்தெந்த வகையில் முன்னேற்றியிருக்கிறது என்று ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கவேண்டும். அவ்வளவுதான்.

சங்கத்தின் தலைவர் உடனே பொதுக்குழுவைக் கூட்டி இந்த விபரத்தை அறிவித்தார். காரியதரிசி உடனே ஒரு விண்ணப்பம் வைத்தார். இந்தப் பணத்தை பராமரிக்க ஒரு பொருளாளர் வேண்டுமே என்றார்.

தலைவர் (அதாவது நான்) இந்த சுண்டைக்காய் பணத்தைக் கையாள்வதற்கு ஒரு பொருளாளர் வேண்டுமா, எல்லாம் நானே பார்த்துக்கொள்வேன் என்று அந்த விண்ணப்பத்தை நிராகரித்தேன். பொருளாளர் போட்டால் அப்புறம் அவன் சொல்றமாதிரி நான் ஆடவேண்டி வரும் என்பது எனக்குத் தெரியாதா என்ன?

நீங்கள் (உபதலைவர் மற்றும் காரியதரிசி) போய் உடனடியாக அந்த "அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரை உடனடியாக இங்கு கூட்டி வாருங்கள் என்றேன். அவர்களும் அந்த வேலையாக சென்றார்கள்.

தொடரும்.

ஞாயிறு, 22 மே, 2016

கஜானா காலி என்று புலம்ப முடியாது.

                                  Image result for கன்டெய்னர்

வழக்கமாக தமிழ் நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள். அப்படி ஒரு கட்சி பதவிக்கு வந்தவுடன் வைக்கும் முதல் ஒப்பாரி, சென்ற அரசு கஜானாவைக் காலி செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த முறை அம்மா அவர்கள் அப்படி பிலாக்கணம் வைக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் கஜானாவும் அவர்களுடையது. காலி செய்ததும் அவர்களே. அப்புறம் எப்படி பிலாக்கணம் வைக்க முடியும்?

இந்த மாதிரி பணத்தை பல கன்டெய்னர்களில் வைத்து இருந்தால் அவைகளை கரையான் அரித்து விடாதா? இந்தக் கவலையில் எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வருவதில்லை. அதில் ஒரு சில கோடிகளை அப்படியே என் வீட்டிற்குத் தள்ளி விடக்கூடாதா? நானும் அவைகளின் மேல் சில காலம் படுத்துத் தூங்குவேன் அல்லவா? அம்மன்தான் கண் திறக்கவேண்டும் !

இப்படி தனிப்பட்ட கஜானாக்கள் இருக்கும்போது ரிசர்வ் வங்கி வேறு தனியாக கஜானாக்களை வைத்துப் பராமரிக்க வேண்டுமா என்பது என் இன்னொரு சந்தேகம். கஜானாக்களை பராமரிக்கும் வேலையை ஏன் தனியார்களுக்குக் கொடுக்கக்கூடாது? ரிசர்வ் பேங்க் கவர்னர் இந்த யோசனையை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் நன்கு அனுபவப்பட்ட கஜானா பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 21 மே, 2016

இந்த சட்டசபைத் தேர்தலில் எனக்கு நடந்த அநியாயம்

                            Image result for ஓட்டுக்குப் பணம்

இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பல கட்சிகளின் சார்பிலும் கொடுக்கப்பட்டது என்று பலவலாகப் பேசிக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். என்னுடைய காதிற்கும் இந்த செய்தி அப்படியே அரசல் புரசலாக வந்தது.

நானும் மிக ஆவலுடன் இந்த அன்பளிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் ஆசை இலவு காத்த கிளி போல் வீணாகிப்போனதில் என் மனது செக்கு நூறாக உடைந்து விட்டது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பெவிகால் போட்டு ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இலவு காத்த கிளி என்றால் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பச்சைத் தமிழன் ஆகவே எனக்குத் தெரியும். அந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறேன்.

இலவம் பஞ்சு என்பது ஒரு வகையான மரத்தில் காய்க்கும் காய்களிலிருந்து எடுக்கும் பஞ்சு. இதை மெத்தை தலையணைகளில் அந்தக் காலத்தில் உள்ளே திணித்து தைப்பார்கள். உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. இந்தக் காய்கள் பச்சைப் பசேல் என்று இருக்கும்.

