வியாழன், 27 ஜூன், 2013

எனக்குப் புரியாத பேங்க் விவரம் ஒன்று

இன்றைய செய்தித்தாள்களில் வந்த ஒரு பேங்க் மோசடி விவகாரம் பற்றி படித்திருப்பீர்கள். கர்நாடகா பெங்களூரில் உள்ள அரசு சார்ந்த ஒரு நிறுவனம் 25 கோடி ரூபாயை இரண்டாகப்பிரித்து சேலம் மாவட்டத்தில் சங்ககிரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் டிபாசிட்டாக ஒரு வருடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

அதில் 12 கோடி ரூபாயை வங்கி அதிகாரிகள் மோசடி செய்திருக்கிறார்கள்.

எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் இந்தப் பணத்தை டிபாசிட் வைப்பதற்கு ஒரு நல்ல பேங்க் பெங்களூரில் இல்லையா என்பதுதான்?  பெங்களூரில் இருந்து இவ்வளவு தூரம் வருவதற்கான காரணம் என்ன?

என் சந்தேகம் நியாயமானதுதானா?

திங்கள், 24 ஜூன், 2013

அக்காளைக் கட்டினால் தங்கச்சி இலவசம்


இலவசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

சீலை வாங்கினால் ஜாக்கெட்டு இலவசம்.

சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம்.

இரண்டு சர்ட் (அல்லது பேன்ட்) வாங்கினால் மூன்றாவது இலவசம்.

இப்படி உலகில் பல வியாபார வித்தைகள் நடக்கின்றன.

இதைப் பார்த்த என் நண்பர் சொன்னதைத்தான் இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைத்திருக்கிறேன். இது வேடிக்கைக்காக சொன்னாலும் இலவசங்களின் தத்துவத்தை நன்றாக விளக்குகிறது.

இந்த பொது தத்துவம் இணையத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம்.

இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை என்பதை அனுபவசாலிகள் புரிந்துகொண்டிருப்பார்கள். காற்றும் தண்ணீரும் இயற்கை தந்த இலவசச் செல்வங்கள் என்று சிறுவயதில் பாடபுத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அவை எவ்வாறு வியாபாரப் பொருள்களாகி விட்டன என்று கண்கூடாகப் பார்க்கிறோம்.

இலவசம் என்று செல்லப்படும் அனைத்து விஷயங்களிலும் மறைமுகமாக ஏதோ ஒன்றை நம்மிடம் தள்ளிவிடுகிறார்கள் அல்லது அதனால் ஏதோவொரு லாபம் அவர்களுக்கு இருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

உலக நடைமுறை இவ்வாறு இருக்க இணையம் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும்? இணையத்தில் இந்த உத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

கம்ப்யூட்டரை இயக்க பல மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்களில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தியாவசிய மென்பொருட்களுக்கான விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் ஏறக்குறைய எல்லோரும் காப்பியடிக்கப்பட்ட (Pirated) மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.

இது போக பல இலவச மென்பொருட்களை நம் பதிவுலக ஆர்வலர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில மென்பொருட்கள் உண்மையிலேயே இலவசமானவை. ஆனால் அவைகளின் மூலமாக ஏதோவொரு லாபம் அவர்களுக்கு கிடைக்கிறது. நம் காரியம் நடந்தால் சரி என்று நாம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்கள் தங்களுடன் இன்னுமொரு இலவசத்தைக் கொண்டு வருகின்றன. பெரும்பாலான கம்ப்யூட்டர் வைரஸ்கள்  இவ்வாறுதான் நம் கம்பயூட்டருக்கு வந்து சேர்கின்றன.
சில வைரஸ்கள் பெரிய தீங்கு விளைவிக்காதவை. ஆனால் சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரையே முடக்கிப் போட வல்லவை.

ஆகையால்தான் எந்த வைரஸாக இருந்தாலும் தடுக்கவேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். இணையத்தை உபயோகப்படுத்தாதவர்கள் இந்த வைரஸ்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை. அவர்களை இந்த வைரஸ் இணையம் மூலமாக அணுகாது. வேறு வகைகளில் வரலாம்.

எந்தவொரு மென்பொருளையும் தரவிறக்கும்போது நல்ல ஆன்டிவைரஸ் மூலமாக பரிசோதித்து, பின்பு தரவிறக்குங்கள். அல்லது நண்பர்களிடம் விசாரித்துவிட்டு, பின்பு தரவிறக்குங்கள்.

கடந்த வாரத்தில் என்னுடைய கம்ப்யூட்டரை இரு முறை முற்றிலுமாக ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டி நேர்ந்தது. எனக்கு ஓரளவு இந்த தொழில் நுட்பம் தெரிந்திருந்ததினால் செலவு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் இந்த தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்கு வீண் செலவு ஏற்படும். ஆகவே இணையத்திலிருந்து எதையும் தரவிறக்கம் செய்யுமுன் தீர யோசித்து, பலரை விசாரித்து செயல்படவும்.


