திங்கள், 29 ஏப்ரல், 2013

18. நாட்டின் தலைவிதி மாறியது

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.

நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நான் வருமானவரி கட்டப் போன கதை.


நான் ஏறத்தாழ 40 வருடங்களாக வருமானவரி கட்டிக்கொண்டு வருகிறேன். மார்ச் 31 தேதிக்குள் அந்த வருடத்திற்கான வரியை பேங்கில் கட்டி விடுவேன். ஏப்ரல் முதல் வாரத்தில் வருமான வரி ரிடர்ன் தயார் செய்து 15ம் தேதிக்குள் வருமான வரி ஆபீசில் தாக்கல்செய்து விடுவேன்.

நானும் என் நண்பர்கள் சிலரும் இவ்வாறுதான் வருடா வருடம் செய்து வந்தோம். வருமான வரி படிவத்திற்கு என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. வருமான வரி ஆபீசில் கேட்டால் தாராளமாக கொடுப்பார்கள். இரண்டு மூன்று படிவங்கள் என் பைலில் எப்போதும் இருக்கும்.

போன வருடம் இந்த மாதிரி வழக்கம்போல் ஒரு படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து வருமானவரி ஆபீசுக்கு சென்றோம். அவர்கள் இந்த பழைய படிவங்கள் செல்லாது, புதிய படிவங்கள் இன்டர்நெட்டில் இருக்கிறது, டவுன்லோடு செய்து அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து கொண்டு வாருங்கள் என்றார்கள். நீங்களே படிவங்கள் தருவீர்களே, அந்த முறை என்ன ஆயிற்று என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், நாங்கள் கொடுப்போம், இப்பொழுதுதான் படிவங்களை அச்சாபீசுக்கு கொடுத்திருக்கிறோம், அவை வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும், உங்களுக்கு அவசரமில்லையென்றால் காத்திருங்கள் என்றார்கள். எங்களுக்கு இந்த சனியன் பிடித்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டால் ஒரு தொல்லை தீருமே என்ற எண்ணம்.

வீட்டிற்கு வந்து இன்டர் நெட்டில் தேடி அந்தப் படிவத்தைக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து ஜீராக்ஸ் சென்டருக்குப் போய் பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து, வருமானவரி ஆபீசில் சேர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.

இந்த வருடமும் அவ்வாறே மார்ச் 31 க்குள் வரி முழுவதையும் கட்டிவிட்டு பழைய படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து எடுத்துக் கொண்டு வருமானவரி ஆபீசுக்குப் போனோம். அங்கே இந்தப் படிவம் வாங்கும் கவுன்டரில் இரண்டு பேர் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களிடம் இந்த மாதிரி வருமானவரி படிவம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அவர்கள் எங்கள் படிவங்களை ஏறெடுத்தும் பாராமல், இந்த வருடம் புது படிவம் வரப்போகிறது, அதில்தான் நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்யவேண்டும் என்றார்கள். சரி, புது படிவங்கள் எப்பொது கிடைக்கும் என்று கேட்டோம். மூன்று மாதங்களில் அநேகமாக கிடைக்கும் என்றார்கள், அதாவது ஜூன் மாதக் கடைசியில் வரும் என்றார்கள்.

இன்டர்நெட்டில் இப்போது கிடைக்குமா என்று கேட்டதற்கு, இன்டர்நெட்டிலும் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்றார்கள். இப்போது தினம் இன்டர்நெட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பிய கேள்வி வாய் வரையில் வந்து விட்டது. இருந்தாலும் அதைக்கேட்கவில்லை. அந்தக்கேள்வி- வருமானவரிப் படிவங்கள் வருவதற்கு இன்னும் மூன்று மாதம் ஆகும். அதுவரையில் நீங்கள் என்ன செய்து கிழிக்கப்போகிறீர்கள்? சேரைத் தேய்ப்பதற்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?   இடம், பொருள், ஏவல் கருதி அந்தக் கேள்விகளை அப்படியே விழுங்கி விட்டு வந்தேன்.

இந்த மேட்டரில் எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் வருமானவரித்துறை மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஏப்ரல் 1 ம் தேதியானால் வருமானவரி ரிடர்ன் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பது இந்த மடச்சாம்பிராணி டிபார்ட்மென்டுக்கு நன்றாகத்தெரியும். ஒரு மாதம் முன்பே இந்தப் படிவங்களை தயார் செய்து வைத்தால் என்ன?

வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?

புதன், 24 ஏப்ரல், 2013

சமையலறை அமைப்பது எப்படி?


சமையலறையில்தான் இந்தியப் பெண்கள் அவர்கள் வாழ்நாளில் பாதியைக் கழிக்கிறார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். இப்போது காலம் மாறிவிட்டது. இருந்தாலும் ஒரு வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமானதுதான். யார் சமைக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

சமையலறை சமைப்பதற்காக என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதற்கான அமைப்புகள் அங்கு இருக்கவேண்டியது அவசியம். முதலில் சமையலறையின் அளவு. குறைந்தது 10 அடிக்கு 10 அடி இருப்பது அவசியம்.

முதலில் அடுப்பு.

கேஸ் அடுப்புதான் இப்போது மாமூல். விறகு அடுப்பு, குமுட்டி அடுப்பு, கெரசின் ஸ்டவ் அப்படீன்னு ஒரு காலத்தில் இருந்தது, என்னைப்போன்ற கிழம் கட்டைகளுக்கு ஞாபகம் இருக்கும். கேஸ் அடுப்பில் பலவகை இருக்கிறது. கேஸைத் திருகினால் தானாகவே பொருத்திக்கொள்ளும் மாடல்தான் இப்ப பாபுலர்.


அடுத்த அவசியம் கிச்சன் சிங்க்

சின்னச்சின்ன சாமான்களை கழுவ ஒவ்வொரு தடவையும் வெளியில் இருக்கும் பெரிய சிங்க்குக்குப் போக முடியாது. அதற்கு சமையல் மேடையிலேயே ஒரு சிங்க் வேண்டும். ஸ்டெய்ன்லெஸ் ஸடீலில் நவீன டிசைனில் பலவிதமான சிங்க்குகள் கிடைக்கின்றன.


எலெக்ட்ரிக் சிம்னி: 

இது பேஷனாக இருந்த காலம் போய் இன்று ஒரு அத்தியாவசியமாக ஆகிவிட்டது. பலதரப்பட்ட விலைகளில் கிடைக்கிறது. ஃபேபர் ஒரு நல்ல கம்பெனி. இதை வாங்கிப் பொருத்தவேண்டும்.


பிரிட்ஜ்:

இது இல்லாத வீடே இன்று இல்லை. அதை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது வேறு விஷயம். வாங்கும்போதே கொஞ்சம் பெரிய சைஸ் வாங்கிவிட்டால் நல்லது. பல கம்பெனிகள் இருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டைப் பொருத்து வாங்கலாம்.


கப்போர்டுகளும் டிராயர்களும்:

இன்று சமையலறை நாகரிகம் என்னவென்றால், நீங்கள் சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிறகு, யாராவது அந்த சமையலறையைப் பார்த்தால், இங்கு சமையல் செய்கிறார்களா என்று கேட்க வேண்டும். அப்படி கிளீனாக சமையலறை இருக்கவேண்டும். அதற்கு உதவுபவைதான் கப்போர்டுகளும் டிராயர்களும். அனைத்து பொருட்களும் இதற்குள்தான் இருக்கவேண்டும். அதுதான் பேஷன்.


இழுவை டிராயர்கள்:

இவை மிகவும் உபயோகமானவை. புழங்குவதற்கு எளிதானவை.


கப் போர்டுகள்:

கிச்சன் ஸ்லேப்பிற்கு கீழும், லாஃப்டுக்கு மேலும் இவைகளை அமைத்தால் பல பொருட்கள் அங்கு வைத்துக்கொள்ளலாம்.




அடுத்த அவசியம் - குடி தண்ணீர்:

சுத்தமான குடிதண்ணீரின் அவசியத்தை அனவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அக்வாகார்டு கட்டாயம் வேண்டும்.


பவர் பாயின்டுகள்:

மிக்சி, எலெக்ட்ரிக் கிரைண்டர் முதலியவை எல்லோர் வீடுகளிலும் சகஜமாகி விட்டன. அவைகளைப் பொருத்த, நல்ல பாதுகாப்பான பவர் பாயின்டுகள் அவசியம்.


நல்ல வெளிச்சம்:

சமையலறையில் நல்ல வெளிச்சம் இருப்பது அவசியத்தேவை.


சுவரில் டைல்கள்

தரையிலிருந்து சீலிங்க் வரைக்கும் கிளேஸ்டு டைல்ஸ் ஒட்டிவிட்டால் சமையலறையை கிளீன் செய்வது சுலபம்.


மைக்ரோ ஓவன்:

இது காலத்தின் கட்டாயம். ஒரு வாரத்திற்கு வேண்டிய இட்லிகளை ஒன்றாகச் சுட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, அவ்வப்போது தேவையானவற்றை எடுத்து மைக்ரோ ஓவனில் சுட வைத்தால் புது இட்லி தயார். சாம்பார், ரசம் ஆகியவைகளும் இவ்வாறே.


தரை:

தரை துடைப்பதற்கு ஏதுவாகவும் பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கவேண்டும். பலவகை டைல்கள் இருக்கின்றன, இங்கே காண்பது கிரேனைட் தரை.



கடைசியாக:

நாங்களெல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவுவோம். உங்கள் வீட்டு வழக்கம் எப்படி என்று தெரியவில்லை. அப்படி கை கழுவுவதற்கான இடம்.


இப்படிப்பட்ட ஒரு சமையலறை அமைக்க ஏறக்குறைய மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படும். (கட்டிட செலவு போக)

திங்கள், 22 ஏப்ரல், 2013

17. ஆணும் பெண்ணும் சமம்.



இந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:

   1.   எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்
   2.   அனைவருக்கும் வேண்டிய குடிநீர்
   3.   அனைவருக்கும் வேலை வாய்ப்பு 
   4.   கிராமத்திலேயே தரமான கல்வி
   5.   எல்லோருக்கும் மருத்துவ வசதி
   6.   நல்ல சாலைகள்
   7.   விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்
   8.   மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்
   9.   சமூக கூடங்கள்
10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.
11. விவசாயத்திற்கு முன்னுரிமை

இந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.

இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.

வேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.

இதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சேவை அமைப்புகள்


சமீபத்தில் ஒரு சேவை அமைப்பின் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் என் நண்பர் ஒருவருக்கும் விருது கொடுத்து மரியாதை செய்வதாக இருந்ததால் என் நண்பர் என்னையும் நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார். நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு.

ஐந்தேமுக்காலுக்கே போய்விட்டேன். நிகழ்ச்சி சரியாக 6.25க்கு ஆரம்பித்தார்கள். அந்த சேவை அமைப்பின் பெயர் "தாய்மடி". அதாவது தாய்மடியில் உங்களுக்கு எந்த ஆதரவு கிடைக்குமோ அந்த ஆதரவு இந்த அமைப்பின் மூலம் கிடைக்கும் என்று அமைப்பின் பொறுப்பாளினி, தன் அறிமுக உரையில் சொன்னார்கள். இந்த சேவை அமைப்பு பிரபல ஜவுளி நிறுவனமான பி.எஸ.ஆர் ஸ்தாபனத்தின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பலரிடம் பல திறமைகள் இருக்கலாம், ஆனால் வெளி உலகிற்கு அந்த திறமை தெரியாமல் இருக்கலாம், அப்படிப்பட்டவர்களை இந்த அமைப்பின் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். நோக்கம் உன்னதமான நோக்கம். ஆனால் செயல்படுத்த அதிக பொருளும், நேரமும், உழைப்பும் தேவைப்படும்.


அன்று நடந்த நிகழ்ச்சி ஒரு அவியல் சுவையுடையதாய் இருந்தது. பலதரப்பட்ட திறமையாளர்களை மேடையேற்றி அவர்களை பலவாறாக கௌரவித்தார்கள். என் நண்பருக்கு "யோகா வல்லுநர்" என்ற பட்டமும், பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியும், ஒரு பொன்னாடையும் கொடுத்தார்கள். அவர் பேசுவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார், ஆனால் ஏதோ காரணத்தினால் அவரைப் பேச அழைக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கடைசியாக பல மழலைகளைக் கொண்டு ஒரு நடன நிகழ்ச்சியும் வைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். அங்கு எடுத்த சில படங்களை இணைத்திருக்கிறேன்.


வந்திருந்தவர்கள்.


வியாழன், 18 ஏப்ரல், 2013

நான் சைக்கிள் ஓட்டின கதை


சைக்கிள் என்றால் முழு சைக்கிள் இல்லை. அந்தக் காலத்தில் முழு சைக்கிள் என்பது என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு எட்டாக்கனி. என் சித்தப்பா ஒரு சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருந்தார். அங்கு பழைய சைக்கிள் டயர் கிடைக்கும். அதுதான் அந்தக் காலத்தில் என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு சைக்கிள்.

அந்த பழைய டயரை ஒரு குச்சியால் லாகவகமாக அடித்தால் அது உருண்டு ஓடும். அதன் கூடவே நாமும் ஓடினால் சைக்கிள் ஓட்டுவதாக எண்ணம். அப்படி கற்பனை செய்து கொள்ள வேண்டும். நம்மால் ஓடமுடிந்த அளவு வேகத்தில் அந்த டயரை ஓட்டுவது நாளாவட்டத்தில் பழக்கமாகி விடும்.

சிலர் இந்த டயரை சைக்கிள் ரிம்முடன் சேர்து ஓட்டுவார்கள். அது லக்சரி எடிஷன். எல்லோருக்கும் கிடைக்காது. தவிர அதை ஓட்டுவது கொஞ்சம் சிக்கலானது.


நொங்கு சாப்பிட்ட பிறகு மிச்சமாயிருக்கும் பனம்பழத்துண்டுகள் இரண்டை எடுத்து அவைகளை ஒரு முக்கால் அடி குச்சியால் இணைத்து, ஒரு நீண்ட குச்சி, அதன் நுனியில் ஒரு கொக்கி மாதிரி அமைப்பு, இவைகளை வைத்தும் இந்த மாதிரி ஓட்ட முடியும். சிலர் ஒரு இரும்பு வளையத்தை இந்த மாதிரி ஒரு குச்சி வைத்து ஓட்டுவார்கள். ஆனால் இரும்பு வளையம் எல்லோருக்கும் கிடைக்காது. பனம்பழம் எப்போதும் கிடைக்காது. சைக்கிள் டயர்தான் எப்போதும் சுலபமாக கிடைக்கும். ஆகவே அதுதான் பாப்புலர்.

பள்ளிக்கூடத்திற்கு இந்தச் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போக முடியாது. ஏனெனில் பார்க்கிங் பிராப்ளம். பள்ளியில் இந்த சைக்கிளை பார்க் பண்ண முடியாது. யாராவது தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக இந்த சைக்கிளில் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்த பிறகுதான் மற்ற வேலைகள்.

வீட்டுக்கு ஏதாவது சில்லறை சாமான்கள் வாங்குவதற்கு அந்தக் காலத்தில் சின்னப் பசங்களைத்தான் அனுப்புவார்கள். நாங்களும் சைக்கிள் விட ஒரு சான்ஸ் கிடைத்தது என்று ஆர்வத்துடன் இந்த சைக்கிளை ஓட்டிக்கோண்டு போய் அந்த சாமானை வாங்கி வருவோம். ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு அடுத்த கையால் இந்த டயரை ஓட்டிக்கொண்டு வருவது ஒரு நுண்கலை.

சிலர் இந்த சைக்கிளை ஓட்டும்போது வித விதமான சவுண்டு கொடுத்துக் கொண்டு ஓட்டுவார்கள். சில சமயம் இந்த பழைய சைக்கிள் டயர், காராகவும், சில சமயம் ஏரோப்ளேன் ஆகவும் கூட மாறும். அதற்குத் தகுந்த மாதிரி வேகமும் சவுண்டும் மாறும். அவ்வப்போது பாதசாரிகளுக்கு எச்சரிக்கையாக ஹாரனும் அடிக்கவேண்டும். ஏரோப்பிளேனில் போகும்போது இந்த ஹாரன் அவசியமில்லை.

இந்த சைக்கிள் ஓட்டும்போது அனுபவித்த ஆனந்தத்தை, பிற்காலத்தில் நிஜ சைக்கிள் ஓட்டினபோதோ அல்லது ஸ்கூட்டர் ஓட்டினபோதோ அல்லது கார் ஓட்டினபோதோ கூட அனுபவித்ததில்லை. இளம் வயது அனுபவங்களே அலாதியானவை.

இப்போது சிறுவர்கள் இந்த மாதிரி சைக்கிள் ஓட்டி நான் பார்த்ததில்லை. வாழ்க்கையில் எத்தனை ஆனந்தங்களை இன்றைய நம் சிறுவர்கள் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்க மனது வேதனைப்படுகின்றது.

                                 

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கலாமா?

"ஆமாம். ..இப்போது உங்களுக்கு கோந்து எதற்கு.?"

என்னுடைய கோந்து பதிவின் பின்னூட்டத்தில் என் நெருங்கிய நண்பர் இந்த மாதிரி கேட்டு விட்டார். அவர் என்னை இந்தக் கேள்வி கேட்டதில் வருத்தமில்லை. ஆனால் அவர் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.

மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்று உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றைச் சொல்லுவார்கள். ஆனால் மனிதனுக்கு இந்த அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் சில தேவைகள் இருக்கின்றன என்பதை அறிவாளிகள் அறிவார்கள். (நான் ஒரு அறிவாளி என்பதை எப்படி சூசகமாகச் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.) அவைகள்தான் வாழ்க்கையை முழுமையாக்குகின்றன.

 மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது,  ஆனால் எனக்கு கீழ்க்கண்ட ஐட்டங்கள் எனது டேபிளில் இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது. அதில் முக்கியமானது கோந்து. மற்றவை பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் அந்தப் பதிவை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த லிஸ்ட்டை கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

கோந்து வேண்டியதற்கான காரணங்களை ஒரு பதிவில் சொல்லி முடியாது. ஆனாலும் முயற்சிக்கிறேன்.

மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களே. கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் மேஜையில் நீங்கள் வைத்த பொருட்கள் அப்படி அப்படியே, நீங்கள் வைத்த மாதிரியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நீங்கள்தான் ஒழுக்கத்தின் சிகரம்.

மேஜையில் நேற்று ஆபீசிலிருந்து வந்தவுடன் வைத்த சாவியை, மறுநாள் காலை வீடு முழுவதும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தேடுகிறீர்களா, நீங்கள் கொஞ்சம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் திருத்தவேண்டும்.

நிற்க, கோந்துவிற்கு வருவோம். நீங்கள் ஒரு விடுமுறை நாளில் வீட்டில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் புத்தகம் ஒன்றைப் படிக்க எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கம் பைண்டிங் விட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலானவர்கள் என்ன செய்வார்கள். அந்த குறையைக் கண்டுகொள்ளாமல் படிப்பார்கள்.

என்னால் அப்படி இருக்க முடியாது. அந்த விட்டுப்போன பைண்டிங்கை கோந்து போட்டு ஒட்டி, அது காய்ந்த பிறகுதான் அந்தப் புத்தகத்தைப் படிப்பேன். இது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தால், நீங்கள் இத்துடன் நிறுத்தி விட்டு வேறு பதிவைப் பார்க்கப் போகலாம்.

அடுத்து நீங்கள் டைரி எழுதும் பழக்கம் உள்ளவரானால் இந்த அனுபவம் உங்களுக்கு வந்திருக்கும். அதாவது ஒரு தேதியில் உங்கள் மனைவி பேரில் உள்ள கோபத்தை நேரில் காட்ட முடியாதாகையால், டைரியில் எழுதி வைப்பீர்கள். அந்தக்கோபம் இரண்டோரு நாளில் தணிந்த பிறகு அந்தப் பக்கத்தை மறைக்க வேண்டி வரும். இல்லாவிட்டால் அது டைம்பாம்ப் மாதிரி என்றைக்காவது ஒரு நாள் உங்கள் சகதர்மிணியில் கண்ணில் பட்டு வெடித்தால் உங்களால் அதை எதிர்கொள்ள முடியாது.

