வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நான் கேமரா வாங்கின கதை

                                            Image result for box camera images

நான் சிறுவனாக இருந்தபோது கேமரா என்றாலே ஒரு ஆச்சரியம். அதில் பிலிம் சுருளைப் போட்டு படம் எடுத்து அந்த பிலிம் சுருளை இருட்டறையில் என்னமோ செய்து நெடிவ் பிலிம் என்று ஒன்றைக் காண்பிப்பார்கள். இன்றைய எக்ஸ்-ரே மாதிரி இருக்கும். தலைமுடி எல்லாம் வெள்ளையாக இருக்கும்.

அதை திரும்பவும் இருட்டறைக்குள் கொண்டுபோய் பிரின்ட் போடுகிறேன் என்று சொல்லி அப்புறம் அதைக் காயவைத்துக் காட்டுவார்கள். அப்போது ஆட்களின் முகம் ஓரளவு தெளிவாகத் தெரியும். எல்லாம் கருப்பு வெள்ளைப் போட்டோக்கள்தான்.

இந்த பிலிம் வாங்குவது, கேமரா வாங்குவது, போட்டோ எடுப்பது. பிலிமைக் கழுவி பிரின்ட் போடுவது என்று இந்த செயல்கள் மிகுந்த சள்ளை பிடித்தவை மட்டுமல்ல, மிகுந்த பொருட்செலவும் ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே கேமராக்களும் போட்டோ எடுப்பதும் வசதி படைத்தவர்களின் செயல்களாகவே இருந்தன.

                              Image result for box camera images

பல விழாக்களின் போது குரூப் போட்டோ எடுப்பார்கள். அதற்கு ஒரு நல்ல போட்டோகிராபரிடம் முன்பே சொல்லி வைக்கவேண்டும். விழாவில் பங்கு கொள்பவர்கள். இவர்கள் வரும்போதே பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வருவார்கள். இவர்கள் கேமராவைக் கொண்டுவருவதற்கு ஒரு தனி வாகனம் வேண்டும். சொன்ன நேரத்திற்குச் சரியாக அரை மணி நேரம் கழித்து வருவார்கள்.

வந்தவுடனேயே காலில் வெந்நித் தண்ணியைக் கொட்டிக் கொண்டவர்கள் மாதிரி பறப்பார்கள். எல்லோரும் சீக்கிரம் வரிசையாக நில்லுங்கள். நான் இன்னொரு இடத்திற்குப் போகவேண்டும் என்று பாவலா காட்டுவார்கள். எல்லோரும் நின்ற பிறகு ஒவ்வொருவரையும் அவர்கள் நின்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவார்கள். நீங்கள் உயரம், ஆகவே சென்டருக்குப் போங்கள், நீங்கள் குட்டை, முன்னுக்கு வாருங்கள், இப்படி சொல்லி எல்லோரையும் இடம் மாற்றி நிற்க வைப்பார்கள்.

இதற்குள் அவருடைய அசிஸ்டென்ட், கேமராவை அதன் ஸ்டேண்டில் மாட்டி வைத்திருப்பான். அந்த கேமரா ஏறக்குறைய ஒரு டிரங்க் பாக்ஸ் சைசில் இருக்கும். இந்தக் கேமராமேன் அந்தக் கேமராவை ஒரு கருப்புத்துணியால் மூடிக்கொண்டு தன் தலையை அதற்குள் விட்டுக்கொண்டு ஏதேதோ செய்வார். பிறகு பிலிமை அதற்குள் வைப்பார். அந்த பிலிம் ஒரு மரப்பெட்டிக்குள் இருக்கும். அதை அந்த கருப்புத்துணிக்குள் கொண்டு போய் கேமராவில் மாட்டுவார். பிறகு அதிலிருந்து மந்திரவாதி மாதிரி ஒரு பலகையை வெளியில் இழுப்பார்.

இந்த வேலைகள் எல்லாம் கருப்புத்துணிக்குள்ளேயே நடக்கும். பிறகு கேமரா பக்கத்தில் வந்து நின்றுகொண்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பார். அப்புறமும் ஆட்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நிறுத்துவார். அப்புறம் எல்லோரையும் நேராக கேமராவைப் பார்க்கச்சொல்லுவார். கண்களைச் சிமிட்டாதீர்கள் என்பார் அப்புறம் ஸ்மைல் பிளீஸ் என்று சொல்லிவிட்டு கேமரா லென்ஸை மூடியிருக்கும் மூடியை ஒரு ஸ்டைலாக எடுத்து விட்டு ஒரு செகன்ட்டில் மூடி விடுவார்.