சில கிளிகள் இதை ஒரு வகை பழம் போல் நினைத்து இது பழுக்கட்டும், பழுத்த பிறகு திங்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கும். ஆனால் இந்தக் காய்கள் பழுக்காமல் திடீரென்று ஒரு நாள் வெடித்து விடும். காத்துக்கொண்டிருந்த கிளிகள் நமது காப்டன் மாதிரி ஏமாந்து போகும்.

நானும் இந்த மாதிரி ஆகிப்போனேன். ஒரு பயலும் என்னிடம் வந்து,  "தாத்தா, ஓட்டுப்போடுவதற்கு இதோ அன்பளிப்பு" என்று கொடுக்கவில்லை. எனக்கு என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தி விட்டார்களே என்ற ஏக்கம் மாறவே மாட்டேனென்கிறது. இந்த அநியாயத்தை எதிர்த்து சர்வதேசக் கோர்ட்டில் ஒரு வழக்கு பதியலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.

அதனால்தான் நான் ஓட்டுப்போடவில்லை என்ற ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பதிவில் இரண்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அவைகளை ரகசியமாகப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன்.

                              Image result for கேப்டன் விஜயகாந்த்

வெள்ளி, 20 மே, 2016

திமுக வின் தோல்விக்கு காரணம் என்ன?

                               Image result for tasmac tamilnadu

சட்ட மன்ற தேர்தல் ஆரம்பிக்கும்போதே முக என்ன சொன்னார் என்பது நினைவு இருக்கிறதா?

நான் முதல் அமைச்சர் பதவி ஏற்றவுடன் போடும் முதல் ஆணை மது விலக்கு ஆணைதான் என்றார்.

அதைச் செய்வாறோ இல்லையோ, செய்து விட்டால் என்ன பண்ணுவது என்ற கவலை தமிழ்க் குடிமகன்கள் மனதில் தோன்றி அரித்துக்கொண்டே இருந்தது.

இந்த ஆளை விடக்கூடாது என்று அவர்கள் மனதில் தோன்றிய எண்ணமே திமுக வின் தோல்விக்கு வழி வகுத்தது.

வாழ்க டாஸ்மாக்.

வியாழன், 19 மே, 2016

ஆஹா, நம்ம (அம்மா) கட்சி ஜெயிச்சாச்சு !

                          Image result for இரட்டை இலை சின்னம்
ஜெயலலிதாம்பிகை சஹஸ்ர நாம அர்ச்சனை ஆரம்பிச்சாச்சு. இலவசங்களுக்கு காத்திருங்கள்.. வாழ்க இரட்டை இலை. வீழ்க உதய சூரியன்.

சில கேள்விகள்.
1. உனக்கு வெட்கம் கிடையாதா?
2. உனக்கு சுய மரியாதை கிடையாதா?
3. உனக்கு ரோஷம் கிடையாதா?
4. உனக்கு மானம் இல்லையா?
5. நீ உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?


எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே பதில் - இல்லை. இப்ப என்ன பண்ணுவீங்க?

                                   Image result for இரட்டை இலை சின்னம்

செவ்வாய், 17 மே, 2016

தப்புக்கணக்கு போட்டுவிட்டேன் !

                                       Image result for கருணாநிதி குடும்பம்
போன பதிவில் நான் அம்மா புகழ் பாடியதை அனைவரும் படித்திருப்பீர்கள். எனக்கு தன்மானம் இல்லையா என்று கூட ஒருவர் பின்னூட்டம் போட்டிருந்தார். இத்தனை வயசுக்கப்புறம் சின்னப்பசங்க மாதிரி தன்மானம், ரோஷம், சுயமரியாதை அப்படீன்னு எல்லாம் பேசிக்கிட்டு திரியலாமா?

இப்ப விஷயத்திற்கு வருகிறேன். போன பதிவில் போட்டது எல்லாம் சும்மானாச்சுக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லப் போவதுதான் நிஜம். அம்மா புகழ் பாடி அலுத்துப்போச்சு. இனி அய்யா  புகழ்தான் பாடப்போகிறேன்.