என்ன செய்யலாம்? அந்தப் பக்கத்தை கிழித்தீர்களானால் டைரியின் பைண்டிங்க் நெகிழ்ந்து விடும். இங்குதான் கோந்தின் அவசியம் தெரியும். அந்த வேண்டாத பக்கத்தில் கோந்தைத் தடவி, டைரியை மூடி வைத்து விட்டீர்களானால் இரண்டு நாட்களில் அந்தப் பக்கம் காணாமல் போய்விடும். நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

தபால் எழுதினால் அந்தக் கவரை ஒட்ட, பிறகு ஸ்டாம்ப் ஒட்ட பலர் சமையலறை நோக்கிப் போவதைப் பார்த்திருக்கிறேன். எதற்கு? நாலு சோற்றுப் பருக்கை வாங்கிக்கொண்டு வந்து கவரையும் ஸ்டாம்ப்பையும் ஒட்டத்தான். இதுவாவது பரவாயில்லை. பலர் அந்தக் கவரையும் ஸ்டாம்ப்பையும் நாக்கால் எச்சில்படுத்தி ஒட்டுவார்கள். அவர்களுக்கெல்லாம் சித்திரகுப்தன் தனி தண்டனை வைத்திருக்கிறான்.

எல்லோரும் கேஸ் உபயோகிக்கிறோம். ஒரு சிலிண்டர் எத்தனை நாள் உபயோகித்தோம் என்பதில் அந்த சிலிண்டரை மாற்றும்போது ஒரு வாக்குவாதம் நடக்கும். புது சிலிண்டரை மாற்றும்பொழுது தினக் கேலண்டரில் இருந்து அன்றைய தேதி தாளைக் கிழித்து சிலிண்டரில் கோந்து போட்டு ஒட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது.

கடிகாரங்களில் செல் மாற்றும்போது, இப்போதுதானே மாற்றினேன், அதற்குள் தீர்ந்துவிட்டதா என்று புலம்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். புது செல் போடும்போது ஒரு சிறிய பேப்பரில் அந்த தேதியை எழுதி அந்த செல்லில் ஒட்டிவிட்டால் போதுமே. எவ்வளவு நாள் உழைத்தது என்று செல் மாற்றும்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

லைப்ரரியில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த புத்தகம், நண்பர்களிடமிருந்து வாங்கி வந்த புத்தகம் இவை எல்லாம் நம்முடையதே. இருந்தாலும் அதில் லைப்ரரி சீல் அல்லது நண்பர்களின் கையெழுத்து இருக்கும். அவற்றின் மேல் உங்கள் பெயர் எழுதின ஒரு துண்டுக் காகிதத்தை கோந்து போட்டு ஒட்டி விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் உங்கள் நணபர் எப்பொழுதாவது உங்கள் வீட்டுக்கு வந்து அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவார்.

இப்படி எவ்வளவோ விஷயங்களுக்கு உபயோகப்படும் கோந்தை என் நண்பர் துச்சமாக எடை போட்டுவிட்டாரே என்று நினைக்கும்போது நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது. கோந்து இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக் கூட என்னால் இயலவில்லை.

ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதவை:

பென்சில்
பென்சில் ஷார்ப்னர்
ரப்பர்
குண்டூசி
ஜெம் கிளிப்
பரீட்சை கிளிப்
செல்லோடேப் + டிஸ்பென்சர்
கலர் பென்சில்கள்
துண்டுக் காகித பேட்கள்
டபுள் பன்ச்
சிங்கிள் பன்ஞ்
பேப்பர் கத்தி
சாதா கத்தி
கத்தரிக்கோல்
டாகுமென்ட் பைல்கள்
பல கலர்களில் பால்பாயின்ட் பேனா
பவுன்டன் பேனா
பவுன்டன் பேனா இங்க்
ரப்பர் ஸ்டாம்ப் பேட்
   "              "  "         இங்க்
ஊசி, நூல் - பல சைஸ்களில்
ரப்பர் பேண்ட்
காது குடையும் பட்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கனம் பொருந்திய சர்க்கார் வழிமுறைகள்



Penny wise, Pound foolish

இந்த ஆங்கில பழமொழி அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். “கடுகு போறதைப் பாத்துட்டு பூசனிக்காயை கோட்டை விட்டானாம்” என்பது ஏறக்குறைய இந்தப் பழமொழிக்கு சரியான தமிழ் பழிமொழி.
நமது அரசாங்க சட்டதிட்டங்கள் இந்த பழமொழிகளை நிரூபிக்கவே உண்டானவை. நான் சர்வீசில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

“சர்க்கார்” வேலைகள் காகிதத்தால்தான் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பேப்பரும் பேப்பர் சம்பந்தமான பொருட்களும் இல்லாவிட்டால் சர்க்கார் வேலை ஸ்தம்பித்துவிடும். அந்தக் காலத்து சென்னை ராஜதானியின் விஸ்தீரணம் அநேகருக்குத் தெரியாது. ஆந்திராவிலுள்ள விஜயநகரத்திலிருந்து இன்றைய கர்னாடக மாநிலம் மங்களூர் வரை பரந்திருந்தது. ஏறக்குறைய அண்ணா கனவு கண்ட திராவிட நாடு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ராஜதானியில் எவ்வளவு அரசு அலுவலகங்கள் இருந்திருக்கும்? அவைகளுக்கு பேப்பர் சம்பந்தமான பொருட்கள் எவ்வளவு தேவைப்பட்டிருக்கும்? இதை அந்தந்த ஆபீஸ்காரர்களே உள்ளூரில் வாங்கி உபயோகப்படுத்தட்டும் என்று விட்டிருக்கலாம். ஆனால் அப்படி தலைக்குத்தலை நாட்டாண்மை பண்ண விட்டால் தலைநகரிலிருக்கும் தலைமை ஆபீசர்களை இந்த குட்டி தேவதைகள் மதிக்குமா?

ஆகவே ஒரு அதி புத்திசிகாமணி என்ன செய்தான் என்றால், ராஜதானி முழுவதும் இவ்வளவு அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அவைகளுக்கு வருடத்திற்கு இவ்வளவு காகிதமும், காகிதம் சம்பந்தமான பொருட்களும் தேவைப்படுகின்றன. அவைகளை மொத்தமாக, தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கினால் விலை சலீசாக இருக்கும். இங்கு தலைநகரில் அவைகளை வாங்கி வைத்துக்கொண்டு, அந்தந்த அலுவலகங்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது அனுப்பி விடலாம். மேன்மை தங்கிய சர்க்காருக்கு இவ்வளவு பணம் மிச்சமாகும் என்று கணக்குப்போட்டு ஒரு திட்டம் தீட்டி, அதை அந்தக் காலத்து (நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம்) தலைமை அலுவலருக்கு (கவர்னர்) அனுப்பினான்.

அவரும் இதைப் பார்த்து, “பேஷ், பேஷ், நல்ல யோசனையாயிருக்கிறது, உடனடியாக அமுல்படுத்துங்கள்” என்று உத்திரவு போட்டுவிட்டார். இப்படித்தான் Controller of Stationery and Printing என்ற அரசுத்துறை உருவாகியது. இதன் முக்கிய வேலை, அரசு அலுவலகங்களுக்குத் தேவையான காகிதம் மற்றும் காகித சம்பந்தமான பொருட்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு மற்ற இடங்களில் இருக்கும் அலுவலகங்களுக்குத் தேவையானவற்றை விநியோகிப்பது.

திட்டம் அருமையான திட்டம்தான். நடைமுறைப்படுத்தும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. நாளாவட்டத்தில் இப்படிப்பட்ட சிக்கல்களை தீர்க்க பல சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள். அதில் முக்கியமானது, அரசு அலுவலகங்கள் வருடத்திற்கு ஒரு முறைதான் தங்களுக்கு வேண்டிய பொருட்களுக்கு கேட்பு (Indent) அனுப்பலாம். இதனால் தலைமை அலுவலகம் மேலும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று ஒரு சட்டம் வகுக்கப்பட்டது. அதாவது தலைமை அலுவலகத்தில் வேலைப்பளுவை கணிசமாகக் குறைத்துவிட்டார்கள்.

இது தவிர, அலுவலகங்களில் அடிக்கடி உபயோகமாகும் கடிதங்களை வகைப் படுத்தி, அவைகளை படிவம் (Form) வடிவில் முறைப்படுத்ததி வைத்துக்கொண்டால் அலுவலகங்களில் வேலை கணிசமாகக் குறையும் என்று கண்டுபிடித்து அந்த மாதிரி படிவங்கள் தயார் செய்தார்கள். இந்த மாதிரி படிவங்கள் நூற்றுக்கணக்கில் பெருகவே, அவைகளை சடுதியாக அடையாளம் காண, அவைகளுக்கு நெம்பர்கள் கொடுத்தார்கள்.

கிளை அலுவலகங்கள் இத்தனாம் நெம்பர் படிவம் இவ்வளவு எண்ணிக்கை தேவை என்றால், அவ்வளவு எண்ணிக்கையில் படிவங்கள் அனுப்புவார்கள். நாளாவட்டத்தில் புது படிவங்கள் உருவாகின, பல பழைய படிவங்களுக்குத் தேவையில்லாமல் போயின. இதனால் படிவங்களுக்கு கொடுக்கப்பட்ட எண்கள் தாறுமாறாக ஆகிவிட்டன. இதை ஒழுங்குபடுத்துவதற்காக அனைத்து படிவங்களுக்கும் புது எண்கள் கொடுக்கப்பட்டன. ஒரு ஜாக்கிரதைக்காக பழைய எண்களையும் வைத்திருந்தார்கள். ஆகவே ஒவ்வொரு படிவத்திலும் பழைய எண், புது எண் ஆகிய இரண்டும் அச்சிடப்பட்டிருக்கும்.

நான் வேலை பார்த்த அலுவலகத்தில் இரண்டு படிவங்கள் தேவைப்பட்டன. அந்த இரண்டு படிவங்களும் ஒவ்வொரு காகிதத்தில் அச்சிடப்பட்டவை. ஒவ்வொன்றிலும் 200 பிரதிகள் தேவைப்பட்டன. அதற்கான கேட்பு படிவத்தை அனுப்பியிருந்தோம். அந்தக் கேட்பு மனுவில் படிவ எண் (புதிது) குறிப்பிட்டு அனுப்பியிருந்தோம்.