இவ்வளவுதான் படம் எடுத்தாயிற்று. ரிசல்ட் தெரிய இரண்டு நாளாகும். எங்களுக்கு வழக்கமாக போட்டோ எடுக்கும் போட்டோகிராபர் இரண்டு படம் எடுப்பதாகச் சொல்லுவார். ஆனால் ஒருபடம்தான் எடுப்பார். முதலில் எடுக்கும் படத்தில் பிலிம் இருக்காது. இப்படி எங்களை ஏமாற்றிக்கொண்டு வந்தவர் ஒரு சமயம் இரண்டு தடவையும் பிலிம் போடாமல் படம் எடுத்து விட்டார். அப்புறம் இன்னொரு நாள் திரும்பவும் போட்டோ எடுத்தோம்.

இதற்குப் பிறகு கைக்கு அடக்கமான பாக்ஸ் கேமராக்கள் வந்தன.


இவைகளிலும் பிலிம் போடவேண்டும். ஒரு பிலிம் ரோலில் இருந்து 12 முதல் 16 படங்கள் வரை எடுக்கலாம். ஆனால் இதைக் கையாள்வதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை. தவிர இவைகளில் ஃபிளேஷ் இல்லாததால் வெளிச்சம் குறைவான இடங்களில் படம் எடுக்க முடியாது. படம் எடுத்த பிறகு பிலிம் ரோலை ஜாக்கிரதையாக வெளியில எடுத்து போட்டோ ஸ்டுடியோவில் கொடுத்தால் அதைக் கழுவி பிரின்ட் போட்டு போட்டோக்களைக் கொடுப்பார்கள். 

போட்டோ எடுத்தவுடன் பிலிம் ரோலை வெளியில் எடுத்து பிரித்துப் பார்த்து எங்கே என் படத்தைக் காணோமே என்று கேட்ட மகா புத்திசாலிகள் எல்லாம் அந்தக் காலத்தில் உண்டு. 

இந்த வேலைகள் எல்லாம் செலவு வைக்கும் வேலைகள். பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். சாதாரண ஜனங்கள் கேமராவைத் தொட்டுக் கூடப் பார்க்கமுடியாது.

பிறகு சினிமா வேகமாக வளர்ந்தபோது அதற்குத் தேவையான 35 மிமீ பிலிம்களும் அதிகமாக உற்பத்தியாயின. அவைகளை ஏன் தனிப்பட்ட நபர்களின் உபயோகத்திற்கும் பயன்படுத்தக்கூடாது என்று யாரோ ஒரு மகானுபாவனுக்குத் தோன்றி, 35 மிமீ கேமராக்கள் வந்தன. அவை மிகவும் பிரபலமடைந்தன. அந்த பிலிம் ரோலை டெவலப் செய்து பிரின்ட் போட ஆட்டோமேடிக் மிஷின்கள் வெளியாட்டிலிருந்து இறக்குமதியாகி, சக்கைப் போடு போட்டன.

பிறகு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வளர்ந்தவுடன் டிஜிடல் கேமராக்கள் வந்தன. இவைகளில் பிலிம் போடவேண்டிய செலவு இல்லை. ஆகவே இவை சீக்கிரத்தில் பிரபலமானது. தொழில் நுட்பம் வளர வளர இவைகளில் புதுப்புது நூதன உத்திகள் புகுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான வகை கேமராக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றதை விட நான்தான் உசத்தி என்று போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் கொடுக்கின்றன.

பிறகு செல்போனில் கேமராவைப் புகுத்தினார்கள். இப்போது கேமரா ஏறக்குறைய வெற்றிலைபாக்கு போடுவது போல் ஆகிவிட்டது. இருந்தாலும் போட்டோவிற்கு இன்னும் மவுசு இருக்கிறது. விடியாவிற்கு இன்னும் அதிக மதிப்பு இருக்கிறது. ஒவ்வொரு கல்யாணத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டோ மற்றும் விடியோ எடுக்கிறார்கள்.

இப்படி உலகம் போய்க்கொண்டிருக்கையில் நான் மட்டும் தனித்தீவாக செயல்பட முடியுமா? ஆகவே நானும் ஒரு கேமரா வாங்கினேன். ஊள்ளூர் கேமராக்கள் என் போன்ற பெரிய மனுசனுக்கு பொருந்தாதாகையால் அமேசான் போய் அதாங்க அமேசான் இன்டர்நெட் கடைக்குப் போய் ஒரு டப்பா கேமரா வாங்கினேன். ஏனென்றால் அங்கு பல லட்சம் ரூபாய் விலையில் கூட கேமராக்கள் இருக்கின்றன.

நான் ஏதோ ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை என்கிற மாதிரி சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு கேமரா வாங்கினேன்.
                         
                               Image result for sony DSC w830 camera
இந்தக் கேமராவில் இன்னும் சீரியசாகப் படங்கள் எடுக்கவில்லை. சீக்கிரமே எடுத்து பதிவில் போடுகிறேன்.