அய்யாவின் அனுபவம் என்ன? சாதுர்யம் என்ன? எப்படி இருந்தவர் எப்படி ஆகியிருக்கார் என்று பாருங்கள். எத்தனை நாளைக்குத்தான் சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்க முடியும்? ஆகவே அவரை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்ப்பது என்று பச்சைத் தமிழர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறட்டும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே முகத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பது?

வாழ்க தமிழகம், வாழ்க தமிழ், வாழ்க, வாழ்கவே.

பின்குறிப்பு; உனக்கு முதுகெலும்பு என்று ஒன்றிருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில். விஞ்ஞான உலகில் ஒரே கொள்கையைப் பிடித்துக்கொண்டிருப்பவன் அடி முட்டாள்.

ஞாயிறு, 15 மே, 2016

அம்மா என்றழைக்காத தமிழனும் உண்டோ?




அம்மா என்றழைக்காத தமிழனும் அம்மாவுக்கு ஓட்டுப்போடாத தமிழனும் இல்லை. பெர்ர்ர்ர்ரிய வெற்றி விழாவிற்குத் தயாராகுங்கள். அம்மாதான் தமிழ்நாட்டின் விடிவெள்ளி. அம்மா முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிற்கு எல்லோரும் வந்து சேருங்கள்.

சனி, 14 மே, 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம் - எதிர்காலத்திட்டங்கள்

                                    Image result for tamil vazhkai thathuvam
சங்கம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இப்படியே போனால் நம்மை கிறுக்கர்கள் என்று எல்லோரும் கேலி செய்வார்களே என்று யோசித்தேன்.

செயலாளர் நண்பர் சொன்னார். சங்கத்தின் பெயரிலேயே கிறுக்கர்கள் சங்கம் என்று பெயர் வைத்துவிட்டு எல்லோரும் நம்மைக் கிறுக்கர்கள் என்று சொல்வார்களே என்றால் எப்படி?

அதுவும் ஒரு விதத்தில் நியாயம்தான் என்று ஒப்புக்கொண்டு, அடுத்து தமிழர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இந்த திட்டத்திற்கு முதலாவதாக தமிழர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம். அப்புறம்தான் அவர்களை முன்னேற்றுவது எப்படி என்று யோசிக்க முடியும். இதற்கு என்ன செய்யலாம் என்று செயலாளரைக் கேட்டேன்.

ஒரு பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அங்குள்ள தமிழ்த்துறை தலைவருடன் பேசி இதற்கு ஒரு செயல் திட்டம் தீட்டுவோம் என்றார். இது நல்ல யோசனையாக இருக்கிறதே, அப்படியே செய்வோம், ஒரு நல்ல பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்யுங்கள் என்றேன்.

எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். அனைத்து ஏற்பாடுளையும் செய்து விட்டு உங்களைச் சந்திக்கிறேன் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று விடைகொடுத்து அவரை அனுப்பி வைத்தேன்.

வியாழன், 12 மே, 2016

இவன்தான் பச்சைத் தமிழன்

இன்று முகப்புத்தகத்தில் ஒரு செய்தி பார்த்தேன். அதை கீழே கொடுத்துள்ளேன்.

அன்பாளர்களே,
அமெரிக்காவின் புகழ்பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம். பனியில் புதைந்திருந்த இதை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது இதன் வயது மூன்றாயிரம் முதல் நான்காயிரம் என்று தெரியவந்ததில் அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். இது வெளியே வந்தால் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்று நிரூபணமாகிவிடும் என்பதால் நாசா அதை அழித்துவிட முயற்சி செய்தது. அங்கே பணி புரியும் தமிழக விஞ்ஞானி ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அதைப் படம் எடுத்து நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப அது இங்கே வெளியாகியுள்ளது.
நண்பர்களே,
நாசா நிறுவனம் இந்த ஆதாரத்தை சர்வர்களில் இருந்து அழிக்கப் பார்க்கும் என்பதால் இதைக் கண்ட மறுவினாடியில் ஷேர் செய்து விடவும். இதன் மூலம் தமிழின் அரிய பொக்கிஷத்தை நாம் அழியாமல் பாதுகாக்க முடியும். நன்றி.


இதைப்போல் ஒரு முட்டாள்தனம் தமிழனால் 

மட்டும்தான் செய்யவும் நம்பவும் முடியும்.


புதன், 11 மே, 2016

கட்டுப்பாட்டை இழந்து .....

                                     Image result for car accidents

வாகன விபத்துச் செய்திகளை பிரசுரிக்கும் தமிழ் பத்திரிக்கைகள் ஒரு வார்த்தையைத் தவறாது உபயோகிப்பதைப் படித்திருப்பீர்கள். அது என்னவென்றால் "வாகனம்,  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" விபத்து ஏற்பட்டது என்று எழுதுவார்கள்.

நானும் இந்த சொற்றொடரை பலமுறை படித்திருக்கிறேன். அது எப்படி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்கும் என்று யோசித்திருக்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு வாகனம் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

அப்படி யோசிக்கும் போது சில சிந்தனைகள் என் மனதில் உருவாகின. அவைகளை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு வாகனம், கார் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒருவர் ஓட்டும்போது அது அவருடைய எண்ணங்களுக்கு இசைந்தவாறு ஓடுகிறது. வேகமாகப்போக வேண்டுமானால் ஆக்சிலரேடரை அழுத்தினால் வேகமாகப்போகிறது. இடதுபுறம் திரும்ப ஸ்டியரிங்கை இடது புறம் திருப்பினால் காரும் இடது புறம் திரும்புகிறது. காரை நிறுத்தவேண்டுமானால் பிரேக்கை அழுத்தினால் கார் நிற்கிறது.

இப்படித்தான் காரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்க்காரின் குணாதிசியங்களை நன்கு அறிந்தவர்கள் காரை தன் கட்டுப்பாட்டில் வைத்து விபத்தில்லாமல் ஓட்டுவார்கள். ஆனால் அந்தக் காரின் சக்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளாத ஒருவன் அதை ஓட்டும்போது ஒரு கட்டத்தில் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் நிலை நிறுத்த முடிவதில்லை.

உதாரணமாக அந்தக் கார் 150 கிமீ வேகத்தில் போகக்கூடும். அந்த வேகத்தில் போகும்போது அதை வளைவுகளில் சுலபமாகத் திருப்ப முடியாது. அப்படி திருப்பும்போது அந்தக் கார் ஓட்டுனர் நினைக்காத திசையில் போகும். அப்போது விபத்து ஏற்படுகிறது. அதே போல் அந்த வேகத்தில் போகும் காரை அவசரமாக நிறுத்தவேண்டும் என்று சடன்பிரேக் போட்டால் கார் குட்டிக்கரணம் அடிக்கும்.

இந்த தன்மைகளை இளைஞர்கள் உணருவதில்லை. அதனால்தான் பல விபத்துகள் ஏற்படுகின்றன. அனுபவப்பட்ட ஓட்டுனர்கள் கூட சோர்வாக இருக்கும்போது இந்த உண்மைகளை மறந்து விடுகிறார்கள். அவர்களும் விபத்து உண்டாக்குகிறார்கள். தவிர சோர்வுடன் கார் ஓட்டும்போது அவர்களின் விவேகம் குறைந்து விடுகிறது. தூரத்தில் நிற்கும் லாரி நிற்கிறதா அல்லது ஓடிக்கொண்டிருக்கிறதா என்பதை அவர்களால் உணர முடிவதில்லை.

வெகு சமீபத்தில் வந்தவுடன்தான் நிலைமை புரிகிறது. அப்போது பதட்டத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் விபத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் எல்லோருக்குத் சாதாரண சமயத்தில் நன்கு தெரியும். ஆனால் வாகனத்தில் ஏறி அந்த சீட்டில் உட்கார்ந்தவுடன் அவர்கள் வேறு மனிதனாக மாறிப்போகிறார்கள். தாங்கள் கற்றவற்றை மறந்து போகிறார்கள். "நான் எவ்வளவு அனுபவப்பட்ட ஓட்டுனர், என் வண்டிக்கு விபத்து எப்பொழுதும் ஏற்படாது" என்ற மமதையுடன் காரை ஓட்ட முற்படுகிறார்கள்.

இந்த மமதைதான் விபத்துகளை ஏற்படுத்துகிறது. மக்கள் எப்போது திருந்துவார்க்ள என்று தெரியவில்லை.