அந்த எண்களைக் கொண்ட பழைய படிவம் 200 தாள்களைக்கொண்ட ஒரு பெரிய லெட்ஜர். எங்கள் கேட்பு படிவத்தை நிர்வகித்த ஒரு புத்திசாலி, நாங்கள் கொடுத்த புது எண் படிவத்திற்கு பதிலாக, பழைய எண் படிவத்தை அனுப்ப ஏற்பாடு செய்து விட்டான். அதாவது நாங்கள் கேட்ட ஒரு தாள் படிவம் 200+200 க்கு பதிலாக 200 தாள்கள் கொண்ட லெட்ஜர்கள் 200 + 200 எண்ணிக்கை அனுப்பிவிட்டான்.

பத்துப் பத்து லெட்ஜர்களை ஒரு பண்டிலாக கட்டி, மொத்தம் 40 பண்டில்களை ரயில்வே பார்சலில் ஏற்றி அனுப்பிவிட்டு, அந்த ரசீதை (To Pay) எங்கள் ஆபீசுக்கு அனுப்பி விட்டான். அதாவது பார்சல் சார்ஜ் நாங்கள் கட்டி டெலிவரி எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு அலுவலர்கள் தங்கள் மூளையை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அந்த லெட்ஜர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சின்ன ஆபீசுக்குத் தேவைப்படுமா என்று ஒரு நொடி கூட அவன் சிந்திக்கவில்லை.

இவ்வளவு எண்ணிக்கை பார்சலில் வருமாறு நாம் என்ன பொருட்கள் கேட்டோம் என்று நானும் என் மேல் ஆபீசரும் எங்கள் மூளையைக் கசக்கி யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. ரயில்வே ஸடேஷனிலிருந்து பார்சல்கள் வந்து விட்டன, உடனே டெலிவரி எடுத்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் டெமரேஜ் போடுவோம் என்று போன் பண்ணிவிட்டார்கள்.

சர்க்கார் சட்டம் என்னவென்றால் பார்சல் கட்டணம் எவ்வளவானாலும் அதை அரசுப் பணத்திலிருந்து செலவு செய்யலாம், ஆனால் டெமரேஜ் ஒரு ரூபாய் ஆனாலும் அதை சம்பந்தப்பட்ட அலுவலர் தன் சொந்தப் பணத்திலிருந்துதான் செலவு செய்யவேண்டும். தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு எழுதி, பதில் வருவதற்குள் ஏகப்பட்ட ரூபாய் டெமரேஜ் ஆகிவிடும். ஆகவே அந்தப் பார்சல்களைப் பணம் கட்டி எடுத்து, ஒரு இரட்டை மாட்டுவண்டி வைத்து ஆபீசுக்கு கொண்டு வந்தோம்.

ஒரு பார்சலைப்பிரித்து ஆராய்ந்ததில், படிவ எண் கோளாறினால் இப்படி நடந்திருக்கிறது என்று தெரிந்தது. சரி, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று, நடந்த சமாசாரங்களை எல்லாம் விரிவாக தலைமை அலுவலகத்திற்கு எழுதி, இந்தப் படிவங்கள் எங்களுக்கு உபயோகமில்லாதவை, ஆதலால் அவைகளை திருப்பி அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டோம்.

அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நாங்கள் முதலில் கேட்ட ஒரு தாள் படிவங்களில் 200 + 200 அனுப்பிவிட்டு, அந்த மாறிப்போன படிவங்களை, படிவங்களா அவை, லெட்ஜர்கள், அங்கேயே வைத்திருங்கள், அவைகளை யாராவது கேட்கும்போது உங்களுக்குத் தெரிவிக்கிறோம், அங்கிருந்து நேராக அவர்களுக்குப் பார்சல் செய்து விடுங்கள், இப்போது அவைகளை எங்களுக்குத் திருப்பி அனுப்பினால் வீண் செலவுகள் வரும் என்று பதில் அனுப்பிவிட்டார்கள்.

தலைமை அலுவலகத்தில் ஒரு உத்திரவு போட்டுவிட்டால் அதை நிறைவேற்றத்தான் வேண்டுமே தவிர, அதை எதிர்த்து பதில் கேள்விகள் கேட்கக் கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டம் அந்த்க காலத்தில் அமுலிலிருந்தது. வேறு வழியில்லை. அந்தப் பார்சல்களை குடோனில் ஒரு மூலையில் போட்டுவிட்டு, அதைக் கேட்டு யாராவது கேட்பு மனு அனுப்பமாட்டார்களா என்று சாதக பட்சி மழைக்காக காத்திருப்பது போல் காத்துக்கொண்டிருந்தோம்.

நான் அந்த ஆபீசில் இருந்த மூன்று வருட காலத்தில் ஒரு பயலும் அந்த லெட்ஜர்களைக் கேட்கவில்லை. இப்போது அந்த லெட்ஜர்களை அநேகமாக கரையான்கள் தின்று தீர்த்திருக்கும் என்று நம்புகிறேன். இப்படியாக சர்க்கார் பணம் சேமிக்கப்படுகிறது.

சனி, 13 ஏப்ரல், 2013

சில வில்லங்கமான எண்ணங்கள்



1.   ஒரு மனிதனின் பலமும் பலவீனமும்.


ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பலமும் பலகீனமும் இருக்கும். நான் இந்த விதிக்கு விதி விலக்கல்ல. என்னுடைய பலமும் பலகீனமும் ஒன்றே. அதாவது நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடையவன். இது எனக்கு பல எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. பல நண்பர்களை எதிரிகளாகவும் மாற்றியிருக்கிறது.

என்னால் இந்த குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணம் இது என் மூதாதையர்களிடமிருந்து வழிவழியாய் வந்தது. ஆனாலும் இந்த குணத்தை வைத்துக் கொண்டே தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஓரளவு முன்னேறியிருக்கிறேன். குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். நானும் உடல், மன, பொருளாதார ரீதியில் நன்றாகவே இருக்கிறேன்.

பதிவுலகத்திலும் என்னுடைய இந்த குணத்தின் தாக்குதல்கள் இருக்கின்றன. அதை வைத்துக் கொண்டே ஓரளவு நண்பர்களையும், என் கருத்தை எதிர்ப்பவர்களையும் சம்பாதித்திருக்கிறேன்.

என்னுடைய மன நலத்திற்காகத்தான் இந்த பதிவுலகில் பிரவேசித்தேன். கம்ப்யூட்டரிலும் பதிவுலகத்திலும் மாறி வரும் மாற்றங்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு ஈடு கொடுத்து வருகிறேன். ஆனாலும் சமீப காலமாக என்னால் முன் போல் இணையத்தில் வலம் வரமுடிவதில்லை. ஏதோ பதிவுகளை ஒருவாறு ஒப்பேற்றி வருகிறேனே தவிர, மற்ற பதிவுகளுக்கு சென்று முழுவதும் படித்து, பின்னூட்டம் போட முடிவதில்லை.

சில பதிவுகளைப் படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் போட முடிவதில்லை. இது என்னுடைய ஒரு பெரிய பலகீனம்தான். இந்த குறைக்காக மக்கள் என்னை பொறுத்துக்கொள்ளவேண்டும்.
பதிவுகளில் நான் எழுதும் கருத்துக்களை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. அது தேவையுமில்லை. எதிர்மறை கருத்துக்களை என் பார்வையில் பார்த்து, அவைகளுக்கு காரசாரமாய் பதில் கொடுத்திருக்கிறேன். என் கருத்துக்களில் தவறு இருந்தால் ஒத்துக்கொள்ள தயங்குவதில்லை.

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறெங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறேன். என் பதிவில் ஏதாவது சிந்திக்க விஷயம் இருந்தால் படியுங்கள். கருத்து வேறுபாடு இருந்தால் பின்னூட்டம் போடுங்கள். என் கருத்துகளைத் திட்டுங்கள். இது பொது வெளி. என்னுடைய இயலாமை காரணமாக உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடாவிட்டால் வருந்த வேண்டாம். அதற்காக என்னை பொறுக்கவேண்டும். 

   2. ஈழம் பற்றி யாரும் எதுவும் பேசலாம்.


சில சமாச்சாரங்கள் காலத்தால் அழியாவரம் பெற்றவை. சில வீடுகளில் பெரிசுகள் தாங்கள் புருஷனோடு வாழ்ந்த காலத்தை அவ்வப்போது நினைத்து, ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்கள். புருஷன் போய்ச்சேர்ந்து நாப்பது ஐம்பது வருஷம் ஆகியிருக்கும்.

அந்த மாதிரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த சப்ஜெக்ட் கிடைக்காவிட்டால் ஈழத்தை கையிலெடுத்துக் கொள்வார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலானோருக்கு ஈழப் பிரச்சினையின் உண்மை நிலை என்னவென்றே தெரியாது. ஆனாலும் தமிழீழம் வாங்கியே தீருவோம் என்று கோஷமிடுவார்கள்.

ஈழத்தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே இன்னும் ஒருமனதாக முடிவு செய்யவில்லை. ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளோ தமிழீழம் வாங்கியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

ஆகமொத்தம் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேச, போராட இந்த சப்ஜெக்ட் கைகொடுக்கும்.


3.   இந்தியாவை நல்ல நாடாக்குவது எப்படி?


ஏண்டா, கல்யாணம் பண்ணிக்கலே என்று ஒருத்தன் அடுத்தவனைப் பார்த்துக் கேட்டானாம். அதற்கு அவன், சரி நீயே பொண்டாட்டியா இருந்துக்கோயேன் அப்படீன்னானாம்.

அந்த மாதிரி நம்ம நாட்டுக்கு ஏதாச்சும் விடிவு பிறக்காதா அப்படீங்கற ஆதங்கத்தில எதாச்சும் எழுதினா, நம்ம வாசகர்கள். நீதான் மேதாவி ஆச்சுதே. நீயே வழியும் சொல்லு அப்படீன்னு பின்னூட்டம் போடறாங்க. 

எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான். ஒரு பத்து வருடத்திற்கு குழந்தைகள் பிறக்காது. ஜனத்தொகை ஓரளவிற்காவது கட்டுப்படும். கற்பழிப்பு குற்றங்கள் இருக்காது.

ஆனால் இதைச் சொன்னா என்னை துவைத்து காயப்போட்டு விடுவார்கள். எனக்கெதற்கு வம்பு?