திங்கள், 25 ஏப்ரல், 2016

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார். கனவுதான் காண முடியும் போல் இருக்கிறது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)

வியாழன், 21 ஏப்ரல், 2016

19. அவசரச் செய்தி

                                          Image result for Indian election 2016

வந்த அவசரச்செய்தி என்னவென்றால், அனைத்து மாநிலங்களிலும் சில ஓட்டுச் சாவடிகளை "பூத் கேப்சர்" செய்வதற்காக குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.


இந்தக் குண்டர்களை ஓட்டுச் சாவடியில் இருக்கும் நமது கிங்கரர்களே கவனித்துக்கொள்வார்கள் என்றாலும் ஓட்டுச் சாவடிக்குப் பக்கத்தில் சலசலப்பு எதற்கு என்று, அவர்கள் அனைவரையும் நமது தூதரகத்திற்கு கொண்டுவரச் சொன்னேன்.

எல்லோரும் வந்து மீட்டிங் ஹாலில் உட்கார்ந்தார்கள். எதற்காக பூத் கேப்சர் பண்ண முயன்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும்போதும் இதுதான் எங்களுக்கு வேலை. இந்தந்த பூத்துகளை கேப்சர் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் சொல்லுவார்கள். அதன்படி செய்வோம். அடுத்த எலெக்ஷன் வரும்வரை நாங்கள் வாழ்வதற்கான செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து பிழைத்துக்கொண்டிருந்தோம்.

இந்த எலெக்ஷனில் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை. எங்களுக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். அதனால்தான் இந்த வேலைக்குக் கிளம்பினோம் என்றார்கள்.

அப்படியா சேதி, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணம் கொடுக்கப்படும். நீங்கள் அனைவரும் எல்லைக் காவல் படையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளம் உங்கள் வீட்டில் கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

பிறகு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 98 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நடக்க முடியாதவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களையும் தவிர அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தார்கள்.

மறு நாள் காலையில் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது. மதியத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசீயக் கட்சி, எதிர் பார்த்தது போல் 90 சதம் இடங்களில் வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சிகளுக்கு 10 சதம் இடங்கள் கிடைத்தன. இது எப்படி நடந்தது என்று அனைத்து மக்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த ரகசியம் தேவலோக தூதரகத்தில் இருக்கும் சூபர் கம்ப்யூட்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.

மாநில சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதினைந்து நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, அவைகளை நிறைவேற்றுவது எப்படி ஆகிய விஷயங்களில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதே மாதிரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் நாட்டை ஆளுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்தப் பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் வருமாறு.

1. இந்திய நாட்டில் இனி லஞ்சம் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2. இலவசங்கள் எந்த ரூபத்திலும் இல்லை.

3. அனைவரும் வேலை செய்யவேண்டும்.

4. தொழிற்சாலைகள் தரமான பொருள்களையே உற்பத்தி செய்யவேண்டும்.

5. நாட்டில் பிச்சை எடுப்பது ஒழிக்கப்பட்டு விட்டது.

6. எல்லோரும் சமம். யாருக்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லை.

7. பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 30 சதம் லாபம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

8. வியாபாரத்தில் வாங்கும் விலைக்கு மேல் 10 சதம் மட்டுமே அதிகப் படுத்தி விற்கலாம்.

9. அனைத்து அரசு நிறுவனங்களும் மக்களின் சேவைக்காகவே தரமாக பணியாற்றும்.

10. ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடும்.

11. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் நகரின் மையப் பகுதிகளில்  தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

12. நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

13. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து விதிகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.

14. கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். தனியார் கல்விக்கூடங்களை அமைப்பது தடுக்கப்படுகிறது.

15. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.

16. பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களுக்கு எந்த ஆடம்பர வசதிகளும் தரப்படமாட்டாது. மத்திய மந்திரிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யலாம்.

17. டில்லியில் மீட்டிங் வைத்து மாநிலங்களிலிருந்து மந்திரிகளையும், செயலர்களையும் கூப்பிடும் வழக்கம் அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எனக்குத் தெரிவிக்குமாறு எல்லோருக்கும் அறிவித்தேன். பாராளுமன்றமும் சட்டசபைகளும் செயல்பட ஆரம்பித்தன. நாடு ஒழுங்கான பாதையில் போக ஆரம்பித்தது.


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்-துவக்க விழா

நான்கு நாள் முன்னமேயே இந்தப் பதிவு வெளிவந்திருக்கவேண்டும். தமிழர்கள் வழக்கப்படி இன்று லேட்டாக வெளிவருகிறது.