திங்கள், 17 ஜூன், 2013

வருமானவரி - மேலும் சில விவரங்கள்.

பதிவுகளைப் படிக்கும் பெரும்பான்மையானவர்கள் என்னைப்போல் சட்டங்களுக்கு பயப்படும் நடுத்தர வர்க்க மக்கள் என்று நம்பி இந்தப் பதிவை எழுதுகின்றேன். அப்படி இல்லாதவர்கள் இந்தப் பதிவைப் படித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழ்படுத்திக்கொள்ளாமல், இன்னும் இரண்டு காசு பார்க்கும் வேலையைச் செய்யவும்.

வருமான வரி என்றால் என்ன என்று கேட்கும் பல கோடீஸ்வரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு விடை இதுதான். நாயை கண்டு பயந்து ஓடுபவனைத்தான் நாய் துரத்தும். தைரியமாக எதிர் நிற்பவனைப் பார்த்து வாலை சுருட்டிக்கொண்டு ஓடும்.

சட்டமும் இப்படித்தான். என்ன,  நாயை கல்லால் அடிக்கவேண்டும். சட்டக் காவலர்களை பணத்தால் அடிக்கவேண்டும். அவ்வளவுதான். நாம் எல்லோரும் நாயைக்கண்டு பயந்து ஓடும் ஜாதி.

வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டவேண்டும் என்று பார்த்தோம். மாமனார் வீட்டிலிருந்து வரும் வருமானத்தை இதில் காட்டவேண்டியதில்லை. மாமனார் என்பதற்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (நமக்கு வருமானம் தரும் ஒவ்வொருவரும் மாமனாரே.)

இப்படி கணக்குப்போட்டு வரும் வருமான வரி 10000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வரியில் 30 சதத்திற்கு குறையாமல் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் கட்டவேண்டும். 60 சதத்திற்கு குறையாமல் டிசம்பர் 31 க்குள் கட்டவேண்டும். மீதி வரியை துல்லியமாக கணக்குப் போட்டு மார்ச் 15ம் தேதிக்குள் கட்டவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதென்றே பலருக்குத் தெரியாது. மார்ச் 31 க்குள் வரி கட்டினால் போதும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையிலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்.

நானும் என் நண்பர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். போனவருடம் கொடுத்த வருமான வரிப் படிவத்தில், என் நண்பர் தவறுதலாக ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கட்டிவிட்டார். இந்த ரிடர்ன் எப்படியோ ஒரு வருமானவரி அதிகாரியின் பார்வையில் சிக்கியிருக்கிறது. அதற்கு அவர் என் நண்பருக்கு ஒரு "ஓலை" அனுப்பி விட்டார்.

அந்த ஓலையில் எழுதியிருந்ததாவது. நீங்கள் உங்கள் வருமானவரியில் 1000 ரூபாய் குறைவாகக் கட்டியிருக்கிறீர்கள், அதற்கு 750 ரூபாய் வட்டி சேர்த்து உடனடியாக பேங்கில் கட்டி, கட்டின ரசீதை இந்த ஆபீசுக்கு அனுப்பவும்.

இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே என்று வருமான வரி அலுவலகத்தில் போய் விசாரித்தோம். அதற்கு அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் வரி முழுவதையும் மார்ச் மாதம்தான் கட்டியிருக்கிறீர்கள், எங்கள் விதிகளின்படி மூன்றில் ஒரு பாகத்தை செப்டம்பர் மாதத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை டிசம்பர் மாத த்திலும் கட்டியிருக்கவேண்டும். இந்த தாமதத்திற்குத்தான் இவ்வளவு வட்டி என்றார்கள்.

ஐயா, இந்த சமாசாரம் எங்களுக்குத் தெரியாதே என்றோம். நீங்கள் இந்தியக் குடிமகன்தானே என்று கேட்டார்கள். ஆம் என்றோம். அப்படியானால் உங்கள் நாட்டுச் சட்டங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே, அது உங்கள் குற்றமல்லவா? என்றார்கள். நாங்கள் ஒரு பதிலும் பேசமுடியவில்லை.

பேசாமல் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டு வந்தோம்.

அப்புறம் எங்களுக்குத் தெரிந்த வக்கீல் ஒரு பொன்மொழி சொன்னார்.

Ignorance of rules is no excuse for not following.

திங்கள், 10 ஜூன், 2013

டிராபிக் ரூல்ஸ்


சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானவை என்றுதான் நாம் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நடைமுறை அப்படியில்லை என்பதை பலர் தங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள்.

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம்.

கோவையில் உள்ள ஒரு முக்கிய ரோட்டில் ஒரு பக்கத்தில் "நோ பார்க்கிங்க்" போர்டுகள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டுகள் ஒரே சீரான இடைவெளியில் இல்லை. ஒரு இடத்தில் அந்த மாதிரி போர்டு இல்லாத இடம் இருந்திருக்கிறது. அங்கு சில கார்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். என் நண்பர் "இந்த இடத்தில் கார்களை நிறுத்தலாம் போல் இருக்கிறது" என்று தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர் வேலையை கவனிக்கப் போய்விட்டார்.

திரும்பி வந்து பார்க்கையில் அவர் கார் சக்கரத்திற்கு ஒரு பூட்டுப் போட்டிருந்தது. கார் கண்ணாடியில் ஒரு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் உங்கள் கார் "நோ பார்க்கிங்" இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் உங்கள் காரை லாக் செய்திருக்கிறோம். இந்த போலீஸ் ஸடேஷனுக்கு வந்து உங்கள் காரை ரிலீஸ் செய்து கொள்ளவும் என்று எழுதியிருந்தது.

அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களை எனது நண்பர் பார்த்தார். அந்தக் கார்களுக்கு இந்த மாதிரி பூட்டு போடவில்லை. இவர் சிரமப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்தார். அந்த டூட்டியில் இருக்கும் போலீஸ்காரர் இந்த ரோட்டில் இப்போது இருக்கிறார், அங்கு சென்று பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இவரும் அங்கே சென்று சிரமப்பட்டு அவரைக்கண்டுபிடித்து கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு கூட்டிவந்தார்.

அவர் 300 ரூபாய்க்கு பைன் எழுதி பணத்தை வாங்கிக்கொண்டு பூட்டை திறந்துவிட்டார். என் நண்பருக்கு வயித்தெரிச்சலும் கோபமும் ஒரு சேர வந்தன. அவர் போலீஸ்காரரிடம் "இங்கே இன்னும் நாலு கார்கள் இருக்கின்றனவே, அவைகளுக்கு ஏன் பூட்டு போனவில்லை, என் காருக்கு மட்டும் ஏன் பூட்டு போட்டீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த போலீஸ்காரர் சொன்ன பதில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை. "சார், இப்போ விவகாரம் எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான், அடுத்தவர்களைப்பற்றி நீங்கள் பேசவேண்டாம்" என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவல்ல. ஆளாளுக்கு மாறுபடும் என்பதுதான். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள்தான் உண்மையான இந்தியப் பிரஜை.

திங்கள், 3 ஜூன், 2013

நீங்கள் குடி பெயர்ந்தீர்களா, சனி உங்களைப் பிடித்துவிட்டான்.


ஏழரை நாட்டு சனி என்று கேள்விப்படாதவர்கள் இருக்கமாட்டார்கள். இந்தச் சனி பிடித்தால் ஒருவனைப் படாதபாடு படுத்தும் என்று கேள்வி. நமது புராண நாயகன் நளச்சக்கரவர்த்தியை சனி எப்படிப் பிடித்தான் என்று அறிந்திருப்பீர்கள். ஒரு நாள் அவன் கைகால் கழுவும்போது குதிகாலில் ஒரு இடத்தில் கால் நனையவில்லை. சனி, நளனை அது வழியாகப் பிடித்தான் என்பது புராணக் கதை.

இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் துர்ப்பாக்கிய வசமாக வீடு மாற்ற நேர்ந்தால் அப்போது உங்களை சனி பிடித்துக்கொள்ளுவான் என்பது மட்டும் தெரியும். வேறு ஊருக்குப் போய்விட்டீர்கள் என்றால் உங்களை ரெட்டைச் சனி பிடித்துக்கொண்டான் என்று அர்த்தம்.

நீங்கள் இவ்வாறு வீடு மாற்றியவுடன் செய்யவேண்டியவை:

1. ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றவேண்டும்.

2. கேஸ் கனெக்ஷனை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

3. தபால் ஆபீசில் உங்கள் தபால்களை புது விலாசத்திற்கு அனுப்பச்சொல்லி கடிதம் கொடுக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு உங்கள் கடிதங்களை புது விலாசத்திற்கு அனுப்புவார்களா என்பது வேறு விஷயம்.

4. பேங்க் அக்கவுன்டுகளை உங்கள் புது வீட்டிற்குப் பக்த்தில் உள்ள கிளைக்கு மாற்றவேண்டும்.

5. உங்கள் டிரைவிங் லைசன்சில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும்.

6. உங்களை வாகன ரிஜிஸ்ட்ரேஷன் அட்டையில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும். அந்த வாகனத்திற்குண்டான இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டிலும் விலாசத்தை மாற்றவேண்டும்.

7. உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஸ்கூல் மாற்றவேண்டும்.

8. லேண்ட் லைன் டெலிபான் வைத்திருந்தால் அதை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

இன்னும் விட்டுப் போனவை இருக்கலாம். எனக்கு நினைவு வந்தவரை குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பதிவு எழுதவேண்டிய அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன. அப்படி எழுதினால் உங்களில் பலரை, தற்கொலை செய்து கொள்ளத்தூண்டிய பாவம் என்னை வந்து சேரும் என்ற பயத்தினால் எழுதாமல் விடுகிறேன்.