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

16.தலைவருக்கும் வட்டத்திற்கும் ஆப்பு


இரண்டு நாளில் மூவரும் திரும்பி வந்தார்கள். செக்கை கொஞ்சம் அலைய விட்டிருக்கிறார்கள். ஆனால் செக்கு சுதாரிப்பாக இருந்ததால் அவரை ஏமாற்ற முடியவில்லை. நான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். இனி நான் பிச்சைதான் எடுக்கவேண்டும் என்றார். நல்லது, நானே அதைத்தான் சொல்லலாமென்று இருந்தேன், அதற்குள் நீயே சொல்லி விட்டாய். எந்தக் கோயிலுக்குப் போக விருப்பம், அதைச் சொன்னால் அந்தக் கோவில் அதிகாரிக்கு ஒரு லெட்டர் தருகிறேன் என்றேன்.

அதற்குள் பொது என் முதுகைச் சுரண்டினான். என்ன என்று திரும்பிக் கேட்டதற்கு குசுகுசுவென்று, இவர்களை இருவரையும் நாம் ஏன் நம் எடுபிடி வேலைகளுக்கு வைத்துக் கொள்ளக்கூடாது, இருவருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது, நாம் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாமே என்றார். பரவாயில்லையே, நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது, எதற்கும் அவர்கள் அபிப்பராயத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அவர்களை நீயே கேள் என்று பொதுவிடம் சென்னேன். பொது அவர்களை அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனார். என்ன டீல் போட்டாரோ தெரியவில்லை. திரும்பும்போது தலைக்கும் வட்டத்திற்கும் வாயெல்லாம் பல். மந்திரி ஐயா, " அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். எனக்கு தலையும் செக்குவிற்கு வட்டமும் பி.ஏ. வாக இருப்பார்கள் " என்றார். சரி, ஆனால் அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.

அவர்களைப் பார்த்து யமலோகம் பார்த்ததை மறக்காதீர்கள். இன்னொரு முறை போனால் திரும்பி வரமுடியாது, ஜாக்கிரதையாயிருங்கள், உங்கள் பழைய வேலைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

இப்படி நடந்து கொண்டிருக்கும்போதே ரெண்டு தடவை போன். யாரென்று பார்த்தால் நம் நிதி மந்திரி. என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், வரப்போகின்ற தேர்தல் விஷயமாக பி.எம். உங்களைப் பார்க்க விரும்புகிறார். உங்களுக்கு எப்ப சௌகரியப்படும் என்று கேட்கச்சொன்னார், என்றார். நாளைக்கு நான் ப்ரீதான். நீங்கள் மூவரும் பத்து மணிக்கு வந்து விடுங்களேன். அப்படியே லஞ்ச் இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என்றேன். சரி என்றார்.

மறுநாள் சரியாக பத்து மணிக்கு மூவரும் வந்து விட்டார்கள். என்ன விஷயம் என்று கேட்டேன். தேர்தல் வருகிறது. கட்சியில் இருந்த பணத்தைப் பூராவும் எடுத்து ரிசர்வ் வங்கி கஜானாவில் சேர்த்து விட்டோம். இப்பொழுது தேர்தல் செலவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று கையைப் பிசைந்தார்கள்.

இதற்கா கவலைப் படுகிறீர்கள்? ஒரு கட்சிக்காரனிடத்திலும் காசு இல்லை. போய்க் கேட்டால் ஒருவனும் கொடுக்க மாட்டான். ஆகவே எல்லோரும் ஓட்டாண்டிகள்தான். ஆனால் உங்களுக்கு நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். ஆனால் நான் சொன்ன மாதிரிதான் தேர்தலை நடத்தவேண்டும் என்றேன்.

மூவரும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினார்கள்.

இந்த தேர்தலில் பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி ஆகிய நீங்கள் இருவர் மட்டும்தான் பழைய ஆட்கள். கட்சித்தலைவர் ஏதோ ஆசை வைத்திருக்கிறேன் என்றாரே, அது என்ன என்றேன். அது ஒண்ணும் இல்லீங்க, அவங்க மகனை கொஞ்சம் மேலுக்கு கொண்டு வரவேண்டும், அவ்வளவுதானே, செஞ்சுடுவோம். அவர் இப்போதைக்கு உதவி பிரதம மந்திரியாக இருக்கட்டும். மற்ற மந்திரிகளைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவோம்.

இப்போது நாம் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பஞ்சாயத்து தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் இரண்டையும் முதலில் முடித்து விடுவோம். அப்போது நமக்கு ஓரளவு ஜனங்களை எடை போட்டுவிடலாம். இந்த அடிமட்ட தேர்தல்களில் இது வரைக்கும் அரசியலில் ஈடுபடாதவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் நம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவேண்டும். இந்த வேலையை அடிமட்ட கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடிப்பான இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும். ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி கொடுக்கவேண்டும். நீதி, நேர்மை, நியாயம். சட்டம், ஒழுங்கு, சமூக முன்னேற்றம், தனிநபர் ஒழுக்கம், கல்வி, தொழில், விவசாயம் ஆகிய துறைகளில் அவர்களை சிறந்தவர்களாக மாற்றவேண்டும்.

இவர்கள்தான் இனிமேல் இந்தியாவை நிர்வகிப்பார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைத் தழுவுவார்கள். இவர்களைத்தான் பஞ்சாயத்திற்கும் உள்ளாட்சிகளுக்கும் வரப்போகும் தேர்தலில் நிற்கவைத்து ஜெயிக்கவைக்கப் போகிறோம். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எதிர்க் கட்சிகள் எந்தப் பொறுப்பிற்கும் வரக்கூடாது. அதை நான் கவனித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தல்கள் இவர்களின் பயிற்சி முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம். பயிற்சி நடக்கும்போதே அவர்களின் திறமைகளை கவனித்து அவரவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு நிற்க வைப்போம். நாம் நிறுத்தும் அனைத்து வேட்பாளர்களும் ஜெயிப்பார்கள். ஏனெனில் அவர்கள் அந்தந்த கிராம மக்களின் ஆதரவு பெற்றவர்கள். இந்தப் பயிற்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

இந்த தேர்தல்கள் முடிந்த பிறகு அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கு பதிவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். நீதி,நேர்மைக்குப் பேர் போனவர்கள். அவர்களை முடிந்த மட்டில் வேட்பாளர்களாக நிறுத்துவோம். எதிர்க்கட்சி என்பதே இந்த தேர்தலுக்கு அப்புறம் இருக்கக் கூடாது.  பாராளுமன்றத்திற்கு இனி யமகிங்கரர்ளை  காவலுக்குப் போட்டுவிடலாம். தகராறு பண்ணுகிறவர்களை அவர்கள் நேராக யமபட்டணமே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

மிச்சம் இருக்கும் பதிவர்களை சட்டசபை உறுப்பினர்களாக்கி விடுவோம்.

 சரியென்று சொல்லிவிட்டு மூவரும் சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.

பின் குறிப்பு: இந்த பயிற்சி மற்றும் தேர்தல்கள் நடந்து முடிய கொஞ்ச நாட்கள் ஆகும். அது வரையில் நாம் வேறு பொருட்களைப் பற்றி சிந்திப்போம்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஒரு நாடு எப்படி முன்னேறும்?


ஒரு நாட்டின் முன்னேற்றம் எப்படி நிகழும்? ஏன் இந்திய நாடு முன்னேற்றமடைவதில் இவ்வளவு இடர்ப்பாடுகள்? நம் நாடு சுதந்திர நாடாகி ஏறக்குறைய 65 ஆண்டுகள் ஆகியும் மற்ற நாடுகளின் முன்னேற்றத்தை அடைய முடியவில்லையே, ஏன்?

இந்த மாதிரி கேள்விகள் அடிக்கடி என் மூளையில் தூக்கம் வராத இரவுகளில் பிராண்டுவதுண்டு. நம் நாட்டில் பல துறைகளிலும் திறமை மிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் நம் நாடு வல்லரசாவதற்குத் தேவையான பல திட்டங்களைத் தயார் செய்ய முடியும். ஆனால் அவைகளை செயல்படுத்துவதற்குத் தேவையான Political Will இல்லை. ஏன்? ஆதிகாலத்திலிருந்தே நாம் கர்மா, கர்ம வினை, பாவ புண்ணியம், மறுபிறவி ஆகியவைகளில் ஆதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஒருவன் ஒரு தொழில் செய்து நஷ்டமடைந்தால் அது அவன் விதி என்று வெகு சுலபமாக கூறி ஆறுதல் அடைந்து விடுகிறோம்.

அவன் அந்த தொழிலை எவ்வாறு நடத்தினான், காரணம் இல்லாமல் ஒரு தொழில் நஷ்டமடையாதே, அவன் தொழில் ஏன் நஷ்டமடைந்தது? என்று ஒருவரும் சிந்திப்பதில்லை. நல்ல நிபுணர்களைக் கொண்டு அந்த சம்பவத்தை ஆராய்வதில்லை. என் தலையெழுத்து என்று விதியின் பேரில் பழி போட்டுவிட்டு தூங்குவான்.

இந்த மக்களில் சிலர் புத்தி கூர்மையுள்ளவர்கள். அவர்கள் கைதேர்ந்த சுயநலவாதிகள். மற்றவர்களை எப்படி கொள்ளையடித்து நாம் மட்டும் வசதியாக வாழலாம் என்று திட்டமிடுவதில் வல்லவர்கள்.

ஏன் அப்படி சிலர் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் எனக்கு நம் புராணக் கதைகள்தான் நினைவிற்கு வருகிறது. அவைகளில் பல நியாயமற்ற செயல்கள் தடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவைகளை நியாயப் படுத்தியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு கதை. தேவர்களின் பலம் குறைந்து விட்டது. அவர்களின் மந்திரி யோசனை சொல்லுகிறார். நீங்கள் பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும், அதை நீங்கள் பருகினால் மீண்டும் நீங்கள் பலசாலியாகிவிடுவீர்கள் என்கிறார். திட்டத்தில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதத்தைப் பாருங்கள்.

தேவர்களுக்கு தாங்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. கூட்டுச் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். யாரைக் கூட்டுச் சேர்க்கலாம் என்று யோசனை செய்யும்போது அசுரர்களின் நினைவு அவர்களுக்கு வருகிறது.

ஆனால் அசுரர்கள் அவர்களின் பரம்பரை எதிரிகள். அவர்களை அழிப்பதற்காகத்தான் தேவர்கள் தாங்கள் பலசாலிகளாக மாறவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் தாங்களே தனியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. அப்போது அவர்களின் மந்திரி சொல்லுகிறார். ஆபத்திற்கு பாவமில்லை. நாங்கள் அசுரர்களிடம் போய் நைசாகப் பேசி கூட்டுக்கு ஒப்புக்கொள்ள வையுங்கள் என்கிறார்.


அப்படி கூட்டு வைத்தால் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுக்கவேண்டுமே, அப்படி அவர்களும் அமிர்தம் சாப்பிட்டால் அவர்கள் நம்மை விட பலசாலியாய் விடுவார்களே, அப்புறம் நாம் எந்தக் காலத்தில் அவர்களை ஜெயிப்பது? என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். அப்போது அவர்கள் மந்திரி சொல்லுகிறார். முதலில் அமிர்தத்தை எடுங்கள், அப்புறம் அதை அசுரர்களுக்கு கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று நான் யோசித்து வைக்கிறேன் என்று சொல்கிறார்.


மக்களே, இங்கு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ஒரு திட்டம் தீட்டும்போதே, கூட்டாளியை ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள். மீதி கதை உங்களுக்குத் தெரியும்.

இந்தக் கதையை படித்து வளரும் ஒருவன் இந்த உலகில் எப்படி நியாயமாக நடந்துகொள்வான்? அதுதான் இந்தியாவில் இப்போது நடக்கிறது.

திங்கள், 8 ஏப்ரல், 2013

15. தூதரகத்தில் ரெய்டு


அன்று இரவு தூங்கிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன். மணியைப் பார்த்தேன். மணி காலை 2. இன்னேரத்தில் என்ன சலசலப்பு என்று வாயில் காவலாளியைக் கூப்பிட்டுக் கேட்டேன். அவன் ஐயா. நிறைய போலீஸ், மற்றும் பல அதிகாரிகள் வந்து உள்ளே விடும்படி சத்தம் போடுகிறார்கள் ஐயா, என்றான்.

அப்படியா அதில் முக்கிய அதிகாரியை மட்டும் உள்ளே விடு. நான் என் ஆபீசுக்கு வருகிறேன் என்றேன். அவன் சிறிது நேரம் கழித்து, ஐயா, எல்லோரும் ஒன்றாகத்தான் உள்ளே வருவார்களாம், என்னை கேட்டைத் திறக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள் ஐயா, என்றான். ஒரு நிமிஷம் இருக்கச்சொல்லு, நானே வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான் வாசலுக்குப் போனேன்.

அங்கு நான் கண்ட காட்சி இரண்டாம் உலகப் போரை நினைவு படுத்தியது. நூற்றுக்கணக்கான ஜீப்புகள், டாங்கிகள், லாரிகள், ஆயிரக்கணக்கில், பலரேங்கில்  போலீஸ்காரர்கள் மற்றும் சிவில் டிரஸ்சில் பல அதிகாரிகளும் அங்கு கூடியிருந்தார்கள். கொஞ்சம் நடுத்தர ரேங்கில் இருக்கும் போலீஸ்காரர்கள் காவலாளியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஹா, தலை (அந்த அரசியல்வாதி) பெரிய வேலை செய்திருக்கிறான் போல் இருக்கிறது. அவனைத் தனியாக கவனிப்போம். இப்போது இவர்களைக் கவனிப்போம் என்று முடிவு செய்து வெளியில் வந்தேன். நீங்கள் எல்லாம் யார், எதற்காக இந்நேரத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அதில் முக்கியமாகத் தென்பட்ட அதிகாரி, நாங்கள் இந்த தூதரகத்தை ரெய்டு பண்ண வந்திருக்கிறோம் என்றார்.

அப்படியா, சந்தோஷம், தூதரகத்திற்கு சில விதிகள் உண்டல்லவா? அதன் பிரகாரம் பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி உத்திரவு இல்லாமல் யாரும் உள்ளே நுழையக் கூடாது என்பது தெரியுமா என்றேன். அது எல்லாம் எங்களுக்குத் தெரியும், எங்களை உள்ளே விடப்போகிறாயா இல்லையா என்று மிரட்டும் தொனியில் கேட்டார். விடச்சொல்லுகிறேன், ஆனால் இதனால் வரும் விளைவுகளுக்கெல்லாம் நீங்களேதான் பொறுப்பு, நான் உங்களை எச்சரிக்கை பண்ணவில்லை என்று பிறகு சொல்லக்கூடாது என்றேன்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்றார் அந்த அதிகாரி. எல்லோரையும் உள்ளே அனுமதிக்கச் சொன்னேன். எல்லோரும் முதலில் எல்லோரும் ஒரு இடத்தில் உட்காரலாம், உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள், அதை செய்கிறேன் என்றேன். எல்லோரும் கான்பரன்ஸ் ஹாலில் உட்கார்ந்தார்கள். சுமார் ஐயாயிரம் பேர் இருக்கும். எங்கள் பக்கம் நான், பொது, செக்கு, நாலைந்து காவலாளிகள் இவ்வளவு பேர்தான்.

எல்லோரும் உட்கார்ந்த பிறகு நீங்கள் எல்லாம் எந்தெந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றேன். அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், இந்திய அரசின் விவசாயத் துறை நீங்கலாக மற்ற அனைத்துத் துறைகளிலிருந்தும் அதிகாரிகளும், குட்டித்தேவதைகளும் வந்துள்ளார்கள்.

நீங்கள் எல்லோரும் ஒன்றாக வந்த காரணம் என்னவோ என்றேன். நாங்கள் இந்தத் தூதரகத்தை முழுமையாக ரெய்டு பண்ணவேண்டும் என்றார்கள். நான் கேட்டேன், அப்படி ஒரு அயல்நாட்டுத் தூதரகத்தை ரெய்டு பண்ணவேண்டுமென்றால் அதற்கு இந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் கொடுத்து ,இந்தத் தூதரகத்திற்கு முன் அறிவிப்பு கொடுத்த பின்தானே செய்ய முடியும். அப்படி எதுவுமில்லாமல் திடீரென்று வந்திருக்கிறீர்களே, இதற்கு யார் உங்களுக்கு உத்திரவு கொடுத்தார்கள் என்றேன்.

எங்கள் மேலதிகாரிகள் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் நாங்கள் வந்துள்ளோம் என்றார்கள். அப்படியானால் அந்த மேலதிகாரிகளை வரச்சொல்லுங்கள், நான் அவர்களுடன் பேச வேண்டும் என்றேன். அங்கிருந்த சீனியர் அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. நீ எங்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் நினைத்தால் உன்னை இப்போதே அரெஸ்ட் பண்ண முடியும் என்றார். பிறகு எல்லோரும் புறப்பட்டு அவரவர்கள் வேலைகளைப் பாருங்கள் என்று பின்னால் திரும்பி உத்திரவு போட்டார்.

எல்லோரும் எழுந்திருக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு நிமிடம் என்று அவர்களைக் கையமர்த்தி உட்கார வைத்து விட்டு சொன்னேன். நீங்கள் அனைவரும் ஒரு அயல் நாட்டுத் தூதரகத்திற்குள் அத்து மீறி நுழைந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் இந்நாட்டின் கைதிகள். என் அனுமதியின்றி நீங்கள் அசையக்கூட முடியாது. பேசாமல் நான் சொல்லுகிற மாதிரி நடந்து கொள்ளுங்கள். தவறினால் நீங்கள் உங்கள் பிள்ளை குட்டிகளை இந்த ஜன்மத்தில் பார்க்க முடியாது என்றேன்.

எல்லோரும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்கள எடுத்து என் மேல் பிரயோகிக்க தயார் ஆகிவிட்டார்கள். என் ஒரு கையசைப்பில் அத்தனை ஆயுதங்களும் என் மேஜைக்குப் பின்னால் வந்து விழுந்தன. ஒருவராலும் அவர்கள் ஆசனத்தை விட்டு எழுந்திருக்க முடியவில்லை.

இதற்குள் ஒரு கிங்கரனை அனுப்பி அந்த தலையையும் வட்டத்தையும் பிடித்து வரச்சொன்னேன். அவர்கள் இந்தக் கூட்டத்தைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள். இது அவன் வேலை என்று சொல்லாமல் சொல்லி விட்டான். தலை என்னைப் பார்த்து எதற்காக என்னை இங்கு தூக்கிக்கொண்டு வந்தீர்கள் என்று சத்தம் போட்டான். நான் அவனைப் பார்த்து நீ நேற்று என் காலில் விழுந்ததைப் பார்த்து நான் ஏமாந்து போனேன். ஆனாலும் நீ கெட்டிக்காரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்த ரெய்டை நீ யார் மூலமாக ஏற்பாடு செய்தாய் என்று சொன்னால் அவர்களுடன் பேச சௌகரியமாக இருக்கும் என்றேன். அந்த மடையன் எனக்கு இந்த ரெய்டு பற்றி ஒன்றுந் தெரியாது என்றான். அப்படியா என்று சொல்லிவிட்டு, ஒரு கிங்கரனைக் கூப்பிட்டு தலைவரை சித்திரகுப்பதனிடம் கூட்டிக்கொண்டு போய் நம் பாணியில் கொஞ்சம் கவனித்து இந்த விவகாரத்தில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இவன் வாயிலிருந்து வர வழைத்து அனைவரையும் இங்கே கூட்டி வாருங்கள் என்றேன்.

அரை மணி நேரத்தில் அனைத்து நபர்களும் வந்து விட்டார்கள். இந்த தலைவனுக்கு பிஎம் ஆபீசில் ஒரு பிஏ வைத்தெரியும். அவனிடம் சொல்லி அனைத்து துறைத் தலைவர்களுடனும் சொல்லி இந்த ரெய்டை ஏற்பாடு பண்ணியிருக்கிறான். துறைத் தலைவர்களை எல்லாம் முன் வரிசையில் உட்கார வைத்து அவர்களைக் கேட்டேன்.

தூதரகத்திற்கு என்று சில பாதுகாப்புகள் உண்டல்லவா? அந்த விதிகளின் படி தூதரகத்தை ரெய்டு பண்ண வேண்டுமென்றால் பிரதம் மந்திரி நேரடியாக உத்திரவு கொடுக்கவேண்டுமல்லவா? அப்படி உங்களுக்கு உத்திரவு கிடைத்துத்தான் உங்கள் ஆட்களை இங்கே அனுப்பினீர்களா? பதில் சொல்லுங்கள் என்றேன். பிரதம மந்திரி இந்த ரெய்டை அப்ரூவ் பண்ணியிருக்கிறார் என்று இந்த பிஏ சொன்னார், அதனால் ரெய்டை அனுமதித்தோம் என்றார்கள்.

அந்தப் பிஏ வைக் கேட்டேன். இந்த ரெய்ட் நடக்கும் விஷயம் பிரதம மந்திரிக்கு தெரியுமா என்றேன். அவன் சொன்னான், இந்த தலைவன் என்ன கேட்டாலும் அதைச் செய்யும்படி பிஎம் சொல்லியிருக்கிறார் என்றான். அப்படியானால் இந்தத் தலைவன் ஒருவனைக் கொலை செய்யும்படி கேட்கிறான், அப்படி செய்வாயா என்று கேட்டேன். "பெப்பெப்பே" என்று முழித்தான். சரி இருக்கட்டும், பிரதம மந்திரியையே வரச்சொல்லுவோம், அவரே வந்து இதை விசாரிக்கட்டும் என்று சொல்லி பிரதம மந்திரிக்குப் போன் போட்டேன்.

அவரிடம் உங்கள் ஆபீசர்கள் எல்லாம் தேவலோக தூதரகத்தை ரெய்டு பண்ணுவதற்காக வந்திருக்கிறார்கள். நீங்கள்தான் இந்த ரெய்டுக்கு பர்மிஷன் கொடுத்ததாக உங்கள் பிஏ சொல்லுகிறான் என்றேன். அவர் போனிலேயே மன்னிப்பு கேட்டுவிட்டு பத்து நிமிடத்தில் நிதி அமைச்சர், உள்துறை, வெளி உறவுத்துறை மந்திரிகள் புடை சூழ வந்து விட்டார். அவரைப் பார்த்துத் அனைவரும் பேயறைந்தது போல் ஆனார்கள்.

அவருடைய பிஏ வைக்கூப்பிட்டு இது எப்படி ஏற்பட்டது என்று கேட்டார். அவன் இந்த தலை சொன்னதை செய்யவேண்டும் என்று முன்பு நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அதனால் செய்தேன் என்றான். அப்படியா, அவன் என்னைக் கொல்லும்படி சொல்லுகிறான், அப்படியே செய்வாயா என்று கேட்டார். அவன் பதில் சொல்ல முடியாமல் விழித்தான்.

பிறகு அவர் துறை அதிகாரிகளைப் பார்த்து தூதரக "டிப்ளொமேடிக் இம்யூனிடி" சட்டங்கள் உங்களுக்குத் தெரியுமல்லவா, தெரிந்தும் ஒரு பிஏ சொல்வதைக் கேட்டு இந்த மாதிரி செய்திருக்கிறீர்களே, உங்களுக்கு சொந்தமாக மூளை இல்லையா? என்று சகட்டு மேனிக்கு அவர்களைச் சாடினார். எல்லாப் பயல்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பிறகு என்னைப் பார்த்து இந்தப் பயல்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்றார்.

நியாயமாக அனவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆனால் எல்லோரும் பிள்ளைகுட்டிக் காரர்களாய்த் தெரிகிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு இன்கிரிமென்ட்டை நிறுத்தி ஆர்டர் போட்டு விடுங்கள் என்றேன். அப்போதே உள்துறை செயலரை விட்டு அந்த ஆர்டர்களை டைப் செய்து ஒவ்வொருவருக்கும் கையிலேயே கொடுக்கப்பட்டது.

பிறகு எல்லோருக்கும் காலை டிபன் கொடுக்கச்சொன்னேன். பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் என்னிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனதும்  இந்த அதிகாரிகள் தங்கள் ஆயுதங்களை திருப்பிக் கேட்டார்கள். அவைகள் உங்கள் ஞாபகார்த்தமாக  இங்கேயே இருக்கட்டுமே என்றேன். அவர்களை ஐயோ, ஐயோ, இவை எங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட ஆயுதங்கள், அவைகள் இல்லாவிட்டால் எங்கள் வேலையே போய்விடும் என்று மூக்கால் அழுதார்கள்.

எடுத்துக் கொண்டு போங்கள். ஆனால் உங்கள் ஆயுளுக்கும் இந்தப் பாடம் மனதில் இருக்கட்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன். இந்த சந்தடியில் தலையும் வட்டமும் தப்பிக்கப் பார்த்தார்கள். அவர்களை நீங்கள் போகவேண்டாம் இருங்கள் என்று சொல்லி ஒரு கிங்கரனைக் காவலுக்குப் போட்டேன்.

எல்லோரும் போன பிறகு அவர்கள் இருவரையும் தனியாகக் கூப்பிட்டேன். என்னைப் பாரத்ததும் அவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான்தான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். ஐயா எங்களை மன்னியுங்கள் என்று கேட்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை, இனி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறோம் என்றார்கள்.

முதலில் அந்த நிலங்களை எல்லாம் ஒழுங்காக எங்கள் பெயருக்கு மாற்றிவிடுங்கள். பிறகு தலை வைத்திருக்கும் எல்லா சொத்துக்களையும் அரசுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். தலை வைத்திருக்கும் அனைத்து ரொக்கங்களும் ஏற்கனவே அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு விட்டன. இரண்டு நாளில் இவைகளை எல்லாம் முடித்து விட்டு இருவரும் இங்கே வாருங்கள். இந்தத் தடவை ஒன்றும் கோல்மால் பண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். எதற்கும் செக்கு உங்கள் கூடவே இருப்பார். போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

14.வட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்.


வட்டத்திடம் பணம் கொடுத்தனுப்பி ஒரு வாரம் இரு வாரமாகி, ஒரு மாதமும் ஆகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. எப்போது செல்லில் கூப்பிட்டாலும் பிசி என்றே வந்தது. கடைசியில் செக்கை அனுப்பி என்ன விவரம் என்று பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போய் விசாரித்து விட்டு வந்து சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. நாம் சொன்னது போல் 1000 ஏக்கர் நிலம் பேசி வாங்கி விட்டாராம். ஆனால் அதை முழுவதுமாகத் தலைவர் பேரில் (அதாவது அன்று வந்த அரசியல்வாதி) ரிஜிஸ்டர் ஆகி, சுவாதீனம் எடுத்து, தற்பொழுது சுற்றிலும் வேலி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

வட்டத்திடம் கேட்டதற்கு, இதுதான் மாமூலுங்க, நிலம் உங்களுதுதானுங்க, கிரயம் யார் பேரில் இருந்தால் என்னங்க? என்றாராம். அப்படியா என்று கேட்டுக் கொண்டு, பொதுவை அந்த அரசியல்வாதியிடம் அனுப்பினேன். அவர் பொதுவை மிரட்டியிருக்கிறார். இத பாரு பொது, எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க, அப்புறம் இந்தப் பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது, இதுக்கு இன்கம்டாக்ஸ் கட்டீருக்கீங்களா. இப்படியெல்லாம் கேள்வி கேட்கவைப்பேன். அப்புறம் நீங்கள் எல்லோரும் ஜெயிலில் களி திங்க வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் அவருடன் போனில் பேச முயற்சி செய்தேன். போனை எடுக்கவே இல்லை. ஓஹோ, இதெல்லாம் காரியத்திற்கு உதவாது என்று நேரடி நடவடிக்கை எடுத்தேன். இரண்டு யமகிங்கரர்களை விட்டு வட்டத்தைத் தூக்கி வந்தேன். வட்டத்திற்கு என்னைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு குடிக்க பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார்.

என் பேரில் எந்த தப்பும் இல்லைங்க, தலைவர் (அந்த அரசியல்வாதி) இப்படித்தானுங்க, நிலம் வாங்கித் தாரேன் அப்படீன்னு, யாரு பணம் கொடுத்தாலும் வாங்கி தன் பெயரில் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணீப்பாருங்க. ஏனுங்க இப்படீன்னு கேட்டா, தம்பி, இதப்பாருங்க, நிலம் உங்க பேர்ல இருந்தா என்ன, என் பேரில இருந்தா என்ன. நெலம் எங்க போயிடப்போகுது, உங்க பேர்ல நெலம் இருந்திச்சின்னு வையுங்க, இந்த இன்கம்டாக்ஸ்காரன் ஆயிரத்தெட்டு கேள்வி உங்களைக் கேட்பான், அதுக்கு உங்களால பதில் சொல்ல முடியாது. என்னைக் கேள்வி கேட்க ஒரு பயலுக்கும் திராணி கிடையாது.

இப்படியே இருக்கட்டும், உங்களுக்கு தேவைப்படும்போது சொல்லுங்க, மாத்தி எழுதீடலாம் என்பார். இதுதானுங்க இப்ப நடைமுறை. நான் என்ன பண்ணுட்டுங்க என்று வட்டம் சொன்னான். சரி இப்ப அந்த தலைவரைப் பார்க்கணுமே, அதுக்கு என்ன வழி என்றேன். வட்டம் சொன்னார், இந்த மாதிரி டீல் ஒண்ணை முடிச்சா, அவரு ஆறு மாசம் ஊர்லயே இருக்க மாட்டாருங்க. அவருக்குப் பல ஊர்களிலே பங்களாக்கள் இருக்குதுங்க, எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியாதுங்க என்றான்.

அப்படியா என்று நாரதரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லி அந்த ஆள் எந்த லோகத்தில் இருந்தாலும் இழுத்துக் கொண்டு வாருங்கள் என்றேன். துணைக்கு இரண்டு கிங்கரர்களை அழைத்துக்கொண்டு போங்கள் என்றேன். வட்டம் நான் போகட்டுங்களா என்றான். "அடே வட்டம், நீயும் அவனோட கூட்டுக் களவாணிதானே, அவன் வரும்போது நீ இல்லாவிட்டால் எப்படி?" என்று அவனை இருக்கவைத்தேன்.

அரை மணி நேரத்தில் நாரதரும் அந்த அரசியல்வாதியும் வந்து விட்டார்கள். வந்தவுடன் அவன் தாம்தூம் என்று குதித்தான். என்னை யாரென்று நினைத்தீர்கள், இப்போதே பிரதம மந்திரிக்குப் போன் போட்டு உன்னை என்ன செய்கிறேன் பார், உன்னை இன்கம்டாக்ஸ் கேஸ் போட்டு, ஜெயில் களி திங்க வைக்கிறேன் பார் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினான். வட்டத்தைப் பார்த்து என் சக்தியைப் பற்றி இவர்களிடம் நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று சத்தம் போட்டான்.

அவன் ஆர்ப்பாட்டம் அடங்கட்டும் என்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கத்திவிட்டு ஓய்ந்து போனான். அப்புறம் நான் அவனைக்கேட்டேன். நாங்கள் யாரென்று உனக்குத் தெரியுமா என்றேன். "நீ யாராயிருந்தால் எனக்கென்ன, என்னை இப்போதே நான் இருந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா" என்றான்.

"என்ன நடக்கும், பார்க்க எனக்கு ஆசையாய் இருக்கிறது" என்றேன். யார் யாருக்கோ போன் பேசினான். ஒன்றும் நடக்கவில்லை. உனக்கு யார் வேண்டும் என்றேன். பிரதம மந்திரியிடம் பேசவேண்டும் என்றான். நான் ஹாட்லைனில் பிரதம மந்திரி அலுவலகத்தைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு போனை அவனிடம் கொடுத்தேன். பிரதம மந்திரியின் உதவியாளர் பேசினார்.

அவர் அவனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, அவன் தடாலென்று என் காலில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். தெய்வமே, நான் தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். இப்போதே அந்த நிலத்தையெல்லாம் நீங்கள் சொல்லுகிற மாதிரி மாற்றி எழுதி விடுகிறேன். இந்த விவகாரத்தைப் பற்றி பிரதம மந்திரியிடம் ஏதும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் யாரென்று தெரியாமல் இந்தத் தப்பை செய்து விட்டேன் என்று அழுதான்.

சரி, ரொம்பவும் அழுகிறானே என்று அவனை மன்னிக்கிறேன் என்று சொல்லி எழுப்பி, நான் முதலில் சொன்ன பிரகாரம் பத்திரங்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பு என்று சொல்லி அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பினேன்.

இங்குதான் நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்.

அடுத்த பதிவைப் பாருங்கள்.

புதன், 3 ஏப்ரல், 2013

13. இமிக்ரேஷன் விசா

முதல் ட்ரிப்பில் போய் வந்த அனைத்துப் பதிவர்களும் தங்கள் தங்கள் தளங்களில் தேவலோகத்தை வானளாவப் புகழ்ந்திருந்தார்கள். அதைப் படித்த மற்ற பதிவர்கள் தங்களை ஏன் கூப்பிடவில்லை என்று கோபமாக பதிவுகள் போட்டார்கள். இப்படியாக ஒரு வாரம் முழுவதும் தேவலோகத்தைப் பற்றிய பதிவுகள்தான் இடப்பட்டன.  சினிமா விமர்சனப் பதிவுகள் காணாமல் போய்விட்டன.

ஓரிரு நாளில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஜனங்கள் வரத்தொடங்கினார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைத்து வரப்பட்டு என் ரூமுக்கு கொண்டுவரப்பட்டார்கள். அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு, எனக்கு திருப்தியானவுடன், அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். பிறகு அவர்களை பேங்குக்கு சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த செலானைக் கொண்டுவரச்சொன்னேன்.

அவர்கள் பணம் கட்டி வந்தவுடன் செலானை வாங்கி அவர்களுடைய ஒப்பந்தத்தில் பின் பண்ணி  தேவலோகத்திற்குப் போகும் தபால் பையில் போட்டேன். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை இமிக்ரேஷன் விசா பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, அவர்களுக்கு விருந்து கொடுத்து, பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பினேன்,

முதல் நாள் பத்துப் பேர்கள் மட்டுமே வந்தார்கள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்ததைப் பார்த்ததும், இன்டர்நெட்டில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஒரு தளம் ஆரம்பித்தோம். இமிக்ரேஷன் விசா வேண்டுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான நாள் மற்றும் நேரம் அலாட் செய்யப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடப்படும். அதன்படிதான் வரவேண்டும் என்று நிர்ணயித்தோம்.

இப்படியாக ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்கு விசா கொடுத்திருப்போம். வரவு செலவு கணக்குகளைப் பார்த்தோம். மொத்த வரவு 1,50,000 கோடி அதாவது ஒன்றரை லட்சம் கோடி. இதில் இந்திய அரசுக்கு வரி கட்டினது 75,000 கோடி. மீதி 75,000 கோடியில் எங்கள் ஊதியமாக எடுத்துக் கொண்டது  15,000 கோடி. இதில் என் பங்கு 7500 கோடி. பொதுவிற்கும் செக்குவிற்கும் ஆளுக்கு 3750 கோடி.

இப்படி கணக்குப் பார்த்ததில் எங்கள் ஊதியத்தொகையைக் கண்டு மலைத்துப் போய் விட்டோம். இந்தப் பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொதுவைக் கூப்பிட்டு, வெளியில் போய் ஒரு நல்ல ஆடிட்டர், அனுபவம் மிக்க ஒரு வக்கீல், இவ்வளவு பணத்தை டீல் பண்ணக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வரும்படி அனுப்பினேன்.

அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு விவரங்களைச் சொன்னோம். அரசியல்வாதி எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தொகையைச் சொன்னவுடன் அவர் "பூஊஊஊ, இவ்வளவுதானா, இதற்கா என்னை வரச்சொன்னீர்கள், முதலிலேயே விவரத்தைச் சொல்லியிருந்தால் நான் என் வட்டச் செயலரை அனுப்பியிருப்பேனே, அவரே இந்த மாதிரி தொகைகளை எல்லாம் டீல் பண்ணியிருப்பாரே என்றார்.

அப்படீங்களா, எங்களுக்கு அனுபவம் போதாதாகையால் உங்களை வரவழைத்து விட்டோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரைத் தாஜா பண்ணினேன். பிறகு எல்லோரும் கலந்து ஆலோசித்தோம். இந்தப் பணத்தில்  எனக்கு 500 ஏக்கர் நிலமும், மற்றவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 250 ஏக்கர் நிலமும் அவரவர்கள் ஊர்களில் வாங்கிப்போடுவது என்று முடிவு செய்தோம்.

அரசியல்வாதி ஊருக்குப் போனதும் தனது வட்டத்தை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பிப் போனார்கள். மறுநாள் "வட்டம்" தனது எடுபிடிகளுடன் வந்தார். விஷயத்தைக் கேட்டார். இவ்வளவுதானே. ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் பணத்தை முழுவதையும் வட்டத்திடம் கொடுக்கச் சொன்னோம். அவர் அந்தப் பணத்தை இரண்டு லாரிகளில் ஏற்றி வட்டத்துடன் அனுப்பினார்.

பிறகு நடந்ததுதான் நாங்கள் எதிர்பாராதது! விவரங்கள் அறியக் காத்திருங்கள்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பழைய ஞாபகந்தான் பேராண்டி


பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:14 PM
இன்றைய குழந்தைகளுக்கு அந்த கால ஆசாமியின் ஒரு கடிதம்.
நாங்கள் நினைப்பதெல்லாம் 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF



• தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்nkட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை

• எங்களுக்கு நல்ல கதை சொல்ல அன்பான தாத்தா பாட்டி இருந்தார்கள். கலாச்சாரத்தை கெடுக்கும் மெகா சீரியல்கள் டஹ்ரும் டிவி பெட்டிகள் இல்லை

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு (குண்டு பல்புதான், மண்ணெண்ணெய் விளக்குதான்) வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். ஆமாம் பேப்பர் காத்தாடிகள் தீப்பெட்டி ரயில்கள் பாண்டி விளையாட்டு கில்லி தாண்டல் போன்றன ஆனால் இன்றோ அனைத்தும் ப்ரொவிசனல் ஸ்டோர்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும். எனவே எங்கள் ஜிம்கள் எல்லாம் எங்கள் வீதிகளிலிலேயே இருந்தன (காசு பறிக்காமல்)
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை .

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

• முக்கியமாக பெண்களை நம் தாயாக மற்றும் கூட பிறந்தவர்களாக நினைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் டெல்லி நியூஸ் போன்றவற்றை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

குருச்சந்திரன்
பதிலளிநீக்கு
பதில்கள்
  1. பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:19 PM

    எங்கேயோ படித்த ஞாபகம் என்று என் நண்பன் எனக்கு அனுப்பிய ஒரு கடிதம்.
    குருச்சந்திரன் அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது.

    செல் போன் டவர்களால் தொலைந்து போன சிட்டு குருவிகளின் கீச் கீச் குரல்கள் 

    நானும் வீரன்தான் என்று காட்ட, பயந்து பயந்து மாடு விரட்டிய நம் ஊர் மஞ்சு விரட்டு மைதானம் 

    பெரிது பெரிதாக தொங்கிய விழுதுகளில் ஊஞ்சல் ஆடி மனம் களித்த நம் ஊர் பள்ளிகூடத்திலிருந்த ஓங்கி வளர்ந்த ஆலமரம் 

    காத்திருக்கும் போது வராமல் பாதி தூரம் நடந்த பிறகு நம்மை கடந்து போகும், ஒரே ஒரு முறை நம் ஊருக்கு எட்டிப்பார்க்கும் பேருந்து 

    யாயும் நீயும் யாராகியரோ என்று இருந்த நம்மை பின்னர் செம்புல பெய நீர் போல நண்பர்களாக்கிய நம்மூர் திருவிழாக்கள் 

    தூக்கி போடு நீச்சல் தன்னாலே வந்துடும் என்று சொல்லி தள்ளி விட , நெஞ்சில் சிலீர் என்று நீர் தெளித்த ஆழ் கிணறுகள் 

    அக்கம்பக்கத்து நண்பர், நண்பிகளுடன் சேர்ந்து விளையாடும்போது மரத்தடியில் நெருப்பு மூட்டி ஆக்கிய கூட்டாஞ்சோறு 

    பாங்குல இருக்கோ இல்லையோ எப்போதும் காசு வைத்திருக்கும் எங்க வீட்டு ஆயாவின் இடுப்பிலிருக்கும் சுருக்குப்பை 

    பாம் பாம் என்ற சத்ததுதுடன் வந்த காரை மார்க் 1,2,3 என்றுவகை பிரித்த பணக்கார வீட்டு பையன் 

    மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி 

    முகத்தை மட்டும் விட்டுட்டு உடம்புலே எங்கே வேணுமானாலும் விளாசலாம், பையன் மட்டும் நல்லா படிக்கணும்னு வாத்தியாருக்கு அனுமதி தந்த அப்பா அம்மா

    இதெல்லாம் நான் உனக்கு எப்படி காட்டுவேன்?
    எல்லாமே என் கண் முன்னாலேயே காணாமல் போய் விட்டதே

    திருச்சி அஞ்சு