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கத்தின் துவக்க விழா நேற்று அதாவது ஸ்ரீதுன்முகி ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதி (14-4-2016) அன்று கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. கூட்டத்திற்கு மொத்தம் மூவாயிரம் பேர் வந்திருந்தார்கள் என்று சொல்ல விருப்பம்தான். ஆனால் வந்திருந்ததோ மூன்று பேர்கள்தான்.
நான், என் இரு நண்பர்கள், ஆகக்கூடி மூன்று பேர்கள். இதற்கெல்லாம் அசந்து விடுவேனா?  "அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்" என்ற கொள்கையில் வளர்ந்தவனாச்சே. நாங்கள் மூவரும் முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம். நான் தலைவர். ஒரு நண்பர் உபதலைவர். இன்னொரு நண்பர் காரியதரிசி.

இந்த சங்கத்தின் மூலமாக தமிழை வளர்ப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம். பாண்டிய மன்னன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். அதே போல் இந்த சங்கத்தையும் பிரபலமாக்குவோம் என்று தீர்மானம் போட்டோம். பின்பு நான் பேசும்போது கூறினேன். தமிழை வளர்க்க முதல் தேவை தமிழன் வளரவேண்டும். தமிழனை எப்படி வளர்த்தலாம் என்று ஆலோசித்ததில் பின்கண்ட யோசனைகள் உதித்தன.

1. தமிழனுக்கு தமிழ்ப்பற்று இல்லை. பேசுவது ஆங்கிலத்தில். பார்ப்பது இந்தி சினிமா. வேலைக்குப் போவது அமெரிக்கா. அங்கு போய் குழந்தை குட்டி எல்லாம் பெத்ததுக்கப்புறம்தான் தான் தமிழன் என்பது ஞாபகம் வரும். உடனே இவனைப்போல் இருப்பவர்கள் எல்லாம் கூடி ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிப்பார்கள். அதில் நடவடிக்கைகள் எல்லாம் அமெரிக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும்.

2. கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லாம் தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு பரிபாஷை.

3. தமிழ் சீரியல்களில் வரும் பெண்கள் சீலை கட்டுவதில்லை.

4. ஆகவே இனிமேல் தமிழர்கள் எங்கு இருந்தாலும் ஆண்கள் வேட்டி, சட்டைதான் அணியவேண்டும். பெண்கள் சேலைதான் உடுத்தவேண்டும். சிறு பையன்கள் ஆப்-டிராயர் போட்டுக்கொள்ளலாம். சிறு பெண்கள் பாவாடை, தாவணிதான் போட்டுக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகளை அனுசரிப்பவர்கள்தான் தமிழர்கள். மற்றவர்கள் வந்தேறிகள். இந்த நடைமுறைகளை தமிழர்கள் எந்த அளவிற்கு கடைப் பிடிக்கிறார்கள் என்று கணித்த பிறகு அடுத்த கட்ட செயல்பாடுகளைப் பற்றி விவாதிப்போம். இத்துடன் கூட்டம் கலைகிறது.

திங்கள், 18 ஏப்ரல், 2016

18. நாட்டின் தலைவிதி மாறியது

                            Image result for indian parliament

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.


நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

17. ஆணும் பெண்ணும் சமம்.


இந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:

   1.   எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்
   2.   அனைவருக்கும் வேண்டிய குடிநீர்
   3.   அனைவருக்கும் வேலை வாய்ப்பு 
   4.   கிராமத்திலேயே தரமான கல்வி
   5.   எல்லோருக்கும் மருத்துவ வசதி
   6.   நல்ல சாலைகள்
   7.   விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்
   8.   மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்
   9.   சமூக கூடங்கள்
10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.
11. விவசாயத்திற்கு முன்னுரிமை

இந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.

இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.

வேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.

இதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.

புதன், 13 ஏப்ரல், 2016

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

                          Image result for ராஜஸ்ரீ

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ. 15 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை.


இன்றைய தினத்தந்தி செய்தி.

பேங்க் லாக்கரிலிருந்து இந்த நகைகளை எடுத்து ஒரு கைப்பையில் வைத்து காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒரு நபர் வந்து காருக்குப் பக்கத்தில் கீழே கிடக்கும் பத்து ரூபாய் நோட்டுகள் உங்களுடையதுதானா என்று கேட்டிருக்கிறார்.

ராஜஸ்ரீ காரை விட்டு இறங்கி அந்த நோட்டுகளை ராஜஸ்ரீ குனிந்து எடுத்துக்கொண்டிருந்தபோது காரில் இருந்த கைப்பையை அந்த நபர் எடுத்துக்கொண்டு மறைந்து விட்டார்.

இந்த மாதிரி திருடும் டெக்னிக் எனக்குத் தெரிந்து 50-60 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த திருட்டுகள் செய்தித்தாள்களிலும் பிரசுரமாகி வருகிறது.

ஆனாலும் நம் மக்கள் இந்த டெக்னிக்குக்கு பலியாவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை?